சங்க இலக்கியங்களான எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்று வழங்கப்பெறும். அதே போன்று சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெட்டு நூல்களைச் சேர்ந்த தொகுதி பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று வழங்கப் பெறுகின்றன. இந்தப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ‘நாலடியார்’. இதுவும் மற்ற பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் போன்றே நீதியைச் சொல்லக்கூடிய நூலாகும். இரண்டு அடிகளில் திருக்குறள் அறத்தைப் போதிப்பதைப் போன்று நாலடியார் நான்கு அடிகளில் பல நீதிகளைக் கூறுகின்றது. இது சமண முனிவர்கள் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். அவற்றில் ஒன்றிரண்டு பாடல்களை இப்பொழுது பார்க்கலாம்.
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
தலைமுடியைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனதளவில் உண்மையாக நடந்து கொள்கிறோம் என்னும் நடுநிலையான ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாகும்.
மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் – புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எரிபுனம் தீப்பட்டக் கால்.
காடு பற்றி எரியும்போது மணம் வீசும் சந்தன மரமும் வேங்கை மரமும் கூட வெந்து போகும். அது போல, மனதில் ஒரு குற்றமும் இல்லாத நல்லவராயினும் அவர்கள் தாம் சேர்ந்த தீய இனத்தின் காரணமாக இகழப்படுவர்.
உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண்
அபகாரம் ஆற்றச் செயினும் – உபகாரம்
தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல்
வான்தோய் குடிப்பிறந்தார்க் கில்.
தாம் செய்த உதவியைச் சிறிதும் எண்ணிப் பாராமல் தமக்கு மிகுதியான தீமைகளைச் செய்தாலும் தாம் அவருக்குத் திரும்பவும் உதவி செய்வார்களேயன்றி, தவறியும் தீமை செய்ய முயலுதல் வானளாவிய புகழ் மிக்க குடியிலே பிறந்தவரிடம் இல்லை.
– நன்றி: நாலடியார் – மூலமும் தெளிவுரையும்: பேராசிரியர் ஜெ.ஸ்ரீசந்திரன்.
“