ஆழ்வார்கள் பத்து பேர். பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாண ஆழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார். இவர்களுடன் மதுரகவி ஆழ்வாரையும், திருப்பாவை பாடிய ஆண்டாளையும் சேர்த்து ஆழ்வார்கள் பன்னிருவர் என்று சொல்வதுண்டு. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் இயற்றிய ஆழ்வார்கள் யாவரும் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கருதப்படுகிறது.
ஆழ்வார்களில் முதன்மையானவர் என்று கருதப்படுபவர்நம்மாழ்வார். திருக்குருகூர் என்று அழைக்கப்படும் தலத்தில் 9ஆம் நூற்றாண்டில் பிறந்த இவர்தான் ஆண்டாளை வளர்க்கும் பேறும் பெற்றார். இவருடைய பாசுரங்களில் தமிழிலக்கியத்தின் மிக உயர்வான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, அவரின் ‘திருவாசிரிய’த்தில் ஒரு பாடலை ரசிப்போம்.
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும்
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீகால் சுடர்இரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தஎம்
பெருமா மாயனை அல்லது
ஒருமா தெய்வம்மற்று உடையமோ யாமே!
சிவனும், பிரம்மாவும், இந்திரன் முதலான தேவர்களும், எல்லா உலகங்களும், நிலம் நீர் நெருப்பு காற்று சூரிய சந்திரர்கள் நட்சத்திரங்கள் அனைத்திலும் விட்டு வைக்காமல் விதி விலக்கின்றி மறைந்து, விரவியிருந்து ஆலிலை மேல் தூங்கும் எம்பெருமானை அல்லாது வேறு தெய்வம் எங்களுக்கு உண்டோ?
நம்மாழ்வாரின் ‘பெரிய திருவந்தாதி’யில் ஒரு பாடல்-
பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற
காவிமலர் என்றும் காண்தோறும் – பாவியேன்
மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை
எல்லாம் பிரான் உருவே என்று!
‘காயாம்பூ, கருநெய்தல், செங்கழுநீர் போன்ற மலர்களை எல்லாம் பார்க்கும்போது என் பாவி மனது அப்படியே பூரித்துப் போகிறது. அவை யாவுமே திருமாலில் வடிவங்களே என்று நினைத்து!’ என்பது இதன் பொருள்.
காக்கைச் சிறகினிலும் பார்க்கும் நிறங்களிலும் நந்தலாலாவைக் காணுகின்ற மகாகவியின் பாடலும் உடன் நினைவுக்கு வருகிறதுதானே!
நாலாயிரத் திவ்யப் பிரபந்தக் கடலிலிருந்து அவ்வப்போது சில திவலைகளைக் காண்போம்!
– நன்றி: ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்! – சுஜாதா
“