பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!
துரியோதனன் சபைக்கு இழுத்து வரப்பட்ட பாஞ்சாலி கணவர்களைப் பார்த்துக் கேட்கிறாள், "இதற்கா அம்மி மிதித்து அருந்ததி பார்த்து என்னைக் கல்யாணம் செய்து கொண்டீர்கள்?" (ஒருத்தருக்கு அஞ்சு பேர்!) விஜயனும் பீமனும் குன்றா மணித் தோளைப் பார்த்துக் குனிந்து கொள்கிறார்கள். தருமனும் தலை கவிழ்கிறான். "இந்த சபையில் கற்று கேட்டுணர்ந்த சான்றோர்கள், வேள்வி, தவங்கள் புரிந்த வேதியர்கள் இருக்கின்றனர். ‘நிறுத்துடா’ என்று உன்னை யாரும் சொல்லவில்லையே?" என்று புலம்பி அழுது, ‘மின் செய் கதிர்விழியால்’ பாண்டவரைப் பார்த்து வெந்நோக்கு வீசுகிறாள். அவர்களுக்குப் பேச வாயில்லை. துரியோதனன்தான், "நீ தாதியடி, தாதி!" என்று சொல்கிறான். கர்ணன் சிரித்திட்டான். சகுனி புகழ்ந்தான். சபையோர்? என்று சொல்லி பாரதி கேள்விக் குறி போடுகிறான். அவர்கள் மறுப்பு தெரிவிப்பார்களோ என்று நம்மை சஸ்பென்ஸில் வைத்து விட்டு அவனே போட்டு உடைக்கிறான் : "வீற்றிருந்தார்!"
"தகுதி உயர்(?) பீஷ்மன்தான் பேசுகிறான். ஒருவரின் வாதத்தைச் சொல்லி அதற்கு பதில் சொல்வது வாதுகளில் மரபு. அந்த வகையில் பீஷ்மன் சொல்கிறான் பாஞ்சாலி, நீ என்ன சொல்கிறாய்? யுதிஷ்டிரன் உன்னை சூதில் பணயமாக வைத்தது தப்பு என்கிறாய்; தோற்றது செல்லாது என்கிறாய்.. அவ்வளவுதானே? உன்னுடைய இந்த வாதத்துக்கு நான் பதில் சொல்றேன், கேளு!" என்று சொல்லி விட்டு தொடர்கிறான்.
"…………….பண்டை யுக
வேத முனிவர் விதிப்படி, நீ சொல்லுவது
நீதமெனக் கூடும்; நெடுங்காலச் செய்தி அது.
ஆணொடு பெண் முற்றும் நிகர் எனவே அந்நாளில்
பேணி வந்தார். பின் நாளில் இஃது பெயர்ந்து போய்
இப்பொழுதை நூல்களினை எண்ணுங்கால் ஆடவருக்கு
ஒப்பில்லை மாதர்; ஒருவன் தன் தாரத்தை
விற்றிடலாம். தானமென வேற்றுவர்க்குத் தந்திடலாம்.
தன்னை அடிமை என விற்ற பின்னும் தருமன்
நின்னை அடிமை எனக் கொள்வதற்கு நீதி உண்டு!"
"இது ரொம்பக் கொடுமைதான், அநீதிதான். என்றாலும், சட்டம் சொல்வது என்ன, வழக்கம் என்னன்னு கேட்கப்படுவதாலே நான் சொல்கிறேன்! சட்டப்படிதானே தீர்ப்பு சொல்ல முடியும்! பழைய சட்டத்துக்கெல்லாம் மாற்று விதிகள் வந்துவிட்டனவே!" என்று பேசுகிறான். கடைசியாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான், "தீங்கு தடுக்கும் திறம் இல்லேன்!" இப்படிச் சொல்லித் தலை கவிழ்ந்து கொள்கிறான்.
இதற்கு பாஞ்சாலி சொல்லும் எள்ளலும் வேதனையும் நிறைந்த பதிலை பாரதியின் வரிகளில்தான் கேட்க வேண்டும்.
"சால நன்கு கூறினீர்! ஐயா,தரும நெறி!
பண்டு ஓர் இராவணனும் சீதைதன்னைப் பாதகத்தால்
கொண்டு ஓர் வனத்திடையே வைத்துப் பின்,கூட்டமுற
மந்திரிகள், சாத்திரிமார் தம்மை வரவழைத்தே
செந்திருவைப் பற்றி வந்த செய்தி உரைத்திடுங்கால்
"தக்கது நீர் செய்தீர்,தருமத்துக்கு இச்செய்கை
ஒக்கும்" என்று கூறி உகந்தனராம் சாத்திரிமார்!
பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!!"
இப்படி படபட வென்று பேசிய பின்னும் சபையினரின் நல்லியல்புக்கு ஓர் அழைப்பும் விடுக்கிறாள்.
"பெண்டிர் தமை உடையீர், பெண்களுடன் பிறந்தீர்!
பெண்பாவம் அன்றோ? பெரிய வசை கொள்வீரோ?
கண் பார்க்க வேண்டும்!" என்று கை எடுத்துக் கும்பிட்டாள்.
பேசி முடித்து விட்டு அம்பு பட்ட மான் போல் அழுது, துடிதுடிக்கிறாள்.
தொடர்கிறது சொற்சித்திரம்.
"ஆடை குலைவுற்று நிற்கிறாள்!-அவள்
ஆவென்றழுது துடிக்கிறாள்!-வெறும்
மாடு நிகர்த்த துச்சாதனன் அவள்
மைக்குழல் பற்றி இழுக்கிறான்- இந்தப்
பீடையை நோக்கினன் வீமனும்-கரை
மீறி எழுந்தது வெஞ்சினம்-துயர்
கூடித் தருமனை நோக்கியே-அவன்
கூறிய வார்த்தைகள் கேட்டிரோ?"
என்ன சொன்னான் பீமன்? அடுத்த வாரம் வரை காத்திருங்கள்.
“