பாசம்

வாழ்க்கையின் முக்கால் பருவத்தை நான் தாண்டிவிட்டேன். வயது 65 ஆகி விட்டது. என்றாலும் நாற்பதுகளின் உற்சாகத்தில் நல்ல ஆரோக்கியமாக இருக்கின்றேன். ஒருவேளை மதுபானம், சிகரெட் போன்றவற்றைத் தீண்ட மாட்டானோ என்று நீங்கள் நினைக்கக்கூடும். ஆரம்பத்தில் இரண்டையும் விலக்கித்தான் பார்த்தேன். ‘கட்டையில போற வயசில என்ன கட்டுப்பாடு’ என்ற ஞானோதயம் (!) பிறக்க, மதுவை மெல்ல மெல்லத் தீண்ட ஆரம்பித்தேன்.

ஒரு சாரதியாகவே 30 ஆண்டுகளுக்கு மேல் தொழிலாற்றியிருந்த எனக்கு, இப்பொழுது இங்கே கிடைத்திருக்கும் உத்தியோகம் ‘இங்கிலீஸ் மாஸ்ரர்’! விரும்பிய, அனுபவப்பட்ட தொழில் கிடைக்காததால், ஏதாவது வகையில் உழைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்னை மாஸ்டராக்கியிருக்கின்றது.

குவைத்தில் ஆறு ஆண்டுகள் சாரதியாகத்தான் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ஆனால், அந்தக் கெட்ட சதாம் வந்து குவைத்தை அடிப்பான் என்று யார் நினைத்திருந்தார்கள்? பணத்தில் புரண்ட குவைத் முதலாளிமாரும் எங்களோடு ஒன்றாக, ‘றொட்டிக்காக’ வரிசையில் நிற்பார்கள் என்று கனவில்கூட எண்ணவில்லை.

குவைத்தை அடித்த கையோடு, சதாமின் இராணுவம் குவைத் மண்ணிலேயே தங்கி விட்டது. அவர்கள் உடுப்புக்களையும் கோலத்தையும் நினைத்துப் பார்க்கும்போது இப்பொழுதும் சிரிப்பு வருகின்றது. படுக்கையில் கிடந்தவர்களை சதாம் எழுப்பி அனுப்பி இருப்பாரோ என்றுதான் நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு, ‘இராணுவ இலட்சணம்’ என்பதையே வந்தவர்களிடம் காணோம்.

இவர்கள் வரவோடு கடைகள் எல்லாம் சூறையாடப்பட்டன. பல குவைத் பெண்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் பேசிக் கொண்டார்கள். ஆனால், எங்களோடு வெகு சினேகிதமாகத்தான் பழகினார்கள். ஆனால் நாங்கள் அங்கே நிற்கத் தயாராக இல்லை. அனேகமாக, எல்லா முதலாளிமாருமே சவுதி நாட்டு எல்லை வழியாகத் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டபடியால், தாராளமாக வாகனங்கள் பாவனைக்குக் கிடைத்தன. கிடைத்த வாகனங்களை எடுத்துக் கொண்டு, உல்லாசப் பயணிகள்போல நாடு விட்டு நாடு வந்து, கடைசியில் சுவிஸ் வந்து சேர்ந்தது தனிக்கதை. இந்தக் கதையை இத்தோடு நிறுத்திக் கொள்வோம்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்று சொல்வதுண்டு. இங்கே ஆங்கில அறிவு உள்ளவர்கள் அரிதாகவே இருந்ததால், என்னைப் போன்றவர்களுக்கு நல்ல மதிப்புக் கிடைத்து வந்தது. ஜெர்மன் மொழியையே பேசும் இந்த நாட்டில், இளசுகளுக்கு ஆங்கிலம் கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதுதான் என்னை மாஸ்டராக்கியது.

சொந்த மண்ணின் போர்ச்சூழல்கள், இளம் பிராந்தியத்தினர் பலருக்கு அடியோடு ஆங்கில அறிவை மழுங்கடித்து விட்டது என்பது கசப்பான நிஜம்! இங்கே ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருப்பது, தம் பிள்ளைகளுக்கு நல்ல ஆங்கில அறிவைப் புகட்ட வேண்டும் என்ற வேகத்தையும் பல பெற்றோருக்கு ஏற்படுத்தி இருக்கின்றது.

நான் ஆங்கிலத்தில் பெரிய அறிவுடையவன் என்றில்லை. என்றாலும், என் பாடசாலைக் காலத்தில் ஆங்கிலத்திலேயே எல்லாப் பாடங்களையும் படித்தவன் என்ற முறையில் ஓரளவு ஆங்கில ஞானம் இருந்தது. அடிப்படை ஆங்கில அறிவையாவது என்னால் சொல்லிக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது.

"ஐயா! இங்கிலீஷ் சொல்லித் தாருங்களேன"என்று ஆளுக்கு ஆள் மாறி மாறித் தொல்லை கொடுக்க, சாரதியாக எங்காவது வேலை கிடைக்காதா என்ற ஏக்கம் தணிந்து, ‘மாஸ்டராகி விடுவோமா’ என்று உள்ளம் சிந்திக்கத் தொடங்கியது. நான் இருக்கும் வீட்டில் வசதி குறைவு என்பதால், வீடு வீடாகப் போய்ப் படிப்பிப்பது என்று முடிவெடுத்தேன். ஒரு நல்ல நாளில் ஒரு வீட்டுப்படி ஏறினேன்.

மாஸ்டர் வேலை என்பது அப்படியொன்றும் சுலபமான வேலையல்ல என்பது களத்தில் இறங்கியபோதுதான் தெரிந்தது.

அடிப்படை அறிவே இல்லை. இங்கே ஜெர்மன் மொழியை வருடக்கணக்காக உச்சரித்துப் பழகியவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பைத் தெளிவாகச் சொல்லிக் கொடுப்பது சுலபமாக இருக்கவில்லை. அகராதியில் உள்ள 26 எழுத்துக்களை உருப்படியாகத் தெரியாதவர்களும் என் மாணவர்களாக இருந்தார்கள். களத்தில் இறங்கி விட்டேன், இனி வாளை உருவிப் போராடாமல் இருக்க முடியுமா? மாணவர்களுக்குப் பயிற்சி கொடுக்க முனைந்ததுபோல, நானும் வீட்டுப் பயிற்சிகளை நிறையச் செய்தேன். ஊருக்குப் போய்வந்தவர்களிடம் சொல்லிப் பயிற்சிப் புத்தகங்கள் பலவற்றை வரவழைத்தேன். என் மொழி அறிவும் தூசி தட்டப்பட்டுக் கொண்டிருந்தது என்பதை நான் இங்கே ஒப்புக் கொண்டாக வேண்டும்.

கால ஓட்டத்தில் மாணவர்கள் தொகை அதிகரிக்க, வருமானமும் வந்து சேர, சாரதியாக உழைக்க வேண்டும் என்ற நினைப்பு எங்கோ போய்ச் சுருண்டு படுத்துக் கொண்டது. பல வீடுகள் ஏறி இறங்க நடையாய் நடந்ததில், உடலுக்கு நல்ல பயிற்சியும் கிடைத்தது. இனிதான் கதையின் கருவிற்கே வருகின்றோம்.

எனக்குக் கிடைத்த மாணவர்களில் மிகவும் பிடித்தமானவன் குமார். அவனுக்கு வயது 20க்குள்தான் இருக்கும். ஆனால், நல்ல உழைப்பாளி. ஆங்கிலத்தை எப்படியாவது படிக்க வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது.

ஒருநாள் வழக்கம்போல அவனிடம் சென்றிருந்தேன். படிப்பித்து முடிய, "ஐயா! உங்களோட முக்கியமான விசயம் ஒண்டு கதைக்க வேணும்" என்றான் தயங்கித் தயங்கி.

"அதுக்கேன் மசியிறா? சொல்லுறதுதானே?"

"சூரிச் கன்ரோனில எனக்கொரு சொந்தக்கார அண்ணே இருக்கிறார். அவருக்கு இப்ப 28 வயசாகுது. நல்ல குணம் ஐயா. உங்கிட மகளுக்கு ஒரு மாப்பிள்ளை விசாரிக்கச் சொல்லிக் கேட்டனியள் அல்லே?…"

ஊரிலுள்ள என் 23 வயது மகளுக்கு எங்காவது ஒரு நல்ல பெடியன் கிடைத்தால் சொல்லும்படி குமாரிடம் நான் எப்பொழுதோ கூறியிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. எல்லாவற்றையும் விபரமாகக் கேட்டறிந்தேன். ஒரு நாளைக் குறித்து, இருவருமாக சூரிச் போவது என்று தீர்மானித்தோம்.

வகுப்புதான் முடிந்து விட்டதே. குமார் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து நல்ல குளிரான பியர் ரின் (Tin) ஒன்றை எடுத்து வந்து என்னிடம் நீட்டினான்.

ஆம்! வகுப்பு முடிந்ததும் சில மாணவர்கள் ‘அன்போடு’ நீட்டும் பியர் ரின்னை வாங்கிக் குடிப்பதை நான் பழக்கமாக்கிக் கொண்டிருந்தேன். ஆரம்பத்தில் மறுத்துத்தான் பார்த்தேன். ஒன்றிரண்டு ரின் பியரைக் குடித்தால் என்ன என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு அவற்றைக் குடித்தது ஒரு தனிக் கதை. பின்பு, ‘ருசி கண்ட நரிப்பிள்ளை’ போல இரவுப் பொழுதில் தனியாகக் குடித்து ருசித்தது இன்னொரு தனிக்கதை.

ஓசிக்குடிதான் பெருங்குடிகாரனுக்கு முதலாம் அத்தியாயம் எழுதுகின்றது என்பது நான் ஐரோப்பிய மண்ணில் கற்ற பாடம்.

வேண்டாத குடிப்பழக்கம் தொற்றிவிட்டதை நான் ஒத்துக் கொண்டாலும், நல்ல திறமையான மாஸ்டர் என்ற பெயரைச் சம்பாதித்து விட்டேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்.

திட்டமிட்டதுபோலக் குமாருடன், என் வருங்கால மருமகனை நேரில் சந்திக்கச் சூரிச் நகர் நோக்கிப் பயணமானேன். அங்கு குருபரனை (அதுதான் பையனின் பெயர்) நேரில் சந்தித்து உரையாடியபோது எனக்கு மிகவும் பிடித்துக் கொண்டது. பின்பு, குடும்பப் பின்னணி பற்றிய விபரங்களை விசாரித்ததில், எல்லாமே திருப்தியை அளித்தது.

முடிவு சுபமாகவே அமைந்தது. மகளுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணைவன் கிடைத்ததோடு, மகள் இந்த மண்ணிற்கு சட்டரீதியாக வர வாய்ப்பும் கிடைத்தது.

தனியனாக இருந்தவனுக்கு, மகளும் மருமகனும் பக்கத்தில் வந்துவிட்டது பெரும் பலமாகி விட்டது. இவ்வளவு காலமும் சனி, ஞாயிறு என்று பாராது ரியூசன் (tution) தொழிலைச் செய்து கொண்டிருந்த எனக்கு, பாச உணர்வுகள் தலைதூக்க, வாரமுடிவு வகுப்புகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு ஒழுங்காக சூரிச்சிலுள்ள மகளிடம் போய்வர ஆரம்பித்தேன்.

மகள் ருசியாகச் சமைத்துப் போடுவாள். மருமகன் தான் குடிக்காவிட்டாலும், மாமாவை ‘அன்போடு’ கவனித்துக் கொள்வது மேலும் குஷியை ஏற்படுத்தியது.

பெரிய குற்றம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படுவதுண்டல்லவா? அப்படி என் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய என் மாணவன் குமாரை ஆயுட்கால மாணவனாக்கிக் கொண்டேன். அவனுக்கு இலவசமாகத்தான் பாடம் சொல்லிக் கொடுத்தேன்.

காலவெள்ளம் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே. எனக்குப் பேரனும் கிடைத்து விட்டான். மகளுக்கும் நல்ல வேலையொன்று கிடைத்து விட்டது. பேரனோடு கொஞ்சி விளையாடலாம். பிள்ளையைப் பார்த்துக் கொண்டால் மகளுக்கும் உதவியாக இருக்கும் என்ற காரணங்களால், படிப்பிப்பதை மெல்ல மெல்லக் கத்தரிக்கத் தொடங்கினேன். பாச உணர்வுகளின் நெருடல்களால், வகுப்புகளைக் கத்தரிக்க எனக்கு நானே சொல்லிக் கொண்ட காரணங்கள் இவை.

ஆர்வத்தோடு பல இளைஞர்கள் ஆங்கிலத்தைக் கற்க ஆரம்பித்திருந்தார்கள். இந்த நிலையில் படிப்பை இடையிலேயே நிறுத்துவது மனதிற்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆனால், பாசம் என்னை விடுவதாயில்லை. இந்த வயதில் எனக்கு இரத்த உறவுகள் அவசியமாகத் தெரிந்தன.

ஒருநாள்.

வழக்கம்போல் மகளிடம் போயிருந்தேன். பேரனை என்னிடம் விட்டுவிட்டு, இருவரும் வேலைக்குப் போய்விட்டார்கள். இனி வீடு திரும்ப மாலை ஆறு மணியாகி விடும். அதுவரை என் பொழுது பேரனோடுதான்.

நேரம் மாலை நான்கை எட்டிப் பிடித்திருந்தது. பேரன் விளையாடிக் களைத்து, தொட்டிலில் நல்ல தூக்கம். வெளியே கோடை வெயிலின் அட்டகாசம்.

ஊர் வெயிலைத் தாங்கலாம். காற்றடிக்கும். சூடு தெரியாது. இந்த மண்ணில் அப்படி இல்லையே. சுற்றி வர மலைகள். பாரிய கட்டடங்கள். காற்று வராது. வெப்பத்தைத் தாங்க முடியாது. ‘தாகசாந்தி’ செய்து கொள்ள நினைத்தேன். ‘டேஸ்ட்டுக்கு’ முட்டை வறுவல் செய்து கொண்டேன். தொலைக்காட்சியில் நல்லதொரு காற்பந்தாட்டப் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. எனக்குப் பிடித்த விளையாட்டாயிற்றே.

பியரும் வறுவலும், பார்த்து ரசித்த விறுவிறுப்பான காற்பந்தாட்டமும் அளவு கடந்த உற்சாகத்தை என்னுள் ஏற்படுத்தின.

மருமகன், மாமா குணமறிந்து, குளிர்சாதனப் பெட்டியில் சற்று அதிகமாகவே பியர் ரின்களை வாங்கி வைத்திருந்தார். உற்சாகம் மனதில் கொப்பளிக்க, என்னை அறியாமலே பல ரின்கள் காலியாகின. அப்படியே சோபாவில் தூங்கியும் விட்டேன்.

திடீரெனத் திடுக்கிட்டுக் கண்விழித்தபோது, வெளிக்கதவை யாரோ படபடவென்று தட்டுவது கேட்டது. பேரனும் வீறிட்டு அலறுவது காதைச் செவிடாக்கியது.

வாசல் கதவில் சாவி இருப்பதால் வெளியில் இருந்து யாருமே கதவைத் திறக்க முடியாது.

இடுப்பிலிருந்து நழுவியிருந்த சாரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டு, கதவடிக்கு ஓடிச் சென்று கதவைத் திறந்தேன்.

வெளியே நின்ற மகள் எரித்து விடுவது போல என்னை முறைத்துப் பார்த்து விட்டு உள்ளே நுழைந்தாள். காலி பியர் ரின்களும், கொஞ்சம் முட்டை வறுவலோடு கிடந்த பிளேட்டும் அவள் கோபத்தை மேலும் கிளறின. அவள் படபடவென்று கதவைத் தட்டியது குழந்தையின் உறக்கத்தைக் கலைத்து வீறிட்டு அலற வைத்துள்ளது.

பேரன் பெரிதாக அலற, ஓடிப்போய்க் குழந்தையை அலக்காகத் தூக்கி, மார்போடு அணைத்துக் குழந்தையின் அழுகையை அடக்க முயன்றாள்.

"நல்ல குடிகாரனிட்ட குழந்தையை விட்டுப்போட்டுப் போயிருக்கிறன். என்ர புத்தியைச் செருப்பால அடிக்க வேணும்" என்று அவள் வெடித்தபோது, எனக்குள் பூகம்பம் வெடித்தது.

"பொத்தடி வாயை!" என்று கத்தினேன். அதோடு நிற்காமல் மகளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தேன். அதே வேகத்தில் ரயிலேறியும் விட்டேன்.

*********

இப்பொழுது மகள் வீட்டுப்பக்கம் தலைவைத்தும் படுப்பதில்லை. பழையபடி படிப்பித்தல் தொழில் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கின்றது. எனது பழைய மாணவர்களுக்குக் கொண்டாட்டம். ஆனால், குமார் முகத்தில் மட்டும் சோகம். அவனுக்கு முழுக் கதையும் தெரியும். அவனிடம் நான் பொதுவாகவே எல்லா விடயங்களையும் மனம் விட்டு, கொட்டித் தீர்த்து விடுவேன்.

பாச உணர்வுகள் அடிக்கடி தலைதூக்கும். பேரனின் பொக்கை வாய்ச் சிரிப்பைக் கேட்கக் காது ஏங்குவதுண்டு. மகளைக் காண மனம் துடிப்பதுண்டு. அவளை நான் வெறுப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாலும், அவள் என்னைச் சுற்றிச் சுற்றி வளைய வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் இந்த வயதிலும், என்னுள் பூதாகரமாய் வியாபித்திருந்த சுயகௌரவம் என்னை அழுங்குப்பிடியாகப் பிடித்திருந்ததால், பாச உணர்வுகள் மேலெழும் நேரத்திலெல்லாம் அவை ஒரேயடியாக அழுத்தப்பட்டன. ஒரேயடியாக இன்னொன்றும் நின்றுவிட்டது.

குடிப்பதை ஆயுட்காலத்திற்கு நிறுத்தி இருக்கின்றேன்.

About The Author