மணி ஆறு.
இருள் கவியத் தொடங்கிவிட்டது.
1, 1-ஏ, 2, 2-ஏ இப்படிப் பல பஸ்கள் உருண்டோடிவிட்டன. ஒன்றிலாவது இடமிருந்தால்தானே…?
ஆபீஸ் வாசலில் காத்துக் கொண்டிருந்தோம். நான், நடேசன், சூப்பரின்டென்ட் ராமநாதன், ராமசுப்பன், காஷியர் கோபாலன், ராஜதுரை.
"பொடி நடையாக நடந்துவிட்டால் என்ன? டவுன் வழிதானே எல்லாரும் போக வேண்டும்?" நல்ல யோசனை தந்தார் சூப்பரின்டெண்ட்.
"ஆமாம், அதுதான் சரி, பஸ்ஸாவது, இனிமேல் வரதாவது… மாலை வேளை, உடம்புக்கும் நல்லதுதான்" ஆமோதிப்பு வந்தது.
நடை துவங்கியது.
"உம். நீங்கள் இப்படி நடந்து வரும்படி இருக்கிறது, கார் வைத்துக் கொள்ளாமல் உங்களோடு சர்வீஸுக்கு வந்தவன் ஒவ்வொருத்தன் மத்திய ஆபீசிலே டைரக்டராகவும் துணை டைரக்டராகவும் இருக்கிறான். எல்லாம் காக்காய் பிடித்து முன்னேறியவன்க…"- சூப்பரின்டெண்ட்டை நோக்கி விளித்தான் ராமசுப்பன். கடைசியில் சொன்ன கலையில் அவனும் கை தேர்ந்தவனே. மேலும் ‘சூ’வுக்கு யார் எது சொன்னாலும் நம்பிவிடும் சுபாவம். முழுக்க முழுக்க உண்மையென்று நம்பி விடுவார்.
"ஆமாப்பா. நானெல்லாம் ரொம்ப விறைப்புதான். அந்தக் காலத்திலேயே கிறிஸ்துமஸ், வருஷப் பிறப்புன்னா ஆபீசரைப் போய் வீட்டிலே பார்த்து, மாலை போட்டு எலுமிச்சம்பழம் கொடுக்கிற வழக்கமெல்லாம் நம்மகிட்ட கிடையாது. இவன் இருக்கானே அதாண்டா மானேஜன் ஜம்புநாதன்- இவனுக்கு என்ன வேலை தெரியுங்கறே. எங்கிட்ட ஆதியிலே குமாஸ்தாவாய் வந்து சேர்ந்தான். ஏழைப்பையன், எஸ்எஸ்எல்ஸி-கம்ப்ளீட் பண்ணியிருக்கான். காலேஜ் சேரத் தகுதியில்லை ‘ஏதாவது வேலை போட்டுக் கொடு’ன்னு அவ அப்பா கெஞ்சினார்…"
"அட அவ்வளவுதானா இந்த ஆளு? என்னவோ-பெரிய ‘டபிள் கிராஜுவேட்’ போல இல்லே விரட்டறார் இங்கிலீஷ்லே?" – ராஜதுரை.
"என்ன இங்கிலீஷ் பேசறார்…? பொட்லர் இங்லீஷ்! ரெண்டு வார்த்தை பேசச் சொல்லு, எட்டுத் தப்பு! ‘ஐ லைக்ஸ்’ ஹி கோம்பாரே…" – கோபாலன்.
நான் மௌனமாகக் கேட்டுக் கொண்டே பின் தொடர்ந்தேன். ஆரம்பித்தார். ‘சூ’ (அதாவது சூப்பரின்டெண்ட்) "கேளு ரமணி! அப்போ எல்லாம் என்ன, நீங்கள் வரமாதிரிப் போட்டிப் பரீக்ஷை எழுதணுமா ; பேட்டி காணப் போகணுமா…? எல்லாம் சிபாரிசுதான். ஜம்புவை- அதாண்டா உங்க மஹாப் பெரிய மானேஜன் – கோபண்ணாகிட்ட சொல்லி ஆபீசில் நாப்பது ரூபா சம்பளத்தில் உட்கார்த்தி வைச்சேன்… அப்புறம் அவன் செட்டியாரைக் காக்கா பிடிச்சான், ராஜாபாதரை கைக்குள்ளே போட்டுண்டான்; வீட்டிலே போய்ப் பார்த்தான்; காய்கறி வாங்கித் தந்தான்; துணி துவைச்சுக் கொடுத்தான். இப்போ ‘என்ன ராமநாதா’ங்கறான்..!"
"ஆமாம் ஸார்; உங்களுக்கு ‘உயர்வு’க்கு ஏதும் சாத்தியம் இருக்கோ, இப்போ…?"
"ஓ! இன்னும் ரெண்டு மாசம்தானப்பா! டெல்லிக்கு அப்பீல் பண்ணியிருக்கேன். போன நவம்பரில் இருந்தே அமுலானதாக்கி எனக்கு ஒரு வருஷத்துப் பழைய சம்பளமெல்லாம் சேர்த்துத் தருவார்கள்…பாரேன்! ‘துணைப் பிரதான அதிகாரி’ன்னு மதராஸ் ஆபீசில் வேலை… அட, மேலப்புதூரில் எனக்கு வேலை இருக்குப்பா- நான் வரேன்!" என்று கூறிக் கொண்டு ‘சூ’ விடை பெற்றார். அறுவர் ஐவரானோம்.
ராமசுப்பன் சிரித்தான். "இப்படிச் சொல்லிச் சொல்லியே இவர் தன் ஸர்வீஸில் பாதிக்குமேல் கழிச்சுட்டார், "பிரமோஷன் வரது, பிரமோஷன் வரதுன்னு…!"
நான் கேட்டேன் – "ஏன் இவ்வளவு சர்வீஸாகியும் இவருக்கு இன்னும் பிரமோஷன் ஏதும் வரவில்லை…?"
"எப்படி ஐயா வரும்? மனுஷனுக்கு ‘உள்ளங்கை பிசுக்கு’ ஐயா… புரியல்லையா?- லஞ்சம் வாங்குவார்ய்யா எக்கச்சக்கமா ரிக்கார்டு படுமோசம்!"- ‘காஷியர்.
"அது மட்டுமில்லை; வாயினாலேயே கெட்டுப் போகிறான் மனுஷன்; ‘அவன் அப்படி; இவன் இப்படி’ எப்பவும் இதுதான் பேச்சு; மற்ற நேரம் தன் பெருமை- தன்னைப் பற்றிப் பேசிக்காம இருக்கிறதுதான் பெருமை; என்னைப்பாரு; என்னைப் பற்றி எப்போதாவது பெருமை பேசிக் கொள்கிறேனா..?"- ராஜதுரை.
"எத்தனை பொய் வவுச்சர் தயாராகியிருக்கும் ஆபிசிலே – விடு! இதெல்லாம் சொல்லக் கூடாது…"-நடேசன்.
கூறிக் கொண்டே விடை பெற்றான் நடேசன். "அடட, பாலக்கரை வந்துடுத்து… நான் வரேன், பேசிண்டே வந்தததிலே தொலைவு வந்ததே தெரியல்லே…"
பிறகு, காஷியர் கோபாலன் துவக்கினார் பேச்சை. "இந்த நடேசன் பிரமாதமாப் பேசறானே. எண்பத்தெட்டு ரூபாய் சமாச்சாரம் நமக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டான் போல இருக்கு…"
"அதென்ன எண்பத்தெட்டு ரூபா விஷயம்?" ஆவல் என்னைத் தூண்டிற்று.
"அதாம்பா, நம்ம நடேசன், காஷியராய் இருந்தான். எண்பத்தெட்டு ரூபா, பார்ட்டிகிட்ட வாங்கிக்கிட்டு ரசீது-போலி ரசீது கொடுத்துட்டான்; நம்ம புஸ்தகத்திலே ஆனா வரவு வைக்கலை…"
"அப்புறம்?"
"அப்புறம் என்ன விஷயம் வெளியாகி, அவனுக்குக் காஷியர் உத்யோகம் போய் கிளார்க் ஆனான் – அதுவும், சந்தானம் ஐயங்கார் இல்லாட்டாக் கம்பி எண்ணிக்கிட்டு இருந்திருப்பான்…"
"பாவம், என்ன பண்ணுவான், தரித்திரம்! வீட்டிலே எல்லோரும் சீக்கு; ஏகப்பட்ட குழந்தைகள்; சம்பளமோ கம்மி; வறுமை வந்துட்டாலே ‘என்ன பண்ணலாம் என்ன பண்ணலாம்’ன்னுதானே இருக்கும்?"- ராஜதுரை.
"அட சிங்காரத் தோப்பிலே எங்கள் வீடு, வரட்டுமா?"- கும்பிட்டுச் சென்றார் ராஜதுரை.
விழுந்து விழுந்து சிரித்தான் ராமசுப்பன். ஏதோ ஒரு முதல் தரமான ஹாஸ்யத்தை நினைவுபடுத்திக் கொண்டவன் போல.
"என்னடா?"
"நடேசன் தரித்திரன்னு இவன் நமக்குச் சொல்லறான். இவன் ரொம்பச் செல்வச் சீமான் என்று நினைப்பு ஊரெல்லாம் கடன்…"
"போன முதல் தேதி கூட ஆபீஸ் வாசல்லே ஒரு கடன்காரன் வந்து சட்டையைப் பிடிச்சுடல்லே..? மானேஜர் ஜம்புதானே வந்து சமாதானப்படுத்தி அனுப்பிச்சார்…? அப்ப, நான் வரட்டுமா, தில்லை நகர் திருப்பம் வந்துடுத்து…" விலகினார் கோபாலன்.
ராமசுப்பனும் நானும்தான்.
ராமசுப்பன் ஆரம்பித்தான். "இந்தக் கோபாலன் நடக்கிற நடையைப் பாரு, அடிபட்ட குள்ள வாத்து மாதிரி"
நான் பேசாமல் பின் தொடர்ந்தேன்.
நல்லவேளை, கடைசியாகப் பிரிபவன் நான்!