பழமொழிக்காகவே ஒரு நூல் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா?
மூன்றுரையரையனார் இயற்றிய ‘பழமொழி நானூறு’ ஒவ்வொரு பாவின் இறுதியிலும் ஒரு பழமொழி கொண்டதாய் நானூறு வெண்பா உடையது.
எடுத்துக்காட்டுக்கு ஒரு பாட்டு:
மானமும் நாணமும் அறியார் மதிமயங்கி
ஞானம் அறிவார் இடைப்புக்குத் தாமிருந்து
ஞானம் வினாஅய் உரைத்தல் நகையாகும்
யானைப்பல் காண்பான் புகல்.
இதில் பயின்றுள்ள பழமொழி, "யானையைப் பல் பிடித்துப் பார்க்கப் போவது நகைப்புக்கு இடமாகும்" என்பது. இது இன்றைக்குப் புழக்கத்தில் இல்லை. இதைப் போன்றே அந்த நூலின் பெரும்பாலான பழமொழிகள் மறைந்து போக, சிற்சில மட்டும் இன்றும் மாறாமல் அல்லது மாற்றம் அடைந்து வழங்குகின்றன. இவற்றுள் சில:
“முதல் இலார்க்கு ஊதியம் இல்லை.”
“கற்றலின் கேட்டலே நன்று.”
“முள்ளினால் முள் களையுமாறு.” (முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்)
“வெண்ணெய் மேல் வைத்து மயில் கொள்ளுமாறு.” (கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடித்தல் என்று இப்போது சொல்கிறோம்.)
கொக்கைப் பிடிக்க எளியவழி எது என்று ஒருவர் கேட்டாராம். அதற்குக் கிடைத்த பதில்:
"வெண்ணெயைக் கொண்டுபோய்க் கொக்கின் தலையில் வைத்துவிட்டால் வெயிலில் உருகி வழிந்து அதன் பார்வையை மறைத்துவிடும். பின்பு பிடித்துவிடலாம்" என்பது.
காரிய வெற்றி பெறுவதற்குக் கூறப்படுகிற முட்டாள்தனமான யோசனையைக் குறிக்க இந்தப் பழமொழி உதவுகிறது.
மக்களின் மனப்பான்மை, பழக்க வழக்கம், வாழ்க்கை முறை முதலியவை மாற மாறக் காலப்போக்கில் பல பழமொழிகள் இறந்துதான் போகும்.
உதாரணங்கள்:
. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.
(இக்காலத்தில் எந்த ஊரிலும் சர்க்கரை கிடைக்கிறது.)
2. ஊரிலே கல்யாணம் மாரிலே சந்தனம்
(முன் காலத் திருமணங்களின் போது, பெரிய பெரிய கிண்ணங்களில் (சந்தனப்பேலா என்று பெயர்) குழம்பு போன்று சந்தனம் தயாரித்து நிறைத்திருந்தார்கள். வருகிற முதியவர்களுள் பெரும்பாலோர் சட்டையணிந்திருப்பதில்லை. குளிர்ச்சி பெறவும், வியர்வை நாற்றம் போகவும் சந்தனக் குழம்பை அள்ளி மார்பு முழுவதும் அவர்கள் பூசிக்கொண்டார்கள். அந்த வழக்கம் நீங்கிவிட்டதால் பழமொழிக்கும் வேலையில்லாமல் போய்விட்டது.)
3. பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.
(திருமணங்கள் வீடுகளில் நிகழ்ந்த காலத்தில் அக்கம்பக்க வீடொன்றில் உணவு பரிமாறப்பட்டது. அதிகபட்சம் 50 பேர் மட்டும் அமர்ந்து உண்ணலாம். வரிசையில் நின்று உள்ளே போகவேண்டும். வீடு நிறைந்ததும் கதவு மூடப்படும். இடம் பிடித்தவர்கள் முதல் பந்திக்காரர்கள். மற்றவர்கள் அடுத்த பந்திக்காகக் காத்திருக்க வேண்டும். அப்போது இந்தப் பழமொழி காதில் விழாமலிருக்காது. பின் பந்திகளில் உணவு ஆறிப்போவதோடு அளவும் குறைந்து கொண்டே வரும். தீர்ந்தும் விடலாம். தற்காலத்தில் மண்டபங்கள் ஒரே சமயத்தில் எல்லாரும் சாப்பிட இடந்தருவதால் பழமொழி சொல்ல வாய்ப்பில்லை.)
‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்று நன்னூல் கூறுவது போலப் பழைய பழமொழிகள் அழியும். புதியவை தோன்றும். ஆங்கிலத்திலிருந்து சிலவற்றைப் பெற்றுள்ளோம்:
“காலம் பொன் போன்றது.”
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல.”
“பூனைக்கு யார் மணி கட்டுவது?”
“தவறுதல் மனித இயல்பு.”
“இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படாதே.”
பிரெஞ்சு தந்த புதுமொழி: “உனக்கும் பெப்பே, உங்கப்பனுக்கும் பெப்பே!”
”மக்கள் குரலே மகேசன் குரல்” என்பதற்கு மூலம் லத்தீன்.
சில பழமொழிகள் இன்றைய இளைஞர்களுக்குப் புரியாமல் இருக்கலாம். அவற்றை விளக்குகிறேன்.
1. தூங்கினவன் தொடையில் திரித்தவரை லாபம்.
தனித்தனியாய் உள்ள தேங்காய் நாரைத் தொடையில் வைத்துத் திரித்தால் அது ஒன்றாகச் சேர்ந்து கயிறு ஆகும். தரையில் அமர்ந்து வலக்காலை நீட்டிக் கொண்டு வெற்றுத் தொடை மேல் நாரை வைத்து இடுப்புப் பக்கமிருந்து முழங்கால் பக்கமாகக் கையால் உருட்டவேண்டும். அதற்குப் பெயர்தான் திரித்தல். திரிக்கும்போது நார் உறுத்தும், சிராய்ப்பு உண்டாகலாம். கஷ்டந்தான். பக்கத்தில் ஒருவன் காலை நீட்டித் தூங்குகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவனுடைய தொடையில் திரிக்கலாம் அல்லவா? விழித்துக்கொண்டான் என்றால் எதிர்ப்பான், திட்டுவான், மொத்தவும் கூடும். இருப்பினும் திரித்தவரை லாபந்தானே?
முடிந்தவரைக்கும் பிறரை ஏமாற்றிக் காரியம் சாதிக்கலாம் என்று எண்ணுகிற எத்தர்கள் பயன்படுத்தும் பழமொழியிது!
2. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
இங்கே தூற்றுதல் என்பதற்கு நெல்லையும், பதரையும் பிரித்தல் என்பது பொருள். பதர் என்பது கருக்காய். இது நெல் போலவே தோன்றும், ஆனால் உள்ளே அரிசியிருக்காது; ஆதலால் லேசாக இருக்கும்.
அறுவடைக்குப் பின்பு களத்துமேட்டில் கொட்டியுள்ள நெல்லைத் தொழிலாளர்கள் முறங்களில் அள்ளித் தலைக்கு மேலே தூக்கி முறத்தைச் சாய்த்துக் குலுக்கக் குலுக்கக் கனமான நெல் காலடியில் குவியும்; பதரோ காற்றில் பறந்து தொலைவில் போய் விழும். இப்படி நெல் ஓரிடத்திலும் பதர் வேறிடத்திலுமாகப் பிரிந்துவிடும்.
காற்று வீசவில்லை என்றால் காரியம் நடக்காது. ஆகையால் அது வீசும்போதே வேலையைச் செய்துவிடவேண்டும்.
வாய்ப்பு நேரும்போது நழுவவிட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு காரிய சித்தி பெறவேண்டும் என்பது பொதுக் கருத்து.
(மீதி அடுத்த இதழில்)
பந்திக்கு முந்து …. என்பது பழமொழி அல்ல விடுகதை என வாரியார் கூரியதாக படித்த நினைவு. பந்தியில் முந்தியும் படையில் பிந்தியும் இருப்பது வலது கை…… everything is fine….
//இருக்கிறதை விட்டு…//மரத்திலிருக்கும் விளாம்பழத்தைவிடக் கையிலிருக்கும் களாம்பழம் மேல்-என்பது இணையான பழமொழி. புதருக்குள் இருக்கும் இரண்டு
பறவைகளைவிடக் கையிலிருக்கும் ஒரு பறவை மேல்-என்று ஆங்கிலத்தில் கூறுவர்.
மிகவும் சுவாரசியமாக செல்கிறது உங்கள் தொடர் ……..தொடரட்டும் உங்கள் பணி
மிகவும் அபதமாக உல்லது.
பந்திகு முந்தும் படைக்கு பிந்தும் . அது யென்ன? விடை வலதுகை
கார்ருலபோதே தேர்ரிக் கொல்
பழமொழி குறித்து அதீத ஆர்வம் கொள்பவர்களில் அடியேனும் ஒருவன். இச் சிறப்புப் பகுதியைக் கண்டும் மிகவும் மகிழ்கின்றேன். பந்திக்கு முந்தி, படைக்கு பிந்தி” என்பதற்கான விளக்கம் சற்று வித்தியாசமாகத் தெரிகின்றது. விடுகதையென்றாலும் சரி பழமொழி என்றாலும் சரி, நானறிந்த வரையில் கண்டது: “பந்திக்கு வலது கையானது உண்பதற்கு முன்னேவரும், படைக்கு அதே கை அம்பினை நாணில் ஏற்ற பின்னே வரும்” என்பதே… நெல்லி. மூர்த்தி, சவூதி அரேபியா.”
இட் இச் வெர்ய் கோட் இ எ௯பெcட் மொரெ fரொம் திச்
பந்தி என்றால் சபை(கழகத்தமிழ் அகராதி) சபையில் முன்னால் இரு என்று பொருள்.படை என்றால் ஆயுதம் தாங்கிச்செல்லும் போர். காலாட்படை முன்னால் போகும்;ஆயுதம் தாங்கிய பிற படைகள் பின்னால் போகும். சபையில் முந்தி இருக்கவேண்டும். படையில் ஆயுதம் தாங்கி ப்பின்னால் செல்ல வேண்டும் என்பதே இதன் பொருள்
ஆழம் தேரியாமல் காலாய் விடதே.