பள்ளிகொண்ட அனுமான்

"ஏன் பள்ளிகொண்டீர் ஐயா ஸ்ரீரங்கநாதா" எனும் புகழ்பெற்ற பாடல் ஒன்று உண்டு. ஸ்ரீரங்கநாதர் என்றாலே பள்ளிகொண்ட தோற்றம்தான் நம் மனக்கண்ணில் தோன்றுகிறது. ஆனால், ராம பக்த ஹனுமான் என்றால் நம் மனக்கண்ணில் தோன்றுவது மிகுந்த பக்தியுடன் ஸ்ரீராமர் முன் தாசனாக அமர்ந்திருக்கும் அல்லது நின்றபடி வணங்கும் அனுமார்தான்.

ஆனால், அனுமானும் பள்ளிகொண்ட நிலையில், ஒரு கால் மேல் இன்னொரு காலைப் போட்டபடி சேவை சாதிக்கும் இடமும் இருக்கிறது. அதுதான் ‘பள்ளிகொண்ட அனுமான்’ கோயில். இது தமிழ்நாட்டில் இல்லை. இந்த வித்தியாசமான அனுமானைத் தரிசிக்க நாம் மகாராஷ்டிராவில் இருக்கும் நாக்பூர் வரை செல்ல வேண்டும். பின், ஏறத்தாழ 2 மணி நேரம் மேலே பயணிக்க ‘சாம்வலி’ எனும் கிராமம் காணலாம். அங்கு ஓர் உயரமான மலையின் மேல் இந்த அனுமார் கோயில் இருக்கிறது.

இங்கு அனுமார் களைப்பாறும் நிலையில் படுத்திருக்கிறார்! இராம – இராவண யுத்தம் முடிந்து எல்லோரும் நாடு திரும்ப, வரும் வழியில் அனுமார் இந்த மலையில் சயனித்தபடி இளைப்பாறினாராம்!

இங்கு இருக்கும் அனுமார் சிலை முதலில் நின்று கொண்டிருந்து, இயற்கைச் சீற்றத்தினால் பின்னர் கீழே விழுந்திருக்கலாம் என்று சில பக்தர்கள் எண்ணி, இந்தச் சிலையை நிற்க வைத்துப் பிரதிஷ்டை செய்ய முயன்றார்களாம். ஆனால், என்ன ஆச்சரியம்! அந்தச் சிலையை எடுத்து நிறுத்த முடியவேயில்லை. எத்தனை தரம் தூக்கினாலும் அந்த அனுமார் திரும்பத் திரும்ப நழுவிப் படுத்துக் கொண்டாராம். ஆகையால், அவரை அப்படியே வைத்து வழிபடத் தொடங்கினர். இந்த அனுமார் மிகப் பெரியவராக, ஏறத்தாழ ஆறடி நீளமாக செந்தூர வர்ணத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். இவர் மரவேரில் சுயம்புவாக உருவானவர் என்று அங்கிருக்கும் பண்டா (பூசாரி) கூறினார்.

இங்கும் பலர் அனுமாருக்கு வெண்ணெய் சாற்றுகின்றனர். ஜிலேபி மாலை, வடை மாலை, வெற்றிலை மாலை போன்றவை அணிவித்துச் செவ்வாய், சனிக் கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சில சமயம், துளசி மாலைகள் நிரம்பி அனுமாரையே மறைத்துக் கொள்கின்றன! ஆனால், பூசாரி அவ்வப்போது அவற்றை அப்புறப்படுத்தி நமக்குத் தரிசனம் கிடைக்கச் செய்கிறார். இந்த அனுமான் மிகவும் அருள் மிக்கவராம்; கேட்டதை நிறைவேற்றுவாராம்.

அனுமாரைப் போற்றும் ‘ஸ்ரீஅனுமன் சாலிசா’ துளசிதாசரால் இயற்றப்பட்டது. இதைச் செவ்வாய், சனிக் கிழமைகளில் ஓதினால் எண்ணியவை நடந்தேறும். ‘சாலீஸ்’ என்றால் இந்தியில் ‘நாற்பது’ எனப் பொருள். மாருதியைப் போற்றிக் குறள் போல நாற்பது பாக்கள் இருப்பதால் இது ஸ்ரீஅனுமான் சாலிசா எனப் பெயர் பெற்றது. ஸ்ரீஅனுமானின் புகழ் பாடும் இதனை விடாமல் படிக்க, சனி பகவான் பிடியிலிருந்து தப்பிவிடலாம். ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்தாஷ்டமச் சனி உள்ளவர்கள் கவனிக்க!

இந்தப் புகழ்பெற்ற அனுமான் சாலிசா இந்தக் கோயிலின் நுழைவாயில் சுவரில் தொடங்கி உட்பகுதி வரை இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. பல பக்தர்கள் ஆங்காங்கே நின்றபடி இதை ஓதுகின்றனர். அனுமாரை வணங்கப் பெண்களை மிக அருகில் அனுமதிப்பதில்லை. ஆண்கள் முதல் சுற்று வரை சென்று வணங்கி அருள் பெறுகின்றனர். பெண்கள் கொஞ்சம் தூரத்தில், அனுமாருக்குக் கால் பக்கத்தில் நின்று பார்க்க அனுமதி கிடைக்கிறது.

உளவியல் பாதிக்கப்பட்டவர்கள், பேய் பிசாசு பிடித்ததாக நம்பப்படுபவர்கள் போன்றோர் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்களுக்கெனப் பரிகாரமும் செய்யப்படுகிறது. செவ்வாய் அல்லது சனிக்கிழமை சிறப்பாக அன்னதானமும் செய்யப்படுகிறது.

கோயிலினுள் ஒரு பஜனை மண்டபம் உள்ளது. அதில் பலர் ஒன்று சேர்ந்து பஜனைப் பாடல்களைப் பாடுகிறார்கள். கூடவே, வடநாட்டுக்கேயுரிய டோலக்கும் இசைக்கப்படுகிறது!

படுத்த நிலையில் அனுமார் அருளும் இந்த வித்தியாசமான தரிசனம் மனதுக்குள் ஒரு தனி ஆனந்தத்தைப் பொங்கச் செய்கிறது. "ஜெய் பஜரங்க பலி" எனும் முழக்கம் எங்கும் சூழ நாம் பரவசமடைகிறோம்!

About The Author

1 Comment

  1. T.K.Srinivasan

    Nice Article! The photo of Hanuman” would have satisfied the readers more!
    T.K.Srinivasan”

Comments are closed.