பறவைகளும் துப்பாக்கி ரவைகளும் (1)

சாலைப் போக்குவரத்துப் பணியில் வேலை என்றாலும், அழகியநம்பி ராணுவ அவசரங்களுக்கு அழைக்கலாம் என்று விருப்பந்தெரிவித்திருந்தான். வருடம் ஒருமுறை ராணுவ முகாம்களில் பயிற்சி கடுமையாய் இருந்தது அவனுக்கு. கடுங்குளிரையும் உடல் உழைப்பையும் வேண்டியது அது. இந்தியும் பெரிதாய்த் தெரியாது. பிரத்யேக இந்தி வகுப்புகள் வேறு இருந்தன. ஆனால் அதிகாரிகள் நட்பு பூர்வமாக நடந்து கொண்டார்கள். கடும் வேலைக்குப் புதியவர்கள் என்று அவர்களைப் புரிந்தவர்களாய் இருந்தார்கள். வேலைநேரத்தில் கண்டிப்பு காட்டியவர்கள் பயிற்சி முடிந்ததும் மழைக்கு வானம் முகம் மாறினாப்போல குளிர்ந்து புன்னகைப் பரிமாறல்களுடன் கைகுலுக்கினார்கள். அலுப்பு தெரியவில்லை அந்தக் கணம்.

ராணுவ உடுப்புகளை அணிந்து கொள்வதில் சிறு பெருமித மிதப்பு. நடையில் தனி எடுப்பு. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பகுதிகளில் பயிற்சிகள். மாறிய தட்பவெப்பச் சூழல். கடும் வெயில். பெரும் மழைக்கொட்டு. மலைப்பகுதி. கடும்பனி. பச்சைப்பசேல் என்ற வளாகப் பகுதி. அடர்காடுகள் என சுற்றித் திரிய வாய்த்தது. வேறுவேறு இன மக்கள். வரியோடிய வறுமை சுமந்த முகங்கள். திக்குலங்கள். அவர்களின் ஓலையிட்ட அல்லது ஓட்டு வீடுகள்.

புதிதுபுதியாய் விரித்துக் காட்டப்படுகிற உலகங்கள் அழகாய்த்தான் இருந்தன. கர்ச்சீப்-மேஜிக் போல. மண்ணே பகுதிக்குப் பகுதி நிறம் வித்தியாசப் பட்டது. நீர் வாசனைகளே கூட மாறின. தனித்தனி உடைப் பாங்கு. உடல் நிறம். மொழி. சமூக நம்பிக்கைகள். அதுசார்ந்த மாறுபட்ட சடங்குகள், சங்கீதம்.

எத்தனையோ வேறுபாடுகளுக்கிடையில் பொதுமனிதனின் அடையாளங்கள், கனவுகள், தளங்களை அவன் ஒரு எளிமையுடன் உள்வாங்கிக் கொள்ள வாய்த்தது. மொழி புரியாத நிலையிலும் ஒரு புன்னகையுடன் யாரையும் சட்டென்று அணைத்துக் கொண்டாற்போல உணர வைக்க அவனுக்கு இயல்பாகவே முடிந்தது. ஒரு குழந்தையின் வெளிப்படையான எளிமை. அன்புப் பரிமாற்றங்களுக்கு மொழி தேவையே இல்லை. சில சந்தர்ப்பங்களில் மொழி இடைஞ்சலாகவும், எதிர்அம்சமாகவுமே கூட அமைந்து விடுகிறது.

பிரயாணம் அலுக்காத சற்று முந்தைய வருடங்கள். அவனும் பாண்டியராஜும் ஞாயிறு விடுமுறை என்றால் அவரவர் வண்டியை முன்தினமே சரிபார்த்துக் கொண்டு, எங்காவது மனம்போன போக்கில் கிளம்பி விடுவார்கள். தூரம் ஒரு பொருட்டே அல்ல. வழியே ஒரு வாகனம் சிக்கிக் கொண்டாலும் மற்றதில் போய் அவசர உதவிகளுக்குப் பார்த்துக்கொள்ள முடியும்.

அதிகாலை கிளம்பிவிட்டால் வெயிலோ குளிரோ பொருட்டே அல்ல. மழையில் நனைந்தபடியே கூடப் போயிருக்கிறார்கள். எளிய நீர்இறங்கல் போல மழை தோன்றும். வண்டியில் போகையில்தான் தண்ணீரின் உக்கிரம் தெரியும். வேகமெடுத்துச் செல்கையில் மழை சாட்டைசாட்டையாய் அறையும். கண்ணெல்லாம் எரியும். முகமெல்லாம் உடம்பெல்லாம் வலிக்கும்.

அப்படியொரு நாள்தான் ஆரோவில் போனது.

ஸ்ரீ அரவிந்த அன்னையின் கனவுகளும் தீர்க்க தரிசனமும் அவனை ஆச்சரியப் படுத்தின. ஆன்மிகமும் லெளகிகமும் உலகப் பொதுநோக்குமான அன்னையின் பார்வை விஸ்தாரம் மிக அபூர்வமாய் இருந்தது. சுதந்திரப் போராட்ட களவீரராக இறங்கி தனிப்பெருங் கனவுகளில் கிளைபிரிந்து சிந்தனைப் புரட்சியை உலகளாவிய தளத்தில் நிருவிய அரவிந்தர். அவரது அடியொற்றித் தடம் கண்ட அன்னை ‘இனி உலகயுத்தம் வராது’ என ஓங்கி முழங்கியது அவனைப் பரவசப் படுத்தியது.

ஆரோவில். மலர்ச்செடிகளும் கொடிகளும் மரங்களுமான பெரிய அமைதியான வளாகம். நடுவே அமைந்த அமைதியான தியான வளாகம். பறவையொலிகள் தவிர மானுட ஒலிகள் முற்றே தவிர்க்கப்பட்ட, வடிகட்டிய வளாகம். அமைதி அங்கே அன்னையின் கனவாக ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. மன இரைச்சல்கள் சுமுகப்படுத்தப் பட்டிருந்தன. காற்றே மாறினாப்போல. இயற்கையை உணரக் கற்றுத் தந்தன அந்த வெளிகள். ஆச்சரியமான பயணம். ஆச்சரியமான அனுபவம்.

தன்னை உணர்தல் ஒருநிலை. இயற்கையை உணர்தல் ஒருநிலை. தன்னை இயற்கையின் ஒரு பகுதியென உணர்தல் ஒருநிலை. அரவிந்தரும் அன்னையும் ஆட்சிசெய்யும் மெளன வியூக வளாகம் அல்லவா? அறிவின் மிருகப்பாய்ச்சலை, கட்டுத்தெறித்த திசையடங்காத் தினவை ஒழுங்குபடுத்த வல்லதான அந்தச் சூழல் பிடித்துப் போனது.

பூக்கள் வழியே சேதி பரிமாறிக் கொள்ளும் அன்னையின் பாணி வசீகர அனுபவம் மிக்கவாறும் மக்கள் அறிந்த பூக்களைக் கொண்டே வாழ்வின் நம்பிக்கைகளை வலுவூட்ட அன்னை கண்ட உத்திகள் பரவசப் படுத்தின. பூக்கள் தாவரங்களின் கனவுச் சிற்றுருவங்கள் அல்லவா? நமது கலாச்சார அளவிலேயே வாழ்க்கையை ஐந்நில அளவில் இலக்கண வசப்படுத்தி இலககியம் வளர்த்த நாடல்லவா இது?

பெண்களுக்குப் பூக்களின் பெயர் வைப்பது எத்தனை அழகான கற்பனை! கமலா, பங்கஜம், பாரிஜாதம், மல்லிகா, முல்லை, சாமந்தி, செம்பகா. சமீபத்தில் இருவாட்சி என்றுகூட பெயர் கேள்விப் பட்டிருந்தான். நல்ல நல்ல தமிழ்ப் பெயர்கள் கேட்கவே இதமாய் குளுமையாய் இருக்கிறது. வீட்டில் அப்பெயர்களில் அவர்கள் அழைக்கப் படுவது இன்னும் சிலாக்கியம்தான்.

பெண்ணே உன் பெயரென்ன?

வள்ளி. அலர்மேல் வள்ளி என்பது முழுப்பெயர் என பிற்பாடு அறிந்தான். அழகான பெயர். அவளும் கொள்ளையழகு. அதிகாலையில் வாசலில் பாதியும் அவன் மனசில் பாதியுமாய் அவள் கோலமிட்டாள். நல்ல நிதானப் பக்குவத்துடன் அந்த விரல்கள் வீதியில் மாயாஜாலம் நிகழ்த்தின. தினமும்.

அதிகாலை வாசல் கோலங்களில் பெண்கள் தன் கனவுகளை சற்று கோழித்தீவனமாட்டம் (சேவல் தீவனம்!) தூவி விடுவதான பிரமை அவனுக்கு ஏற்பட்டது. தட்டுப்படுந் தோறும் தலைநிறையப் பூவுடன் அவளை அவன் கவனித்தான். பூக்களின் மீது இத்தனை ஆசை கொண்டவளா நீ! என கவனம் தன்னைப் போல அவளில் கூர்த்தது.

(தொடரும்)

About The Author