பிற்பாடு பூக்களை எங்கு பார்த்தாலும் அவள் நினைவு வர ஆரம்பித்ததே அதைச் சொல்.
ஆரோவில் பூக்களின் வளாகம். அன்னையின் வளாகம். உலக அமைதிப் பூங்கா அது. உலக அமைதிக்குப் பூக்களால் கட்டிய கோட்டை அது அல்லவா? வலிமையான யானையை எளிய அங்குசத்தால் கட்டுப் படுத்துவது போல அல்லவா இருக்கிறது கதை. அவன் மெல்ல நகைத்துக் கொள்கிறான். தன்னைப் போல மனம் தாவி அலர்மேல் வள்ளிமேல் குவிகிறது.
சற்று சீக்கிரம் கண்விழித்த அதிகாலைகளில் தவறாமல், அவளைச் சந்திக்க முடியுமா என அவன் முயற்சிக்க ஆரம்பித்தான். பிறகு தன்னைப்போல அவன் அதிகாலைகளில் விழித்துக் கொள்ள ஆரம்பித்தான். அவள் காட்சிப்பட்ட காலைகளுக்கு என்னவோ பிரத்யேக அர்த்தம் காண்கிற பிரமை. நம்பிக்கை அவனில் வளர ஆரம்பித்தது. அடடே இதுதான் காதல் போலும் என நினைக்கவே புன்னகை வந்தது அவனுக்கு.
அவளுக்கும் அப்படி இருந்திருக்குமா தெரியாது.
அவளுக்குக் கைநிறையப் பூ வாங்கித் தந்து தலைநிறைய அவள் வைத்துக் கொள்வதைப் பார்க்க அவன் வேகம் கொண்டான்.
”பாண்டியா, எனக்கு ஏன் இப்படியெல்லாம் தோன்றுகிறது?”
”நல்வாழ்த்துக்கள்” என்று கை குலுக்கித் தோள் தட்டிக் கொடுக்கிறான் பாண்டியராஜன்.
காதல் உள்ளவரை உலகத்துக்கு அழிவு இல்லை. காதல் மூலம் அமைதிகாணத் தவிக்கும் மனம் கனவுலக எல்லைகளை விரித்து அடுத்தவீட்டில் தென்னைபோலும் சாய்ந்து நிற்கிறது.
”என் பெயர் அழகியநம்பி”
”தெரியும்” என்றாளே பார்க்க வேண்டும். அந்த ஒற்றைத் தருணத்தில் அவனில் இருந்து ஆயிரம் புறாக்கள் கிளம்பி வானமெங்கும் பறந்து திரிகிறாப் போல இருந்தது.
அவன் அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான். ”நீ ஒரு மானுடமலர்” என்றான் மிக அலங்காரமாய். வாழ்க்கையே அழகாய்த் தோன்றியது அப்போது.
மங்கியதோர் நிலவும் மொட்டைமாடிக் காற்றும் கவிதை பேசிய கணத்தில் அவள் மடிமீது தலைவைத்து அவன் படுத்துக் கிடந்தான். மாடியை ஒட்டி பன்னீர்ப்பூ மரம். இரவென்ன பகலென்ன சதா கனவுகளை வாரியிறைத்து சுற்றுப்புறமே மணக்கச் செய்கிற அந்த மரத்தை யாருக்குதான் பிடிக்காது.
அதைவிட ஆச்சரியம் அவள் வீட்டில் அவன் பார்த்த அன்னையின் படம். ”அன்னைபற்றி அறிவாயா?” என்கிறான் திகட்டலாய்.
”இயற்கையை யார்தான் அறிய மாட்டார்கள்?” என்கிறாள் அலர்மேல் வள்ளி.
தன்முன் குனிந்து பேசிய அந்த உதடுகளை இழுத்து அழுத்திக் கொள்கிறான். ஆணின் கனவுகளை பெண்ணிடத்தும் பெண்ணின் கனவுகளை ஆணிடத்தும் ஒப்படைத்த இயற்கையை வியக்காமல் இருக்க முடியவில்லை.
உலகம் அழியாது. உலகப்போர் மூளாது என்கிறாள் மனசில் அன்னை புன்சிரிப்புடன்.
அழகியநம்பி அதுவரை காஷ்மீர் போனதில்லை. பனிக்குப் போர்த்திக் கொள்கிறார்கள் மனிதர்கள். பனியையே போர்த்திக் கிடந்தது இயற்கை அங்கே. அங்கங்கே ஏரிகளில் படகுகளில் கூட வாழும் மனிதஜாகைகள். ஆனால் நம்பிக்கை வற்றிக் கிடந்தன. ஊருக்கே வேறு முகம் வந்திருந்தது. அலுப்பாய்ச் சுருண்டு கிடந்தது ஊர்.
அந்தப் பகுதிக்கு வெள்ளிமூக்கு என்பதாகப் பொருள்படும் பெயர் என்று சொல்கிறார்கள். ஒரு காலத்தில் காதல் இளம் ஜோடிகள், புது மணமக்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என்று இந்த வளாகத்தில் ஆனந்தமாய் உலவித் திரிந்தார்கள்.
அவனுக்கு வருத்தமாய் இருந்தது. சரணாலயமாக இங்கே வந்துபோன பறவைகளைத் துப்பாக்கிச் சத்தம் மிரட்டி விரட்டியடிக்கிறது. எல்லைக்குக் கிட்டத்தில் இதுவரை அவன் வேலை என்று வரவழைக்கப் பட்டதேயில்லை. பகலிலும் கூட ஒளி அங்கே ஊருக்குள் நுழைய அனுமதிகேட்டுத் தயங்கி நிற்பதைக் காண வேடிக்கையாய் இருந்தது. இடுப்பில் நெருப்புக் கணப்புடன் நடமாடும் ஜனங்கள். புதிய தலைகளாக யாரைப் பார்த்தாலும் சிரித்த காலம்தான் சட்டென்று மாறிப் போனது. அப்போது உற்சாகமாய் உணர்ந்தவர்களே கூட இப்போது அவநம்பிக்கையாய்ச் சற்றே பயத்துடன் மேலுங் கீழும் பார்க்கிறார்கள். தயங்குகிறார்கள். ஒரு விரைத்த மெளனம் அவர்களைச் சூழ்ந்து கொள்கிறது.
அழைக்கப் பட்டபடி அவர்கள் எட்டு ஒன்பது கிலோமீட்டர் வரைகூட வளையவர வேண்டியிருந்தது. பனி மூடிக்கிடக்கும் சாலைகளைக் கடந்து போதல் மகா அனுபவம். முன்னே பனியை வெட்டி ஒதுக்கி ஊடுருவச் செய்கிற அளவில் பிள்ளையார் தும்பிக்கைபோலும் மூக்கெடுத்த ராணுவ வாகனங்கள். சில சமயம் நடந்தும், கோவேறு கழுதைகள் மீதும் பிரயாணம். குறி பிறழாமல் சுடும் பயிற்சி ஒத்திகைகள். மலையேற்றம். வலைப்பின்னல் பற்றி ஏற்றங்கள். மரமேறுதல். உயரக் கட்டடங்களில் இருந்து கயிறு வசம் அமைத்துக் கொண்டு இறங்குதல். உடல் பயிற்சிகள்.
(தொடரும்)
“