பயனுள்ள குளியல் முறைகள்

வணக்கம் நண்பர்களே! எப்படி இருக்கீங்க? வீட்டு வேலை, ஆபிஸ் வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு ரொம்பக் களைப்பா இருக்கீங்க போல இருக்கே? சோர்வா இருந்தா ஒரு குளியலைப் போட்டுட்டு வாங்களேன். எங்க போறீங்க? அதுக்குள்ள குளிக்கக் கிளம்பிட்டீங்களா? ஒரு அஞ்சு நிமிஷம் இந்த கட்டுரையைப் படிச்சுட்டுக் குளிக்கப் போங்களேன்! உங்க சருமத்திற்கு ஏற்ற குளியல் முறைகளைச் சொல்றேன்.

அன்றாடம் நம் உடலில் படிகின்ற கண்ணிற்குத் தெரியாத தூசுகள், சுரக்கின்ற வியர்வை, அதனால் ஏற்படும் ஒருவிதமான நாற்றம் ஆகியவற்றைப் போக்குவதற்காக குளிக்கிறோம், எல்லார்க்கும் தெரிஞ்ச விஷயம்தான்! குளிச்சதும் உடம்புலேயும் மனசிலேயும் உற்சாகம், மலர்ச்சி எல்லாம் வருதுல்ல…. இதெல்லாம் உங்களுக்கு டபுளா கிடைக்கணுமா? (பாயிண்டுக்கு வந்துட்டேன்) இப்படி ட்ரை பண்ணிப் பாருங்க….

மிருதுவான குளியல் முறைகள் :

சோர்வு / மன அழுத்தம் நீங்க :

மூன்று கப் நல்ல ஸ்ட்ராங் கமோமைல் டீ (chamomile Tea) எடுத்து தண்ணில கலந்து குளிக்கணும். காமோமைல் டீல இருக்கிற மருத்துவ குணங்களும், மிருதுவாக்கிற தன்மையும் உங்களை ஈஸியா மன அழுத்தத்திலிருந்தும், சோர்விலிருந்தும் விடுவிச்சுடும்.

எண்ணைப் பசை சருமத்திற்கு :

உங்க வீட்டுல ஆரஞ்சுப் பழம், திராட்சைப் பழம் வாங்கி வைச்சது லேசா அழுகிடுச்சா? தூக்கிப் போட்றாதீங்க! குளிக்கிற தண்ணில சிட்ரிக் ஆசிட் அதிகமா உள்ள பழங்களான எலுமிச்சை , ஆரஞ்சு, திராட்சை இவற்றைக் கலந்து குளிச்சுப் பாருங்க. இந்த சிட்ரிக் ஆசிட் பாக்டீரியாக்களைக் கொல்வதோடு, அழுக்கை அகற்றி, தோலில் உள்ள தேவைக்கு அதிகமான எண்ணையையும் உறிஞ்சிக் கொள்கிறது. நல்ல நறுமணமாகவும் இருக்கும். அதனால இனிமே எண்ணைப் பசை சருமத்துக்கு குட்பை சொல்லிட வேண்டியதுதானே! (வேண்டாம்னு தூக்கிப் போடற பழத்துக்கும் இப்போ வேலை வந்தாச்சு!)

வறண்ட சருமத்திற்கு :

இந்த வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு எல்லாக் காலங்களும் பிரச்சனைதான். வருடம் 365 நாளும் குளித்ததும் எண்ணை அல்லது மாய்ச்சுரைசர் உபயோகப்படுத்தியே ஆகவேண்டும். இனிமே அது பற்றிய கவலை வேண்டாம்! நீங்க குளிக்கிற தண்ணியில பேக்கிங் சோடா கலந்து குளிச்சுப் பாருங்க. பேக்கிங் சோடா ஒரு நல்ல மாய்ச்சுரைசர். அல்லது ரோஸ் ஆயில் ஒரு பத்து சொட்டுகள் கலந்து குளிக்கலாம். இந்த ரோஸ் ஆயில் நம் தோலிற்குத் தேவையான தண்ணீரைக் காயவிடாமல் ஈரப்பதத்துடனே வைத்திருக்க உதவுகிறது. குளித்ததும் நாம் போட்டுக் கொள்கிற வாசனைத் திரவியம் எல்லாம் தேவையில்லை. இதுவே ஒரு சென்ட்தானே.

டிப்ஸ்: ஆயிலும் தண்ணியும் எப்பவும் நல்லாக் கலக்காது இல்லையா? அதனால கொஞ்சமா அதுல பாலைக் கலந்தீங்கன்னா நல்லா மிக்ஸ் ஆயிடும்!

இறந்த செல்களை அகற்ற :

ஒரு சின்ன பாக்கெட் பால் பௌடரை குளிக்கிற தண்ணீரில் கலந்து குளிக்கவும். பாலில் உள்ள லாக்டிக் ஆசிட் தோலில் உள்ள தேவையற்ற இறந்த செல்களை அகற்றி உங்கள் சருமத்தைக் குழந்தையின் தோலைப் போல மிருதுவாக மாற்றிவிடும்.

உடல் அசௌகரியங்களிலிருந்து விடுபட :

2 டீஸ்பூன் இஞ்சித்தூள் மற்றும் 2 டீஸ்பூன் வறுத்த கடுகு ஆகியவற்றைக் குளிக்கும் நீரில் கலந்து குளித்தால், பெண்களுக்கு பீரியட்ஸ் நேரங்களில் வரும் அசௌகரியங்களிலிருந்து விடுபட்டு ஃப்ரெஷ்ஷாக உணரலாம்.

சுகமான உறக்கத்திற்கு :

பல பேர் இதுக்காகத்தான் ரொம்பக் கஷ்டப்படறோம் இல்லையா? கவலைய விடுங்க. படுக்கறதுக்கு முன்னால உங்க பாத்டப்ல ஒரு டீஸ்பூன் லாவண்டர் ஆயிலை கலந்து குளிச்சுட்டுப் படுங்க. மனதை மயக்கும் லாவண்டரின் நறுமணம் உங்களை அழகா தாலாட்டித் தூங்க வைக்கும்.

நச்சுத்தன்மையை அகற்ற :

நாம் வெளியில் செல்லும்போது கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை வாய்ந்த எத்தனையோ தூசு துகள்கள் நம் சருமத்தில் ஒட்டிக் கொள்கின்றன. இதனால் பல சரும வியாதிகள் வந்துவிடுகின்றன. இதைத் தவிர்க்க, நல்ல வெதுவெதுப்பான நீரில் 250 கிராம் கடல் உப்பு, 500 கிராம் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலந்து தண்ணீர் நன்கு குளிர்ச்சியாகும் வரை ஊற வைக்கவும். பிறகு குளிக்கவும். இந்தக் குளியல் உங்கள் சருமத்தை மிருதுவாக்குவதோடு எல்லாவிதமான நச்சுத் துகள்களையும் நம் தோலிலிருந்து நீக்கிவிடுகிறது. (திருப்பூர் மக்களுக்கு நல்லா யூஸ் ஆகுமோ?)

தினமும் இந்த மாதிரி குளிக்க முடியாவிட்டாலும் கிடைக்கும் விடுமுறை நாட்களில் ரிலாக்ஸா குளிச்சு ரிலாக்ஸா இருங்க! ஆமா.. அது என்ன ஒரு கூட்டமா கையில கம்போடு என்னையப் பாத்து வந்துக்கிட்டு இருக்காங்க! என்னது அடுக்குமாடி அபார்ட்மெண்ட் ல ஒரு பக்கெட் தண்ணிய ஒன்பது பேரு குளிச்சிகிட்டு இருக்கீங்க. இதுல பாத்டப், ரோஸ் ஆயில், லாவண்டர் எல்லாம் சொல்றேனா…… ஆளைவிடுங்கப்பா சாமி! இந்த ஆட்டத்துக்கு நான் வரலை. எஸ்கேப்…!

Disclaimer: Bath tips in this section is provided by Devi Rajan for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

9 Comments

  1. gomathi mylraj

    தலைப்பை பார்த்தவுடனே இது தேவிராஜன் எழுதியது என்ற நினைப்பில் உள்ளே போனால் அவர்கள் எழுதியது தான்.எழுதிய விதம் அருமை.keep it up.

  2. P.Balakrishnan

    குழந்தையின் படத்தைப் போட்டுள்ளீர்கள்; குழந்தைகளைக் குளிப்பாட்டும் முறைகளையும் சொல்லலாமே!

  3. vs

    ஓம்.
    கங்கையில் குளித்தால் உடல் நலம் சிறக்கும் என்பது மரபு.ஆத்திகன் குளிக்கும் போது சிவனாரின் சடைமுடியிலிருந்து வந்த கங்கை என்று நினைத்து வணங்கி நீராடி, நீர் மொண்டு சென்று கைலாசநாதரை நெஞ்சாத் தழ்விய எண்ணங்களோடு, கைலையின் பனிக்குளிர் ஸ்பரிஸத்தை உணர்கிறான். ஆத்மாவைத் தரிசித்து அதனை நீராட்டி மகிழ்கிறான்.
    நாத்திகன் நீரின் தண்மையை மட்டும் உணர்ந்து மேனியின் அழுக்குநீங்கியமை மட்டுமே காண்கிறான்.
    இரவு தூஙகுவதற்கு முன்னர் இரண்டு பாதங்களையும் முழங்கால் வரை கழுவி உலர்ந்த துணி கொண்டு துடைத்துவிட்டுப் படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.
    உடல் நலம் குன்றி சோர்வு அடைந்தவர்கள் படுக்கச் செல்லு முன் இரண்டு பாதங்கள் மூழ்கும் அளவில் ஒரு தொட்டியில் (பிளாஸ்டிக் அல்லது தாம்பாளம்) பொறுக்குமளவில் வென்னீர் ஊற்றி பாதங்களை சில நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் துடைத்துக்கொண்டு படுத்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும்.

    கட்டுரை சிறப்பாக இருக்கிறது. அனுபவக் குறிப்புகளா?
    அன்புடன் வெ.சுப்பிரமணியன்

  4. Jo

    அருமையான டிப்ஸ். முயற்சி செஞ்சு பார்த்துட வேண்டியது தான்.

  5. P.Balakrishnan

    10.1.2010 இல் அளித்த பின்னூட்டம் இடம் மாறிவிட்டது:
    புளுதி, எண்ணெய்ப்பசை நாற்றம் இவற்றைப் போக்க சிகைக்காய் தேய்த்துக் குளிக்கவேண்டும். நெல்லிக் காயை நீரில் இட்டுக் காய்ச்சிக் குளித்தால் தோலில் படியும் நச்சுத்தன்மை அகலும். இவை, வெண்ணெய் அளைந்த குணுங்கும், விளையாடு புழுதியும் என்று கண்ணனை நீராட அழைக்கும்போது பெரியாழ்வார் குறிப்பிடுவன.

  6. DeviRajan

    வருகைக்கும் நல்ல தகவல்களுக்கும் நன்றி திரு. சுப்பிரமணியன். பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி! நல்ல டிப்ஸ்களை வழங்கிய திரு. பாலகிருஷ்ணன் சார் அவர்களுக்கும் நன்றி!

  7. M.M.k tamilselvi

    தலை முடி அடர்தியாக போரதுக்கு என்னெபன்னனும்,தலைமுன்னாடி சொட்டவிழுததுக்கு என்னெபன்னனும் முடி உலுவாமெ இருக்குரதுக்கு என்னெ பன்னனும் கொன்சம் சிகிரம் அனுப்புன்கெலேன்

  8. m k veni

    கன்னத்தின் இரு பக்கமும் கருப்பான படலம் போக என்ன மருந்து என்பதை சொல்லுன்கலென்

Comments are closed.