அது ஒரு காலம். வடகிழக்குப் பருவ மழை தீவிரம் கொண்டிருந்தது. வீசியடித்த பெருங்காற்றில் உடல் முழுதும் நனைந்தவனாக, கலியபெருமாள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தான். அந்தச் சிறிய ரயில் நிலையத்தின் பிளாட்பாரக் கூரை மழைக்குப் போதுமானதாக இல்லை. மழைச்சாரல் ஊசிமுனை கொண்டு முகத்தில் வீசியடித்தது. மின்னல் மின்சார சாட்டை கொண்டு யாரையோ வெட்டவெளி மைதானத்தில் விளாசிக் கொண்டிருந்தது. ஸ்டேஷன் எதிரில் இருந்த ஜட்கா ஸ்டாண்டிலிருந்து குதிரைகளின் கழிவு மழைநீரோடு கலந்து துர்நாற்றம் வீசியடிக்க வெள்ளமாய் ஓடத் தொடங்கி இருந்தது.
தீபாவளி முடிந்து, மெட்ராஸ் செல்கிற கூட்டம் ஸ்டேஷனில் அதிகம் இருந்தது. செங்கோட்டை ஃபாஸ்ட் பாஸஞ்சர் ரயில் அதிசயமாய் நிமிடம் பிசகாமல் ஸ்டேஷனுக்குள் வந்து நின்றது. ‘சிய்யாழி’ ரயில்வே ஸ்டேஷனில் அந்த ரயில் வேண்டா வெறுப்பாக இரண்டு நிமிடங்கள் நின்று மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.
கலியபெருமாள் பிளாட்பாரத்தை விட்டுத் தள்ளி அமைந்திருந்த ‘அன்-ரிஸர்வ்டு’ இரண்டாம் வகுப்புப் பெட்டியை நோக்கிக் கொட்டும் மழையில் நனைந்தபடி ஓடினான். பெட்டிக்குள் தாவி நுழைகிற வேளையில் ‘இங்க எடமில்லெ. வேறப் பொட்டியப் பாருப்பா’ என்கிற காட்டுக் கூச்சல் அவனை அனைத்துப் பெட்டிகளிலும் வரவேற்றது. முட்டி மோதிப் பெட்டிக்குள் நுழைந்து அமர்கையில், மழையில் துப்புரவாக நனைந்திருந்த அவன் உடல் வேர்வையில் குளிக்கத் தொடங்கியது.
கலியபெருமாள், மறுநாள் காலையில் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து புறப்படும் பம்பாய் மெயிலைப் பிடிக்க வேண்டும். அதற்காகத்தான் இந்த பகீரதப் பிரயத்தனம்.
தடதடத்து ஓடிய ரயில் அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் கொள்ளிடம் ஸ்டேஷனில் நின்றது. தண்ணீர் பிடித்துக் கொள்கிற சாக்கில், அந்தப் பாஸஞ்சர் வண்டி அந்த ஸ்டெஷனில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வது வழக்கம். இந்த ஓய்வு கலியபெருமாளுக்கு ஒரு நல்ல இடத்தைத் தேடிப் பிடித்து அமர்ந்து கொள்ள உதவியது.
‘வெட்டிவேர்.. வெட்டிவேர்’ என்கிற குரலும், வெட்டிவேரின் மணமும் அந்த ரயில் வண்டியை வியாபிக்க, ரயில் கொள்ளிடம் ஆற்றின் மீது தடதடத்தபடி சென்னையை நோக்கி வேகமெடுத்து ஓடத் தொடங்கியது. ஆனால் கலியபெருமாளின் நினைவலைகள் பின்னோக்கி அவனுடைய கிராமத்துக் குடிசையைச் சென்றடைந்திருந்தது.
கலியபெருமாள் அம்மா பிள்ளை. பையன்கள், அம்மா கோண்டுக்களாக இருப்பதில் வியப்பில்லை. அவனுக்கு அப்பா இருந்தார். ஆனாலும், அம்மாதான் அவனுக்கு எல்லாமுமாக இருந்தார். குடிகார அப்பா. ஒரு நாள், வழக்கம் போல போதை தலைக்கேற, சாப்பாட்டில் ‘கவிச்சி’ இல்லை என்று அம்மாவையும், அவனையும் அடித்து நொறுக்கினார். வீட்டை விட்டே வெளியேற்றினார். திரும்பவே இல்லை. ஒரு நாள் காலையில் பெருக்கெடுக்கும் மழை வெள்ளத்தில் பொறைவாய்க்கால் மதகின் சுழலில் அகப்பட்டவராய் வெளிக்கிளம்பினார். அப்பா போன பின்பு வயிறு பிழைக்க அம்மா வழி தேடினாள். அப்போது ஆரம்பித்ததுதான் அந்த வியாபாரம்.
வியாபாரம் என்றால் சாதாரண வியாபாரம் அல்ல. அரிசி வியாபாரம். அரிசி வியாபாரம் என்றால் ஏதோ லாரிகளிலும், பெரிய பெரிய டன்லப் டயர்போட்ட இரட்டைமாட்டு வண்டிகளிலும் நூற்றுக்கணக்கான மூட்டைகளை அரசாங்கக் கிட்டங்கிகளில் போட்டுவிட்டுப் பணம் பண்ணுகிற வியாபாரம் இல்லை. பக்கத்தில் இருக்கும் குக்கிராமங்களுக்குச் சென்று சின்னஞ்சிறு கோணிப்பைகளில் நெல்லை வாங்கிவந்து, சவுக்குச் செத்தைப் பொறுக்கி, நெஞ்சில் புகைமண்டி ஏற, இருமியபடி நெல்புழுக்கி, வயல் வாய்க்கால் தாண்டி ஆமப்பள்ளம் ரைஸ் மில்லிற்குச் சென்று அரைத்து எடுத்து வந்த அரிசியைக் கல் பொறுக்கி, குருணை நீக்கி, சிறுசிறு சிப்பங்களில் கட்டி, தலைமீது சுமந்து சென்று கீழ வீதி, ரத வீதி என்று அரசாங்க உத்தியோகஸ்தர்களின் வீடுகளில் வாடிக்கை பிடித்து லிட்டர், படி என்று அளந்து போடுகின்ற சில்லறை வியாபாரம். அம்மா செய்த அந்த அரிசி வியாபாரம்தான் கலியபெருமாளைப் படிக்கவைத்தது, சோறு போட்டது. அந்த வரைக்கும் அந்த வியாபாரம் பெரிய வியாபாரம்தான். அம்மாவும் பெரிய வியாபாரிதான்.
அம்மாவைப் புரிந்துக் கொள்ள கலியபெருமாள் எவ்வளவோ முயன்றிருக்கிறான். முடிந்ததில்லை. அவளுடைய சுக துக்கங்களை அவள் என்றுமே வெளிப்படுத்தினதில்லை. அவளைப் பார்க்கிறவர்கள் அவளை ஒரு மனித ஜடம் என்பதாகவே அறிந்திருக்கிறார்கள். ஆனால் கலியபெருமாளுக்குத் தெரிந்ததெல்லாம் வேறு. அம்மாவை அவன் பார்த்திருக்கிறான். குடிகார அப்பனிடம் மல்லுக்கு நிற்கிற சேரிப் பெண்ணாக, குடும்பத்திற்காக நாள்தோறும் வேலை செய்கிற இயந்திரமாக, கலியபெருமாளுக்கு அன்பை மட்டுமே கொடுக்கத் தெரிந்த தாயாக மட்டுமே அவள் இருந்தாள். அம்மா எப்போது தூங்குவார். எப்போது எழுவார் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனுக்கான காரியங்கள் மணி பிசகாமல் அவளால் நிகழ்த்தப்படும்.
விடியற்காலை ஐந்தேகால் மணிக்கு அவர்கள் ஊரைக் கடந்து போகும் சோழன் பேருந்தில் அம்மாவின் அரிசி மூட்டை சிப்பத்தை ஏற்ற மாட்டார்கள் என்பதால் அவர், எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடைத் தெருவுக்கு அந்த அரிசி சிப்பத்தைத் தன் தலைமீது சுமந்து செல்வாள். அவர் மாலையில் வீடு திரும்பியதும் முதல் வேலையாய், கடைத் தெரு செட்டியார் மிட்டாய்க் கடையில் வாங்கி வந்த சேவு பொட்டலத்தைக் கலியபெருமாளிடம் கொடுப்பாள். அதை ஆசை ஆசையாய்க் கலியபெருமாள் தின்பதைக் கண்கொட்டாமல் சிறிதுநேரம் பார்த்துக் கொண்டிருப்பாள். அதன் பிறகே சற்று நேரம் நைந்து போன பழம்பாயில் படுத்துக் கண்மூடுவாள். அம்மா கண்வளர்வதில் கூட கவனமாக இருப்பார். நிமிட நேரம் கூட அதிகமாகத் தூங்கிவிட மாட்டார்.
‘ஊர் உலகத்தில் இல்லாத ஆம்பிளப் புள்ளயப் பெத்திட்டா. கஞ்சிக்கு வழியில்லே. கட்டின புருஷன் கெதியில்லே. மவனெ காலேஜில படிக்க வச்சிக் கலியகட்டரு (கலெக்டர்) ஆக்கப் போறாளாம்’ – ஊர்சனம் தலை கண்ட போதெல்லாம் பேசின பேச்சுக்கள் அவள் காதுகளில் விழுந்தாலும், அவள் அவைகளைக் காதில் போட்டுக் கொண்டதில்லை.
அந்தத் திருப்பம் திடீரென்றுதான் உண்டானது.
"ஏம்மா உங்க பையன் காலேஜ் படிச்சிட்டு வேலை இல்லாமத் தானே இருக்கார். எத்தனை நாளைக்குத்தான் நீயும் இப்படி அரிசி மூட்டையைச் சுமப்பே. மூட்டைத் தூக்கி கஞ்சி குடிச்சியே காலத்தை ஓட்டமுடியுமா. நமக்குத் தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்கா. சவுதியில் வேலை செய்ய ஆள் எடுத்து அனுப்புறாங்க. ஒங்க பையனையும் அனுப்பி வைங்க. பாஸ்போர்ட், விசாவுக்கெல்லாம் நான் ஏற்பாடு செய்யிறேன்".
அம்மாவின் அரிசி வியாபாரத்திற்குப் பணம் கொடுத்து உதவிய தண்டல்காரன்தான் அந்த யோசனையைச் சொன்னான். வேறு யார் சொல்லியிருந்தாலும் அவர் கேட்டிருக்கவே மாட்டார். காரணம், அப்பா போன பிறகு வட்டிக்குப் பணம் கொடுத்தாலும் ஆபத்பாந்தவனாய்க் கைகொடுத்தவன் அவன். அம்மா, அவன் சொல்லியபடியே செய்வதற்கு ஒத்துக் கொண்டார்.
ஒரு நாள், திடீரென்று கோபால் பண்டாரம் வரவழைக்கப்பட்டார். கலியபெருமாளின் ஜாதகம் அலசி ஆராயப்பட்டது. பிறகு பணம் திரட்டும் முயற்சியாக கலியபெருமாளின் அப்பன் ஆஸ்தியாய் ‘ஒத்திக்கு’ வைக்கப்பட்டிருந்த கீழமானியம் நன்செய் ஒருமா நிலமும் கிரயம் பேசப்பட்டு, தண்டல்காரன் பேருக்கு கிரயம் கொடுக்கப் பட்டது. கலியபெருமாளின் சவுதி பயணம் தொடங்கியது.
‘விசா ரெடி. பத்தாயிரம் ரூபாய் பணத்தோடு பயணத்திற்கு ரெடியாகப் பையனை அனுப்பி வைக்கவும்’ – பம்பாயிலிருந்து ஏஜண்ட் கொடுத்த தந்தி ஒரு நாள் வந்தது. மகனைப் பிரிய மனமில்லாத அம்மாவும், பிறந்தது முதல் அம்மாவைத் தவிர வேறு அறியாத, அம்மாவே கதி என்று சுற்றிக் கிடந்த கலியபெருமாளும் தந்தி கிடைத்த நாள் முதலாய்த் தவிக்கலானார்கள்.
"அப்பா கலியா, உடம்பை பத்திரமாப் பார்த்துக்கோ, வேளா வேளைக்குச் சாப்பிடு. நீ நல்ல மாதிரியா வீடு வந்து சேர்ந்தா தான் எனக்கு நிம்மதி” இதற்கு மேல் அம்மாவால் பேச முடியவில்லை”.
கலியபெருமாளுக்கு மட்டும் என்ன அன்புக்குப் பஞ்சமா? அவனுக்கு உடல், ஆன்மா எல்லாமும் பதறித் துடித்தன. அம்மாவைப் பிரியப் போகிற துக்கம். அவனுடைய குருதியில், ஆன்மாவில் உயிரோடு உயிராய் ஓடிக்கொண்டிருந்த அம்மா பாசம் – அந்தக் கணத்தில், அந்த விடைபெறலில் பீறிட்டு வெடித்து அலறலாய்க் கேட்டது. கலியபெருமாளும், அம்மாவும் கட்டிப் பிடித்து அழுத காட்சியை அந்த ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்தது.
‘அம்மா, அம்மா நான் போகலே அம்மா. உன்னை விட்டுட்டுப் போகவே மாட்டேன்’மா. என்னைப் போக வேண்டாம்’ன்னு சொல்லும்மா, நான் போக மாட்டேன். உன்னை விட்டுப் போக மாட்டேன்’மா. அன்றைய தினம் கலியபெருமாள் போட்ட அலறல் மறுபடியும் ஒரு மறு ஒலிபரப்பாய் அந்த ரயில் பெட்டியில், கொட்டும் மழையில், தூங்கிக் கொண்டிருந்த அனைவரையும் எழுப்பி விட்டது. சோகத்தில் ஆழ்ந்திருந்த அவனுடைய கண்கள், கண்ணீரைச் சொரிந்தபடி இருந்தன.
திடீரென்று ரயில் வண்டி ஸ்டேஷனில் நிற்பதை அவன் உணர்ந்தான். ‘சென்னை எழும்பூர்’ போர்டு கண்ணில் தென்பட்டது. பயணிகளில் பாதிப்பேர் இறங்கி விட்டிருந்தனர். ‘ச்சே.. என்னை நானே மறந்தேனே..’ என்று முணுமுணுத்தவனாய்த் தன்னுடைய பெட்டியையும் ஏர்பேக்கையும் தேடி எடுத்தான். அப்போதுதான் தெரிந்தது. அம்மாவின் அன்பு கலந்து கட்டப்பட்ட புளியோதரைச் சாதமும், அந்தப் பொட்டலத்தின் அடி பாகத்தில் பாதுகாப்புக் கருதி சவ்வுத் தாளில் பத்திரமாகச் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஏஜண்டுக்குக் கொடுக்க வேண்டிய பத்தாயிரம் ரூபாயும் களவாடப்பட்டிருப்பது தெரிந்தது!
‘என் அம்மா… என் பணம்.. என் பாஸ்போர்ட்" என்று பிதற்றியபடி கிழிந்த டிரவுசரும், சட்டையில்லாத கருத்த மேனியுடன் ஒரு வாலிபனை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உங்களில் யாராவது பார்க்க நேர்ந்தால் அவன்தான் கலியபெருமாள். தெரிந்து கொள்ளுங்கள்.! அவனுடைய இந்தக் கோலத்தைக் காண அவன் அம்மாவுக்குத் தான் கொடுத்து வைக்கவில்லை.. எந்த அம்மா தான் மகனை இப்படியொரு கோலத்தில் காண உயிருடன் இருப்பாள்?..
பட்டா / புல எண் 293