மக்களை அலற வைக்கும் பன்றிக் காய்ச்சலுக்கு தகுந்த ஒரு மருந்தைக் கண்டுபிடிக்க முனைந்த பல இந்திய கம்பெனிகளுள் மூன்று வெற்றியை நோக்கிப் பீடு நடை போடுகின்றன.
ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (புனே), பாரத் பயோடெக் (ஹைதராபாத்) மற்றும் பனாகா பயோடெக் (புது டெல்லி) ஆகிய மூன்று கம்பெனிகள் இந்த மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இதில் புனேயைச் சேர்ந்த ஸீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா வெற்றி அடைந்துள்ளது.
மருந்துகள் தயார் செய்யப்பட்டு நவம்பரில் சந்தையில் உள்ள மருந்துக் கடைகளில் கிடைக்க ஆரம்பிக்கும் என்று சுகாதார ஆராய்ச்சி பிரிவின் செயலாளர் வி.எம்.கடோச் தெரிவித்துள்ளார்.
ஸ்வைன் ஃப்ளூ.. ஸ்வைன் ஃப்ளூ என மக்கள் பயந்து அலறக் காரணம் என்ன?
இந்த வியாதி ஒரு புது வித வைரஸால் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம். ஸ்வைன் ஃப்ளூ, இன்ஃப்ளூயன்ஸா ஏ அல்லது ஹெச்1என்1 என்ற புதிய வைரஸ் மூலம் வியாதி பரவுகிறது! நுண்ணிய கிருமியான இது நேரத்திற்கு நேரம் மாறுவதால் பெரிய சவாலாக ஆகி விட்டது.
ஸ்வைன் ஃப்ளூ பன்றிகளிடம் சாதாரணமாகக் காணப்படுவதால் இதை பன்றிக் காய்ச்சல் என்கிறோம். ஹாக் ஃப்ளூ என்றும் இதற்கு இன்னொரு பெயர் உண்டு. ஜுரம், தளர்தல், மூட்டுகளில் வலி, வாந்தி, பிரக்ஞை இழத்தல் ஆகியன இந்த நோய் வந்ததற்கான அறிகுறிகள்.
1918ல் ஸ்பானிஷ் ஃஃப்ளூ மூலம் இந்த வியாதி ஆரம்பித்தது. பன்றிகளிடம் தோன்றி பரவ ஆரம்பித்தது. இன்று 2009ல் மீண்டும் வந்து பயமுறுத்துகிறது!
150 நாடுகளில் 1,62,380 இன்ஃப்ளூயன்ஸா கேஸ்கள் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் அதில் பன்றிக் காய்ச்சலான H1N1 மூலம் 1154 பேர் இறந்து விட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை உலகளாவிய அளவில் அதிகரித்து வருவதால் எல்லா தேச அரசுகளும் கவலை அடைந்துள்ளன; இந்தியாவில் வெளிநாட்டு மருந்துகள் செப்டம்பர் முதல் கிடைக்க ஆரம்பிக்கும்.
முதலில் யார் யாருக்குக் கிடைக்கும்?
கர்ப்பிணிகள், 6 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகள், ஹெல்த்கேர் மற்றும் அவசரகால மருத்துவ சேவையில் பணி புரிவோர், 6 மாதக் குழந்தை முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்கள், 24 முதல் 65 வயதுள்ளவர்கள் என இப்படிப் படிப்படியாக அனைவருக்கும் கிடைக்க ஆரம்பிக்கும்.
இன்ஃப்ளூயன்ஸா வியாதியால் அதிக அபாயம் உள்ள நோயாளிகளுக்கு உடனடியாக இது தரப்படும். மேலே கூறிய அனைவருக்கும் தர 1590 லட்சம் டோஸ் ஸ்வைன் ஃப்ளூ தடுப்பூசி மருந்து (swine flu vaccine) வேண்டும்!
வெளி நாட்டு மருந்து வருவதற்கு முன்னர் நம் நாட்டு மருந்தைக் கொண்டு வர அரசு முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறது. உரிய மருந்து வேகமாகத் தயாரிக்கப்பட ஃபாஸ்ட் டிராக் அப்ரூவல் என்ற உடனடி அங்கீகாரமும் வழங்கப்பட இருக்கிறது.
எனவே, பன்றிக் காய்ச்சல் என அதிகம் பீதி அடைய வேண்டாம். ஊடகங்கள் எச்சரிக்கை தருவது வரவேற்கத்தக்கதே. ஆனால் அதையே வதந்தி கலந்த பீதியாக மாற்றி மக்களைச் சென்றடையச் செய்வது வரவேற்கத்தக்கதல்ல.
புதிய வியாதிகள் மருத்துவ உலகிற்குச் சவால் என்றால் அதை எதிர்கொள்ள மருத்துவ விஞ்ஞானிகள் தயார்; பயப்படாமல் இயல்பான வாழ்க்கை வாழ மக்களும் தயார்தானே!