அவர் சொன்னார். "அது அவன் பொண்டாட்டிதானே! எங்களுக்கு மருமகள் அவ!" அபுல்ஹஸனுக்கு சப்பென்று ஆகிவிட்டது.
இப்பொழுது சாப்பாட்டிற்காக ஜனங்கள் ஆண்-பெண் பேதமின்றி சிறுசுகள், பெரியவர் கவனமின்றி இடித்து தள்ளிக்கொண்டு நின்றார்கள். மாடிப்படிகள் நெடுக பெருங்கூட்டம். நெரிசல் தாளாமல் படிக்கட்டுகள் தகர்ந்து விடுமோ என அஞ்சும்படியான ஆரவாரம். ஜபருல்லா சொன்னான். "காக்கா, இப்படியே நடையைக் கட்டிட்டோம்னா என்ன அர்த்தம்? மாப்பிள்ளையைப் பாக்க வேண்டாமா?" என்றான். "முதல்ல அதச் செய்வோம்பா, இல்லேன்னா துனியா முடியிற காலத்துலதான் ஒருத்தரையொருத்தர் பார்க்க வருமோ?" என்று ஹக்கீம் பின் அடியைத் தொடர்ந்தார். உடனே மாப்பிள்ளை எந்த இடத்தில் இருக்கிறார் என்று பார்க்க நான்கு பேரும் ஒருவர் பின் ஒருவராகச் சென்றர்கள். கூட்டத்தின் அலை மோதுதல் அவர்களைப் பிரித்துவிட யத்தனித்தது. அங்கே, இங்கே என்று தெரிய வந்தபோது ஆலாய்ப் பறந்தார்கள். மாப்பிள்ளை சிற்சில நிமிடங்களுக்கு முன்னால் நின்றிருந்த இடங்களை எல்லாம் அவர்கள் கண்டுகொண்டாலும், நடப்பு நிமிடத்தின் இருப்பிடத்தைச் சற்றும் அணுக முடியவில்லை. முடிவில் சோர்வடைந்தார்கள்.
"சாப்பாடு கெடைச்சா, மாப்பிள்ளை கெடைக்க மாட்டேங்குறார். மாப்பிள்ளை கெடச்சா சாப்பாடு கெடக்க மாட்டேங்குது" என்றார் சாதிக். இன்னம் பஸ் பிடிக்க நீண்ட தூரம் நடக்கவும், பஸ்ஸில் நிற்கவும் வேண்டியுள்ள நிலையில் இப்படியே நழுவிப் போய்விடலாம் என்று தீர்மானித்தனர். பஸ் பிடிக்க நடந்தனர்.
அபுல்ஹஸன் மனத்தில் குழப்பம் தோன்றியது. மண்டபத்தில் பார்த்தவர்களை மீண்டும் தன் மனக்கண்களில் கொண்டுவந்து நிறுத்தினான். அடுத்த முறை பார்க்க நேர்ந்தால் எவ்விதச் சிரமமும் இல்லாமல் ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு பேசிவிட வேண்டும். அவர்களை வரிசையாக ஞாபகம் செய்து அனைவரின் பெயர், ஊர், என்ன உறவுமுறை, எத்தனை பிள்ளைகள் அனேகமாக எல்லாவற்றையும் கணக்குப் போட்டு ஒவ்வொருவரையும் மனப்பாடம் பண்ணினான். பிறகு பெருக்கல் கணக்கில் யார் யார் என்னென்ன உறவு முறைகளில் இருக்கிறார்கள் என்கிற ஸ்தானங்களை முறைப்படுத்தினான். அப்படியும் வரிசை நேர்படவில்லை.
சாதிக் மச்சானை நெருங்கி, "அந்தப் பச்சை சேலை கட்டியிருந்த உங்க மருமக பேரு என்ன?" என்று கேட்டான். அவர் திரும்பிப் பார்த்து "ஏன் என்ன விசயம்?" என்றார்.
"இல்லே.. இந்த தாஹிர் உங்களுக்குத் தம்பிமுறை. அந்தப் பச்சை சேலையோ உங்களுக்கு மருமவ. அவங்க ரெண்டு பேரும் எந்த வகையில் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க?" என்றான் அபுல்ஹஸன்.
மூவரும் சற்று யோத்தனர். சாதிக் இப்படிச் சொன்னார். "இவ்வளவு நேரமும்தான் கல்யாண வீட்டுல பாத்தோமே! எந்த வகையில எந்த உறவுமுறை சரியாயிருக்கு? எல்லாம் அப்படிக்கு அப்படின்னு ஆயிடுச்சி"
அவர் சொன்னபோது நால்வரும் துயரத்தில் தோய்ந்தார்கள். அதன்பின் அவர்களுக்கு எதுவும் பேசமுடியவில்லை. ஒவ்வொருவரும் இறுகிப் போனார்கள்.
பஸ் வந்தது. ஹக்கீம் டாடா காட்டியபடியே தாவிப்போய் ஏறினார். அந்த பஸ் மறைந்து அவர் சென்ற திசையையே வெறித்துப் பார்த்து மயங்கி நின்றபோது அடுத்த பஸ் வந்தது. "மச்சான் வாரோம்" என்றபடி மற்ற இருவரும் கூட்டத்தை இடித்துக்கொண்டு உள்நுழைய, பஸ் நகர்ந்தது.
சமூகப் பந்தலில் தள்ளித் தள்ளித் தயங்கி நிற்கும் கல்களா மனிதன்…
அபுல்ஹஸன் இப்போது தனிமரமாய் நின்றான். எல்லாமே வெறுமை அடித்ததுபோல் இருந்தது. மனதை ஏதோ ஒன்று கசக்கிப் பிழிந்த மாதிரி இருந்தது. குண்டடிபட்ட பறவையின் சிறகடிப்பாய்த் துடித்துத் துவண்டது இதயம். ஒரு காலத்தில் யாரும் யாரோடும் இருக்க மாட்டார்கள் என எண்ணம் வந்து கலங்கடித்தது. உடனே, அவனை அறியாமலேயே திரும்பவும் கல்யாண மண்டபத்தை நோக்கி நடக்கலானான்.
(முடிந்தது)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“