இந்தக் கலகலப்புக்கு மத்தியில் இராமநாதபுரத்தில் இருந்து ஹக்கீம் மச்சான் கையில் ஒரு சிறு ஹேண்ட் பேக்கோடு வந்து சேர்ந்தார். அனேகமாகத் தலை முழு வழுக்கை ஆகிவிட்டிருந்தது. கூலிங்கிளாஸ் மாட்டிக்கொண்டு வந்திருந்தார். தன் மாமனாரையே சற்று வயது குறைந்த தோற்றத்தோடு பார்ப்பது மாதிரி இருந்தது அபுல்ஹஸனுக்கு. ஹக்கீம் அப்படியும், இப்படியுமாகப் பார்த்தார். சின்னப் பிள்ளைகளுக்கு, அவர் ஒரு கல்வி அதிகாரி மாதிரியான தோற்றத்தில் இருந்ததாலும், என்றுமே பார்த்திராத நபராக இருந்ததாலும் மருளும் விழிகளோடு அவரைப் பார்த்தார்கள். அவரும் அதை புரிந்து கொண்டவராக லேசான புன்முறுவலைக் காட்டி இணக்கமாக முயன்றார். ஆக உயர்ந்த பதவியிலிருக்கும் தோரணை அவரோடு ஒட்டியிருந்து கம்பீரத்தை அளித்தது.
"நம்ம வீட்டைப் பொறுத்தமட்டிலும் ஆம்பளைங்க மட்டும்தான் இந்தக் கல்யாணத்திற்கு வந்திருக்கோம்" என்றார் சாதிக். மூவருமே ஒருமுறை தங்களைச் சுற்றிலும் பார்த்துக் கொண்டனர். "நீயாவது உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு வந்திருக்கலாம்" என்று சாதிக் சொல்லவும், "வந்துட்டு உடனே திரும்ப வேண்டியிருக்கும்ங்குறதுனால் என்னத்துக்கு வீண் அலைச்சல்னு அவளாவேதான் சொல்லிட்டா" என்றார் ஹக்கீம்.
"நாம எல்லரும் ஆளுக்கொரு திசையா வெலகி வெலகிக் கெடக்குறோம். இந்த மாதிரி விசேஷங்களையும் விட்டுட்டா அப்புறம் நம்ம குடும்ப உறவு எப்படி அமையும்? யாருக்கும் யார் மேலயும் பாசமோ, அன்போ இல்லாமே போயிருமே!" என்று சாச்சியின் கண்கள் தழுதழுக்க, ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திக் கை பிசைந்தார்கள். அந்த வேதனையை எல்லோரும் பகிர்ந்து கொள்வதுபோல அமைதியாக இருந்தார்கள்.
"ஏன் மச்சான், நீங்களாவது தங்கச்சியக் கூட்டிட்டு வந்திருக்கக் கூடாதோ?" என்று அபுல்ஹஸனைக் கேட்டார் ஹக்கீம். அவன் முழி பரிதாபமாயிருந்தது. திடும்மென்று பரக்கத்நிஸாவின் தங்கை ஜரீனா பீவி அந்த அறைக்குள் வேகமாக நுழைந்தாள். "ஹக்கீம் காக்கா எப்படி இருக்கீங்க?" என்றபடி ஜபருல்லாவின் அருகில் அமர்ந்து விசாரிக்கத் துவங்கினாள். ஹக்கீம் காக்காவைப் பார்க்கத் துடிதுடித்த ஜரீனா பீவியின் ஆர்வம் வியர்வையைப் பெருக்கியது. அனைவருமே திருதிருவென முழிக்க, "இப்படியா ஒரு மனுச மக்கா அடையாளம் தெரியாம அலையிறது. அது ஜபருல்லா, ஹக்கீம் இன்னா இருக்கானே இவன்தான்" சாச்சி அவளுக்கு ஹக்கீம் காக்காவை அடையாளம் காட்டவும் ஜரீனா பீவிக்கு வெட்கம் சூழ்ந்து சற்றே அவமதிப்பைப் பெற்றவள் போல் பாதிச்சிரிப்பைப் பறிகொடுத்து விட்டாள். ஹக்கீமுக்கும் அது சங்கடமாக இருந்தது. ஜபருல்லாவை நெருங்கி உட்கார்ந்த இணக்கத்தை இழந்து ஹக்கீமை நோக்கி மூன்று முறை தவழ்ந்து நெருங்கி வந்த ஜரீனா பீவி, நெருங்காத இடைவெளியுடன் மெதுவாகப் பேசலானாள். "ஒரு வருசம், ரெண்டு வருசம் பார்க்காம இருக்கலாம். இப்படி ஒரு தலைமுறை காலம் விட்டுப் பார்த்தா யாரை அடையாளம் கண்டு என்ன பேச? வயசு வந்த இவளுக்கே இப்படி குழப்பம் வந்துட்டதேன்னு எனக்கு மனசுக்குள்ள திகில் அடிச்சிடுச்சிப்பா. இதெல்லாம் எங்கே கொண்டு போயி நம்மள நிறுத்தப் போவுதோ?" என்று சாச்சியின் குரல் மேலும் கம்மிப்போய்த் துக்கமாய் உருத்திரண்டது. ஹக்கீமுக்கும் அவளை, அந்தச் சமயத்தில் பெயரில்லாத மனுஷியாகவே பார்க்க முடிந்தது. சாச்சியின் துயரப் பேச்சிலாவது இவள் பெயர் உதிர்ந்து தன் பிடிக்குள் விழுந்து விடாதா" என்ற படபடப்பு உண்டானது.
"எல்லோரும் மெட்ராஸ் மெட்ராஸ்னு போயிட்டீங்க. அப்போ எங்க பார்க்க முடியுது?" என்று ஹக்கீம் சொன்னார்.
"இருந்தாலும் நீங்க என்னை மறந்துட்டீங்க!" என்றாள் ஜரீனா.
"ஜபருல்லாவைப் பாத்து ஹக்கீம் காக்காவான்னு என் முன்னாலியே கேட்டியே. இவ்வளவு அழகான வழுக்கத் தலை இருந்தும் நீ தவறிட்டியே.." என்று பேசினாலும் கூட, அவள் பெயர் மட்டும் இன்னும் நிழல் உலகத்தில் இருந்து அவருக்கு மீண்டு வரவில்லை.
"நான் உங்கள பாத்த காலத்துல நல்ல வாரிப் படிஞ்ச தலை முடியோடுதான இருந்தீங்க. ஒரேயடியா பறிபோயிடும்னு யாரு கண்டா?"
(தொடரும்)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“