திருமண மண்டபத்தில் அபுல் ஹஸன் நுழையும்போதே பராக்குப் பார்த்துக் கொண்டுதான் நுழைந்தான். இதுதான், தான் வந்து சேர வேண்டிய திருமண மண்டபமா என்று குழலாடும் கால்களோடு நின்றான். இதனாலேயே வசலில் நின்று வரவேற்றவர்களும் சந்தேக முழிகளோடு சந்தனம், கற்கண்டு நிரம்பிய தட்டுக்களை நீட்டுவது பொலவும், நீட்டாது நின்றனர். இவன் கண்களில் நன்றாகப் பதிந்த முதல் பெண்மணி, மிகுந்த அழகோடு பச்சை நிறச் சேலையில் ஒய்யாரமாக வந்து கொண்டிருந்தாள். இவள் வேண்டப்பட்டப் பெண்ணாக இருக்கக் கூடுமோ என்ற எண்ணம் எழவும் பார்வையைச் சிரமப்பட்டு மீட்டுக் கொண்டான். திருமண மண்டபத்தின் கலகலப்பு பிரமிப்பு ஊட்டுவதாகவும் குதூகலத்தை அள்ளித் தருவதுமாக இருந்தது; ஆனபோதும், தெரிந்த முகங்கள் எதுவும் அகப்படாத நிலையில் சந்தேக மனமாக, அந்தரத்தில் நடந்து சென்றான் அவன். நடையைக் குறைந்த நடுமண்டபம் பூராவும் பார்வையை விரட்டினான். ஒரு கை கூட்டத்தில் இருந்து எழுந்தது. அங்கே மாப்பிள்ளை தென்பட்டான். அந்தக் கூட்டத்தில் இவனும் ஒரு துளியாகி விட்டான்.
ஜபருல்லா மாப்பிள்ளை இருந்த இடம் நோக்கி அபுல்ஹசன் வந்ததும் இருவரும் கைகோர்த்துக் கொண்டர்கள். "ஏன் இப்படி அடைஞ்சி கெடக்கணும்? ஜனங்களோடு ஜனங்களா உலாவலாமே!" என்றான் அபுல்ஹசன். ஜபருல்லாவும் அனேகமாக அதைத்தான் சொல்ல இருந்தான். பட்டுச் சேலைகளும், சுடிதார்களும் சரசரக்கும் இடமாய் வந்து நின்றார்கள். பல வாலிபர்களும் அங்கே தன்னிலை அழிந்திருந்தார்கள். அபுல்ஹசன் கேட்டான். "எங்கே மாமி, தம்பி, தங்கச்சிய எல்லாம்?". ஜபருல்லா, "ஏய் எல்லோரும் வந்துட்டு இருக்க முடியுமாப்பா ஒரு கல்யாணத்துக்காக வேண்டி? இதுல மாசக் கடேசி வேற!" என்றான். அவன் முகத்தில் படரவிருந்த சலிப்பைச் சேலைகளின் ஸ்பரிசங்கள் துடைத்துச் சென்றன. "நீரு மட்டும் என்ன தனியாத்தானே வந்திருக்கீரு! எங்கே பெண்டாட்டி புள்ளையெல்லாம்?" என்று கேட்டான் ஜபருல்லா. "இங்க மட்டும் என்ன வாழுதாம்? எல்லாம் அந்து போயிக் கெடக்குப்பா!" என்றான் அபுல்ஹசன். பதிலுக்குப் பதில் நேரானதும் சிரித்துக் கொண்டார்கள்.
"அப்போ சாதிக் மச்சான், ஹக்கீம் மச்சானெல்லாம் வந்துட்டாங்களா?" அபுல்ஹசன் ஆர்வமாய்க் கேட்டடன்.
"சாதிக் காக்கா மாடியில சாச்சியோட பேசிக்கிட்டு இருக்காரு. அவரு பேச ஆரம்பிச்சாத்தான் போதுமே. மனுசன் காலம் நேரம் பாக்காம அறுத்துத் தொலைப்பார். அந்த அறுவை தாங்காமத்தான் கீழே இறங்கிட்டேன்".
"நான் பார்க்கணுமே" என்றான் அபுல்ஹஸன். ஜபருல்லா முன் செல்ல அபுல் பின் தொடர்ந்தான்.
சாதிக்-ஹக்கிம்-ஜபருல்லா ஆகியோருடைய சாச்சியின் பேத்திக்குத்தான் இன்று திருமணம். சாச்சியின் குடும்பம் ஒட்டுமொத்தமாய்ச் சென்னையில் வசித்தாலும் மாப்பிள்ளை வீட்டாரின் வசதிக்காக மதுரையில் நிக்காஹ் ஏற்பாடாகி இருந்தது. கல்யாணப் பெண்ணாகிய ஃபைசூன் பீவிக்குத் தாலிகட்டி முடிந்ததுமே, ஃபைசூன் பீவியின் கணவராக ஆகப் போகிற முசாதிக்கின் தங்கைக்கும் அதே மண்டபத்தில், அப்போதே நிக்காஹ் நடக்க இருந்தது. அதனால் சொல்ல முடியாத கூட்டம். ஃபைசூன் பீவிக்கு மாடியில் வைத்துதான் மணப்பெண் ஜோடனை.
அபுல்ஹசணும், ஜபருல்லாவும் கூட்டத்தை உராய்ந்தபடிக்கே சென்றார்கள். அடையாளமுள்ள மனிதர்களாய் ஆகிவிட்டதால் பெண்களை உராயாமல் செல்லும் முயற்சிக்கு விழைந்தார்கள். பெண்கள் அவர்களை இடித்து இடித்துக் கடந்தார்கள். அடுத்த அறையில் மாடிக்கு அழைத்துச் செல்லும் படிகள் இருந்தன. அங்கு மதுரை மணப்பெண்ணை ஜோடித்து, தலையில் முக்காடு போட்டு, பிறர் பார்வை உள்ளே நுழைய முடியாதபடிக்குப் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். கிளிப்பச்சை நிறத்திலான பட்டுச் சேலைக்குள் ஒரு கிளி இருப்பதாகத் தோன்றியது. ஒரு நடுவயதுப் பெண் அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனித்தாள். "செருப்புக் காலோடு போறாங்க" என்று முணுமுணுத்தாள்.
(தொடரும்)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“