கட்டுக்குள் அடங்காமல் நீண்ட தூக்கத்தில் அமிழ்ந்திருந்த கார்த்திக்கை எழுப்பிய பூபதி "அவசர வேலையா வெளியே போக வேண்டியிருக்கு. நீயும் என் கூடவே வா!" என்றான்.
மாலை சிற்றுண்டியின் பின் அவனுக்கு ஒரு டி-ஷர்டு, பேண்ட், ஒரு பேனாவை உள்ளடக்கிய ஒரு சூட்கேஸைக் கொண்டு வந்து கொடுத்தாள் லதா. நெகிழ்ந்தவனாய்ப் பெற்றுக்கொண்டான் அவன். "நாங்க கூப்புட்டுத்தான் நீங்க வரணும்னு இருக்காதீங்க. நம்ம வீடு மாதிரி நெனச்சி வாங்க. மத்த அண்ணன்மார்களையும் நான் கூப்பிட்டதா சொல்லி கூட்டிட்டு வாங்க. சீக்கிரமா ஒரு நல்ல வீடா பாத்து குடும்பத்தையும் கூட்டிட்டு வந்துருங்க" என்றால் லதா.
பூபதிதான் வண்டி ஒட்டினான். சென்னை நகரின் வெளியே பல்லாவரம் அருகில் பூபதி வீடு இருந்தாலும் அவன் நகருக்குள் வண்டியோட்டி வந்தான். வடபழனியை அடைந்தார்கள். அங்கு ஒரு குறுகலான சந்தில் வண்டியைத் திருப்பினான். அதன் கடைசியில பாதையை அடைத்துக்கொண்டு ஒரு பெரிய அபார்ட்மெண்ட் எழுந்து நின்றது. அதனருகில் வந்து நிறுத்தினான். நின்று பேசிக்கொண்டிருந்த இருவர் பூபதியைக் கண்டதும் சற்று மரியாதையுடன் அவனிடம் பேசினார்கள்.
"ஏதும் பிரச்சனைகள் இருக்கா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல சார். எப்பவும் போல எல்லாமே மாமூலா இருக்கு".
கார்த்திக்கிற்கு ஏதோ புரிபடவும் அபார்ட்மெண்டை அண்ணாந்து பார்த்தான். லதாராணி அபார்ட்மெண்ட என்ற பெரிய எழுத்துக்கள் தட்டுப்பட்டன. பூபதியின் வாழ்க்கையைத் தானும் ஒரு சிறிய சிமிழுக்குள்தான் அடைத்துப் பார்த்துவிட்டோமோ என்று யோசித்தான். வகை தொகை இல்லாமல் அவன் வாழ்வு பெருகியிருக்கிறது. பூபதி எதையும் வாய் திறந்து சொல்லவில்லை. ஆனால் அவன் சார்ந்துள்ள வளங்கள் கார்த்திக்கின் கவனத்தில் பதிகிற மாதிரி ஒரு தொடர்கண்ணி உண்டாகியிருக்கிறது. ஏதோ முக்கிய வேலை என்று அவன் அழைத்து வந்தான். ஒரு வேளை இந்த அபார்ட்மெண்டில் ஏதும் பிரச்சனைகளா? அப்படியெதுவும் இல்லை என்றும் அந்த இருவரும் சொல்லிவிட்டார்கள்.
பூபதி ஒவ்வொரு அடியாக நகர்ந்தான். அபார்ட்மெண்டை நான்கு திசைகளிலும் பார்த்தான். கார்த்திக் அவனைப் பின் தொடர்ந்தான். ஆனாலும் ஓர் இடைவெளியை கவனமாக உருவாக்கினான். பூபதி திடீரென்று வேறொரு நபர் மாதிரி ஆகியிருந்தான். அவன் இதுவரை இவன் முன்னால் காட்சியளித்த பூபதியாக இல்லாமல் சற்றே நெடிதுயர்ந்த பூபதியாக மாறினான். முகத்தில் ஒருவித இறுக்கம் கூடியது. பார்வையின் தீட்சண்யத்தில் வேறு சில அவன் கண்களிலிருந்தும் மறைந்துவிட்டன. நெஞ்சு நிமிர்ந்தது. பேண்ட்டின் இரண்டு பக்கங்களிலும் கைகளைச் சொருகிக் கொண்டான். இவனுடைய மிடுக்குகளை உள்வாங்கித்தான் அந்த ஆறுமாடி அபார்ட்மெண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதோ? அவன் லிப்டில் ஏறிச் செல்லாமல் மாடிப்படிகளில் ஏறினான். கார்த்திக்கிடம் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. எதிரும் புதிருமாக இரண்டு இரண்டு பிளாட்டுகள் மிக அகலமானவை. ஒரு ப்ளாட்டின் கதவு திறந்து ஒருவர் வெளியே வரவும் அதன் உள்பகுதி மிரட்சி தரும் வசதி வாய்ப்புகளுடன் இருப்பது தெரியவந்தது. அவரிடம் ஏதோ ஒரு சில வார்த்தைகள் பேசிக்கொண்டு அடுத்த மாடிக்கு ஏறினான். ஆறு மாடியையும் தாண்டுவதற்குள் வேறு சிலரும் எதிர்பட்டு மறைந்தார்கள். அவர்களைப் பார்க்கும்போதோ தெரிந்தது. உத்யோக ரீதியாகவே பற்பல ஆயிரங்களை மாதச் சம்பளமாக அவர்கள் பெறுகிறவர்களாய் இருக்க வேண்டும். அவர்களைக் கொண்டே பூபதியை அளந்துவிடலாம்.
மொட்டை மாடிக்கு வரவும் அங்கொரு சின்னஞ்சிறு வீடு இருந்தது. வெறும் அறை மட்டுமே என்றும் சொல்லலாம். அதிலிருந்து ஒரு பெண் ஓடோடி வந்து அவனுடைய பக்கவாட்டில் நின்றாள். அவனுக்கு முதுகு வளைத்து வணக்கம் சொன்னாள். பூபதியின் தலை மெதுவாக அசைந்தது. அவன் முகமோ இன்னும் இறுகிவிட அவனுடைய கண்களின் உணர்வலைகள் வற்றிப் போயிருந்தன. அவன் அவளிடம் சில கேள்விக் கேட்டாலும் அவை அந்த பிளாட்டுகள் சம்பந்தமானவையே என்றாலும் பூபதி ஓர் அரசு அதிகாரியின் மௌனங்களோடு நிலை குத்தி நின்றான்.
அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து பிளாட்டில் பிரச்சனைகள் இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு சில பிரச்சனை தொண்டையில் முள்போல அவனை மிரட்டியயெடுக்கின்றன. அவனிடமிருந்து சில உத்தரவுகள் வெளியே வர விரும்புகின்றான். ஆனால் அதற்கான தேவைகளை எவருமே ஏற்படுத்தவில்லை.
பின் கீழே இறங்குகிறான் பூபதி. அவனுடைய இரட்டை நிழல்களாய் கார்த்திக்கும் அந்தப் பணிப்பெண்ணும் இறங்குகிறார்கள். தரைத் தளத்திற்கு வந்ததும் மீண்டும் ஒருமுறை அதனை ரசித்தான் கார்த்திக். அவன் பூபதியிடம் சொன்னான். "இத்தானுண்டு சந்துக்குள்ள இவ்வளவு பெரிய அபார்ட்மெட் கொண்டுவந்து அற்புதமாக நிறுத்தி வச்சிருக்கியே. ப்ளாட்டுகளும் அழகா இருக்கிறமாதிரி கொஞ்சமா பார்க்கிறபோதே தெரிஞ்சது. நல்லாயிருக்கு பூபதி".
பூபதியின் சிரிப்பு இதழ்களுக்குள்ளேயே வரம்பு கட்டி நின்றது. "ஆனா எல்லாத்துலேயும் உன் பொண்டாட்டி பேர்தான் இருக்கு. இல்லையா?
"என் பையன் பேர்ல இதே மாதிரி ஆனா இதைவிட இன்னும் கொஞ்சம் பெரிசா போரூரில் ஒண்ணு இருக்கு".
கார்த்திக்கின் இதயமே நின்றுவிடும் போல இருந்தது. ஒரே நாளில் எத்தனையெத்தனை அதிசயங்களைத்தான் கேட்பது? அதிலும் வகைவகையாக! பூபதி என்னென்ன தொழில்களையெல்லாம் தான் இந்த வயதுக்குள் செய்து முடித்திருக்கிறான்? இவனுடைய வாழ்க்கையின் எந்தப் புள்யியிலிருந்து பூபதியின் திறமைகளைக் கணக்கிட வேண்டும் என்பது புரியவில்லை.
மௌனமாக காரில் ஏறினான் பூபதி. கார்த்திக்கும் ஏறினான். அந்தப் பெண் பூபதியை நெருங்கினாள். அவன் வண்டியை இயக்கிய தருணத்தில் "முதலாளி நான் கேட்டிருந்தேனே அஞ்சாயிரம் ரூபா கடன் அது…
"ஆமாமா! மறந்துட்டேன் பாத்தியா? நல்லவேளை கேட்டே. நாளைக்குக் காலைல உன் புருஷனை என் வீட்டுக்கு போவச் சொல்லி லதாகிட்டே நான் சொன்னதாச் சொல்லி வாங்கிக்கிடச் சொல்லு."
அவளுக்குள் மகிழ்ச்சி பெருகியதை முகம் காட்டியது. அந்த முகமலர்ச்சியோடேயே கேட்டாள். "மூணாவது மாடியில அந்த முதல்பிளாட்டுக்கு எப்ப முதலாளி குடும்பம் வருது? யார் வர்றாங்க?"
"இன்னும் பத்து நாள்ல கூட வந்திறலாம். நல்ல குடும்பத்து மனுஷங்களா இருக்கணுமே!" என்றான் கார் நகர்ந்தது.
மறுபடியும் ஏசி குளிர் கார்த்திக்கை நடுக்கியது. கம்பீரம் குலையாத பூபதி வண்டியை அந்த குறுகியச் சந்தில் இலாவகமாகக் கையாண்டு பிரதான சாலைக்குள் கொண்டு வந்தான்.
"ஒவ்வொரு பிளாட்டும் என்ன வாடகை பூபதி?"
"ஐயாயிரம் ரூபா கரண்ட் பில் தனி."
கார்த்திக்கிற்கு மூச்சு முட்டியது "என்னவோ முக்கியமான வேலை இருக்குன்னு சொன்னியே என்ன வேலை?"
"ப்ச்…" வேறு வார்த்தைகள் வரவில்லை. "நாம இப்ப எங்கே போறோம்? என்னைய பஸ் ஸ்டாப்புல இறக்கிவிட்டுடு."
"வாய மூடிக்கிட்டு வா. இப்போ உன் மேன்ஷனுக்குத்தான் போவுது!"
மேன்ஷன் அருகில் கொண்டுவந்து வண்டியை நிறுத்த கார்த்திக் சொல்லொண்ணாத மகிழ்ச்சியோடு இறங்கினான். அவனுடைய மேன்ஷன் நண்பர்கள் சிலர் எதிரேயுள்ள டீ ஸ்டாலில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு சொகுசான காரிலிருந்து கார்த்திக் இறங்கியதையும் வண்டியை ஓட்டியவர் மலர்ந்த சிரிப்புடன் அவனிடம் கைகுலுக்குவதையும் தமாஷாகவோ அல்லது சீரியஸாகவோ எதையோ பேசிக் கொண்டபடியே அவர் வண்டியை ஓட்டிச் செல்வதையும் கவனித்த நண்பர்களுக்கு ஒரு கனவுபோல எல்லாக்காட்சிகளும் முடிந்துவிட்டனபோல இருந்தது.
கார்த்திக் உற்சாகத் துள்ளலோடு இருந்தான். மனம் நிரம்பி வழிந்தது. பூபதியின் பெருமைகள் பூராவும் தனக்குரியனவாக அவன் கருதினான். திடுதிப்பென்று இடையிலே அபார்ட்மெண்ட்டுகள் முளைக்கின்றன். சற்றே அதிர்ச்சியுடன் பின்வாங்கி ஓட்ட முயல்கிறது. மேன்ஷனில் கண்ணாரக் கண்ட அத்தனைபேரும் கிராமத்துவாசிகளைப் போல அதையே பேசிப்பேசி இறுதியில் பலரும் பேசிக் கொள்கிற சூழலை உண்டாக்கினார்கள். அவனிடம் மொய்த்தார்கள். "யாரு அந்த ஆள்? உங்க நண்பரா? இல்லே உங்க முதலாளியா?" பிறகு அவன் பேசலானான். பேசியபடியே இருக்க விரும்பினான். நிறையப் பேசினாலும் வார்த்தைகளை அளந்தெடுத்தே பேசினான். ஆனாலும் பூபதி பற்றியும் லதா பற்றியும் அவர்களின் வியாபாரம் பற்றியும் வாழ்க்கை வசதிகள் பற்றியும் அபார்ட்மெண்ட்கள் பற்றியும் அதன் வாடகை பற்றியும் அங்கு குடியிருப்போரின் அருமை பெருமைகளைப் பற்றியும் பேசிப்பேசிக் களித்தான்.
தன்னுடைய இயல்புக்கு முற்றிலும் மாறான பூபதியைப் பற்றியே பேசப்பேச வற்றாத நதியான அந்தப் பெருமிதங்கள் அறை முழுவதும் நிரம்பி அங்கிருந்தும் வழுவி இப்போது மேன்ஷன் முழுவதும் நிரம்பி பின்னர் தெருவிலும் அது வழிந்தோடியது.
முடிவில்லாமல் நீளும் பேச்சுக்கிடையில் வந்து விழுந்தது அந்தக் கேள்வி. "அதுசரி கடைசி கடைசியா உன்ன அந்த ப்ளாட்டுக்கு கூட்டிவந்தார்! அதுதான் அந்த ஐயாயிரம் ரூபா வாடகை வீடு. ஏசி ப்ளாட்டு அதுல மூணாவது மாடியில முதலாவது ப்ளாட்டுக்கு கூடிய சீக்கிரம் ஒரு குடும்பம் வந்துரும்னு சொன்னாரே அந்த குடும்பம் உங்களுடையதா சார்?"
எல்லாவற்றையும் வெட்டிக்குறுக்கிய அந்தக் கேள்வி அவனை இருகூறாகப் பிளந்தது. சரிதான் அந்தக் கேள்விக்கு மட்டும் அவனிடம் பதிலே இல்லை.
(முடிந்தது)
(‘பிறைக்கூத்து‘ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“