வீட்டை நெருங்கி கார் வரவும் லதாராணி வாசலில் நிற்பது தெரிந்தது.
"வாசல்ல நிக்குறது யாரு?"
"லதாதான் நிக்குறா! என்ன அவள நீ மறந்துட்டியா?"
"ஒரே முறைதான பார்த்திருக்கேன். அதனால அடையாளம் தெரியல்ல".
லதா அவனைக் கண்டதும் வணங்கி வரவேற்றாள். "உங்க கல்யாணத்துல உங்கள பார்த்தது. இப்ப எனக்கு உங்கள அடையாளமே தெரியல்ல" என்றான் கார்த்திக்.
"ஆனா எனக்கு உங்கள நல்லவே அடையாளம் தெரியுது. ஒரு வேளை நீங்க சொல்லாம கொள்ளாம இந்த வீட்டு வாசல்ல வந்து நின்னாக்கூட நான் உங்கள கார்த்திக் அண்ணன்தான்னு கண்டு பிடிச்சிருப்பேன்".
வினாடிதோறும் தான் அதிசயங்களையே சந்தித்துக்கொண்டு இருப்பது போல கார்த்திக்கிற்குப்பட்டது. லதா தன்னை மறவாமல் இருப்பது அவனுக்குள் மனக் கிளர்ச்சியை உருவாக்கியது. பெரும் அன்னியர்களைப் போல பூபதியையும் லாவையும் தானும் தன் நண்பர்களும் கருதிக் கொண்டு ஒதுங்கியிருந்தது எவ்வளவு பெரிய மனக்கோளாறு என்று அவன் வருந்தினான்.
"ஆனா என்னை ஒருமுறை மட்டும்தான் பார்த்திருக்கிறா சொன்னீகளே அது தப்பு கல்யாணம் முடிஞ்சி ஏழெட்டு மாசத்துக்கு அப்புறமா நம்ம ஊரு பெரிய கோயில்ல நாம மறுபடியும் சந்திச்சோமே அது உங்களுக்கு ஞாபகமில்லையா?"
"ஞாபகம் இல்லையே!" என்று கார்த்திக் லதாவைப் பார்த்தான்.
"அப்போ உங்களோட நம்ம சிதம்பரம் அண்ணன் அருணாசலம் அண்ணன் சத்தி அண்ணன் எல்லோரும் இருந்தாங்க. நாம எல்லோரும் வெளிப் பிரகாரத்துல நின்னு பேசிட்டிருந்தோமே!" என்று லதா கூறக்கூற, அந்த நல்ல நாளைத் தன் நினைவிலிருந்து தொலைத்துவிட்டதை ஒரு பெரும் குற்றச் செயலாகவே எண்ணி மிகவே வருந்தினான் கார்த்திக்.
பூபதி போனில் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போதே அந்த வீடு முழுவதையும் சுற்றிக் காட்டினாள் லதா மாடிகளுக்கும் அழைத்துச் சென்றாள். நவீன வசதிகள் எவையும் விடுபடவில்லை. அவன் பார்த்தறியாத கேட்டறியாத எல்லாவற்றையும் லதா அவனுக்கு விளக்கிக் காட்டினாள்.
தன் வருகையைக் கணவனும் மனைவியுமாகக் கொளரவிக்கிறதாக கார்த்திக் நினைத்தான். தடபுடலான விருந்து லதாவே முன்னின்று பரிமாறினாள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கார்த்திக்கின் குடும்பத்தை பற்றி இருவரும் விசாரித்தார்க்ள். நுணுகி நுணுகி வந்தன கேள்விகள். கார்த்திக் ஒரு தனியார் நிறுவனத்தின் ஊழியராக இருந்தான். நண்பர்களிலேயே இவனுடைய வாழ்க்கைத்தரம்தான் மோசமாக இருந்தது. அதை பூபதியும் லதாவும் நன்றாக அறிவார்கள்.
"இன்னும் உங்க குடும்பத்த ஏன் கூட்டிட்டு வரல்ல?" என்று கேட்டாள் லதா.
"நம்ம வருமானத்துக்குத் தகுந்தபடி ஒரு வாடகை வீட்ட தேடிக்கிட்டு இருக்கேன். அப்படி அமைஞ்சிட்டால் போதும். உடனே கூட்டிட்டு வந்துற வேண்டியதுதான். இதுக்கு முன்னால சேலத்துல இருக்கும்போது நல்ல வசதியான வீடா அமைஞ்சது.
தண்ணி வசதியெல்லாம் பிரமாதமா இருந்தது. அந்த அளவுக்கு வசதி வாய்ப்பா இல்லாட்டாலும் ஓரளவுக்காவது தேறி வரணும்".
"எவ்வளவு வாடகை உன்னால கொடுக்க முடியும்?"
"இரண்டாயிரம் இரண்டாயிரத்து ஐநூறுக்குள்ள கிடைச்சிட்டா நல்லதுதான். உனக்கும் தெரிஞ்சவங்க மூலம் ஏதாவது கெடைக்குமான்னு பாரேன்" என்று அவனிடம் ஒரு வேண்டுகோளையும் முன் வைத்தான்.
"விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் நல்லது" என்று பெண்குரல் ஒலித்தது.
பெரிய டி.வி.யில் அருவருப்பான பாடல் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. அதைப் பார்க்க விரும்பாமல் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதையே விரும்பினான் கார்த்திக். பின் ஊர் நிலவரங்களையும் இருவரும் விசாரிக்கலானார்கள்.
மத்தியானம் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றான் பூபதி. நடுவில் ஊஞ்சல் அடியது. சுற்றிலும் வண்ண வண்ணப் பூஞ்செடிகள். தென்றல் வீசக் கேட்கவே வேண்டாம். ஒரு தட்டு நிறைய வகை வகையான பழங்களாக நிறைத்துக் கொண்டு வந்தாள் லதா. பூபதி எல்லாவற்றையும் சாப்பிடுவதைப் பார்த்தால் பணக்காரர்களில் முதல் நெருங்கின நண்பனான சர்க்கரை வியாதி அவனுக்கு இன்னும் வரவில்லை. கார்த்திக்கின் ஆச்சரியம் பல மடங்கு உயர்ந்தது. ஊரில் பூபதியின் வயதையடையாத பல பேருக்கு சர்க்கரை வியாதி வந்திருப்பதை கார்த்திக் எண்ணிப் பார்த்தான்.
"இந்த ஊஞ்சல்ல தூங்கணும்னு விரும்பினா கொஞ்சநேரம் தூங்கேன்" என்று சொன்னான் பூபதி. தூங்கி நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. கார்த்திக் நண்பர்களைப் பற்றிப் பேச்சு நிரும்பியது. நண்பர்கள் சத்தி அருணாசலம் சிதம்பரம் ஆகியோரும் இப்போது சென்னையில்தான் இருக்கிறார்கள் என்கிற விசயமே அவனுக்கும் இவன் மூலம்தான் தெரிய வந்தது. உடனே அனைவரின் முகவரிகளும் போன் எண்களும் வாங்கி செல்லில் ஏற்றினான். ஒவ்வொருவரையும் உடனடியாகத் தொடர்புகொண்டு பேசினான். சிநேகபாவமாய் ஒலித்த அந்தக் குரலின் தொனியை நம்பமுடியாமல் பூபதி என்ற பெயருடைய இன்னொருவன் தங்களின் நட்பு வட்டத்திலேயே இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் கேட்டார்கள். "எந்த பூபதி?" என்று தன்னிடமிருந்து எல்லோரும் விலகி நிற்பதை உணர்ந்து கொண்டாலும் அதனை உணராதவன்போலவே காட்டி பூபதி சொன்னான். நான்தான் ரெத்தின பூபதி. எல்லா நண்பர்களும் குளிர்ந்துவிட்டார்கள் அப்போதே பூபதி சொன்னான் "இத்தனை பேரு இருந்தாலும் என்னை ஒருத்தனாவது தேடியிருக்கக்கூடாதா? ஒருத்தனும் என்னை பார்க்கலியே?"
சொல்வதற்காக வாயைத் திறந்த கார்த்திக்கிடமிருந்து வெறுமனே காற்று மட்டுமே வந்தது.
"ஏதோ பேசவந்த! வாயை மூடிட்டியே ஏன்?"
"ஒவ்வொருத்தருடைய நெலமயும் ஒவ்வொரு விதமா இருக்கு பூபதி!"
"இதனாலதான் நீயும் இவ்வளவு நாளும் சும்மா இருந்திட்டியா?" மீண்டும் பூபதியே சொன்னான். "நான் அப்படியெல்லாம்
இல்லே மக்கா! ஆனா நீங்க எல்லாருமா தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க".
"அப்போ நீயே அவங்களப்பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணியிருக்கலாமே?"
"இது ஓரளவுக்குத்தான் சரி கார்த்திக். இப்போ உன்னை நானாத்தான் தேடிப்புடிச்சேன்".
"ஆமா பூபதி. அதுக்கு நான் எப்படி சந்தோசப்பட்டேன்னு எனக்கு மட்டும்தான் தெரியும்!".
"சரி போனது போட்டும். இப்ப நம்ம பசங்க எங்க இருக்காங்க என்ன பண்ணுறாங்கன்னு தெரிஞ்சிக்கிடுச்சி. அந்தந்த ஏரியாவுக்கு போவும்போதெல்லாம் ஒவ்வொருத்தனையும் பார்த்துப் பேசிட்டு வந்துடறேன். அப்புறம் எல்லாருமா சேர்ந்து ஒருமுறை மகாபலிபுரத்துக்கோ திருப்பதிக்கோ போயிட்டு வந்துடுவோம். அதுக்குள்ள நீயும் உன் குடும்பத்த மெட்ராசுக்குக் கூட்டிட்டு வந்துருவதான?"
"கேக்க நல்லாத்தான் இருக்க. ஆனா அது நடக்குமான்னு தெரியல்ல."
"ஏன் அப்படி சொல்ற?"
"எல்லோரும் ஒத்துவரணும் அப்புறம் அஞ்சு குடும்பத்தையும் ஒரு வேன்ல அடைச்சிட்டுப் போவணும். இது மாதிரி ஏதாவது பிரச்சனைகள் வந்துரும்."
"அதப்பத்தியெல்லாம் கவல வேண்டாம். நானே அஞ்சு வேனு வச்சிருக்கேன் அதெல்லாம் லதா பேர்ல ஓடிட்டிருக்கு. எந்தப் பிரச்சனைன்னாலும் சமாளிச்சிடலாம்".
பூபதி வேன்கள் வைத்திருக்கிறான் என்பது ஒரு சின்ன விசயமா அல்லது பெரிய விசயமா என்று கார்த்திக்கிற்குப் புரியவில்லை. ஆனால் இன்னும் பெரிய பணக்காரனாக தன் கண் முன்னாலேயே பூபதி மேலும் சில படிகள் உயாந்திருக்கிறான்.
அவாகள் இருந்த பக்கமாக வெயில் லேசாகத் தலைகாட்டியதும் "உள்ளே வா கார்த்தி. கொஞ்ச நேரம் தூங்கு நாம்தான் இனி அடிக்கடி வந்திப்போமே!"
மூன்றாவது மாடியில் படுக்கையறை விசாலமாகவும் ஏசி வசதி செய்யப்பட்டும் இருந்தது. டிவியும் போனும் இருந்தன. இந்த மாதிரி தனக்கொரு அறை இருந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தான். "பூபதி எனக்கு ஏசி வேண்டாம். ஏற்கனவே குளிர்காலம். வெதுவெதுப்பாகவே இருக்கட்டும்" என்று படுக்கையில் சாயவும் பூபதியின் உருவம் மங்கிப்போகும் வண்ணம் கிறங்கிப் போனான் கார்த்திக். சொகுசான முதல் தூக்கத்தில் கார்த்திக் அமிழ்ந்து போனதை பார்த்து சற்று நேரம் யோசித்தவன் கீழே இறங்கிப் போனான்.
(தொடரும்)
(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here
“