பதிலில்லை (1)

பலமுறையும் நினைத்ததுண்டு. பூபதியை எப்படியும் தொடர்பு கொள்வதென்று! ஆனால் போனைத் தொடவே மனம் வரவில்லை. ஒரு தயக்கம் சுழற்றியடித்தது. பூபதியின் முகவரி படிகம்போல் தெளிவாகத்தான் இருக்கிறது. போதாக்குறைக்குப் பூபதியை எப்படியும் சந்திக்க வேண்டும் என்று கார்த்திக்கை செல்வம் அடிக்கடித் தூண்டிக் கொண்டு இருக்கிறான். பூபதியின் வீட்டுக்குப் போப வேண்டும். பூபதியைத் தவிர்த்த இதர நண்பர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் என்று கணக்கு வைத்து அவரவர் வீடுகளுக்கே சென்று பார்த்துவிட்டு வந்திருக்கின்றனர். அவர்களும் கார்த்திக்கிடம் பூபதியைப் பற்றி விசாரித்திருக்கிறார்கள்.

கார்த்திக் சத்தியநாராயணன் சிதம்பரம் அருணாசலம் செல்வம் ஆகிய ஐவருமே பூபதியின் நண்பர்கள்தான். ஆனால் பூபதியை எவ்விதம் போய்ப் பார்ப்பது என்கிற குழப்பம்! பூபதி பள்ளிக்கூட காலம்தொட்டு நண்பன். அதிலும் பூபதியும் கார்த்திக்கும் ஒரு பெஞ்ச் நண்பர்கள். வாத்தியார் கேள்வி கேட்கும்போது பூபதிக்கு கார்த்திக்தான் பதில்களை எடுத்துக் கொடுக்கிறது. அந்த மெல்லிய சப்தம் கார்த்திக்கின் வாயிலிருந்து நேரகாகப் பூபதியின் செவியை மட்டுமே அடையும். எவராலும் ஒலியின் சிறு பிசிரைக் கூட உணர முடியாது.

இன்று எல்லா நண்பர்களுமே நல்ல உத்தியோகத்தில் கைநிறைந்த சம்பளத்தில் சென்னையிலேயே பணிபுரிகிறார்கள். ஆனால் பூபதி விதிவிலக்கு. அவன் யாரிடமும் கைகட்டிச் சேவகம் செய்யவில்லை. மாறாக அவனிடம்தான் நிறையபேர் கைகட்டி வேலை பார்க்கிறார்கள். அவன் தனியாகவும் வேறு சிலருடன் சேர்ந்து ஏதேதோ வணிகம் செய்துவருவதாகத் தகவல்கள் மட்டுமே உண்டு. பூபதியைச் சந்தித்த செல்வம் பூபதியின் வளமான வாழ்க்கையைப் பற்றிச் சொன்னதன் மூலமே எல்லோரும் பூபதியின் வளவாழ்வை அறிந்தவர்களாய் இருக்கிறார்கள். அவனுக்குப் பெரிய பங்களா இருப்பதாகவும் ஏசி கார் இருப்பதாகவும் செல்வம் சொன்னபோதே கார்த்திக் வாய்பிளந்து விட்டான்.

பூபதி ரொம்ப கெட்டிக்காரன் என்றாலும் பங்களாவும் ஏசிகாரும் வைத்திருக்கக்கூடிய அளவுக்கு அவன் எப்படி உயர்ந்துவிட்டான் என்று இதர நன்பர்களுக்கும் சம்சயங்களும் உண்டு. அதனாலேயே மாதச் சம்பளக்காரர்களாய் உள்ள அவர்களால் பூபதியின் நிழலை நெருங்கவும் மனத்தடைகள் விழுந்துவிட்டன. கடைசியில் சற்றே துணிச்சலை வரவழைத்து பூபதியிய் எண்ணுக்கு டயல் செய்தான் கார்த்திக். எதிர்முனையில் மணி ஒலிக்க ஆரம்பித்து இரண்டு முறைகள் அடிக்கவும் செய்தது. போன் வலதுகையில் இருக்க இடதுகை தானாகச் செயல்பட்டுத் தொடர்பைத் துண்டித்துவிட்டது. போனை வைத்தான். மனசு லேசாகி நிம்மதியைக் கொடுத்தது. பூத்தைவிட்டு வெளி வரும்போது பூபதியை இனியும் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.

கார்த்திக்கிற்கு போன் வந்திருப்பதாக டெலிபோன் ஆப்ரேட்டர் சொன்னார். "ஹலோ" என்றவுடன் அதிரடித் தாக்குதல்போல் அதில் ஒலித்தது பூபதியின் குரல் நிலை குலைந்து போனான் கார்த்திக். அது அவனுடைய குரல்தான் என்று அறிந்து கொண்ட பின்னும் கார்த்திக் கேட்டான் எந்த பூபதி.

"என்னடா இது நான்தான் உனக்குள்ள ஒரே பூபதி ரெத்தினபூபதி மக்கா." அதே பேச்சு அதே குரல் அதே தொனி. எல்லாவற்றை விடவும் "ம்மா" என்கிற அந்த நட்பு முறையின் பிணைப்பைக் குறிக்கும் வார்த்தையை அதே வாஞ்சையுடன் ஒலிக்கிறான். தலைகால் புரியாமல் பேசினான் கார்த்திக். அவனிடமிருந்து விடுபட்ட இன்னொரு கார்த்திக்தான் பூபதியுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு ஈடாக பூபதியுடன் பேசிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு ஈடாக பூபதியும் பேசினான் என்பதைப் பேசி முடித்துவிட்டு வந்தபின்பும் கார்த்திக்கால் நம்பமுடியவில்லை. பூமியில் இந்த மாதிரியான நட்பு எப்போதாவது எங்கேயாவது யாரோ ஒருவருக்குத்தான் கிடைக்கும். அப்படி ஓர் அபாரமான உயரத்தில் இப்போது தானும் இருப்பதாகக் கருதிப் பெருமிதத்தால் விம்பினான் கார்த்திக். அவன் பேசிய முறையைக் கொண்டே கார்த்திக்கின் பக்கத்து இருக்கை நண்பர்கள் ஒருவர் விடாமல் பூபதியைப் பற்றி விசாரித்தார்கள். கார்த்திக் இந்த சந்தர்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டு பூபதியுடனான தன் பால்யகாரத்தைக் தத்ரூபமாகச் சித்தரித்தான். பல நிமிசங்களாகத் தன் பழைய உலகில் இருந்தான் கார்த்திக்.

பூபதி கார்த்திக்கைத் தன் வீட்டுக்கு அழைத்தான் "ஏ மக்கா நீ மெட்ராசுக்கு வேல மாத்தலாகி வந்து மூணு மாசமாச்சாமே! எப்படி உன்னால என்னையப் பாக்காம இத்தனை நாளும் இருக்க முடிஞ்சுது?" என்று மூஞ்சியிலடித்தாற்போல ஒரு கேள்வியைக் கேட்டான் பூபதி! சே அவனல்லவா மனுஷன்? எத்தனை இலட்சங்கள் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாத கேள்வியல்லவா அது? பூபதி கறாராகச் சொல்லிவிட்டான். "இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை. எப்படியும் நீ நம்ம வீட்டுக்கு வர்ர! மாட்டேன். முடியாது அப்படின்னுல்லாம் நீ சொல்லக்கூடாது. காலையில ஒன்பது மணிக்கெல்லாம் நீ என் வீட்டுக்கு வந்துரணும். எட்டு மணிக்கு எனக்கு போன் பண்ணு. ஒரு வேளை நான் என் பிசினஸ் விசயமா உன் ஏரியாவுக்குப் பக்கத்துல இருந்தோம்னா உன்னை அப்படியே என் கார்ல ஏத்திக் கூப்புட்டு வந்துருவேன்" என்றும் பூபதி சொல்லியிருக்கிறான். கார்த்திக்கின் தலைக்கு மேலே வெள்ளம் ஓடியது. மகிழ்ச்சி வெள்ளம். கார்த்திக் அந்த ஞாயிற்றுக் கிழமைக்காகத் தவமிருந்தான்.

ஞாயிறன்று காலை எட்டு மணிக்குப் போன் செய்தபோது பூபதி சொன்னான். "மக்கா நான் இப்ப பூந்தமல்லியில் இருக்கேன். அதனால நீ நேரடியா பஸ் ஏறி வா. பஸ் ஸ்டாப்புல வந்து இறங்குனதும் எனக்கு மறுபடியும் போன் பண்ணு. என் காரை அனுப்பி வைக்கிறேன்" என்றான். ஒரு கொடிய ஏமாற்றம் மேன்ஷன் நண்பர்களிடமெல்லாம் சொல்லியிருந்தான். தன்னை அழைத்துப் போக ஒரு பெரிய முதலாளியே தன் காரைக் கொண்டு வருகிறார் என்று. இப்போது மேன்ஷன் நண்பர்களிடம் சொன்னால் அவர்களெல்லாம் கேலி செய்வார்கள் என்கிற வெறுப்பில் அப்படியே நடையைக் கட்டினான். பஸ்ஸில் நெருக்கியடித்தது கூட்டம். சர்ச்சுக்குப் போகிற ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஏறியதால் அவன் தேய்த்துப் போட்டிருந்த சட்டையும் பேண்ட்டும் கசங்கிப் போயின. தூரிகையைக் கொண்டு முழுக்க அழுக்கைத் தீட்டியது போல இருந்தது. மனம் அதற்கும் ஒருபடி மேலாகக் கசகசத்திருந்தது. இந்த உடையுடன் பூபதியை எதிர்கொண்டால் அவனுடைய கௌரவத்திற்குக் கூட பங்கம் உண்டாகிவிடும். தான் இப்படி பஸ்ஸில் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை பூபதி கொஞ்சமேனும் அனுமானிக்கவில்லையா?

வழக்கத்திற்கு மாறாக பஸ் ஸ்டாப்பில் இறங்கியதும் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டான். மணியைப் பார்த்தான். 9.20 ஆகிவிட்டது. பூபதியை மீண்டும் பரபரப்புடன் தொடர்பு கொண்டான். "இப்ப பஸ் ஸடாண்டில்தான் நின்னுக்கிட்டிருக்கே? அங்கேயே நில்லு. வேறு எங்கேயும் தள்ளிப் போயி நிக்காதே. டிரைவர் என் வண்டியை எடுத்துக்கிட்டு வருவான். வர்றதுக்கு அஞ்சே நிமிசம்தான். சரி! இப்ப என்னோட வண்டி நம்பரை சொல்றேன். குறிச்சிக்கோ!"

வண்டி நம்பரைக் குறித்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பை விட்டு நகராமல் நின்றான். நான்காவது நிமிடமே கார் வந்தது. ஒட்டிக்கொண்டு வந்தவன் பூபதியே! ஒரு படகுபோல வந்து நின்றது அது. பூபதி அவனைக் கண்டதும் கையை ஆட்டினான். பஸ் ஸடாப்பினையொட்டி கார் வந்து நிற்கவும் எல்லோரும் தன்னையே கவனிக்க வேண்டும் என்று கார்த்திக் விரும்பினான். அது அப்படியே ஆயிற்று. எல்லோரின் கண்களும் அவர்கள் இருவரையுமே மொய்த்தன. பூபதி காரில் இருந்தபடியே கார்த்திக்கிற்குக் கை நீட்டினான். பூபதி ஒரு பணக்காரனுக்குரிய அனைத்துத் தோற்றங்களுடனும் இருந்தான். பூபதியின் கையைக் குலுக்கும்போது அவன் கைகள் குளுமையாக இருந்தன. குளிர்காலத்தில் முழுமையாக ஏ.சி.யை இயங்க வைத்திருந்தான். முன்பக்கக் கதவைத் திறந்து தன்னருகில் அமரச்செய்தான். கார்த்திக்கை நன்றாகக் கவனித்தான்.

"பாவிப்பயலே மூணு மாசமா நீ வந்ததைப் பத்திக்கூட தகவல் சொல்லா. எத்தனை வருசமாச்சு நாம பாத்து?" என்று சொன்னான்.

கதவைச் சாத்தியதும் "எனக்கு உடம்பு நடுங்குது" என்றான் கார்த்திக்.

"குறைச்சிட்டேன்" என்று அதை முழுவதுமாக நிறுத்தினான் பூபதி. "அது சரி டிரைவர்தான் வருவாருன்னு சொன்னே. இப்ப நீயே வந்துட்டியே" என்று கேட்டான்.

"சும்மா ஒரு தமாஷ்தான். உனக்கு ஒரு சின்ன அதிர்ச்சியக் கொடுப்போமென்னுதான் அப்படி சொன்னேன்" என்று பூபதி சொல்லவும் மீண்டும் அவன் கையைத் தானாகவே சென்று பற்றின கார்த்திக்கின் கைகள்.

(தொடரும்)

(‘பிறைக்கூத்து’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author