பட்டினப் பரவசம் (2)

புத்தம் புது ஃப்ளாட்டும், காலனியின் சூழ்நிலையும் குட்டப்பன் உட்பட எல்லோருக்கும் பிடித்துப் போனது. சிங்காரச் சென்னையின் சிருங்காரக் கனவுகளோடு எல்லோரும் புளகாங்கிதத்திலிருந்த வேளையில் நிகழ்ந்தது முதல் பின்னடைவு. சர்ச் பார்க்கில் கடைக்குட்டிக்கு ஸீட் கிடைக்கவில்லை.

ஆனால் ஆச்சர்யமென்னவென்றால், சென்னை விஜயம் சர்ச்சையிலிருந்த போது மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவள், சர்ச் பார்க்கில் இடங்கிடைக்காததைப் பெரிய தோல்வியாய்ப் பார்க்கவில்லை.

“அதுக்கென்னப்பா, இதவிட நல்ல ஸ்கூல் மெட்ராஸ்ல இப்ப எத்தனையோ வந்துருச்சாம். என்னோட நல்ல மார்க்குக்கு ஒரு நல்ல ஸ்கூல்ல எனக்கு நிச்சயமா எடம் கிடைக்கும்.”

எங்களுடைய ஃப்ளாட் அமைந்திருக்கிற விசாலமான வளாகம், பார்க், நீச்சல் குளம், ஜிம், டென்னிஸ் கோர்ட் என்று அமர்க்களமாயிருந்தது.

இளையவன் திடுதிடுதிப்பென்று ஒரு நாள் புத்தம் புதிய டென்னிஸ் ராக்கெட்டுடன் வந்து நின்றான்.கேள்விக்குறியாய் நான் அவனைப் பார்த்ததுற்கு, “அப்பா நா கட்சி மாறிட்டேம்ப்பா” என்று சிரித்தான்.

க்ரிக்கெட்டிலிருந்து டென்னிஸ்க்குத் தாவிவிட்டானாம். இந்த வளாகத்தில், டென்னிஸ் கற்றுத் தருவதற்கு ஒரு பயிற்சியாளர் வருகிறாராம். அவரிடம் சிஷ்யனாய்ச் சேர்ந்து விட்டானாம்!

இந்த ரெண்டு பிள்ளைகளும் இந்த சென்னை வாழ்க்கையில் எப்படி சர்வ சாதாரணமாய்க் காம்பரமைஸ் பண்ணிக் கொண்டார்கள் என்பதைப் பார்க்க வியப்பாயிருந்தது.

பெரியவன் சமாசாரம் எப்படி என்று நான் அவதானிக்க முனைந்தபோது, வழமைக்கு மாறாக அவன் நாலு நாள் தாடியோடு இருந்ததைப் பார்த்துக் கேட்டேன், “என்னடேய், ஷேவ் பண்ணிக்காம இந்தக் காலத்துத் தமிழ் சினிமா ஹீரோ மாதிரி இருக்க? சினிமா கினிமாவுலச் சான்ஸ்க்கு ட்ரை பண்ணிட்டிருக்கியா?”

என் கிண்டலுக்கு அவனுடைய அம்மாவிடமிருந்து பதில் வந்தது, தணிந்த குரலில்.

“அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருச்சாம்.”

சரி, இந்தப் பயலுக்கும் சிங்காரச் சென்னை ஒரு சரிவைத் தந்து விட்டது. இவனாவது மனம்மாறிப் பாளையங்கோட்டை மேல் பாசங்கொள்கிறானா என்று பார்த்தால், அடுத்த மூணாவது நாளே மழுங்க மழிக்கப்பட்ட தாடையோடு, சந்தோஷமாய்த் தெரிந்தான். இவனுடைய இன்ட்டர்நெட் வலையில் புதுசாய் ஒரு தோழி சிக்கிக் கொண்டாள் என்று தெரிய வந்தது.

எனக்கோ இந்தக் கூவம் நதிக்கரை நாகரீகத்தோடு சுத்தமாய் ஒத்துப் போக முடியாமலேயே இருந்தது. வேக வாகனங்களும் ஏக வசனங்களும் அந்நியமாயிருந்தன. கூவத்தின் உபநதியொன்றின் அண்மையில் அமைந்திருந்த எங்கள் குடியிருப்பு வளாகத்தில் கொசுக்களின் கொடுங்கோலாட்சி வேறே.

இந்தக் குடும்பத்தின் ஒரேயொரு உறுப்பினர் மனந்திருந்தி, சொந்த ஊருக்குத் திரும்பிப் போகிற விருப்பத்தை வெளிப்படுத்தினால் போதும், மூட்டை முடிச்சுகளோடு திரும்பவும் தாமிரவருணித் தென்றலை சுதந்திரமாய் சுவாசிக்கப் போய்விடலாமே என்கிற அற்ப ஆசை என் அடிமனத்தில் அரைத் தூக்கத்திலிருந்தது.

இதற்கிடையில், நம்ம ஆள், ஷேர் ஆட்டோக்களில் ஊர்வலம் போய்ப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்தாள், அவளுடைய படைப்புகளோடும் மினரல் வாட்டர் பாட்டில்களோடும்.

ஆனால் இவளுடைய இலக்கிய தாகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்பதில் எல்லாப் பத்திரிகைகளும் கறார் கர்நாடகாவாய் இருந்தன.

சரி, இவளாவது மனம் நொந்துபோய் சொந்த ஊருக்குத் திரும்பிப் போக விரும்புவாளென்கிற என்னுடைய சின்ன எதிர்பார்ப்பும் சிதைந்து போனது. இந்தக் குடியிருப்பு வளாகத்தில் குடியிருக்கிற மேட்டுக்குடிப் பெண்மணிகளெல்லாம் சேர்ந்து புதிதாய் மாதர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கவிருக்கிறார்களாம். அதில் தன்னை இணைத்துக் கொண்டு சமூக சேவை செய்யப் போகிறாளாம்.

இப்போது நான்தான் நொந்து போனேன். என்னோடு சேர்ந்து, இந்த வீட்டின் நிஜமான கடைக்குட்டியான குட்டப்பனின் அபிமானிகள் எல்லோரும் நொந்து போகிற மாதிரி, குடியிருப்பு மன்றச் செயலாளரிடமிருந்து ஓலையொன்று வந்தது. ஓலையின் வாசகம் முழுக்குடும்பத்தையுமே செயலிழக்கச் செய்துவிட்டது.

“….. கடந்த செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டபடி, நம்முடைய வளாகத்தின் எல்லைக்குள்ளே செல்லப் பிராணிகள் வளர்க்கத் தடை விதிக்கப்படுகிறது. எந்த ஃபிளாட்டிலும் நாய், பூனை, வாத்து, முயல், முதலை முதலிய செல்லப் பிராணிகளை வைத்துப் பராமரிக்கக் கூடாது என்றும், அவற்றை உடனடியாய் அப்புறப்படுத்தி விட வேண்டும் என்றும் இதனால் அறிவுறுத்தப் படுகிறது. எதிர்வரும் தீபாவளி வரை கெடு. அதற்கு முன்னால் செல்லப் பிராணிகள் அப்புறப்படுத்தப்படா விட்டால், பலவந்தமாய் அகற்றப்பட்டு எஸ் பி ஸி ஏ வசம் ஒப்படைக்கப் படும்….”

ஆங்கிலத்தில் வந்த அறிவிப்பு அனைவரையும் ஒரு ஆட்டு ஆட்டிவிட்டது. குட்டப்பனுக்கு ஆங்கிலம் வாசிக்கத் தெரியாது என்பதால் அவன் மட்டும் ஆடிப் போகவில்லை. ஆனாலும் முழுக் குடும்ப சோகம் அவனையும் பாதிக்க, எல்லோர் முகத்தையும் ஏறிட்டுப் பார்த்தபடி விவரம் புரியாமலிருந்தான்.குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமிருந்தும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

“இது அக்கிரமம், அராஜகம் அப்பா. இது என்ன ஹவுஸிங் காம்ப்ளக்ஸா இல்ல ஜெயிலா! இவங்க யார் சட்டம் போடறதுக்கு?”

“நாம இதுக்கு ஒத்துக்கக் கூடாதுங்க. அந்த செக்ரட்டரியப் பாத்துப் பேசுங்க நீங்க.”

“பேச்சுவார்த்தை பலனளிக்காவிட்டால் தர்ணாப் போராட்டம் நடத்துவோம்னு ஒரு அறிக்கை விடுங்கப்பா.”

“அம்மா, ஒங்க மாதர் சங்கத்துல சொல்லி, செல்லப் பிராணிகளோட பிறப்புரிமையையும் சுதந்திரத்தையும் நிலை நாட்டக் கூடாதா அம்மா, இதுகூட ஒரு சமூக சேவை தானே.”

“நம்மள மாதிரி, குட்டப்பன்களை வளக்கிற எல்லா ஃப்ளாட் காரங்களையும் ஒன்று திரட்டி நாம ஒரு போட்டிச் சங்கம் ஆரம்பிச்சிப் போராட்டம் நடத்துவோம்.”

இந்தப் புலம்பல்களும் புரட்சிக் குரல்களும் நாலு சுவர்களுக்குள்ளே முடங்கிப் போயின. காரியதரிசியிடம் வைத்த முறையீடு பரிசிலிக்கப்படவில்லை. வேறு ஃப்ளாட் காரர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை. மாதர் சங்கத்துக்கு வேறு முக்கியமான டீ பார்ட்டிகள் இருந்தன. தர்ணா என்பதெல்லாம் நடக்கிற காரியமில்லை.

நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. தீபாவளி நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த இக்கட்டிலிருந்து எங்கக் குட்டப்பனை எப்படி மீட்பது என்று புரியாத மனக் குழப்பத்தில், ஆளாளுக்கு அவனைத் தூக்கி வைத்துக் கொஞ்சுகிற வேலை மட்டும் முன்னிலும் மும்முரமாயிருந்தது.

அந்தக் கொஞ்சலின் பின்னணியிலிருந்த சோகம் குட்டப்பனையும் எட்டியிருக்க வேண்டும். அவனுடைய முனகல்கள் அதை வெளிப்படுத்தின. குட்டப்பனுக்கு இப்போது வாக்கிங் கிடையாது. ஃப்ளாட்டுக்கு வெளியே விடாமல் அவனைப் பொத்திப் பொத்திப் பராமரித்தோம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை, வாசலில் மணி ஒலிக்க, கதவைத் திறந்த கடைக்குட்டி, வளாகக் காவலாளியொருவரை எதிர் கொண்டாள்.
“பாப்பா, ஒங்க வூட்ல நாய் வளக்கறீங்க இல்லியாம்மா?”
“நாயா? எங்க வீட்லயா? இல்லியே!”
“பொய் சொல்றியே பாப்பா. நா பாத்திருக்கேனே, வெள்ளையா ஒரு குட்டி நாய் இருக்குல்ல?”
“நாய் இல்லியே, அது எங்கக் குட்டப்பன்.”
“குட்டப்பனோ நெட்டப்பனோ, தீபாவளிக்கி இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு. அக்குள்ள நாயக் காலி பண்ணலன்னா, நாங்க வந்து புச்சிட்டிப் போயிருவோம். அப்பா கைல சொல்லு, என்ன?”

கதவைச் சாத்திவிட்டு வந்த கடைக்குட்டி, குட்டப்பனை வாரி அணைத்தபடி ஸோஃபாவில் உட்கார்ந்தாள். அவளுடைய கண்களில் திரண்ட கண்ணீர் முத்துக்கள் குட்டப்பனின் உடம்பில் சொட்ட, அவன் உடல் சிலிர்த்து அவளை நிமிர்ந்து பார்த்தான்.

யாருக்குமே பேச்சு வரவில்லை.

கடைக்குட்டி, கண்களைத் துடைத்துக் கொண்டு, “அப்பா” என்றாள். “நமக்கு இந்த மெட்ராஸ் வேண்டவே வேண்டாம்ப்பா. தீபாவளிக்கி முந்தி நாம எல்லாரும் குட்டப்பனக் கூட்டிக்கிட்டுப் பாளையங்கோட்டக்கிப் போயிரலாம்ப்பா.”

நான் அவளைப் பார்த்தேன். பிறகு அங்கிருந்த ஒவ்வொரு முகத்தையும் ஒவ்வொன்றாய்ப் பார்த்தேன்.எல்லா முகங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாய் சோகம் கம்மி ஒரு பிரகாசம் மலர்ந்தது.

இளையவன் சட்டென்று எழுந்தான். கடைக்குட்டியிடமிருந்து குட்டப்பனைக் கைப்பற்றி அணைத்தபடி அவனுக்கு முத்தமழை பொழிந்தான்.அவனைத் தொடர்ந்து, பெரியவன்.

ஆனந்தக் கண்ணீரினூடே என்னவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

இதோ நாங்கள் குட்டப்பனோடும் மூட்டை முடிச்சிகளோடும் தீபாவளிக்குப் பாளையங்கோட்டைப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

(கல்கி, தீபாவளி மலர், 2007)

About The Author

2 Comments

  1. Shankar

    இரண்டாவது தீபாவளி வரப்போவுது. சிங்கார சென்னையில் வாங்கிய வீடு என்ன ஆச்சு?

  2. Mahesh

    அருமையான கதை
    தொடரட்டும் உங்கல் படைபுகல்

Comments are closed.