ஆள் அரவமில்லாத பாளையங்கோட்டை ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெஞ்ச்சில் தன்னந்தனியாய் உட்கார்ந்து நான் பலவித யோசனைகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, கிட்டத்தட்ட இதே பெஞ்ச்சில், இருபதாம் நூற்றாண்டில், சிவராமனோடு உட்கார்ந்து மணிக்கணக்கில் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருந்த கவலைகளற்ற வசந்த காலம் நினைவுக்கு வந்தது.
ஊருக்கு ஒக்குப்புறமான இந்த ரயில்வே ஸ்டேஷன், கட்டபொம்மன் சிலையடிவாரம், அசோக் டாக்கீஸ், சங்கரம்பிள்ளைக் கடை முக்கு, மூளிக் குளக்கரை, சரோஜினி பார்க், மரியா கான்ட்டீன் என்று பலப்பல சந்திப்பு ஸ்தலங்களில் சேக்காளிகளோடு அரசியல் பற்றி, சினிமா பற்றி, சாராட்டக்கர் காலேஜ் பெண்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்த விடலைப் பருவம் அது.
பாளையங்கோட்டையை விட்டால் திருநெல்வேலி ஜங்ஷன், டவுன், தச்சநல்லூர். அவற்றைத் தாண்டி வேறு உலகமே தெரியாது. மூன்று தலைமுறைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கிற ஊர். இளைய தலைமுறைக்கு ஒத்து வரவில்லை. புலம்பெயர்ந்து சிங்காரச் சென்னையில் குடியேறியே ஆக வேண்டுமென்று மூன்று பிள்ளைகளுமே கொடி பிடிக்கிறார்கள், பெற்றவளின் ஆசீர்வாதத்தோடு.
“என்னப்பா நீங்க இன்னும் சுத்தப் பட்டிக்காடா இருக்கீங்க. ஐட்டில ஒலகம் ஹைட்டெக்காப் போய்ட்டு இருக்கு, அதோட சேந்து நானும், ஐ மீன் நாமளும் முன்னேற வேண்டாமா? மெட்ராஸ்ல போய் இருந்தாத்தான் அது முடியும். யோசிக்காதீங்கப்பா” என்கிறான் பெரிய பையன்.
ஹைட்டெக்காய் ஒரு சென்னை சிநேகிதியை இன்ட்டர்நெட் மூலம் அவன் வசீகரித்து வைத்திருக்கிற ரகசியத்தை நம்ம வீட்டுக்காரி என் காதில் போட்டு வைத்து விட்டாள் என்கிற விவரம் அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ!
சின்னவன் ஸ்கூல் கிரிக்கெட் டீமில் இருக்கிறான். சென்னைக்குக் குடிபெயர்ந்தால் தான் அவன் ஸ்டேட் லெவலில் ஷைன் பண்ண முடியும் என்று தீவிரமாய் நம்புகிறான்.
“நீ ஷைன் பண்றதுக்கு நா ஃபைன் கட்டணுண்டேய். மெட்ராஸ் ஸ்கூல்கள்ள ப்ளஸ் ஒன்ல சேர்றதுக்கு டொனேஷன் எவ்ளோ குடுக்கணும் தெரியுமா ஒனக்கு?” என்கிற என்னுடைய புலம்பல் அவனிடம் எந்தப் பின்விளைவையும் ஏற்படுத்தவில்லை.
“இந்தப் பாளையங்கோட்ட இக்னேஷியஸ் கான்வென்ட் போரடிக்கிப்பா” என்கிறாள் கடைக்குட்டி.
“மெட்ராஸ்க்குப் போய், ஜெயலலிதா படிச்ச சர்ச் பார்க் கான்வென்ட்ல” படிக்கணுமாம் அவளுக்கு.
இந்த மூணுக்கும் வெளியிலிருந்து ஆதரவு கொடுப்பது அவங்க அம்மா. இலக்கிய ஆர்வம் பீறிட்டு, இப்போ ரெண்டு வருஷமாய்த் தமிழ்ச் சிறுகதைகளும் கவிதைகளும் எழுத ஆரம்பித்திருக்கிற நம்ம சம்சாரம். அவள் வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பிய இலக்கியப் படைப்புகள் அத்தனையும் பத்திரமாய்த் திரும்பி வந்து சேர்ந்து விட்டன.
“சே, எவ்ளோ கஷ்டப்பட்டு எழுதினாலும் எல்லாமே திரும்பி வந்துருதே” என்று அவள் வருத்தப்பட்டதற்கு நான் சொன்னேன், “இனி ஸ்டாம்ப் வச்சு அனுப்பாத, அப்பத்தான் திரும்பி வராது” என்று.
அவள் எதிரணியில் இணைந்ததற்கு என்னுடைய நக்கலும் ஒரு காரணம். தவிர, மெட்ராஸில் போய் இருந்து கொண்டு, ஒவ்வொரு பத்திரிகை ஆஃபீஸாய்ப் படையடுத்துத் தன் படைப்புகளை எப்படியாவது அச்சில் பார்த்துவிட வேண்டும் என்கிற ஹிடன் அஜண்டாவும் அவளிடம் உண்டு.
யார் எப்படி நெருக்கடி கொடுத்தாலும் பாளையங்கோட்டையை விட்டுப் புலம் பெயர்வதில்லை என்கிற என்னுடைய உறுதி எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும் என்கிற சந்தேகத்தோடயே தெக்கு பஜார், வடக்கு பஜார் வழியாய்ப் பொடி நடையாய் வீடு வந்து சேர்ந்தேன்.
ராத்திரி திரும்பவும் எனக்கு மூளைச் சலவை ஆரம்பமானது. “இப்படியே நாட்களத் தள்ளிக்கிட்டே போகாம, புத்திசாலித்தனமா ஒரு முடிவுக்கு வாங்கப்பா” என்றான் மூத்தவன்.
“வாழ்க்கையில மேல மேல முன்னேறணும்னா, ஒரு ஸ்டேஜ்க்கு மேல ஸிட்டிக்கி ஷிஃப்ட் பண்ணிரனும்ப்பா. இந்த ஊர்ல எல்லாம் முன்னேற்றத்துக்கு இனி ஸ்கோப்பே இல்ல.”
சின்னவன் வீட்டுக்குள்ளேயே வெறுங்கையால் மட்டை விளாசிக் கொண்டிருந்தான். இவனுடைய வீச்சுக்கு சென்னையின் விசாலம் தேவையாம். கடைக்குட்டி மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தது.
“நாங்க நாலுபேரும் எதிர்க்கட்சியாயும் நீங்க ஆளுங்கட்சியாவும் இருக்கீங்க” என்று ஆரம்பித்தாள் என்னவள்.
“நீங்க நாலு பேரும் சரி, நா ஒரு ஆளும் சரி. நா குடும்பத் தலைவனாக்கும்!” என்று நான் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டேன்.
“ஸோ, இப்ப ஸ்டேல்மேட்ங்றீங்க!”
“அப்படித்தான் வச்சிக்க.”
“அப்ப, நம்ப குடும்பத்துலயிருக்கிற ஆறாவது ஆளக் கேப்போம். ஆறாவது ஆள் என்ன சொல்லுதோ அதான் ஃபைனல்.”
இந்த வீட்டுச் செல்லப் பிள்ளையான அந்த ஆறாவது ஆளை இவர்களெல்லாரும் சேர்ந்து எனக்கெதிராய்த் தயார்ப்படுத்தி வைத்திருப்பார்கள் என்கிற நியாயமான சந்தேகம் எனக்கிருந்தாலும், ஜனநாயகக் கோட்பாடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியவனானேன்.
“குட்டப்பா” என்று குரல் கொடுக்கப்பட்டதும் குடுகுடுவென்று ஓடி வந்து எல்லோர் முன்னிலையிலும் பிரசன்னமானான் “ஆறாவது ஆள்”.
மூணு வயசுப் பாமரேனியன்.
“குட்டப்பா, நாம மெட்ராஸ்க்கு ஷிஃப்ட் பண்ணனும்னு சொல்லுதியா, வேணாம்னு சொல்லுதியா?”
வவ் வவ் வென்று குரல் கொடுத்துச் சம்மதத்தையும் சந்தோஷத்தையும் வெளிப்படுத்தினான் குட்டப்பன்.
“ஹை, குட்டப்பன் சரி சொல்லிட்டான்!” என்றொரு கரகோஷம் எழுந்தது.
சபையோரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு குட்டப்பனிடம் நான் பேசினேன். “குட்டப்பா, வேண்டாம்னு சொல்லுடா, ஒனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தர்றேண்டா.”
“லஞ்சம் லஞ்சம்” என்று கோரஸ் எழுந்தது.
ஆனாலும், ஐஸ்க்ரீமுக்குக் குட்டப்பன் மசியவில்லை. தலையைத் தாழ்த்தி ம்ம்ம் மென்று முனகினான். தோல்வியை நான் ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய நிர்பந்தம்.
அடுத்த கட்டமாய், எமிக்ரேஷன், மற்றும் பயணத் திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் நடந்தது.சென்னையில், நிரந்தரமாய்க் குடியேறிவிடப் போவதால், வாடகை வீடெல்லாம் வேண்டாம், மூணு பெட்ரூம் ஃப்ளாட் ஒன்றைக் கிரயம் பண்ணி வாங்கி விடுவது என்று பெரும்பான்மை முடிவு எடுக்கப்பட்டது.
இந்தப் பாளையங்கோட்டை வீட்டை விற்று விடுவது என்கிற தீர்மானத்தை நான் வீட்டோ செய்து தடுத்து விட்டேன். இப்போதைக்கு இந்த வீட்டை விற்பதில்லை, பூட்டி விட்டுப் போய்விடுவது. வாடகைக்கு விடுவதா, விற்று விடுவதா என்பதைப் பிற்பாடு யோசித்துக் கொள்ளலாமென்று ஏகமனதாய் முடிவெடுக்கப்பட்டது.
எப்படியானாலும், இந்த வருஷ தீபாவளிக்கு நாங்கள் சென்னைவாசிகள் என்று தீர்மானமானது.பெரியவனும் நானும் சென்னைக்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, அண்ணா நகரில் புதிதாய்க் கட்டி முடிக்கப்பட்டிருந்த, நூற்றிச் சொச்சம் ஃப்ளாட்களைக் கொண்ட விசாலமான ஆடம்பரக் காம்ப்ளக்ஸில் மூணாவது தளத்திலொரு மூணு பெட்ரூம் ஃப்ளாட்டை முப்பது லட்சத்துக்கு முடித்தோம்.
பாளையங்கோட்டையைக் காலி செய்கிற துக்க நாளில், ஸ்டேஷனுக்குப் போவதற்குக் குட்டப்பன் உட்பட எல்லோரும் டாக்ஸியில் ஏறிக் குதூகலமாய்க் காத்திருக்க, பனித்த விழிகளோடும் கனத்த இதயத்தோடும் நான் கடைசிப் பூட்டைப் போட்டுப் பூட்டிவிட்டு வண்டியேறினேன்.
(மீதி அடுத்த இதழில்)
ஆரம்பமே சுவாரஸ்யமாய் உள்ளது!