செருக்கு
திருப்பத்தூர் கிறித்தவ குல ஆசிரமத்தில் திருக்குறள் வகுப்பு நடத்தி வந்தேன். அந்தக் காலத்தில், என் உள்ளத்தில் என் கல்வித் திறமை பற்றிய செருக்கு இருந்தது. என்னை விடப் படித்த பெரியண்ணன் (சவுரி ராசன் ஜேசுதாசன்), சின்னண்ணன் (பாரஷ்டர் பேட்டன்). ஒருநாள் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்துக் கையலம்ப எழுந்தேன். குழாயருகே சென்றபோது நான் மட்டும் வெறுங்கையோடு நிற்பதையும் மற்றவர்கள் ஒவ்வொருவரும் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்காகக் கையில் ஏந்தி நிற்பதையும் உணர்ந்தேன். சின்னண்ணன் கையில் இரண்டு தட்டுகளைக் கண்டேன். அவரிடம் என் தட்டைப் பெற முயன்றேன். அவர் இரண்டையும் உமி இட்டுத் தேய்க்கத் தொடங்கி என்னிடம் கொடுக்க மறுத்து விட்டார்.
அன்று என் வாழ்வில் பெரிய திருப்பம் நேர்ந்தது. கல்வி பற்றிய செருக்கு என் உள்ளத்தில் சுவடு தெரியாமல் அழிந்தது. மூளையால் உழைக்காமல், கை கால் கொண்டு உழைக்கும் எவரைப் பார்த்தாலும் அவர்களும் என்னைப் போன்ற மனிதர்களே என்று மதிக்கும் மனப்பான்மை அமைந்தது.
(மு.வ-வின் ‘சில நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்க்கிறேன்’).
******
ஐயாவின் பொறுமை!
ஐயாவும் கண்ணப்பரும் ஒரு முறை ரயிலில் பயணம் செய்தபோது கண்ணப்பர், பார்ப்பனர் ஒருவரோடு வாக்குவாதம் செய்துகொண்டே வந்தார். அப்போது கடுமையான பல சொற்களைப் பேசும்படியான சூழ்நிலை உருவானது.
இதனை வேடிக்கை பார்த்து ரசித்துக்கொண்டே வந்த ஐயா, "இப்படியா பேசுவது? பொறுமையாக, அவருக்குப் புரியும்படி பதில் கூறினால்தானே அவரது தவறான எண்ணத்தை மாற்றி நம் பக்கம் திருப்ப முடியும்?" என்றார்.
உடனே அந்தப் பார்ப்பனர், "பெரியவரே! நீங்கள் சொல்வதை அவர் கேட்க மாட்டார். இவர்கள் இராமசாமி நாயக்கர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இப்படித்தான் பேசுவர்" என்றார். ஐயாவும் கண்ணப்பரும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
கண்ணப்பர் அடுத்த வண்டிக்குச் செல்வதற்காக இறங்கிவிட்டார். ஐயா கழிப்பறைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அந்தப் பார்ப்பனரைப் பார்த்து, "அவர்தானய்யா ராமசாமி நாயக்கர். இப்படிப் பேசிவிட்டீரே!" என்றார். கழிப்பறையிலிருந்து ஐயா வந்தவுடன் பார்ப்பனர் எழுந்து நின்று, இரு கைகளையும் எடுத்துக் கும்பிட்டு, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா! தங்களை யார் என்று தெரியாமல் பேசிவிட்டேன். உங்களைப் பற்றி அவதூறு பேசுபவர்களே பொய்யர்கள். தங்களது நற்குணமும் பொறுமையும் யாருக்கும் வராது. எங்கள் வீட்டிற்குத் தாங்கள் கட்டாயம் வரவேண்டும்” என்று உபசரித்துச் சென்றார்.
–இன்னும் இருக்கிறது…
“