மாமா, அத்தை, நாணா, நான் எல்லோரும் நாணாவுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல இண்டர்வியூன்னு இங்கே வந்தோம். இது ரொம்ப பெரிய காலேஜ்.
புட்பால் வௌயாட, டென்னிஸ் வௌயாட எல்லாம் இடம் இருக்கு. நாணா இங்கே படிச்சா எனக்கு ரொம்ப சந்தோஷம் – அடிக்கடி வரலாம். காலேஜ் பக்கத்துலய குற்றாலம் மாதிரி அருவியெல்லாம் கூட இருக்கு.
நாணா எங்க அத்தை பையன். என்னைவிட ரொம்பப் பெரியவன். எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் எப்பவும் அத்தை வீட்லதான் அடிக்கடி இருப்பேன். ஆசை ஆசையா வச்சுக்குவாங்க. ஆனா நாணாவுக்குத்தான் எப்பவும் திட்டு. படிக்கிறது போதாதாம்.
நாராயணனை நாணான்னு கூப்பிடுவோம். அவன் நல்லாத்தான் படிப்பான். பர்ஸ்ட்டா வர்றதில்லையாம். என்ன செய்ய… முடியறதைத்தானே படிக்க முடியும்? முன்னே எல்லாம் நெறய்ய கதை சொல்வான். கம்ப்யூட்டர்லே என்னோட கேம்ஸ் வௌயாடுவான். இந்த வருஷம் பிளஸ் டூ படிக்கிறான். நெறய டியூஷன்கள் வச்சி மாத்தி மாத்தி போயிடுவான். பாக்கவே முடியாது அவனை. எனக்கு அழுகையா வரும். ஆனா என் பிறந்த நாளை மறக்காம ஞாபகம் வச்சிருந்தான். எனக்குப் பிடிச்ச சாக்லேட்டைக் கொண்டு வந்தான்.
"கண்ணா, இன்னும் கொஞ்ச வருஷத்துல ஐயா இன்ஜினியர் ஆயிடுவேன். உனக்காக என்னவெல்லாம் செய்றேன் பார்."
அப்போது மாமா வந்துட்டார். "பேசறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. செயல்ல காட்டு… மொதல்ல உட்கார்ந்து படி… போ" விரட்டி விட்டார்.
ப்ளஸ் டூ பரீட்சைக்கு ரெண்டு மாசம்தான் இருக்காம். ரிவிசன்லே மார்க்கு கொறஞ்சுடுச்சாம்.
முன்னே எல்லாம் மாமா நாணாவை நல்லாத்தான் வச்சுக்குவார். அவன் பெரிய வகுப்புக்கு வரவர அவன்கிட்டே சிடுசிடுன்னு இருக்கார்.
"உனக்குத் தெரியாதுடா. அவன் நல்லா படிச்சாத்தான் நல்ல உத்யோகத்துக்குப் போகமுடியும். மார்க் நெறய வேணுமில்ல."
என்ட்ரன்ஸ் டெஸ்டுக்கு ஹால் டிக்கட் வாங்க வரிசையிலே காத்திருந்தோம். அம்மாடியோ எத்தனை பேர். அத்தனை அம்மா அப்பாவும் மாமா மாதிரியே திட்டுவாங்களோ?
பப்ளிக் பரீட்சைக்கு தனி ரூமிலே போட்டாச்சு நாணாவை. கீழே எங்கே வந்தான். மாமாவே கொண்டு போய் மாடியிலே சாப்பாடு கொடுத்தார். அத்தை வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. நாணா சின்னதா தும்மினாக்கூட மாமா திட்ட ஆரம்பிச்சிடுவார்.
"அதான் அப்பவே சொன்னேன். பரீட்சை இருக்கு. உடம்பைப் பத்திரமா பாத்துக்க வேணாம்? அதுல அக்கறை இருந்தாத்தானே?"
பாவம்! அவன் தும்மக்கூட பயந்தான்.
கணக்குல அவன் சுமார்தான். டியூசன் வச்சாலும் சரியாகவில்லை. "கண்ணா சுவாமிட்டே எனக்காக வேண்டிக்கோடான்னு" கணக்கு பரீட்சை அன்னிக்கு கேட்டான். பாவமா இருந்துச்சு. ரிஸல்ட் வர்ற அன்னிக்கெல்லாம் பதறி… பதறி… வீட்ல எல்லோருக்கும் ஒண்ணும் ஓடல்ல.
அப்பாடா! நாணா நல்லபடியா பாசாயிட்டான். அதுக்குப் பெறகும் அவனுக்கு எங்கே நிம்மதி. இன்ஜினியரிங் காலேஜ்ஜுன்னா என்ட்ரஸுக்குப் படிக்கணுமே?
நாணாவுக்கு வெளியூர்ல தன் பிரெண்ட்ஸ்ஸோட எக்ஸெல், ஐ.ஐ.பி.இன்னு கோச்சிங் தர்ற இடங்க இருக்காம் அங்கே போகணும்னு ஆசை.
"பிரண்ட்ஸ்ஸோட போயி… அரட்டைதான் அடிப்பே. சும்மா தனி டியூஷன் வைக்கிறேன்னு" புரோபசர்களை வரவழைச்சு டியூஷனுக்கு ஏற்பாடு செய்தார் மாமா. அப்போ பிளஸ்டூவைவிட கெடுபிடி.
என்ட்ரன்ஸ் சுமாராத்தான் பண்ணினான் நாணா.கட்ஆப் மார்க் கம்மியாம். பேக்பேர்டுன்னா சுலபமா சீட் கிடைக்குமாம்.சாதி வேணுங்கறாங்களா வேண்டாங்கறாங்களா? எனக்குப் புரியல்லே ஒண்ணும்.
கவுன்சலிங் நடந்துட்டிருந்தது. மாமா ரொம்பவும் டென்ஷனாயிட்டார். நாணாவின் பிரெண்ட்ஸ் யாரு கவுன்சிலிங்கிற்குப் போய்ட்டு வந்தாலும் அந்த கா"லேஜ் பத்தி அது இது என்று கேட்டுக்கொண்டே இருப்பார்.
"நல்ல மார்க் வாங்கினா முதல்யே ப்ரீ சீட்லே நல்ல காலேஜ் கிடைக்கும். சொன்னா புரிஞ்சாத்தானே? அவனைப் பார் இவனைப் பார்" ஆரம்பிச்சிடுவார். பாவம் நாணாவுக்கு முகம் சுருங்கிப் போயிடும். நாணாவுக்கு கவுன்சிலிங் எப்போ?
மாமாவுக்கு நெறய பிரெண்ட்ஸ். மேனேஜ்மெண்ட் கோர்ஸ் பரீட்சை எழுதினான் நாணா. பலம்மா சிபாரிசு வேற பண்ணி இருக்காம். இந்த காலேஜுல சீட் கொடுத்துடுவாங்கன்னு சொன்னாங்க. தெனமும் யார் யாரையோ பாத்துட்டு வந்தார். இங்கேயும் இன்டர்வியூல என்ன பேசணும்னு நாணாவை தயார் பண்ணினாங்க.
இந்த காலேஜுல இன்டர்வியூக்குத்தான் மாமா, நான், நாணா, அத்தை எல்லாம் வந்தோம். நானும் அத்தையும் காருக்குப் பக்கத்துல இருந்தோம். அவங்க அப்பாகூட நாணா உள்ளே போயிட்டான். அத்தை பக்கத்துல சின்ன பிள்ளையார் கோயிலைப் பார்த்ததுமே அங்கே போயிட்டாங்க.
காலேஜ்ல ஏகப்பட்ட மரங்க குளுகுளுன்னு. பக்கத்துல மலை இருக்கறதாலே நெறய கொரங்குங்க. அதைப் பார்க்கவே குஷியா இருக்கு. அதுவும் குட்டிக் கொரங்குங்க பார்க்கப் பார்க்க அழகுதான். ஏதாச்சும் தருவோம்னு சுத்தி சுத்தி வருது. அதோட அம்மா எல்லாம் அதை சந்தோஷமாக வச்சுக்குது. குட்டி செய்றதை அம்மா அப்பா கொரங்குங்க பாத்துட்டு இருக்கு. நல்லா வௌயாட விடுது. சாப்பிட தருது. குட்டிகளுக்கு ஜாலிதான்.
ஹும்… அதோட அப்பா, அம்மா எல்லாம் படிபடின்னு சொல்லாது. மார்க்கு எவ்வளவுன்னு கேக்காது. ஆமா… இது மிருகம்தான். ஆதி மனுசன்னும் சொல்வாங்களே? மோஸ்ட் பேக்வேர்டா? அப்ப கட் ஆப் மார்க் ரொம்ப கம்மியா இருக்குமே…? நெனச்சுட்டே இருந்தேன்.
இதோ மாமா வேகமா சந்தோஷமா வர்றார். பின்னால் வர்றான் நாணா.
"டேய் கண்ணா! நம்ம நாணாவுக்கு இந்த காலேஜ்லே இடம் கெடச்சுடும். இன்னிக்கு உங்களுக்கு ஐஸ்கிரீம், ஸ்வீட் எல்லாம் உண்டு."
எனக்கு ஒரே சந்தோஷம். நாணா பக்கம் ஓடினேன். அவன் சந்தோஷமாகவே இல்லை. அதான் படிச்சு இன்ஜினியர் ஆயிடுவானே பெறகு என்ன?
செல்போன்லே மாமா யார் யாருக்கோ நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். அத்தை பிள்ளையாருக்கு வெடல போடப் போனாங்க.
உற்சாகமே இல்லாம நாணா கார்லே உட்கார்ந்தான். நானும் அவன்கூட உட்கார்ந்து கையைப் பிடிச்சேன்.
"நாணா உனக்கு இந்த காலேஜ் பிடிக்கலையா? நீ சந்தோஷமாவே இல்லையே…"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே கண்ணா. இவங்கெல்லாம் எப்பப் பார்த்தாலும் மார்க்கு, மார்க்குன்னு தானே கேட்டாங்க. இத்தனை வருஷமா ஸ்கூல்ல மரியாதையா, ஒழுங்கா, காப்பி ஏதும் அடிக்காம, வீட்லேயும் நல்லவனாத்தானே இருந்தேன். அதை யாராவது பாராட்டினாங்களா? படிக்கிற இயந்திரமாத்தானே பார்த்தாங்க. படிப்பு இருக்கட்டும் பண்பாடு உன்கிட்டே இருக்குன்னு தட்டிக் கொடுத்தாங்களா?
இப்பவும் காலேஜ்… காலேஜ்தான். படிப்போட நல்லவனா, நேர்மையானவனா இருக்கணும்னு யாராவது சொன்னாங்களா? நீ யோசிச்சா புரியும். இன்ஜினியர் ஆனா மட்டும் பத்தாது – நல்ல இந்தியனாவும் ஆகணும்டா"
எனக்கு அழுகை, வேகம், பயம் எல்லாம் வந்தது. எங்க அம்மா அப்பா பெரியவனானதும் என்னை எப்படிப் பார்ப்பாங்க?
(எட்டாவது அதிசயம் – மின்னூலில் இருந்து)
To buy the EBook, Please click here
“