கோடியைத் தொட்டவர்களில் முதலில் யார் வருவார்கள் என்று வெளிநாட்டு பத்திரிகைகளிலிலிருந்து உள்ளூர் தினசரிகள் வரை பரபரப்பு செய்திகளை வெளியிடுவார்கள். இதெல்லாம் ஒரு புறமிருக்க, சத்தமில்லாமல் ஒருவர் கோடிகளைத் தாண்டி கொக்கோடிகளை அடைந்து கொண்டேயிருக்கிறார். வேறு யாருமில்லை. நாம் வழிபடும் நம் தெய்வம்தான்.
கருப்பு, வெள்ளை, சிவப்பு என்று அனைத்து மக்களும் தங்கள் பாவங்களை அவர் மேல் சுமத்தி விட்டு, போனால் போகிறது என்று அவருக்கு சர்வீஸ் சார்ஜ் கொடுக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு கட்ட அவர் கல்கியாக வருவாரோ, மாட்டாரோ தெரியாது. ஆனால் அவர் கல்கியாகவோ, அதற்கும் மேலாகவோ வரக்கூடாது என்பதற்காகவே அவரை நாடிச் சென்று கப்பம் செலுத்துகிறோம். இதெல்லாம் இங்கு எதற்கு என்றால், அப்படி கப்பம் செலுத்துவதில் அடியேனும் ஒருவன்.
ஒரு சின்ன அறிமுகம். நான் – பிரம்மரிஷி. ஹ!விசுவாமித்திரரோ, அகத்தியரோ அல்ல! சாதாரண பிரம்மரிஷி. பெற்றோர்கள் பெயர் அப்படி வச்சுட்டாங்க! நான் என்ன பண்றது? இந்தியாவின் பெரும்பான்மையான நடுத்தர வர்க்கத்து குடிமகன். கவனிக்கவும். குடிமகன். ‘குடி’மகனல்ல. தீவிர பக்தன். கோவில் குளமாக சுற்றுபவன். சிறிது நாத்திகமும் பேசுபவன். இரண்டும் எப்படி? என்ன பண்றது? சிறு மூளை, பெரு மூளை ரெண்டும் இருக்கிறதே! நண்பர்கள் கொஞ்சூண்டு உண்டு. சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும், அளவான, ஆரோக்கியமான நண்பர்கள். கடவுள் பக்தியிலும் சரி, கடை வீதி கன்னி பக்தியிலும் சரி. சேர்ந்தே போவோம். சோர்ந்தும் திரும்புவோம்!
அழகான நாட்கள் ஓடிக் கொண்டேயிருந்தன. கடவுளும் அழகான வேலையைக் கொடுத்தார். என் கூட்டாளிகளுக்கும் கூட. வில்லன் என்று ஒருவரும் இல்லை. இவ்வளவும் தந்த தெய்வத்திற்கு நன்றி சொல்லணுமே! சொல்லாவிட்டாலும் அவர் கோபித்துக்கொள்ள மாட்டாரென்று தெரியும். இருந்தாலும்…
இதோ கிளம்பிவிட்டோம், நானும் என் நண்பனும். "ஏறு! ஏறு! தம்பி எங்கே போகணும்? திருப்பதியா?வா! வா!" என்று சாட்சாத் அந்த வெங்கடேசப் பெருமான் அழைப்பதைப் போலவே அழைத்தார், நம் நடத்துனர். இதோ ஏறி விட்டோம். மார்கழி மாதம். குளிர் உடலின் இண்டு இடுக்கு, சந்து, பொந்து எல்லா இடமும் ஏறி இறங்கி, ‘யூ’வளைவு வரை போட்டது. நமது பேருந்துகளில் எப்பொழுதும்போல் ஜன்னல் மூடவில்லை. சற்று கவனித்து பார்த்தீர்களானால், வேனல் காலங்களில் ஜன்னலைத் திறக்க முடியாமலிருக்கும். ஏன் இந்த முரண்பாடு! நம் விதிதான். நமோ வெங்கடேசா!
சாலைகள் முடியாமல் போக் கொண்டிருந்தன. கடிகார முட்களின் வட்டமிடுதல் மிக மெதுவாக இருப்பதாக உணரப்பட்டது. குளிர் கும்மியடித்தது. ஆனால், பக்கத்திலிருந்த என் நண்பன் குறட்டை விடுகிறான். நேற்று, அவன் தலைமுடியை விதவிதமாக வாரிக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நாளை மொட்டையடிக்கப் போகிறானாம். கப்பம், லஞ்சம் எல்லாம் தலைமுடியிலிருந்தே ஆரம்பம் ஆகிறதோ! ஏதேதோ நினைவுகள், கனவுகள், தூக்கம் எல்லாமுமாக கிருஷ்ண தேவராயரின் பூமிக்கு வந்து விட்டேன். இங்கு தமிழுக்கு பதிலாக எழுத்துகளெல்லாம் தெலுங்கில். ராஜராஜ சோழனின் மேல் கோபம் வந்தது. ஏனென்றால், கடல் கடந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போய் தமிழை நிலைநாட்டத் தெரிந்தவர், கொஞ்சம் வடக்கே போக எத்தனிக்கவில்லையே! (கொஞ்சம் ஓவர்தான்!). சிந்தனைக்கும் உண்டோ அடைக்குந்தாழ்!
திருமலை என்று பெயர் எழுதிய, நாமமிட்ட பேருந்து எங்களை உள்வாங்கிக் கொண்டது. மலையேற, மலையேற, "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்" பாடல்தான் நினைவிற்கு வருகிறது. பின்னாடி திரும்பிப் பார்த்து விட்டேன், நடிகை ஷோபா இல்லை!!
திருமலையில் இறங்கியவுடன், குளிக்கணும், பொருட்களைப் பாதுகாக்கணும். ஆனால் ரூமும் எடுக்கக்கூடாது. அதற்கும் வழியுண்டு ஸ்ரீநிவாசனின் இருப்பிடத்தில்…
எல்லாம் முடிந்தது. நண்பன், ஆசையாய் சீவிப் பார்த்த முடிகளெல்லாம், பரமாத்மாவை அடைந்ததாக எண்ணுகிறான். அவனிடம் நான், "டேய்! சாக்லேட்ல தலைமுடி போடுவாங்களாமே! அப்படியா?" என்றேன்.
"தெரியலடா" என்று தன் மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டே, விட்டேத்தியாய் பதிலளித்தான். அவன் கவலை அவனுக்கு.
50 ரூபாய் கொடுத்து எம்பெருமானை தரிசிக்க சீட்டு வாங்கிக் கொண்டோம். 50 ரூபாய் டிக்கெட்டில் தரிசிப்பவர்களுக்கு எம்பெருமானின் அருள் அதிகமாக் கிடைக்குமோ? அப்படியானால் 1000, 2000 ரூபாய் டிக்கெட்காரர்கள்? எதுவுமே கொடுக்காமல் வி.ஐ.பி என்ற பெயரில் இலவசமாய் தரிசிப்பவர்களுக்கு? நாராயணன் பதில் சொல்ல வேண்டிய மில்லியன் டாலர் கேள்வி!!
50 ரூபாய்க்கு இப்பொழுது நல்ல அரிசி கூட கிடைப்பதில்லை. கடவுள் மட்டும் லேசுப்பட்டவரா??? வரிசை துவக்கம்… இத்தனை பாவிகளா உலகில்? வியந்தேன். பாவிகளோடு பாவிகளாய்க் கலந்தேன்! தரிசன வரிசை முன்னேற, முன்னேற ‘கோவிந்தா’க்கள் பலமாயின. நடுவில் தயங்கி நின்றோம். தெரியவில்லை. ஒருவேளை வி.ஐ.பி வந்திருக்கலாம். பொழுது போகாமல் என்னைச் சுற்றிய மனிதர்களை கவனிக்கத் தொடங்கினேன். அது அற்புதமான உணர்வு.
பக்கத்தில் எங்கோ மராட்டியத்திலிருந்து வந்த வயோதிகக்கூட்டம் பயண அமைப்பாளர்கள் மூலமாக வந்திருப்பார்கள் போலும். மகன் அனுப்பி வைத்திருப்பான். "போய் தொலையட்டும்" என்றோ, "கடவுளை தரிசனம் செய்து புண்ணியம் அடையுங்கள்" என்றோ – இரண்டு காரணங்களில் ஒன்றின் பயனாய் வந்தவர்களைப் போலத்தான் அவர்களைக் கண்டேன்.
அடுத்து, ஒரு தம்பதியினர். புதிதாக திருமணம் ஆகியிருக்கலாம். வரிசை சிறிது தயங்கினாலும், கீழே உட்கார்ந்து, ஒருவர் மீது ஒருவர் தலைசாய்த்து இளைப்பாறும் அருமையான தருணத்திலிருக்கின்றனர் போலும். அன்னியோன்யம் தொடரவேண்டும், ஸ்ரீநிவாசா. பக்கத்திலிருந்த மொட்டையடித்த என் நண்பனை உறக்கம் ஆட்கொண்டுவிட்டது. என் கண்களை புறமனிதர்கள் ஆட்கொண்டுவிட்டனர்.
வரிசை சிறிது முன்னேறியது, கம்பிகளுக்குள் வரிசை வரிசையாய் மனிதக்கூட்டம். எறும்புகள் சாதாரணமாய் கற்றுக் கொண்டதை, நாம் கடவுள் பேரைச் சொல்லி மட்டுமில்லாமல், 50 ரூபாய் வேறு கொடுத்து கற்றுக் கொள்கிறோம். வரிசையை தற்காலிகமாய் நிறுத்தி வைக்கும் அறைக்குள் இப்பொழுது நுழைந்துவிட்டோம். நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. முன்னரும், பின்னரும் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஹிட்லர், கூட்டம் கூட்டமாய் யூதர்களை, விஷவாயு கொடுத்து இப்படித்தான் கொன்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சேச்சே! ஹிட்லரையும், நாராயணனையும் சம்பந்தப்படுத்திப் பார்க்கலாமா? அபச்சாரம். பெருமூளை, சிறுமூளையை அதட்டியது.
10 அறைகளில் விடுதலை கொடுத்து, கொடுத்து, திரும்பவும் கம்பிகளுக்குள் அனுப்பினர். இப்பொழுது ஒரு வழியாக கோவில் கண்களுக்குத் தெரிந்துவிட்டது.
இப்பொழுது என் கவனத்தைக் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் தன் மனைவியையோ, பெண்நண்பியையோ அரவணைத்து அழைத்துச் செல்கிறார். அவர்களின் நடை, உடை பாவனைகளில் இருந்து, அவர்கள் குளிர்சாதன அறையில், கணினிகளைத் தட்டி, அதட்டி, மேலை நாட்டவர்களுக்காக, நம் நாட்டில் வேலை செய்பவர்கள். ஐ.டிக்காரர்கள் என்று அரை நொடியில் சொல்ல வேண்டியதை இப்படிச் சொல்கிறேன். அவர்களிடம் பேசிப் பார்த்தால், ‘ஏன் அப்படி சொல்கிறேன்’ என்று புரியும். என் நண்பன் ஒருவன், தீர்த்தபதி மேனிலைப்பள்ளியில் படித்தவன்தான். ஐ.டியில் இரண்டறக் கலந்தவன். அதன்பின், like, actually, hey, why pa, shit, yaar, funda, blabla, bench, KT போன்ற புரியாத வார்த்தைகளை தமிழுக்கு நடுவில் பேசுகிறான். நான் கவனித்த தம்பதிகளும்(!) கூட அப்படித்தான் பேசிக்கொண்டனர். ரொம்ப நேரம் கேட்ட பிறகுதான் புலனானது, அவர்கள் பேசுவது தமிழென்று. ஒட்டுக் கேட்ட குற்றத்திற்காக மன்னிப்பாயாக, பரந்தாமா!
என் பக்கவாட்டில் நான்கு பேர். பேசிய தமிழ், நம் தலைநகரின் அங்க அடையாளங்களை பட்டவர்த்தனமாக கூறியது. மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள், ஒரு சிறுவனைக் கொண்ட குடும்பத்தினரோ, பக்கத்து வீட்டினரோ தெரியவில்லை. கூச்சல் என்ற வார்த்தைக்கு மறுபெயர் அவர்கள் என்று கூறலாம். அம்மா தன் குழந்தையிடம். "கீழே பார்த்து வாம்மா" என்று அன்பாக சொல்வதைக் கூட, அந்த அம்மாள், "டேய்! கயித. அய்யே! கண்ணை எங்க வச்சீகிரே கீழே பாத்து வரமாட்டியா?" என்றாள். எல்லாரும் திரும்பி பார்க்க, சிறுவன் சிறிது நெளிந்தான். கடவுளை தரிசிக்க வரிசையில் நிற்கும் போதே, அவர்களின் பக்கத்து வீட்டுப் பெண்களும், ஆண்களும் கொச்சைப் படுத்தப்பட்டனர். "நாராயணா! நாராயணா!" ஒட்டு கேட்கக்கூடாது என்று ஆண்டவன் அன்பாக கட்டளையிடுகிறான் போலும்.
எனக்கு முன்னால் ஐவர் கொண்ட ஒரு குழு. நான் தெரிந்து கொண்டது வரை கணவன், மனைவி, கைக்குழந்தை, கணவனின் அம்மா, அப்பா, மனைவியின் அம்மா. குழந்தையின் முதல் வருட மொட்டைக்காக திருப்பதி வந்திருக்கலாமென்பது என் யூகம். தமிழ்-பாண்டிய தேசத்து தமிழ். நான் அவ்வளவாக அவர்களை கவனிக்கவில்லை இந்த விஷயம் நடக்கும்வரை. கோவில் மிக அருகில் வரும்பொழுது, காவல் துறையினர், நம் கைப்பொருட்களை பரிசோதனை செய்வது வழக்கம். அதைப் போல, அந்த குடும்பத்தினரையும் சோதனை செய்தனர். கைக்குழந்தைக்காக வைத்திருந்த ஃபீடிங் பாட்டிலையும், தண்ணீர் பாட்டிலையும் பறிமுதல் செய்துவிட்டனர். காவல் துறையினரின் இந்த செயல் கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும், அவர்களின் தொழில் அவர்களுக்கு. ஒருவேளை அந்த பாட்டிலில் அமிலம் கொண்டு வந்து விட்டால்.. அதனால்தானோ இச்சோதனை? இது சாட்சாத் என் யூகமே.
ஆனாலும் இச்செயலுக்காக அந்த குடும்பத்தினர் பேசியது கொஞ்சம் மிகையாக இருந்தது.
"தெலுங்கு ஆளுங்க தமிழர்களின் பாட்டிலை மட்டும் பிடுங்குகிறார்கள்" – இது கணவனின் அம்மா.
"தண்ணீர் தவித்து, விக்கித்து நான் இறந்துவிட்டால், காவல்துறையினர் என்ன செய்வர்" – இந்த அதீத கற்பனைக்கு சொந்தக்காரர், கணவனின் அப்பா.
"பாட்டிலை விற்று காசு பண்ணிக்குவாங்க" – இது கணவன்.
மனைவி மட்டும்,"என் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலைத் தூக்கி போட்டுட்டாங்களே! நாசமாப் போக!" என்றாள். அம்மா அம்மாதான் என்று நினைத்துக் கொண்டேன். குழந்தை கன்னம் குழி விழ அழகாக சிரிக்கிறது. அதற்கு தெரியாது அல்லவா? அதன் உணவு, கடவுளின் பாதுகாப்பிற்காக அப்புறப்படுத்தப்பட்டது.
இவ்வாறு மனிதர்களைக் கவனித்து, ரசித்துக் கொண்டே வந்த எனக்கு, இறைவனின் சந்நிதியை அடைந்தது நினைவேயில்லை. யாரோ ஒரு புண்ணியாத்மா வி.ஐ.பியால், கடவுள் சந்நிதியின் முன், அவரைப் பார்த்துக் கொண்டே இருக்கும்படி வரிசை நின்றுவிட்டது. 5 நிமிஷம், அந்த புனித வி.ஐ.பியின் தரிசனத்திற்குப் பின்பே நான் சந்நிதியிலிருந்து இழுத்து விடப்பட்டேன். திவ்ய தரிசனமாக இருந்தது. திவ்ய தரிசனம் என்று நான் சொன்னதை என் நண்பன் ’திவ்யா தரிசனம்’ என்று மாற்றிச் சொல்லி கிண்டலடித்தது வேறு கதை.
எல்லாம் முடிந்த பிறகு, வெளியே வந்தேன், பெருமூச்சுடன். ஞாபகம் வந்தது.. அம்மா போடச் சொன்ன 101 ரூபாயை உண்டியலில் போடவில்லையே!
"101 ரூபாயை கடவுள் கேட்கவா போகிறார்" சிறு மூளை சொன்னது.
"சாமிகுத்தமாயிடும்டா" பெருமூளை சொன்னது….
மறுபடியும் 50 ரூபாய் டிக்கெட் எடுக்கச் சென்றேன். பக்தி வரிசையில் காத்திருந்தேன். பெருமூளை வென்றது.
Super story. Enjoyed the story telling
really awesome..
really nice i enjoyed very much. while reading this story i felt that iam also be the one in that q” and finally its endless”