நேற்று இன்று நாளை

விஸ்வநாதனுடைய அப்பா இறந்து போன தகவல் கிடைத்ததும், அண்ணா நகரிலிருந்து பொடி நடையாய் வில்லிவாக்கத்துக்குப் புறப்பட்டேன். பொடி நடைக்கு நாற்பது நிமிஷம். எட்டி நடந்தால் அரைமணி நேரம். ஏ.ஸி. காரில் பந்தாவாய்ச் சென்னையைச் சுற்றி வந்த காலமொன்று இருந்தது. பிஸினஸ் டௌனான பிறகு, இப்போதெல்லாம் பஸ் அல்லது பொடி நடைதான்.
பள்ளிக்கூடத்தில் பாடியை வைத்திருந்தார்கள். விஸ்வநாதனுடைய தாத்தா கட்டின பள்ளிக்கூடம். வாரிசு முறைப்படி தாத்தாவுக்குப் பிறகு அப்பா, அப்பாவுக்குப் பிறகு விஸ்வநாதன் இப்போது கரஸ்பாண்டன்ட்.
நான் செழிப்பாயிருந்த காலத்தில் ஏற்பட்ட நட்பு, நொடித்துப் போன பின்னாலும் தொடர்ந்து கொண்டிருப்பது பெரிய விஷயம்.

அப்பாக்களைப் பற்றிய பேச்சு வருகிறபோது ‘எங்கப்பா 93 நட் அவுட்’ என்று விஸ்வநாதன் சிரிப்பான். இப்போது, 94ல் அவுட் ஆனவருடய உடலைச் சுற்றிக் குறைந்த பட்ச சோகந்தான் நிலவியது என்பது, துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளப்போன எனக்கு ஆறுதலாயும் அனுகூலமாயும் இருந்தது. விஸ்வநாதன் என் கையைப்பற்றிக் கூடத்துக்குக் கூட்டிப்போய் அப்பாவின் கால்மாட்டில் நிறுத்தினான். சம்பரதாயமான, குளிரூட்டப்பட்ட கண்ணாடிப் பேழைக்குள்ளே உடல் படுத்திருந்தது.

உயிர் எங்கேயோ.
உயிர் என்று சொல்லுவதா, ஆத்மா என்று சொல்லுவதா?
உயிரோ, ஆத்மாவோ, அது இந்த உடலோடு ஒன்றியிருந்த போது இந்த மனிதரைப் பார்க்க வாய்க்கவேயில்லையே என்கிற வருத்தம், அவருக்காக ப்ரார்த்தித்த போது உறுத்தியது.

வெராண்டாவில் போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாயிருந்தன. என்னை உட்கார்த்தி வைத்து, விஸ்வநாதனும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டான். மற்ற நண்பர்கள் யாரும் இன்னும் வந்து சேரவில்¬லை. கார்களில் வருகிறவர்கள் சவுகரியமாய்த்தான் வருவார்கள்.

கார்கள் வருமுன் கிளம்பிவிட வேண்டும் என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது, ‘எப்படி வந்த?’ என்று அவசியமில்லாத கேள்வியொன்றை முன்வைத்து விஸ்வநாதன், அவசியமில்லாத பொய்யொன்றை என்னிடமிருந்து வர வழைத்தான்.

"ம்? ஆட்டோ."

முந்தைய கேள்வியே உத்தமம் என்கிற மாதிரி அவனுடைய அடுத்த கேள்வி வந்து விழுந்தது.

"ஆட்டோவுக்கு எவ்ளோ கேட்டான்?"

அடுத்த பொய்க்கு உருவம் கொடுப்பதற்குத் தடுமாறிப் போனேன்.
என்னதான் சோகம் தரை தட்டிக் கிடந்தாலும், அடேய் விஸ்வநாதா, சாவு வீட்டில் வைத்து இப்படியெல்லாமா அவுட் ஆஃப் போர்ஷன் கேள்விகள் கேட்பாய்!

‘ஒங்க வாப்பா எப்படியிருக்கார்?’ என்றான் அடுத்தபடியாய். இது நியாயமான கேள்வி.
ஆனாலும் அநியாயமாய் வாப்பாவைப் பற்றிய விசனத்தை எனக்குள் உசுப்பி விட்டு விட்டது. வாப்பாவின் உடல்நிலை ரொம்ப ரொம்ப கவலைக்கிடமாய்த்தானிருக்கிறது என்கிற கவலையை அவனோடு பகிர்ந்து கொண்டேன்.

ரெண்டு மாசமாய்ப் படுத்த படுக்கையாய்க் கிடக்கிற வாப்பாவுக்கு சாப்பாடு செல்லவில்லை. அவ்வப்போது நினைவு தப்பி விடுகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஐந்து வேளைத் தொழுகையைப் பிடிவாதமாய்க் கடைப்பிடித்து வருகிற ஆன்மீகத் தீவிரவாதியான வாப்பா, தொழுகையை¢மறந்து ரெண்டு மாசமாச்சு. வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு மசூதிக்குப் போய் மூணுமாசமாச்சு.

இதுபோன்ற வெளிப்படையான விசனங்களன்றி, விஸ்வ நாதனோடு பகிர்ந்துகொள்ள முடியாத ப்ரத்யேகப் பிரச்சனை யொன்றும் பாறாங்கல்லாய்த் தலைமேல் இறங்கத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தது.

வாப்பா சாமான்யர் அல்ல. பனிரெண்டாயிரம் பென்ஷன் வாங்குகிறவர்! என்னுடைய இன்றைய தரித்திரத்தில், இந்தப் பனிரெண்டாயிரம் பனிரெண்டு கோடி மாதிரி!
நான் திவாலாய்ப் போன ரெண்டு வருஷத்தில் வாப்பாவின் பென்ஷனில்தான் வண்டி ஓடுகிறது என்பது ஒரு பரிதாபமான உண்மை.

வாப்பாவின் உயிர் இன்னும் எத்தனை வாரம், அல்லது எத்தனை நாள் தங்கும் என்று சொல்லவியலாத இறுக்கமான சூழ்நிலை.

வாப்பாவின் உடல்நிலையும் மனநிலையும் மோசமாகுமென்று ஊகித்து, ஆறு மாசத்துக்கு முந்தியே ஒரு செக் புஸ்தகம் முழுக்க வாப்பாவிடம் கையெழுத்தை வாங்கி வைத்துக் கொண்டேன், அதிபுத்திசாலித்தனமாய்.

வாப்பா ப்ரக்ஞையின்றிப் படுத்துக் கிடந்தாலும் ஒண்ணாந் தேதி ஒண்ணாந் தேதி பாங்க்குக்குச் செக் போய்விடும், பனிரெண்டாயிரம் கைக்கு வந்து விடும். இன்றைக்கு தேதி இருபத்தாறு. மாசம் முடிய இன்னும் அஞ்சு நாட்கள்.

முப்பத்தியொண்ணாந் தேதி வரைக்கும் வாப்பா தாக்குப் பிடித்து விட்டாரென்றால், ஒண்ணாந் தேதி செக்கைப் போட்டு முழுசாய்ப் பனிரெண்டாயிரத்தையும் எடுத்து விடலாம். அதற்கு முன்னால் வாப்பாவுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், அவருடைய வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு விடும். நம்ம செயல்பாடுகளும் முடங்கிவிடும். அல்லா, என்ன கேவலமான மனப்போக்கு இது! இந்த மாதிரி இழிவான சிந்தனையைத்தான் ஜெயகாந்தன் சொல்லுவார் நபும்சகத்தனம் என்று.

விஸ்நாதனின் பள்ளிக்கூட ஆசிரியர்கள் மறைவாய்ட் டீ குடித்துக் கொண்டிருந்தார்கள்.  உறவினர்கள் வந்து சேர ஆரம்பித்திருந்தார்கள். நண்பர்கள் யாரும் இன்னும் வரவில்லை. கார்கள் வருமுன்பு இடத்தைக் காலி பண்ணி விட வேண்டுமென்று நான் எழும்ப முனைந்த போது, திரும்பவும் விஸ்வநாதன் பேச்சில் பிடித்துக் கொண்டான். ‘அப்பாவோட கடேசி ஆசைய நிறைவேத்தி வச்சுட்டேம்ப்பா’ என்றான்.

"அவரோட பாடிய இந்த ஸ்கூல்ல கொண்டு வந்து வக்யணும்னு ஆசப்பட்டார். அதே மாதிரி கொண்டுவந்து வச்சாச்சு. எலக்ட்ரிக் க்ரிமேஷன் பண்ணனும்னு சொன்னார். அதுக்கும் எற்பாடு பண்ணியாச்சு."

"ம்."

"நீங்க முஸ்லிம்ஸ் எரிக்கமாட்டீங்க, பொதச்சிருவீங்க இல்ல?"

"ஆமா."

இவனுக்கு ஆறுதல் சொல்லக் கடமைப்பட்ட நான், இவனுடைய நீள வாக்கியங்களுக்கு ஓரெழுத்து ஈரெழுத்தில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிற முரண்பாடு என்னை உறுத்திக் கொண்டிருந்த போது, திரும்பவும் விஸ்வநாதன் தொடர்ந்தான்.

"காலம் எவ்ளோ வேகமாப் போகுது பாத்தியா! நாம சின்னப் பசங்களாயிருந்தப்ப நம்ம தாத்தா பாட்டி போய்ச் சேந்துட்டாங்க. நாம பெரியவங்களாகிக் கல்யாணமாகிக் கொழந்த குட்டி, குடும்பம்னு ஆனப்புறம் நம்ம அப்பா அம்மா ஒவ்வொருத்தராப் போக ஆரம்பிச்சுட்டாங்க. நம்ம புள்ளைங்களப் படிக்க வச்சிக் கல்யாணம் பண்ணிக்குடுத்து அவங்க ஸெட்டில் ஆயிருவாங்க. நீயும் நானும் பிறகு பேரன் பேத்திகளப் பாப்போம். அதுக்கப்புறம் நமக்கும் டைம் வந்துரும். நாட்கள் விர்ர்ர்னு ஓடிரும். நாம ரெடியாயிருக்கணும். நா ரெடி, நீ ரெடியா?"

அப்பட்டமாய் ஓர் உண்மையை எடுத்து வைத்த விஸ்வநாதனின் வார்த்தைகளில் கொஞ்சம் அதிர்ந்தேன். இன்னும் சில வருஷங்களில் இதேபோலவொரு கண்ணாடிப் பெட்டிக்குள் இந்த விஸ்வநாதன் இதே பள்ளிக்கூட அறையில் படுத்திருக்க, அவனைப் பார்க்க நான் வருவேன்.

அல்லது, சலனங்களிழந்து நான் படுத்திருக்க, என்னைப் பார்க்க விஸ்வநாதன் வருவானா!
‘என்ன, சத்தத்தையே காணல, பயந்துட்டியா?’ என்று இடித்தான்.
‘பயந்தா முடியுமா? ரெடியாயிர வேண்டியதுதான்’ என்றேன் நான்.

"அம்மாவ அனுப்பி வச்சாச்சு, வாப்பாவயும் அனுப்பி வச்சிட்டு ரெடியாயிர வேண்டியது தான்."

வாப்பாவை அனுப்பி வைப்பது பற்றிய நினைப்பு வந்தபோது, விரைவில் நேரவிருந்த அந்த இழப்பின் பலமுனைத் தாக்குதல்கள் என்னைக் காயப்படுத்தவும் கலவரப்படுத்தவும் முனைந்தன.

சரி, இதற்குமேல் இந்த இடத்தில் தரித்திருக்க இயலாது என்று நான் உணரத்தலைப்பட்டபோது ரெண்டு கார்களில் விஸ்வநாதனுடையவும் என்னுடையவும் சிநேகிதர்கள் வந்து இறங்குவது தெரிந்தது. ‘கொஞ்சம் இரு, வர்றேன்’ என்று எழுந்து விஸ்வநாதன் கார்களை நோக்கி நடந்தான். நானும் எழுந்து கொண்டேன்.

சாவு வீட்டிலிருந்து கிளம்புகிற போது சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டுவிட வேண்டுமென்று இஸ்லாத்தில் இல்லை யென்றாலும், அது தான் முறை என்று ஹிந்து நண்பர்கள் சொல்லி அறிந்திருக்கிறேன். இன்றைக்கு அந்த நடைமுறையைக் கடைப்பிடிக்கலாம். நண்பர்களின் கண்களில் பட்டுவிடுவதற்கு முன்னால் விச்சுவிடம் சொல்லிக் கொள்ளாமலேயே கழண்டு கொள்ள வேண்டும்.

போகிற போக்கில், உள் அறையில் இருந்த கண்ணாடிப் பேழையில் பார்வை பதிந்தது. உள்ளே சில பெண்கள் மட்டும், தங்களுக்குள் பேசிக் கொண்டு, சடலத்தின் மேல் கவனமில்லாமல் இருந்தார்கள்.

இன்னொருமுறை இறந்தவர் முகத்தைப் பார்த்துக் கொள்வோம் என்று உள்ளே எட்டெடுத்து வைத்த போது, இங்கே கிடத்தப்பட்டிருக்கிற இந்த உடலுக்கும், வீட்டிலே படுத்திருக்கிற வாப்பாவுக்கும் அப்படியொன்றும் பெரிய வித்யாசமில்லை என்று உணர்ந்தேன். இந்த உடலில் உயிர் சுத்தமாய் இல்லை. வாப்பாவின் உடலில் உயிர் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.

பாக்கெட் டைரியையும் பேனாவையும் வெளியே எடுத்தேன். யாரும் பார்க்கவில்லையென்று உறுதி செய்து கொண்டு, ஃப்ரீஸர் பாக்ஸின் மேலே எழுதியிருந்த அந்த அமரர் சேவை நிறுவனத்தின் ஃபோன் நம்பரைக் குறித்துக் கொண்டு அங்கிருந்து அகன்றேன்.

(ஆனந்த விகடன், 27.02.2008)
(இன்று அவர்கள்; நாளை நாம்)

About The Author

1 Comment

  1. கீதா

    யதார்த்தம் பாசபந்தங்களை பல சமயங்களில் வென்றுவிடுகிறது. இயலாமை ஒரு மகனை என்னென்னவெல்லாம் எண்ணச் செய்கிறது! அழுத்தமான உணர்வுகளை அடக்கிய கதை.

Comments are closed.