மூலம் : Freedon and Jeff
கொளுத்தும் கோடையைத் தாங்க முடியாமால் நானும் சுதந்திராவும் மர நிழலைத் தேடினோம். மதி மயக்கும் மகிழம்பூ மரத்தடியில் நான் நின்றதும் சுதந்திராவும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள என் மேல் சாய்ந்து கொண்டாள். சுதந்திரா என்னுடன் இணைந்த நாளை எண்ணிப் பார்த்தேன்.
10 ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு கோடையில்தான் சிறகொடிந்த பறவையாய் என்னிடம் வந்தாள். சிறகுகளில் 4 இடங்களில் காயங்கள். 1998-லிருந்து என் குழந்தையாகிப் போனவள் அறுவை சிகிச்சைக்குப் பின்னும் சிறகுகளை விரித்துப் பறக்க முயலவில்லை.
இப்போதுபோல் இருக்கிறது அவள் என்னிடம் வந்தது. நிற்கக் கூட முடியாத நிலையில் என்னிடம் வந்து சேர்ந்தவளை மருத்துவரிடம் காட்டி குணப்படுத்த முயன்றேன். ஒரு சிறு வைக்கோல் மெத்தை செய்து, அதன்மேல் செய்தித்தாட்களைப் பரப்பி அவளைப் படுக்க வைத்தனர் மருத்துவமனையில். அன்று முதல் நான் அவளுடனும் அவள் என்னுடனுமாய் நாட்களை நிரப்புகிறோம்.
வாழ்வின் உன்னதத்தை, வாழ வேண்டிய நிர்ப்பந்ததை அவளுக்கு டியூப் வழியே உணவுடன் ஊட்டினேன், அவளின் அழகிய பிரவுன் நிறக் கண்களைப் பார்த்தபடியே.
நாலைந்து வாரங்கள் இப்படியே போக, அவளிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. என்னிடம் வந்தபோதே அப்படியே விட்டிருந்தாலாவது இயற்கை தன் கடமையைச் செய்திருக்கும். அதை விட்டு விட்டு மலர்ப் படுக்கை, மருந்துகள் என தந்தும் மரணம் அவளை வரும் வெள்ளிக்கிழமை அழைத்துக் கொள்ளப் போகிறது என மருத்துவர் கூற, இடிந்து போனேன். இருப்பினும் வியாழக்கிழமை மதியம் என்னுள் சிறு நம்பிக்கை, இப்போது போய் அவளைப் பார்த்தாலென்ன என்று.
வார்த்தைகளற்றுப் போய் அவளருகே செல்ல, என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. செவ்வானச் சீரழகை ரசிக்க, பறக்க முடியாவிட்டாலும் சற்றே தெம்புடன் சுதந்திரா நின்றாள். வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்போம் வா என்பது போலிருந்தது அவள் பார்வை.
அவளால் பறக்க முடியாது என்பதால் என் கைகளில் நிறுத்தி, தோளோடு சேர்த்து அணைப்பது போல் சாய்ந்து நிற்கப் பழக்கினேன். நானும் அவளும் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளில் பணியாற்றத் தொடங்கினோம்.
எங்களைப் பற்றி நாளிதழ்கள், ரேடியோ, டிவி எனப் பல ஊடகங்களிலும் செய்தி வந்தது. Miracle Pets என்ற தலைப்பில் ஒரு டி.வி. நிகழ்ச்சியும் வந்தது.
வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாய் எங்கு பார்த்தாலும் பூக்களும் மொட்டுக்களுமாய் இருக்க, என் மனமோ வாடிய சருகாய் வரவேற்றது, புத்தாண்டை. காரணம் non-hodgkins lymphoma என்ற நோயின் மூன்றாம் நிலையில் இருந்தேன். முடி உதிர்ந்து, உடல் இளைத்து, ஒடுங்கிப் போனேன். வேண்டிய தெம்பு வருகையில் சுதந்திராவை நகர் உலா அழைத்துப் போனேன். அவளும் என்னுடன் இணைந்து மரணம் என்னும் அரக்கனுக்கெதிராய் அலுக்காமல் போராடினாள்.
நவம்பர் 2000-ல் நாட்கள் நரகமாய் நகர, Thanks giving நாளுக்கு அடுத்த நாள் என் கடைசி செக்கப். 8 சுற்று மருந்துகள் உண்ட பின்னும் கேன்சர் சரியாகவில்லை என்றால், கடைசியாக stem cell மாற்றும் முறையை உபயோகிப்பது என எண்ணிக் கொண்டேன். டெஸ்ட் எடுத்துவிட்டு முடிவுகளுக்கு திங்கட்கிழமை வரச் சொன்னார்கள். திங்களும் வந்தது. கேன்சர் கிலோ என்ன விலை என்பதாய் என்னை விட்டுப் போய்விட்டது. நம்ப முடியவில்லை, நம்ப முடியவில்லை என பாடத் தோன்றியது.
மகிழ்ச்சி என்னுள் தாண்டவமாட சுதந்திராவைக் காணப் போனேன். அவளையும் அழைத்துக் கொண்டு மலை உச்சிக்குப் போனேன். என் முகக் குறிப்பிலேயே என்னை அறிந்து கொண்டவள், அவளின் ஒடிந்து போன சிறகுகளால் என்னை அணைத்துக் கொண்டு என் மூக்கை நிரடினாள். டைட்டானிக் படத்தின் ஜேக், ரோஸ் போல எவ்வளவு நேரம் நின்றோம் எனத் தெரியவில்லை. மீண்டும் அவளும் நானுமாய் நாட்களை நிரப்பத் தொடங்கினோம். மனம், உடல் வலுவிழந்தவர்களைக் கனிவுடன் நோக்க சுதந்திரா பழகிக் கொண்டாள்.
ஒரு நாள் கால் ஊனமுற்ற ஒருவர் எங்களைத் தேடி வந்தார். சுதந்திராவை சிறிது நேரம் அவரின் தோள்களில் தாங்கி கொள்ளச் சொன்னேன். அவள்மேல் நம்பிக்கை வைத்து நான் சொன்னதைச் செய்தார். அவளின் சக்தி அவரினுள் ஊடுருவதை அவரால் உணர முடிந்தது. இது போல சில, பல நிகழ்வுகள் எங்களுடன் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன, எங்கள் நேசிப்பின் நிதர்சனத்தை உணர்த்திக் கொண்டே!”
மிக அருமை. ஒடிந்த உள்ளங்களுக்கு நம்பிக்கை ஊட்டும் என்பது நிதர்சம் இந்த நேசிப்பின் நிதர்சனம் “.”
கவிதா, அருமையான கதை