நேசம்

"அரவிந்த்… சீனுவை எங்கப்பா காணோம்?" – டீப் பையனை நோக்கிக் கேட்டவாறே டேபிளின் மேல் வைக்கப்பட்ட வடையைக் கொஞ்சகொஞ்சமாய்ப் பிய்த்துத் தின்ன ஆரம்பித்தான்.

ஏனோ உள்ளே இறங்க மறுத்தது. சீனு இருந்தால் இந்நேரம் ஓடிவந்திருக்கும். வாலை வேகமாய் ஆட்டிக்கொண்டே பிய்த்துக் போடும் வடையை ‘லபக்’ ‘லபக்’ கென்று கவ்விக்கொண்டு மீண்டும் மீண்டும் நிமிர்ந்து நோக்கும்.

அதற்குப் போடாமல் ஒரு நாளும் இவன் தனியே தின்றதில்லை. அந்த ஆபீசுக்கு மாறுதலில், வந்து கடந்த பத்து நாட்களாய் இது நிகழ்கிறது. வரிசையாய்ப் பலர் அமர்ந்திருக்கும் ஹாலில், நேரே இவனிடம்தான் முதலில் வந்தது. அதனாலேயே இவனுக்கு அதை ரொம்பவும் பிடித்துப்போனது. தினமும் தனியாக இன்னொரு வடை வாங்க ஆரம்பித்தான். அதற்குப் போட இவன் தின்ன என்று மாறி மாறி ஒரு பத்து நிமிடம் அப்படிக் கழியும். காலை பதினோரு மணிக்கு மேலான நிகழ்வு அது. வடை, தீர்ந்து போய், எண்ணெய் படர்ந்த பேப்பரைக் கசக்கி, குப்பைத் தொட்டிகளில் வீசியதும் அது போய்விடும்.

ஓரொரு நாள் அரவிந்த் வெறும் டீயோடு வந்து நிற்கையில் நிலைமை புரியாது காலை வந்து சுரண்டும் கொஞ்சம் டீயைத் தரையில் ஊற்றுவான் இவன். நாக்கால் நக்கி உறிஞ்சிவிட்டு அது பாட்டுக்குப் போய்விடும்.

"அவனுக்கென்னப்பா, டபுள் இஞ்ஜின்… ரெண்டு சம்பளக்காரன்… அதான் தினமும் நாய்க்கு வடை போடுறான்."

கூட ஒரு வடை வாங்கியதிலும் அந்த ரெண்டு சம்பளம் என்பதை வலிய சுட்டிக்காட்டி ஆதங்கப்பட்டார்கள் அவர்கள்.

சீனுவின் அன்பு கலந்த பார்வையை அவர்கள் அறிய மாட்டார்கள். அதன் கண்களில் ஜொலிக்கும் சிநேகத்தை உணரமாட்டார்கள். இவனால்தான் அது வளர்ந்து பெரிதானது.

தினமும் இவன் சாப்பிடுகையில் காலடியில் வந்து அமரும். கொண்டு வரும் தயில் சாதத்தில் கொஞ்சம் அதற்குப் போகும். ஊறுகாயைக் கூடப் பிய்த்துப் போடுவான். எதுவானாலும் சாப்பிடும். மறுப்பு என்பதேயில்லை.

"என்னப்பா இது… சாப்பிட நேரத்துல நாயைக் கூப்பிட்டு நடு வீட்ல வச்சிட்டு… சங்கடப்பட்டார்கள்".

டேபிள் மாறிப்போய் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

"நல்ல வேளை.. சீனிவாசன்னு நம்ம ஆபீஸ்ல யாரும் இல்லை… இல்லைன்னா… சீனு சீனுன்னு இதுக்கு நீ வச்ச பெயரை மாத்த வேண்டியிருக்கும்."

அழகான அந்தப்பெயர் டக்கென்று மனதில் உதித்தது. சாதுவான, சமத்துப் பையனின் பெயர் என்று தோன்றவே "சீனு" என்று அன்பொழுக அழைக்க ஆரம்பித்தான் இவன்.

"என்ன சுந்தர் இது… ஆபீஸ் டயத்தல ஆபீசுக்குள்ளெல்லாம் நாயை விட்டுக்கிட்டு அசிங்கமாயில்லை? ஒரு டெக்கோரம் வேண்டாமா?"மேனேஜர் தியாகராஜன்கூட சங்கடப்படத்தான் செய்தார். அலுத்துக்கொண்டார்.

"சாரி.. ப்ளீஸ்"… என்றான் கெஞ்சும் பாவனையில், அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. என்ன தோன்றியதோ? இவன் மூஞ்சியைப் பார்த்துவிட்டு பேசாமல் இருந்துவிட்டார்.

சீனு எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வாட்ச்மேன் பாண்டியைக் கேட்டபோது அவனுக்கும் தெரியவில்லை.

ஊருக்கு ஒதுக்குப்புறமாய் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது அந்த இயந்திரப் பணிமனை அதன் நிர்வாக அலுவலகத்தையும் இணைத்துக்கொண்டு திடீரென ஒரு நாள் தென்பட்டது அது. பக்கத்தில் இருக்கும் குக்கிராமத்தில் இருந்து வழி தப்பி வந்திருக்கலாம் என்று சொன்னார்கள்.

சரசரவென்று டயர் தேயத்தேய, பேய்த் தனமாய் பறக்கும் எதிர் தார்ச்சாலையில் கனரக வாகனங்களைத் தவிர்த்து, சர்வ சாதாரணமாய்க் கண் இமைக்கும் நேர ஆபத்தைத் தாண்டி, எப்படி அது அங்கே நுழைந்தது என்பது வியப்பாய்த் தானிருந்தது.

மிகப் பரந்த நிலப்பரப்பு வரையறை கொண்ட அந்த பணிமனையின் சுற்று வளாகத்தில் வளைய வந்து கொண்டிருக்கும் அது. அடர்ந்த சோலையைப் போன்று இதமாகக் காட்சி தரும் அப்பகுதி – அதற்கு ரொம்பவும் பிடித்திருக்க வேண்டும்.

"காவலுக்காச்சு சார்… ராத்திரி எனக்கும் ஒரு துணை வேணுமில்லை…" என்றான் வாட்ச்மேன் பாண்டி.

அருகே விவசாயக் கல்லூரியைச் சார்ந்த பரந்த பச்சை பசேல் வயல்வெளிகள். அடர்ந்த நெற்கதிர்களைத் தழுவிப் புறப்பட்டு வரும் இதமான மென்காற்று. அதனைத் துல்லியமாய் உணரவைக்கும் அமைதி. பறவைகளின் விதவிதமான கிறீச்சொலிகள், இவையனைத்தும் மனதிற்கு மிகவும் ரம்மியமானவை.

மரத்திலிருந்து அவ்வப்போது உதிரும். இலைகளையும் பூக்களையும் ஓடி விரட்டிக்கொண்டிருக்கும் சீனு. அது ஒரு விளையாட்டு அதற்கு. வேகவேகமாய் வீசும் காற்றில் கோரைப் புற்களின் பலமான தலையாட்டலில், அதைக் கூர்மையாய் நோக்கும் தற்காப்பு உணர்ச்சியில், அதன் முகத்தைப் பார்த்தாலே ஒரு நிறைவு திருப்தி.

"என்னப்பா உன்னோட சீனுவைக் காணலை"

பாத்ரூம் போய்விட்டு வந்த ராகவன் கேட்டான்.

"தெரியலையே அண்ணாச்சி…" என்றவாறே எழுந்தான் இவன். வேலை ஓடவில்லை. கவனம் பூராவும் சீனுவைப் பற்றியே இருந்தது. வளாகத்தை ஒருமுறை சுற்றிவந்தான். எங்கும் அது தென்படவில்லை.

வந்தது போலவே போய்விட்டதோ.. !

மதியம் சாப்பிட உட்கார்ந்தபோதும், மாலை நான்கு மணியைப் போல் டீ சாப்பிடும் போதும், அதன் நினைப்பே ஆக்கிரமித்திருந்தது.

பொழுது சாய்ந்து, அலுவலக நேரம் முடிந்து கிளம்பிய வேளையில் அந்த சத்தம் கேட்டது.

"சுந்தர் சார்… சுந்தர் சார்"… கத்திக் கொண்டே ஓடி வந்தான் வாட்ச்மேன் பாண்டி.

"என்னப்பா… என்னாச்சு?"

பதறியவாறே வினவினான் இவன்

"வாங்க… வாங்க.."

கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக்கொண்டேபோனான். அவன் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியது இவர்களைப் பார்த்து எல்லோரும் எழுந்தார்கள். பணிமனைப் பகுதிபோக, பக்கவாட்டில் சும்மாய்க் கிடந்த மீதி நிலப்பகுதியில், புதர்மண்டிய கோரைப் புற்களும். கருவேலஞ் செடிகளும் அடர்ந்து கிடந்த மோட்டார் ரூம் இருக்கும் இடத்தை நோக்கி ஓடினான் வாட்ச்மேன் பாண்டி. ஒன்றும் புரியாமல் பின்னாலேயே ஓடினான் இவனும்.

"என்னசார்… கொடுமையிது?" என்றவாறே ஓரிடத்தில் சடக்கென்று நின்றவன். "அங்கே பாருங்க?"என்றான்.

அவன் காண்பித்த இடத்தை நோக்கிய இவனின் நெஞ்சு திக் கென்று "சீனு" என்று வாய் தானாகவே முனகியது.

காலைச் சுற்றியிருந்த பாம்பை கவ்விப்பிடித்த நிலையில் நுரை தள்ளிப் போய் அங்கே சாய்ந்து கிடந்தது அது. பாம்பின் உடம்பு பூராவும் பரவிக் கிடந்த பற்காயங்கள் திட்டுத் திட்டாக ரத்தச் சிவப்பில். அதோடு நிகழ்ந்த கடும் போராட்டத்தை உணர்த்தியது.

"நாந்தான் சொன்னனேய்யா.. பொதர் மண்டிக்கிடக்குது… வெட்டி சுத்தப்படுத்து… சுத்தப்படுத்துன்னு புலம்பினேனே? எங்கே கேட்ட நீ? இப்போ? நமக்கு பதிலா, அது பலியாயிடுச்சு… அதானே? ஆபீஸ் ஆளுகைப் போட்டுப் பார்த்தாத்தான் நீ உஷாராவே போலிருக்கு."

மானேஜர் தியாகராஜன் காட்டுக்கத்து கத்தினார். அவரின் பயம் புலப்பட்டது அப்படி, ஒவ்வொருவராய் வந்தார்கள்… பார்த்தார்கள்… போனார்கள்.

வெகுநேரம் அப்படியே நின்று கொண்டிருந்தான் இவன்.

"என்னப்பா… நாய் செத்ததுக்கு இப்படி ஆயிட்டான்?"

"என்ன எழவோ? அவுரு, ஆளே ஒரு புதுமையா இருக்காரு சுந்தருக்கு குழந்தைக்கிடையாது தெரியுமோ? நோ இஷ்யூஸ். ஒரு வேளை அந்த வருத்தமாய் இருக்கலாம்?" சொல்லியவாறே சிரித்துக்கொண்டே போனார்கள் அவர்கள்.

அப்போது இவன் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் இறங்கியது கீழே. அதை அவர்கள் பார்த்திருக்க நியாயமில்லை.

(நினைவுத் தடங்கள் – மின்னூலில் இருந்து)

To buy the EBook, Please click here

About The Author

2 Comments

  1. sundar

    னிலா சாரல் கதைக்கு கெக்கவா வெனும் சூபெர்

Comments are closed.