தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய்கள் -1/4 k.g,
சிகப்பு மிளகாய்கள் – பத்து
மஞ்சள்பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கடுகு – ஒன்றரை தேக்கரண்டி
புளித்த கெட்டித் தயிர் – அரை லிட்டர்
பச்சை மிளகாய் – ஆறு, எண்ணெயும், கடுகும் தாளிப்பதற்கு
செய்முறை :
நெல்லிக்காய்களை நன்றாகக் கழுவி துணியில் உலர வைத்து ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும். புளித்த கெட்டித் தயிருடன் அரை கப் நீர் சேர்த்து நன்றாகக் கடைந்து கொள்ளவும். பச்சை மிளகாயைக் கழுவி நீள வாக்கில் பிளந்து கொள்ளவும்.
சிகப்பு மிளகாய், கடுகு, மஞ்சள் தூள் ஒன்றாகப் பொடித்து சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு கடைந்த மோரில் கலந்து கொள்ளவும். நெல்லிக்காய்களை சூடு ஆறிய பின் அந்த ஊறுகாயுடன் கலந்து விடவும். கீறிய பச்சை மிளகாயை அந்த ஊறுகாயுடன் கலந்து விடவும்.
இரண்டு, மூன்று நாட்களில் புளிப்பும், உப்பும் நிறைந்த ஊறுகாய் தயார்.
ஊறுகாய் ரசம், இட்லி, தோசையுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடவும், சாதத்துடன் கலந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும். நெல்லிக்காய்களை தயிர் சாதம், சாம்பார் சாதத்துடனும் சாப்பிடலாம். நான்கு நாட்கள் வெளியே வைத்து சாப்பிட்ட பிறகு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து ஒரு மாதம் வரை சாப்பிடலாம்.
பின் குறிப்பு : நெல்லிக்காய்களை துருவி வெயிலில் உலர்த்தி பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் நாம் உபயோகிக்கலாம். நெல்லிக்காய்களை பொடியாக நறுக்கி சிறு துண்டுகளாக்கி உலரவைத்தும் பயன்படுத்தலாம். நான்கு கைப்பிடி நெல்லிக்காய்களுக்கு ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து சிறிது மஞ்சள் பொடி சேர்த்து குலுக்கி வைத்தால் நீர் விட்டுக் கொள்ளும். நான்கைந்து நாட்கள் கலந்து விட்டு வெயிலில் வைத்து குலுக்கி விட்டு பக்குவப்படுத்திய பிறகு குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவையான பொழுது ஊறுகாய் தயாரிக்கலாம்.
“