(மூலம் : லூக் ஹாத்தோர்ன்)
நிற்க! நீங்கள் படிக்கவிருப்பது பிரபல ஃபிரஞ்சு மன்னன் மாவீரன் நெப்போலியன் பற்றி அல்ல. நெப்போலியன் ஹில் என்ற எழுத்தாளரைப் பற்றி.
"திங் அண்ட் க்ரோ ரிச்" (Think and Grow Rich) என்பது 1937ல் வெளிவந்த புத்தகம் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். ஐம்பது வருடங்களில் கிட்டத்தட்ட இருநூறு கோடி புத்தகங்கள் விற்கப்பட்டன. அந்தப் புத்தகத்தை எழுதியவர்தான் நெப்போலியன் ஹில். "தி லா ஆஃப் ஸக்ஸஸ்" என்ற புத்தகமும் இவருடையதே.
தற்காலத்தில் கவனித்தீர்களென்றால் "வாழ்க்கையில் முன்னேற எட்டு வழிகள்!", "வியாபாரத்தில் லாபம் சம்பாதிப்பது எப்படி?" என்று ஏராளமான புத்தகங்களை நீங்கள் பார்க்கலாம். ஒருவகையில், இப்படிப்பட்ட சுயமுன்னேற்ற புத்தகங்களின் தந்தை ஆகிறார் நெப்போலியன் ஹில்.
ஹில் 1883ல் விர்ஜினியாவில் (அமெரிக்காவின் ஒரு மாநிலம்) பரம ஏழையாக பிறந்தவர். ஒரு சாதாரண பத்திரிகையாளராக வேலை பார்த்துக்கொண்டே, வாழ்க்கையில் முன்னேற்றம் அளிக்கும் மந்திரங்களை கண்டுபிடித்தார். எதிலும் வெற்றி பெற வழிகளை அறிந்துகொண்டார்.
எப்படி இது சாத்தியமானது? வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்களையெல்லாம் தேடித் தேடிச் சென்று பேட்டி எடுத்தார் மனிதர். எடிசன், க்ரஹம் பெல் மற்றும் ஹென்றி ஃபார்ட் உள்பட சில அமெரிக்க ஜனாதிபதிகளும் இந்தப் பட்டியலில் அடக்கம். இதைப் போன்று பேட்டி எடுப்பதையே தொழிலாக வைத்திருந்தார் ஹில், கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு.
ஒருவர் அறிவாளியாக இருந்தால் வெற்றி நிச்சயமா? அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் அறிவாளிகள் என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால், தயவு செய்து எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.
ஒரு வியாபாரம் ஆரம்பித்து வெற்றி பெற ஏன் அறிவாளியாக இருக்க வேண்டும்? உலகில் திறமைசாலிகள் எத்தனையோ பேர் வாழ்க்கையை லக்ஷ்மியின் அனுக்ரஹம் இன்றியே ஓட்டியிருக்கிறார்கள். எத்தனையோ சாதாரண மனிதர்கள் அபூர்வ வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
ஒரு சிறிய உதாரணம். டி.சி (Direct Current, அதாவது சீரான மின்சாரம், பேட்டரியிலிருந்து வருவது) கண்டுபிடித்தவர் எடிசன். ஏ.சி (Alternating Current, அதாவது நம் வீடுகளில் இப்பொழுது உபயோகிப்பது) கண்டுபிடித்தவர் டெஸ்லா. அக்காலங்களில் இருவருக்கும் போட்டி, எந்த மின்சாரத்தை உலகம் உபயோகிக்க வேண்டும் என்று. வென்றது டெஸ்லா. டெஸ்லா அதீத திறமை கொண்டவர். டி.சி மின்சாரத்தை விட அதிக பயன் கொண்ட கொண்ட ஏ.சியைக் கண்டுபிடித்தவர். இருந்தும், வாழ்க்கையில் செல்வம் சேர்க்காது இறந்து போனார்.
எடிசன் வியாபாரத் திறன் கொண்ட ஆசாமி. டெஸ்லாவின் அளவிற்கு அறிவாளியாக இல்லாத போதும், விடாமுயற்சியால் வாழ்க்கையில் வெற்றி பெற்றார். மனிதர்களுக்கு உபயோகப்படும் பொருட்களை அவர்கள் விரும்பும் வடிவத்தில் கொடுத்தார். இதனால், செல்வம் குவிந்தது.
சரி, மீண்டும் ஹில்லை கவனிப்போம்.
அண்ட்ரூ கார்னெகி (உங்களுக்கு டேல் கார்னெகி என்பரைத் தெரியுமா? தெரியாதென்றால் நன்று! தெரிந்திருந்தால், இருவருக்கும் சம்பந்தம் கிடையாது!) என்பவர் தான் நெப்போலியன் ஹில்லிடம் இப்படி பேட்டி எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். இருபது வருடங்களுக்கு அதையே செய்யவேண்டும். ஹில் எவ்வளவு சம்பளம் பெற்றார்? பைசா கிடையாது. ஆமாம், சல்லிக் காசு கிடையாது. ஆனால், பிரதிபலன் கிடைத்தது.
அண்ட்ரூ கார்னெகி என்பவர் அன்றைய உலகின் பிரபல ஆசாமி. பல நூலகங்களை ஏற்படுத்தியவர். ஹில் அவர்களுக்கு அத்தனை புத்தகங்களையும் படிப்பதற்கு அனுமதி உண்டு. அது மட்டுமன்றி பேட்டியாளர்களை அவரே ஹில்லுடன் அறிமுகப்படுத்தி வைப்பாராம். அதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் அந்தப் புத்தகத்தை அவர் எழுதினார். இன்னும் அதன் மூலமாக அவர் குடும்பத்திற்கு பணம் வந்து கொண்டிருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
சரி, அவர் புத்தகத்தில் உள்ளவற்றை சுருக்கமாகச் சொல்ல முடியுமா? ஓரளவிற்கு சொல்லலாம்.
1) நோக்கம் – எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவாக இருத்தல் அவசியம்.
2) திறன் – நற்திறன் கொண்டவர்களை குழுவில் வைத்துக் கொள்வது முக்கியம்.
3) வசீகரம் – மக்களை வசீகரத் தோற்றத்தால் கவரலாம்.
4) நம்பிக்கை – இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
5) எதிர்பார்ப்பை மீறுதல் – மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும்.
6) விடாமுயற்சி – விடாது முயற்சித்தால் மாமலையும் ஓர் கடுகாம்.
7) சுய கட்டுப்பாடு – சுய கட்டுப்பாடு அவசியம்.
8) கற்றுக் கொள்ளுதல் – நம் வெற்றி தோல்விகளிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
9) மையப்பார்வை – பாதையின் மீது மையப்பார்வை அவசியம்.
10) நற்பழக்கம் – தீய பழக்கங்களை விட்டொழித்து, நல்லவைகளைப் பின்பற்றுதல்.
அவருடைய முழு புத்தகத்தின் அலசலையும் இங்கே கொடுப்பது சாத்தியமாகாது. விரிவான ஆலோசனைகளுக்கு புத்தகத்தைப் படிக்கவும்.
வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ விருப்பங்கள் உள்ளன. அவை நம் வாழ்க்கையைத் தேர்வு செய்கின்றனவா அல்லது நாம் அவைகளைத் தேர்வு செய்கின்றோமா என்பதே முக்கியம். சின்ன சின்ன விஷயங்களும் இதில் அடக்கம்.
உதாரணத்திற்கு, உங்களில் எத்தனையோ பேர் வலைப்பதிவு செய்கிறீர்கள். ஆனால், யாரெல்லாம் அதைப் படிக்கிறார்கள்? உங்கள் வலைப்பதிவை பிரபலமாக்க நீங்கள் செய்யும் முயற்சி என்ன? சற்றே அதிக நேரம்தான் தேவைப்படும். அந்த அதிக தூரத்தை கடக்க முடியாதா? சிகரெட் பழக்கத்தை விட முயற்சிப்போர், ஒவ்வொரு நாளும் ஒரு சிகரெட்டைக் குறைத்துக் கொள்ள முடியாதா?
நெப்போலியனின் ஆலோசனைகளைத் தொடர்ந்து நம் வாழ்வில் கடைபிடித்து நம் வாழ்க்கையை நாம் தேர்வு செய்வோமாக.
சூப்பர்
sumaar
மிக்க நன்ரி நல்ல ஆலொசனை தொடரவென்டும்…
சுபெர்ப்
It is useful to our life. But, you have to explain more encourage points to youth generation. few notes are need to this page. Thank You For your Valuable Service.
அருமையான தகவல்களை மக்களுக்கு கொடுத்துள்ளீற்கள் மிக்க நன்றி.
1) நோக்கம் – எதை நோக்கிச் செல்கிறோம் என்பதில் தெளிவாக இருத்தல் அவசியம்.
2) திறன் – நற்திறன் கொண்டவர்களை குழுவில் வைத்துக் கொள்வது முக்கியம்.
3) வசீகரம் – மக்களை வசீகரத் தோற்றத்தால் கவரலாம்.
4) நம்பிக்கை – இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை இருத்தல் வேண்டும்.
5) எதிர்பார்ப்பை மீறுதல் – மற்றவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பதை விட அதிகம் செய்ய வேண்டும்.
6) விடாமுயற்சி – விடாது முயற்சித்தால் மாமலையும் ஓர் கடுகாம்.
7) சுய கட்டுப்பாடு – சுய கட்டுப்பாடு அவசியம்.
8) கற்றுக் கொள்ளுதல் – நம் வெற்றி தோல்விகளிலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
9) மையப்பார்வை – பாதையின் மீது மையப்பார்வை அவசியம்.
10) நற்பழக்கம் – தீய பழக்கங்களை விட்டொழித்து, நல்லவைகளைப் பின்பற்றுதல்