நெடுஞ்சாலை – இசை விமர்சனம்

‘சில்லுனு ஒரு காதல்’ மூலம் அறிமுகமான இயக்குநர் கிருஷ்ணாவின் அடுத்த படம் ‘நெடுஞ்சாலை’. இசை சி.சத்யா. முதல் படத்தில் இசை விருந்து வழங்கிய இயக்குநரின் இந்தப் படத்தில் பாடல்கள் எப்படி இருக்கின்றன எனப் பார்ப்போம்.

நண்டூருது நரி ஊருது

வீணையின் மீட்டல்களுடன் தொடங்கும் பாடல், பின்னர் நம் ஊர் வாத்தியத்திற்கு மாறிக் கலக்கல் கிராமத்துப் பாடலாகக் காதில் விழுகிறது. பழனியம்மாள் – சின்னா இணைந்து பாடியிருக்கிறார்கள். வார்த்தைகளை இழுத்துச் சட்டென முடிக்கும் விதம் அருமை! "ஏலே… ஏலே…" என்று திருநெல்வேலி வட்டார வழக்கையும் நினைவுபடுத்துகிறது.

பாடலிலிருந்து ஒரு துளி:
காத்துல காத்துல வாசனை பறக்குது!
ஏன் அதை ஏன் அதை பூக்களும் பரப்புது?
பூத்ததை பூத்ததை யாருக்கு உணர்த்திடத்தான்!

இவன் யாரோ!

மதுஸ்ரீயின் மயக்கும் குரலில் ஒரு மெல்லிசை. காதலில் விழும் நிலையில் இருக்கும் பெண்ணின் நிலையை விவரிக்கும் பாடல். பாடலில் வரும் கோரஸ் குரல்கள் கூடுதல் குதூகலம்!

பாடலிலிருந்து ஒரு துளி:
கண்தூங்கும் நேரம் இங்கு அறிந்தவர் யார்?
காதல் வந்த கணத்தைக் கணிப்பவர் யார்?
ஐயையோ இதுதான் காதலம்மா!
நெடுஞ்சாலை விபத்தாய் நடக்குமம்மா!

இஞ்சாதே

மீண்டும் வட்டார வழக்கில் ஒரு காதல் பாடல். ரூப்குமார் ரதோட், மதுஸ்ரீ, யாசின் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இடையில் கேரளத்துச் சாயலிலும் ஒலிக்கும் பாடல், பிறகு ஹிந்துஸ்தானி இசைக்குத் தாவி நம்மையும் உடன் அழைத்துச் செல்கிறது. வாத்தியங்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் நல்ல ரசனை! தபேலா வாசித்தவரைத் தனியாகப் பாராட்டலாம்!

பாடலிலிருந்து ஒரு துளி:
நாவில் நஞ்சுடன் பாம்பாய் ஊரினேன்!
காதல் வந்ததும் பசும் காம்பாய் மாறினேன்!
என் உயிரெலாம் வெளியேற்றினேன்!
உன்னை உயிரென அள்ளி ஊற்றினேன்!

வைகை நதிக் காத்தே!

தைரியம் சொல்லும் தாலாட்டுப் பாடல். இசையமைப்பாளர், பவானி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இசையின் பங்கு மிகவும் குறைவுதான். குரல்கள்தான் பாடலுக்கு பலம். இருவரும் பாடலின் சூழ்நிலை உணர்ந்து பாடியிருக்கிறார்கள் போல. பாடலைக் கேளுங்கள், உங்களையும் அறியாமல் மீண்டும் கேட்பீர்கள்.

பாடலிலிருந்து ஒரு துளி:
எறும்போ துரும்போ பொறந்ததும் அழுவதில்ல.
மனுசன் அழறான் ஏனது தெரியவில்லை!
உலகம் ரொம்பப் பெருசு, உனக்கும் பங்கு இருக்கு!

கடல் தாண்டி

படத்தின் தீம் பாடல் போலும். ஒரு மர்மப்பிரதேசத்துக்கு அழைத்துச் செல்லும் தொனியில் ஒலிக்கிறது எலிசபெத் மாலினியின் குரல்! "வாராண்டி வாராண்டி" என்று தீரஜ் கீரும் தன் பங்கிற்கு மிரட்டியிருக்கிறார். பேஸ் கிதாரையும் தாரை – தப்பட்டையையும் கோத்த விதத்தில் மேலும் கவனம் பெறுகிறது பாடல்.

தாமிரபரணியில் நீந்தி வந்த

மீண்டும் சத்யா இதில் காதல் பாடுகிறார். காதலின் செய்கைக்கு எதை எதையெல்லாமோ உவமையாக்கிப் பாடுகிறார்! இப்படி ஒரு பாடலைக் கேட்டு ரொம்ப நாள் ஆகிறது! வட்டாரத் தமிழில் விளையாடியிருக்கிறார் கார்த்திக் நேத்தா! புழக்கத்தில் இல்லாத பல சொற்களைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பு!

பாடலிலிருந்து ஒரு துளி:
மருதாணி இலை போல என் மனசை நசுக்குறே!
அருக்காணி அழகாத்தான் என் உசுரைக் குடிக்குறே!
ராட்டின தூரியப் போல என்ன அடி ஏண்டி உருள விட்ட!

கடைசிப் பாடலைத் தவிர மற்ற அனைத்துக்கும் பேனா பிடித்திருக்கிறார் மணி அமுதன். படத்துக்குப் படம் தன்னை மெருகேற்றிக் கொண்டே இருக்கிறார். (‘தீயா வேலை செய்யணும் குமாரு’ நீங்கலாக). இது போல் நிறையப் பாடல்களை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

நெடுஞ்சாலை – சுகமான பயணம்!

About The Author