உங்கள் வாழ்க்கை யார் கையிலிருக்கிறது? யார் உங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறார்கள்? நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்? கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல் இலக்கின்றிச் செல்கிறீர்களா?
ஆமாம்! பல பேர், நூலில் கட்டப்பட்டு ஆடும் பொம்மலாட்டப் பொம்மைகளாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் இல்லை. பொம்மைகள் போல, செலுத்தப்படும் வழியில் செல்கிறார்கள். ‘நம் வாழ்க்கை அவ்வளவுதான். விதிவிட்ட வழி’ என்று அர்த்தமற்ற, நிறைவில்லாத வாழ்க்கை வாழ்கிறார்கள்.
சிலருக்காவது புரிகிறது, ‘நாம் செல்லும் வழி சரியில்லை; ஏதோ தப்பு இருக்கிறது’ என்று. ஆனால், பலருக்கு அது கூடப் புரிவதில்லை. ‘இப்படித்தான் வாழவேண்டும்’ என்ற நெறியின்றி ‘ஏதோ வாழ்கிறோம்; கடவுள் விட்ட வழி’ என்று நொந்தவாறே காலத்தைக் கழிக்கிறார்கள்.
இவர்களைத் திசைமாறிய பறவைகள் என்றுதான் சொல்லமுடியும். அவர்கள், வாழ்க்கையில் தொலைந்து போகிறார்கள். சரியான வழிகாட்டும் வரைபடத்தைப் பார்த்தும் தவறான வழியில் செல்கிறார்கள். இவர்கள் கைப்பாவைகள். ஏனென்றால், இவர்களுக்கு மேலே நூலை இழுப்பவர் வேறொருவர். வாழ்க்கைப் பயணத்தில் சரியான இடத்தை அடைய அந்த வழிக்கான வரைபடம் வேண்டும். இங்கு வாழ்க்கை வரைபடம் என்று சொல்வது உங்களது நம்பிக்கையையும் மனப்பாங்கையும்தான். இந்த நம்பிக்கையும் மனப்பாங்கும் உண்மையான நிலையோடு ஒட்டிப்போவதாக இருக்கவேண்டும். சரியான வரைபடத்தை அறிந்துகொள்வது உங்களுடைய பொறுப்பு! “எனக்குத் தெரியாது” என்று சொல்லித் தப்பிக்க நினைத்தால் நீங்கள் பணயம் வைப்பது உங்கள் வாழ்க்கையைத்தான். ‘உனக்குத் தெரியாது என்றால் அது உன்னுடைய தப்பில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு! தெரியாமல் செய்யும் தப்பானாலும் அது நிச்சயம் உங்களைப் பாதிக்கும்! “நான் இந்த வழியில் சென்றால் பணக்காரனாக முடியும் என்பது தெரியாது” என்றால் வாழ்க்கை முழுதும் ஏழ்மையிலேயே உழல வேண்டியிருக்கும். வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ முடியும் என்று தெரியவில்லை என்றால் எப்போதுமே அது துயர் படிந்ததாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் முன்னேறுவது எப்படி என்பது தெரியாது என்று சொன்னால் ஒரு மோசமான வாழ்க்கையைத்தான் வாழ நேரும். இறக்கும்போது கூட உங்களைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொள்ள ஒன்றுமிருக்காது. “இந்தப் பள்ளிக்கூடத்தில் படித்தான்; இங்கே வேலை செய்தான்” என்று மட்டும்தான் சொல்ல முடியும்.
“சரியான மனப்பாங்கு இருப்பவன் முன்னேற்றத்தை எதுவும் தடுக்க முடியாது! சரியான மனப்போக்கு இல்லாதவன் வாழ்க்கையை யாரும் காப்பாற்ற முடியாது” என்று சொல்கிறார் ஒரு உளவியல் பேராசிரியர்.
உங்கள் வாழ்க்கையை நடத்துபவர் நீங்களாகத்தான் இருக்கவேண்டும்! நீங்கள் என்னவாக வேண்டும், வாழ்க்கையில் அடைய வேண்டிய இலக்கு என்ன என்பனவற்றை மற்றவர்கள் உங்களுக்காகத் தீர்மானிக்கக் கூடாது. பல நேரங்களில், பெற்றோர், மனைவி, நண்பர்கள், அடுத்த வீட்டுக்காரர்கள் என ஆளுக்கு ஒரு யோசனை சொல்லிப் பலரின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறார்கள். நாமும் அவர்கள் சொல்வதற்கு ‘ஆமாம்’ என்று தலையாட்டுகிறோம் என்றால் நமக்கே சொந்தமாக ஒரு குறிக்கோள் இல்லை என்றுதான் பொருள். சில விஷயங்கள் நமது கட்டுக்குள் இருக்கும், சிலவற்றில் பிறர் சொல்வதைத் தட்ட முடியாத நிலை ஏற்படும் என்பதும் உண்மைதான். ஆனால், எந்த விஷயங்களில் உங்கள் சொந்த அபிப்பிராயப்படி நடக்க முடியுமோ அவற்றில் மனதையும் சக்தியையும் ஒருங்குபடுத்தி உங்களால் மாற்றமுடியாத விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் பாதையில் முன்னேற வேண்டும்.
எப்போதாவது, உங்களது கனவு என்ன, வாழ்க்கையில் என்னவாக நீங்கள் விரும்புகிறீர்கள் என்று குறித்து வைத்திருக்கிறீர்களா? அப்படியில்லை என்றால் உங்களது வாழ்க்கையை வேறு யாரோ நடத்திச் செல்ல அனுமதிக்கிறீர்கள். வெறும் கனவுகளுடன், உங்கள் கார் சாவியை வேறு ஒருவரிடம் கொடுத்துவிட்டு அவர் செலுத்தும் பாதையில் பயணம் செய்கிறீர்கள் என்று பொருள்.
ஆசைப்படுவதற்கும் கனவு காண்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கனவு காண்பவர்கள் தங்களுக்கென்று ஒரு மாளிகையை அமைத்து அதை நோக்கி ஒவ்வொரு நாளும் பயணிக்கிறார்கள். அவர்கள் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் அவர்களது ஆயுதங்கள். ஆசைப்படுபவர்களோ ஒருநாளைக்கு ஜீபூம்பா வந்து தனக்கு வரம் கொடுத்து ஆசைகளை நிறைவேற்றும் என்று நினைக்கிறார்கள். அப்படியே ஒருவேளை அந்த வரம் கொடுக்கும் பூதம் வந்தாலும் அவர்களுக்கு என்ன வரம் கேட்பது என்று தெரியாது.
முடிவாகச் சொல்வதென்றால், உங்கள் முன்னேற்றத்துக்கோ அல்லது பின்னடைவுக்கோ முழுப் பொறுப்பும் நீங்கள்தான்! தவறு ஏற்பட்டால் அதற்கு முழுக்க முழுக்க நீங்கள்தான் காரணம்! உங்களால் நிலைமையைச் சரி செய்ய முடியவில்லையென்றால் நீங்கள் கார் சாவியை வேறு ஒருவரிடம் கொடுத்து வீட்டீர்கள் என்று அர்த்தம்.
ராணுவத்தில் சொல்வார்கள், “காலியான இடம் என்று ஒன்று கிடையாது; வரிசையில் அணிவகுத்துச் செல்லும்போதோ அல்லது சண்டையின்போதோ ஒரு வீரன் பாதை விலகிச் சென்றால் அந்த இடம் காலியாக இருக்காது; உடனே, வேறு ஒருவர் அந்த இடத்தை நிரப்புவார்” என்று. அதுபோலத்தான், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் முடிவை எடுக்க முடியவில்லையென்றால் வேறு யாரோ வந்து உங்களுக்காகத் தீர்மானிப்பார்கள்.
நம்முடைய எல்லாச் செயல்களுக்கும் நாமே பொறுப்பு என்று சொல்லும்போது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நமது தோல்விக்கு மற்றவர் மேல் பழி சுமத்தாமல், வெற்றிக்கு மற்றவர்களை எதிர்நோக்காமல் இருப்பது என்பதுதான் பெருமையான விஷயமே!