காலையிலிருந்து இரவு படுக்கப் போகும் வரைதான் எத்தனை தொல்லைகள்? மன அழுத்தங்கள்! வீட்டில் மனைவியின் பிடுங்கல், ஆபீசில் மானேஜரின் அட்வைஸ், ‘நீங்கள் இப்படி செய்திருக்கக் கூடாது சார்’ என்று நண்பர்களின் அறிவுரைகள். அதைத் தவிர, அம்மா, அடுத்த வீட்டுக்காரர் என்று, நான் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் ‘இப்படி செய்திருக்கலாமே, என்னைக் கேட்கக் கூடாதோ?’ என்று மூக்கை நுழைத்து புத்திமதி சொல்வது! ‘போதும்டா சாமி!’ என்று அவ்வளவையும் தாங்கிக்கொண்டு படுக்கப் போனால் தூக்கம் எங்கே வருகிறது?
"கவலை வேண்டாம்! இத்தனை தொல்லைகளையும் தாண்டி தூக்கம் வர ஒரு தனி வழி இருக்கிறது. அந்த வழி வேறொன்றும் இல்லை. நீங்கள் எப்போதுமே பிறரிடம் வாங்குபவர்களாக இருக்காதீர்கள்; கொடுப்பவர்களாக இருங்கள்! இலவசமாக மற்றவர்களுக்கு அறிவுரைகளை வாரி வழங்குங்கள். அப்புறம் பாருங்கள், இரவில் தூக்கம் எப்படி வருகிறது என்று"
இவ்வாறு ஒரு புத்தகத்தில் போட்டிருந்ததைப் படித்தேன். சரி… சொன்னபடி செய்துதான் பார்க்கலாமே என்று நானும் முயற்சி செய்தேன். அதன் விளைவுகளை நீங்களே பாருங்களேன்!
முதலில் என் மனைவியிடம் தொடங்கினேன்.
"உனக்கு நீலப் புடவை அழகாக இருக்கும்" என்று சொல்லி வைத்தேன். அவள், ‘என்ன இந்த மனுஷன் இதுவரை நான் என்ன கட்டிக் கொள்ளுகிறேன் என்று கவனிக்காதவர், இப்போது திடீரென்று இப்படி அக்கறை காட்டுகிறாரே’ என்பதுபோல் பார்த்து முறைத்தாள்.
"அது நான் தூக்கத்திற்காக கண்டுபிடித்த ஒரு வைத்தியம்! கொடுப்பவர்கள்தான் வாங்குபவர்களைவிட நன்றாகத் தூங்குகிறார்களாம். அதுதான் உனக்கு இந்த அட்வைஸ் கொடுத்துப் பார்த்தேன்!" என்றேன்.
"சரி, இன்னும் ஏதாவது கொடுக்க பாக்கியிருக்கிறதா?" என்று கேட்டாள்.
"உண்மையைச் சொல்லட்டுமா? நீ ரொம்ப அழகா இருக்கே" (இது எவ்வளவு பெரிய பொய் என்று அவளுக்கும் தெரியும்! எனக்கும் தெரியும்!)
நிஜமாகவே நம்பிவிட்டாளோ? மகிழ்ச்சியாகச் சிரித்து "தாங்க்ஸ்" என்றாள்.
அந்தச் சிரிப்பு கொடுத்த தைரியத்தில் இன்னும் கொஞ்சம் வாயை விட்டேன். "தலை முடிதான் சரியாக இல்லை" என்று உளறி விட்டேன்.
"உங்க அட்வைஸ் எனக்கு வேண்டாம்" என்றாள் முறைப்பாக.
"நான் திரும்ப வாங்க மாட்டேன். வாங்கினால் என்னால் தூங்க முடியாது" என்று சொன்னேன்.
"நீ சொன்ன மட்டமான அபிப்பிராயத்தையெல்லாம் நீயே வைத்துக்கொள்" என்று கத்தினாள்.
நான் என்னால் முடியாது என்று சொல்லத் துவங்குமுன் என் மூக்கும் அவள் மூடிய கதவும் சங்கமித்து என் தொண்டையிலிருந்து ஒரு ஹீனமான வலியை (ஒலியை!) வெளிப்படுத்தின.
சரி, இவளிடம்தான் நம் எண்ணம் பலிக்கவில்லை. அம்மாவிடம் சென்று முயற்சி செய்து பார்ப்போம் என்று என் சகோதரன் வீட்டிலிருக்கும் அம்மாவிற்கு போன் செய்தேன்.
"அம்மா, எப்படியிருக்கே? உன் குரலைக் கேக்கணும்னுதான் போன் பண்றேன்"என்றேன்.
"நீ போன் பண்றதைக் கேக்கறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்போவாவது அடிக்கடி போன் பண்ணுன்னு சொன்னதக் கேட்டியே" என்றாள்.
அவசர அவசரமாக, "இல்லை, நான் ஒன்னும் நீ சொன்னதைக் கேட்டுப் பண்ணலை. நானாதான் செய்தேன்" என்று மறுத்தேன்.
"இல்லை கண்ணா! நீ எப்போதும் என் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கிறது எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்" என்று போனை வைத்தாள். இங்கும் நான் கொடுப்பவனாக இல்லை; வாங்குபவனாகத்தானே இருந்திருக்கிறேன்!
அடுத்தது யாரைப் பிடிக்கலாம். வாசல் வழியாகப் போன அண்ணாசாமி கண்ணுக்குத் தெரிந்தார்.
அவரைப் பிடித்து, "எங்கே வெளியிலயா?" என்று அபத்தமாக ஒரு கேள்வி கேட்டு வைத்தேன்.
"ஆமாம்!" என்ற அவர்,"என்ன கண்ணெல்லாம் சிவந்திருக்கு, வேலை ஜாஸ்தியா? கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்க வேண்டியதுதானே" என்று அறிவுரை கூற ஆரம்பித்தார். உலகத்திலேயே எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை அறிவுரை என்பதை நான் அவருக்கு விளக்கும்முகமாக "நான் யாரிடமும் அறிவுரை கேட்பதில்லை – அப்படிக் கேட்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லை, தெரியுமா?" என்றேன்.
அவர் விடாமல், "அந்த ஒரு நிலையிலாவது உறுதியாக இருந்தால் சரி!" என்றார்.
"இல்லை, இல்லை அப்படி ஒன்றும் நான் உறுதி எடுத்துக் கொள்ளவில்லை" என்று எதிர்ப்பைத் தெரிவித்தேன்.
"ஏன் கோபப்படறே, சாதாரணமா இரு" என்று இன்னும் ஒரு அறிவுரையை அள்ளி வீசினார். இவரிடம் பேசிப் பிரயோசனமில்லை என்று உள்ளே திரும்பியபோது,"உடம்பை பத்திரமா பாத்துக்கோ" என்று அவர் சொல்வது காதில் விழுந்தது.
படுக்கையில் படுத்தவாறே அன்று காலையிலிருந்து நான் மற்றவர்களுக்குக் கொடுத்ததையும், அவர்களிடமிருந்து வாங்கிக் கொண்டதையும் மனதில் எடை போட்டுப் பார்த்தேன். என்னால் அறிவுரைகளை வாங்கிக் கட்டிக்கொள்ளத்தான் முடியும், என் வார்த்தைகளைக் கேட்க யாரும் தயாராயில்லை என்பது தெரிந்தது. ஹூம்! இனிமேல், எங்கே தூக்கம்? இனி தூக்க மாத்திரையின் தயவைத் தேடவேண்டியதுதான் என்று பாட்டிலைக் கையில் எடுத்தேன்.
(மூலம்: Avid Leonhardt)
வணக்கம் டி.எஸ்.பி!..
பிறரிடம் வாங்குபவர்களாக இருக்காதீர்கள்; கொடுப்பவர்களாக இருங்கள்!”
இந்த கருத்து அருமையாயிருக்கு…
“
அதெல்லாம் சரி, கேட்கறதில்லைன்னு யார் சொன்னாங்க?
உங்க வார்த்தைகளைக் கேட்க நாங்க தயாராயிருக்கோம் டி.எஸ்.பி.சார்…
நாங்க திருப்பி உங்ககிட்ட தரமாட்டோம்.ஓ.கே?
இப்ப போய் தூங்குங்க.. நிம்மதியான தூக்கம் வரும்…ஆனா சீக்கிரமா எழுந்து அடுத்த மேட்டர எழுதி அனுப்புங்க.. காத்திருப்போம்…
குட் நைட்.”..
“
//பிறரிடம் வாங்குபவர்களாக இருக்காதீர்கள்; கொடுப்பவர்களாக இருங்கள்!”
இந்த கருத்து அருமையாயிருக்கு…//
கொடுக்கறது, வாங்கறதுன்னு சொன்ன உடனே காமராஜர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு.
தான் யாரிடமும் எதையும் பெற்றுக்கொள்ளக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த காமராஜர், அவருக்கு யாராவது ஏதாவது பொருள் வழங்கினால் அதை வாங்காமல், அவர்கள் உள்ளங்கையை விரிக்கச் சொல்லி “எடுத்துக் கொள்வாராம்”.!”
பிறரிடம் வாங்குபவர்களாக இருக்காதீர்கள்; கொடுப்பவர்களாக இருங்கள்!
இந்த கருத்து நல்லாயிருக்கு. ஆனால் கொடுக்கவும் வேண்டாம் வாங்கவும் வேண்டாம் அது நிம்மதியாயிருக்கும்.”
rompa nalla