நீல நிற நிழல்கள் (8)

போன் பேசிவிட்டு "அத்தே!" என்று கூப்பிட்டுக்கொண்டு அறைக்குள் கீதாம்பரி நுழையவும், ஜன்னல் பக்கமாய்த் திரும்பி நின்று சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்த திலகம் அவசர அவசரமாய்க் கண்களைச் சேலைக் தலைப்பால் துடைத்துக்கொண்டு, கட்டாயப் புன்னகையை வாடகைக்கு வாங்கியபடி திரும்பினாள்.

"வாம்மா!"

திலகத்தின் முகத்தைப் பார்த்துவிட்டுக் கீதாம்பரியின் பிறைநெற்றி ஸ்டிக்கர் பொட்டோடு சுருங்கியது.

"என்ன அத்தே! கண்ணெல்லாம் சிவந்திருக்கு… அழுதீங்களா?"

"சேச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்லை. பாழாப்போன ஒத்தைத் தலைவலி காலையிலிருந்து ஆரம்பமாயிடுச்சு. வெளிச்சத்தைப் பார்த்தாப் போதும் கண்ணெல்லாம் கூசி தண்ணியாக் கொட்டுது."

"மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா அத்தே?"

"ம்… இப்பத்தான் சாப்பிட்டேன். கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கி எந்திரிச்சா சரியாயிடும். ஆமா, ஹரிகூட நீ போன்ல பேசினே போலிருக்கு?"

"ஆமா அத்தே! உங்க சீமந்தபுத்திரன்கிட்ட பேசினேன். எதுக்குப் பேசினோம்னு ஆயிடுச்சு."

"ஏன்?"

"ஏதோ பிஸினஸ் டென்ஷன்ல இருக்கார் போலிருக்கு. வழக்கமா என்கிட்ட பேசற மாதிரி பேசலை… ஏதோ மெஷின்தனமாப் பேசிட்டு ‘எங்கப்பாகிட்ட ரிஸீவரைக் குடு’ன்னு சொல்லிட்டார்."

திலகத்தின் அடிவயிறு முழுக்கத் தீப்பற்றிக் கொண்ட மாதிரியான உணர்வு. வாயைத் திறந்து ஏதாவது பேச ஆரம்பித்தால் அது அழுகையாய் வெடித்து விடுமோ என்கிற பயத்தில் புன்னகையொன்றை மட்டுமே காட்டினாள்.

கீதாம்பரி அதே கோபத்தோடு தொடர்ந்தாள்.

"சாயந்திரம் மறுபடியும் போன் பண்றாராம். பண்ணட்டும். நான் பேசப்போறதில்லை. ஜெர்மனியிலிருந்து போன் பண்ணினாலும் சரி, நான் பேசப்போறதில்லை."

"ஏம்மா அப்படிச் சொல்றே?"

"பின்னே என்ன அத்தே? ஏதோ வேண்டாத பொண்டாட்டிக்கிட்ட பட்டும் படாம பேசற மாதிரி பேசறார். ஜெர்மனியிலிருந்து வரட்டும். ஒரு மண்டகப்படி வெக்கறேன்."

"அவனை ஏம்மா திட்டறே?"

"உங்களுக்குக் கோபம் வருதாக்கும்? பெத்த மகனை விட்டுக்கொடுப்பீங்களா?" கீதாம்பரி பொரிந்து கொண்டிருக்கும்போதே வேலைக்காரப் பெண் உள்ளே வந்தாள்.

"என்ன வசந்தி?"

"அம்மா! பங்களாவிலிருந்து செட்டியாரம்மாவும் அந்த அம்மாவோட பொண்ணும் வந்திருக்காங்க. சோபாவில் உட்கார்த்தி வெச்சிருக்கேன்.."

திலகமும் கீதாம்பரியும் அறையினின்றும் வெளிப்பட்டு ஹாலுக்கு வந்தார்கள். நகைக் காய்ச்சி மரங்களாய் உட்கார்ந்திருந்த செட்டியாரம்மாவையும் அவருடைய பெண்ணையும் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

"வாங்கம்மா!"

அந்த அம்மா எழுந்து குங்குமச்சிமிழை நீட்டினாள். "குங்குமம் எடுத்துக்குங்க!"

"என்ன விசேஷம்மா?" கீதாம்பரி கேட்டுக்கொண்டே வலது கை மோதிரவிரலால் குங்குமத்தைத் தொட்டு நெற்றிக்கு இட்டுக்கொண்டாள்.

"நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கு நம்ம வீட்ல சுமங்கலிப் பூஜை வெச்சிருக்கேன். அத்தையைக் கூட்டிக்கிட்டு வந்திடு கீதாம்பரி!"

"என்னம்மா திடீர்னு சுமங்கலிப் பூஜை வெக்கறீங்க? இது நோன்பு மாசம் கூட இல்லையே?"

"தெரியும்! இது என் பொண்ணுக்காக. இவ ஜாதகத்துல ஏதோ மாங்கல்யதோஷம் இருக்காம். அந்தத் தோஷத்தை நிவர்த்தி பண்றதுக்காக ஒரு சுமங்கலிப் பூஜை நடத்தணுமாம்."

"நல்லதுதான்."

கீதாம்பரி மட்டும் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த செட்டியாரம்மா கேட்டாள்.

"என்ன திலகம், உடம்பு சரியில்லையா?மூஞ்சி வேற திமுதிமுன்னு இருக்கு?"

"அத்தைக்குத் தலைவலி. அதான்."

"பூஜைக்குக் கண்டிப்பா வந்துடணும்! மத்தியானச் சாப்பாடும் நம்ம வீட்லதான். நூத்தியெட்டுச் சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துண்டு, பழம், புஷ்பம் தர்றதா இருக்கோம்."

கீதாம்பரி சிரித்தாள். "கண்டிப்பாக அத்தை பூஜைக்கு வருவாங்க. அவங்ககிட்டேயே என்னோட கோட்டாவையும் கொடுத்துடுங்க!"

"நீயும் வாம்மா!"

"நான் வரலேம்மா. பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது… சேர்ந்தாப்பல ஒரு ரெண்டு நிமிஷம் உட்கார்ந்திருக்க முடியலை. எனக்கும் சேர்த்து அத்தை வருவாங்க."

"டெலிவெரி டேட் எப்போ?"

"இன்னும் இருபது நாள் இருக்கு."

"வயத்தைப் பார்த்தா நாள் தள்ளிப்போற மாதிரி தெரியலையே! என் மனுசுல பட்டதைச் சொல்லட்டுமா?"

"சொல்லுங்கம்மா!"

"இன்னும் ரெண்டே நாள்ல ஆயிடும்."

"டாக்டரம்மா அப்படிச் சொல்லலையே!"

"இந்தக் காலத்து டாக்டர்களுக்கு என்ன தெரியும்? நீ நிக்கிற நிலையைப் பார்த்தாலே எனக்கு ஸ்பஷ்டமாத் தெரியுதே! நாளைக்குள்ளே நீ ஆஸ்பத்திரியில் இருப்பே!"

மனசுக்குள் அமில மழை பெய்து கொண்டிருந்தாலும் அந்த அவஸ்தையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு கட்டாயச் சிரிப்போடு செட்டியாரம்மாவை ஏறிட்டாள் திலகம்.

"உங்க வாய் முகூர்த்தம்படியே சீக்கிரமாவே பிரசவம் ஆகட்டும்!"

**********

ருட்டில் பெய்து கொண்டிருந்த மழையில், மழைக்கோட்டு தரித்திருந்த டாக்டர் சதுர்வேதி, ஒரு கையில் டார்ச்லைட்டோடும் இன்னொரு கையில் ரிவால்வரோடும் ஜாக்கிரதை நடை நடந்தார்.

பூட்ஸ் கால்கள் அழுத்தப்பட… சேறு தெறித்தது. மனசுக்குள் பல குழப்பங்கள்.

‘ஆர்யா நிஜமாகவே அந்த உருவத்தைப் பார்த்திருப்பாளா… இல்லை பிரமையா? ஆர்யா, நிழல்களைக் கண்டு ஏமாறுகிற சாதாரணப் பெண்ணில்லை. அவளால் பார்க்கப்படுவது, நினைக்கப்படுவது, கணிக்கப்படுவது எல்லாமே சரியாக இருக்கும்!’

டார்ச் வெளிச்சத்தை வீசிக்கொண்டு பங்களாவின் பின்பக்கச் சுவரோரமாய் நடந்தார். வெளிச்சப் பந்து இருட்டில் குதித்தது.

பார்வைக்கு யாரும் தட்டுப்படவில்லை.

பார்த்தீனியச் செடிகள் மண்டியிருந்த பின்பகுதிக்கு வந்து நின்றார். ‘சோ’ என்ற ஒற்றை எழுத்தை மட்டும் மழை உற்சாகமாய் உச்சரித்துக் கொண்டிருக்க, காம்பெளண்ட் சுவரோரமாய்க் கூர்சீவிய பென்சில்கள் போல் நின்றிருந்த சிப்ரஸ் மரங்கள் காற்றுக்குத் தலையாட்டின.

நடந்தார்.

டார்ச் வெளிச்சத்தில் பார்த்தீனியச் செடிகள் மிதிபட்டன. ‘ஜன்னலுக்குப் பக்கத்தில் தெரிந்தது பெண் உருவம் என்று ஆர்யா சொன்னாள். யாராக இருக்கும்…? நிஷாவைத் தேடிக்கொண்டு யாராவது இங்கே வந்திருப்பார்களோ…?’

பயம் இதயச் சுவர்களைச் சுரண்டியது.

மழைநீர் முகத்தில் வழிய சுற்றும் முற்றும் பார்த்தார். பங்களாவின் வலதுபக்கக் கோடியில், ஆஸ்பெஸ்டாஸ் கூரையோடு வேண்டாத பொருட்களை அடைகாத்துக் கொண்டிருந்த அறை தெரிந்தது.

‘அங்கே போய்ப் பார்க்கலாமா?’

கால்கள் பயத்தில் இழுபட்டாலும் கையில் ரிவால்வர் இருக்கிற துணிச்சலில் நடந்தார். டார்ச் வெளிச்சத்துக்கும், பூட்ஸ் நடைச்சத்தத்துக்கும் தவளைகள் இருட்டில் விருட்விருட்டென்று தாவின.

இரண்டு நிமிஷ நடைக்குப் பின் ஆஸ்பெஸ்டாஸ் அறை வந்தது. காற்றுக்கு, பழைய மரக்கதவு ‘றீச் றீச்’சென்று அசைந்து கொண்டிருக்க, சதுர்வேதி காலால் கதவை விரியத் திறந்து வைத்து டார்ச் வெளிச்சத்தை உள்ளே துரத்தினார்.

துருப்பிடித்த ட்ரம், உடைபட்ட அமில ஜாடிகள், உபயோகப்படாத ஒரு கெய்ஸர், ஊனமான ஒரு நாற்காலி, பொத்தல் விழுந்த சின்டெக்ஸ், கோணிப்பைகள், ஸ்பாஞ்ச் வெளித்தள்ளிய சோபா செட். எலிகள் ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்க, சதுர்வேதி தயக்கமாய் நின்றார். மழைக்கோட்டுக்குள் முதுகு வியர்த்தது.

‘உள்ளே போய்ப் பார்க்கலாமா?’

யோசித்துக் கொண்டிருக்கும்போதே…

‘ச்சளக்… ச்சளக்…’ பின்பக்கம் அந்தக் காலடிச் சத்தம் கேட்க, அதிர்ந்து போய்த் திரும்பினார்.

இருட்டில் ஆர்யா வருவது தெரிந்தது.

வேகமான நடை.

"டாக்டர்!…"

பக்கத்தில் வந்தாள்.

"என்ன ஆர்யா?"

"நான் பார்த்த உருவம் இப்போது வெளியே இல்லை…"

"பின்னே?"

"பங்களாவுக்குள்ளே… அதுவும் லாப் செக்ஷனுக்குள்ளே."

"ஆர்யா! நீ என்ன சொல்றே?"

"நான் சொல்லலை. உருவம் உள்ளே இருக்கிற விஷயத்தை டெஸிபல் டிடெக்டர் சொல்லிடுச்சு."

சதுர்வேதியின் முகம் அந்த இருட்டிலும் பிரேத வெளுப்புக்குப் போவது தெரிந்தது. பதற்றமாய்க் கேட்டார்.

"லாப் செக்ஷன் கதவை வெளிப்பக்கமா லாக் பண்ணிட்டியா?"

"பண்ணிட்டேன். இப்போ இரை சிக்கிடுச்சு."

"வா, போய்ப் பார்க்கலாம்!"

வேக வேகமாய்ப் பங்களாவை நோக்கி வந்தார்கள். ஜோஷி போர்ட்டிக்கோவில் தவிப்பாய்க் காத்திருந்தார்.

"டாக்டர்! எனிதிங் சீரியஸ்?"

"நோ… நோ… ஒரு சின்ன சலசலப்பு அவ்வளவுதான். இன்னிக்கு நான் கொஞ்சம் சரியில்லை."

"வந்தது யாரு?"

"தெரியலை. நாங்க இந்த விவகாரத்தை ஃபேஸ் பண்ணிக்கிறோம். மிஸ்டர் ஜோஷி! நீங்க புறப்படுங்க! ரெண்டு நாள் கழிச்சு வாங்க! உங்களுக்கு ஒரு சந்தோஷமான பதிலைச் சொல்லக் காத்திட்டிருப்பேன்."

ஜோஷி சற்றே கவலையாய்க் காரை எடுத்துக்கொண்டு கிளம்ப, சதுர்வேதி காம்பெளண்ட் கேட்டை உள்பக்கமாய்ப் பூட்டிவிட்டு வந்தார்.

ஆர்யா காத்திருந்தாள்.

"வா… இரையைப் பிடிக்கலாம்!"

கதவுகளைச் சாத்தித் தாழிட்டு, உச்சபட்ச ஜாக்கிரதையோடு உள்ளே போனார்கள்.

லாப் செக்ஷன் வந்தது. ஆர்யா பயத்தில் எச்சில் விழுங்கி விழுங்கிப் பேசினாள்.

"டாக்டர்! நிஷா யாருக்கோ தகவல் கொடுத்துட்டு வந்திருக்கா. அவ நம்ம பங்களாவில் இருக்காளான்னு இங்க யாராவது பார்க்க வந்திருக்கலாம் ."

"வந்த இடத்துல, நாம பேசினதை ஓவர் ஹியர் பண்ணியிருக்கலாம் இல்லையா?"

"இருக்கலாம். உண்மைகளைக் கண்டுபிடிக்கிறதுக்காக உள்ளே போயிருக்கிற அந்த எக்ஸை வெளியே விட்டா போலீஸ் எந்த நிமிஷமும் இங்கே வரலாம்."

"அந்த நிலைமை நமக்கு என்னிக்குமே வராது. லாக்கை ஓப்பன் பண்ணு!"

"டா… க்… டர்…"

"ம்…"

"உள்ளே இருக்கிற அந்த எக்ஸ் கையில ஏதாவது ஆயுதம் இருந்தா?"

"பயப்படாதே, லாக்கை ஓப்பன் பண்ணு!"

ஆர்யா கை நடுங்க லாக்கை விடுவித்துக் கதவை மெள்ளத் திறந்தாள்.

அதுவரைக்கும் உயிரோடு இருந்த மின்சாரம் அந்த விநாடி செத்துப் போயிற்று.

பங்களாவுக்குள் இப்போது தார் இருட்டு.

(தொடரும்)

About The Author