ஜோஷி சொன்னதைக் கேட்டுச் சதுர்வேதி தன் சதைப் பற்றில்லாத உதடுகளை விரித்து அகலமாய்ப் புன்னகைத்தார்.
"மிஸ்டர் ஜோஷி! நீங்க இப்போ சொன்னது நடக்கப் போகிற நிஜம். உங்க மகனை மூளைக்கோளாறிலிருந்து குணப்படுத்தறதுக்காக நான் மேற்கொண்டிருக்கிற இந்த ஜீன் ட்ரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட்ஸில் நான் ஆரம்பக் காலத்தில் சந்தித்த தோல்விகள் இப்போது இல்லை. சோதனையான எவ்வளவோ கட்டங்களைத் தாண்டி வந்துட்டேன்."
"டாக்டர்! எனக்கு ஒரு பயம்…"
"என்ன…?"
"உங்க ஆராய்ச்சி முடியறதுக்குள்ளே என் மகன் நகுலுக்கு மூளைக்கோளாறு அதிகமாயிட்டா அதுக்கப்புறம் அவனைக் குணப்படுத்த முடியுமா?"
சதுர்வேதி சிரித்தார். "உங்க மகன் நகுலுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டதற்குக் காரணம் மூளையோட தலாமஸ் பகுதியில் டோபாமைன் அதிகமா சுரந்ததுதான். இதை சைக்யாட்ரிக் மேனிஃபெஸ்டேஷன்னு சொல்றது உண்டு. அந்த டோபாமைன் சுரப்பைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துட்டா ஹி வில் பீ நார்மல்!"
"அதை எப்போ கட்டுப்படுத்துவீங்க டாக்டர்?"
"சீக்கிரமே"
"டாக்டர்! நீங்க சொல்றது எனக்குப் புரியலே. ஆரம்பத்துல என் மகனை உங்ககிட்ட ட்ரீட்மெண்ட்டுக்காகக் கூட்டிட்டு வந்தப்போ ஜீன் ட்ரான்ஸ்ஃபர் முறையில் ஒரே மாசத்துல குணப்படுத்திக் காட்டறேன்னு சொன்னீங்க. ஆனா இப்போ நாட்கள் எவ்வளவோ பறந்துடுச்சு. இன்னும் நீங்க எக்ஸ்பரிமெண்ட்ஸ்லேயே இருக்கீங்க… நகுலுக்கு எப்போ ட்ரீட்மெண்ட்டை ஆரம்பிக்கப்போறீங்க?"
சதுர்வேதி மையமாய்த் தலையாட்டிப் புன்னகைத்தார். "மிஸ்டர் ஜோஷி! வெளியில என்னைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்ட டாக்டர்ஸ், நான் ஏதோ மூளையோட செயல்திறனை அதிகரிப்பது சம்பந்தமான ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறதா நினைச்சிட்டிருக்காங்க. பட், நான் ஈடுபட்டிருக்கிற இந்த ஆராய்ச்சி முழுக்க முழுக்க உங்க மகன் நகுலைக் குணப்படுத்தற விஷயமா சம்பந்தப்பட்டது."
"தலாமஸ் பகுதியில் டோபாமைன் அதிகமா சுரக்கிறதைக் கட்டுப்படுத்துகிற வல்லமை மூளையோட அடிப்பாகத்தில் இருக்கிற பிட்யூட்ரி சுரப்பிக்கிட்ட இருக்கு. பிட்யூட்ரி சுரப்பிதான் உடம்பில் இருக்கிற எல்லாச் சுரப்பிகளுக்கும் சக்ரவர்த்தி! மருத்துவத்துறையில் இருக்கிறவங்க அதை மாஸ்டர் ஆஃப் தி ஆர்கெஸ்ட்ரான்னு சொல்றதும் உண்டு. இப்போ என்னோட ஜீன் ட்ரான்ஸ்ஃபர் எக்ஸ்பரிமெண்ட்ஸ் எல்லாமே அந்த பிட்யூட்ரி சுரப்பிக்குள்ளேதான் நடந்துட்டிருக்கு. மெயின் சுவிட்ச் போர்டு மாதிரி இருக்கிற இந்தச் சுரப்பிக்குள்ளே வேற ஒருத்தரோட ஜீன் கல்ச்சர் அண்ட் ஜீன் மேனிபுலேஷன் சாத்தியமான்னு பார்த்துட்டு வர்றேன். இது விபரீதமான சோதனை! அந்தச் சோதனைக்காக இதுவரைக்கும் உங்க மூலமா வந்த மூணு பேரையும், நாங்க கபடமா கொண்டுவந்த நாலு பேரையும் பலியாக்கியிருக்கோம். பாடிகளைப் பின்னாடி இருக்கிற என் பங்களாவுக்குச் சொந்தமான நிலத்துல ஆழமாக் குழி தோண்டிப் புதைச்சுடறதுனால எந்தப் பிரச்சினையும் இல்லாம மேற்கொண்டு ஆராய்ச்சியைத் தொடர முடியுது. ரெண்டு நாளைக்கு முன்னாடி, சோப்புப் பவுடர் விக்க வந்த ராகினிங்கிற பெண்ணை வீழ்த்தி ஆராய்ச்சியோட அடுத்த கட்டத்தை ஆரம்பிச்சேன். அந்த ராகினி வந்த நேரம்… கொஞ்ச நேரத்துக்கு முந்தி வேற ஒரு பட்சியும் வந்து மாட்டிக்கிச்சு!"
ஜோஷி நிமிர்ந்தார்.
"யாரது…?"
"பேர் நிஷா. பத்திரிக்கை ரிப்போர்ட்டர். என்னைப் பேட்டி எடுக்க வந்து, வேவு பார்க்க ஆரம்பிச்சா. இப்போ கேஜ் ரூமுக்குள்ளே மயக்கமாக் கிடக்கறா. ராகினியோட பிட்யூட்ரி சுரப்பிக்குள்ளே நான் செய்யப்போகிற ஜீன் மேனிபுலேஷன் சரியானபடி வொர்க் அவுட் ஆகாத பட்சத்தில், நிஷாவைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்."
சதுர்வேதியின் கைகளைப் பிடித்துக் கொண்டார் ஜோஷி. "டாக்டர்! நீங்க சொல்றது எதுவுமே எனக்குப் புரியல. நீங்க சீக்கிரமே எதையாவது பண்ணி என்னோட மகன் நகுலைப் பழைய நிலைமைக்குக் கொண்டு வரணும். அதுக்காக எவ்வளவு வேணும்னாலும்…"
ஜோஷி பேசப் பேச, அதுவரை ஒன்றும் பேசாமல் சுவரோரமாக நின்றிருந்த ஆர்யா சட்டென்று சதுர்வேதிக்குப் பக்கத்தில் குனிந்தாள். குரலில் பதற்றம்.
"டா… டாக்டர்… எதுவும் பேசாதீங்க! மறுபடியும் ஒரு ஆபத்து!"
"எ… என்ன?"
"வெளியே வலது பக்கக் கண்ணாடி ஜன்னலுக்குப் பக்கத்துல யாரோ நிக்கிறாங்க!"
"யா… யாரு?"
"தெ… தெரியலை. இப்போ அஞ்சு வினாடிக்கு முன்னாடி மின்னல் வெட்டினபோது அந்த வெளிச்சத்துல ஒரு உருவத்தோட தலை தெரிஞ்சது!"
ஜோஷி சதுர்வேதி இருவருமே முகம் வியர்த்தார்கள். "ஆணா… பெண்ணா?"
"சட்டென்று தெரியலை. மின்னல் வெளிச்சத்துல ஒரு வினாடிதான் பார்த்தேன். பெண்ணாக இருக்கலாம். கொண்டை போட்டிருந்த மாதிரி தெரிஞ்சது."
"சரி. உள்ளே போய் டார்ச்சையும் ரிவால்வரையும் கொண்டா!"
ஆர்யா உள்ளே போனாள். சதுர்வேதியும் ஜோஷியும் வலது பக்க ஜன்னலைத் திரும்பிப் பார்த்தார்கள். கொக்கிமாட்டாத அந்தக் கண்ணாடி ஜன்னல், மழைக்காற்றுக்கு லேசாய் ஆடிக்கொண்டிருந்தது.
டாக்டர் மெதுவாய் எழுந்துபோய் ஜன்னலை நெருங்கி இடைவெளியில் பார்வையைப் போட்டார்.
வெளியே காற்றின் உதவியோடு மழை சாடிக் கொண்டிருந்தது. மின்னல் ஒன்று சின்னதாய் வெளிச்சம் போட்டுக் காட்ட,
பார்வைக்கு யாரும் தட்டுப்படவில்லை.
ஆர்யா உள்ளேயிருந்து டார்ச்சையும் ரிவால்வரையும் கொண்டு வந்து கொடுத்தாள்.
"ஆர்யா!"
"டாக்டர்!"
"நீ நிஜமா அந்த உருவத்தைப் பார்த்தியா?"
"சந்தேகமில்லாம பார்த்தேன் டாக்டர்!"
ஜோஷி பக்கத்தில் வந்தார். குரலில் பயம்.
"டாக்டர்! வெளியே போய் அது யார்னு பார்க்கப் போறீங்களா?"
"யெஸ்! வீட்டுக்குள்ளே பாம்பு இருக்குன்னு சந்தேகப்பட்ட பின்னாடி நிம்மதியா இருக்க முடியுமா? நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்குள்ளேயே இருங்க! பட், பார்வை வெளியே இருக்கட்டும்!"
சதுர்வேதி, மழைக்கோட்டைத் தரித்துக்கொண்டு ஒரு கையில் டார்ச்சும் இன்னொரு கையில் ரிவால்வருமாய் முன்பக்கக் கதவைத் திறந்தபடி வெளியே வந்தார்.
இருட்டில் மழை வீறிக்கொண்டிருந்தது.
கீதாம்பரியின் மனசுக்குள் சந்தோஷப் பூச்சொரிய, மாசிலாமணியிடமிருந்து ரிஸிவரை வாங்கிக் காதுக்குக் கொடுத்தாள்.
"ஹலோ…!"
மறுமுனையில் மெளனம்.
"ஹலோ…!"
ரமணி பீறிட்ட அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஹரிஹரன் பேசுவது போல் "கீதாம்பரி!" என்று மெள்ளக் குரல் கொடுத்தான்.
கீதாம்பரி பொய்க் கோபத்தோடு சீறினாள்.
"இப்பத்தான் பொண்டாட்டி ஞாபகமே வந்ததாக்கும்?"
"ஸாரி!"
"என்ன பெரிய ஸாரி? நேத்து ராத்திரி நீங்க ஏன் எனக்கு போன் பண்ணலை?"
"அது… வந்து… வந்து…"
"என்ன பொய் சொல்லலாம்னு யோசிக்கறீங்களா?"
"இ… இல்ல… கீதாம்பரி. பம்பாயில் ஒரே மழை. ஓட்டல் டெலிபோன் ஒர்க்… ப… பண்ணலை."
"அது சரி… உங்க குரல் ஏன் நடுங்கற மாதிரி இருக்கு?"
"மழையில கொஞ்சம் நனைஞ்சுட்டேன். அதான்…"
"பார்த்தீங்களா… கேட்க மறந்துட்டேன். ஷெட்யூல்படி இன்னிக்குக் காலையில நீங்க ஃப்ராங்ஃபர்ட்டுக்குப் புறப்பட்டுப் போயிருக்கணுமே! ஏன் போகலை?"
"அது… வந்து… வெதர் கண்டிஷன் சரியில்லைன்னு ஃப்ளைட் பத்து மணி நேரம் லேட்."
"அப்படின்னா… சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல்தான் ஃப்ளைட்."
"அப்படின்னா, சாயந்திரம் ஃப்ளைட் ஏறுகிறதுக்கு முந்தி போன் பண்றேன்."
"ஏன், இப்போ இன்னும் அஞ்சு நிமிஷம் என் கூடப் பேசக்கூடாதா?"
"அதுக்கில்லை… பிஸினஸ் விஷயமா ஒருத்தரைப் பார்க்க வெளியே போகவேண்டியிருக்கு."
"மழை பெய்யுதுன்னு சொன்னீங்க?
"டாக்ஸியில்தானே போறேன்?"
"ஊ… ஹூம்! இன்னிக்கு நீங்க சரியில்லை."
"எ… என்ன சரியில்லை…?"
"வழக்கமா உங்க பேச்சுல எனக்குப் பிடிச்ச வழிசல் இருக்கும். அது இன்னிக்கு மிஸ்ஸிங்!"
"கீதாம்பரி! எனக்கு உடம்பு சரியில்லை. லேசா ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு…"
"மாத்திரை எடுத்துக்கிட்டீங்களா?"
"ம்… இப்பத்தான் சாப்பிட்டேன்!"
"என்ன மாத்திரை?"
"கால்பால்."
"போதாது."
"பின்னே?"
"ரிஸீவரைக் காதோடு சேர்த்து அழுத்தி வெச்சுக்குங்க… நான் ஒரு மாத்திரை தர்றேன்… ஜலதோஷம் காய்ச்சல் எல்லாமே காணாமப் போயிடும்."
மறுமுனையில் இருந்த ரமணிக்கு உடனே புரிந்தது. கணவன் என்று நினைத்துக்கொண்டு அண்ணி முத்தம் கொடுக்கப் போகிறாள்.
உடனே பேச்சை மாற்றினான்.
"கீதாம்பரி! உன் குரலைக் கேட்டதும் பாதிக் காய்ச்சல் காணாமப் போயிடுச்சு. ரமணி பக்கத்துல இருந்தா ரிஸீவரை அவன்கிட்ட குடு! பிஸினஸ் சம்பந்தமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்."
"என்னோடு பேசும்போதுதானா உங்க தம்பி ஞாபகமும் வரணும்!"
"ப்ளீஸ் கீதாம்பரி! ரமணியைக் கொஞ்சம் கூப்பிடு!"
"உங்க தம்பி ஊர்ல இல்லை. நேத்து ராத்திரியே கொச்சி புறப்பட்டுப் போயாச்சு."
"எதுக்கு?"
"பிஸினஸ் விஷயம்தான்."
"சரி, அப்பாகிட்ட ரிஸீவரைக் குடு!"
"என்னைத் தவிர எல்லார்கிட்டேயும் பேசப் பறக்கறீங்க. பம்பாய் போனதுமே மாறிட்டீங்க!"
"கீதாம்பரி! நான் இப்போ பிஸினஸ் டென்ஷன்ல இருக்கேன். அப்பாகிட்ட ரிஸீவரைக் குடு! ரமணி எதுக்காகக் கொச்சிக்குப் போயிருக்கான்னு கேட்கணும்."
"பேஷா ரிஸீவரைத் தர்றேன். உங்கப்பாகிட்டயே பேசுங்க!" சொன்னவள் பக்கத்து அறையை எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தாள்.
"மாமா! உங்க மகன் உங்ககூடப் பேசணுமாம்."
மாசிலாமணி வெளிப்பட்டு ரிஸீவரை வாங்கிக் கொண்டிருக்கும்போதே திலகம் இருந்த அறையை நோக்கி முனகிக்கொண்டே போனாள் கீதாம்பரி.
"ஊருக்கு வரட்டும்… பேசிக்கறேன். இங்கே இருந்தா ஒரு பேச்சு… பம்பாய் போனா வேற மாதிரி பேச்சு…"
கீதாம்பரி பார்வையிலிருந்து மறையும்வரை காத்திருந்து விட்டுப் பின் ரிஸீவரை உதட்டுக்குக் கொடுத்தார் மாசிலாமணி.
"நான் அப்பா பேசறேன்."
"அப்பா! அண்ணிகிட்ட விஷயத்தைச் சொல்லிடுங்கப்பா! அண்ணிகிட்ட அண்ணன் மாதிரி பேச உடம்பெல்லாம் கூசுது. நாளைக்கு விஷயம் தெரிஞ்சா அண்ணி முகத்துல நான் முழிக்கவே முடியாது."
"உணர்ச்சிவசப்படறதுக்கு இது நேரமில்லை. பேசினபடியே எல்லாம் நடக்கட்டும்."
"அப்பா…!"
"எதுவும் பேசாதே! அங்கே காரியங்களை முடிச்சுட்டு, சாயந்திரத்துக்கு மேலே மறுபடியும் எனக்கு போன் பண்ணு! போன் வீட்டுக்கு வேண்டாம். கம்பெனிக்குப் பண்ணு. உன்னோட போனுக்காக அங்கே வெயிட் பண்ணிட்டிருக்கேன்."
"ச… ச… சரிப்பா!…" ரமணியின் குரல் அழுகையில் தெறிக்க… மாசிலாமணியும் ரிஸீவரை வைத்துவிட்டு, மேல் துண்டால் வாயைப் பொத்திக்கொண்டு அழுகையை அடக்க அவஸ்தைப்பட்டார்.
(தொடரும்)
“