நீல நிற நிழல்கள் (27)

டிரான்ஸ்ஃபார்மருக்குப் பின்னால் மண்டியிருந்த செடிகளின் மறைவில் உட்கார்ந்திருந்த ரமணி, ஜோஷியின் நிசப்தமான பங்களாவையே கண்கொத்திப் பாம்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். இதயம் லயம் மாறித் தாறுமாறான துடிப்பிலிருக்க, உடம்பு வியர்த்துக் கசகசத்தது.

ஜோஷியின் பங்களாவுடைய சதுர ஜன்னல்களில் ஒட்டியிருந்த ட்யூப் லைட் வெளிச்சம் சட்டென்று அஸ்தமித்தபோது ரமணியின் மனசுக்குள் புதிதாக ஒரு பயம் எட்டிப் பார்த்தது.

‘ஜோஷி திடீரென்று காரில் கிளம்பிவிட்டால் அவரை எப்படிப் பின்தொடர்வது…?’

‘உடனடியாக டாக்ஸி கிடைப்பது இந்த இடத்தில் சாத்தியம் இல்லையே…!’

ரமணி யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவனுக்குப் பின்புறம் அந்தச் சத்தம் கேட்டது.

‘என்ன சத்தம் அது…?’

காதுகளுக்கு உன்னிப்பைக் கொடுத்தான்.

புரிந்தது.

காலடிச் சத்தம்.

இரண்டுக்கு மேற்பட்ட காலடிச் சத்தங்கள்.

‘வருவது யார்…?’

ரமணி திரும்பிப் பார்க்க முயன்ற அதே விநாடி பின்னந்தலையில் ஓர் அடி இடியைப் போல இறங்க, ஐம்புலன்களும் ஸ்தம்பிக்க
நிசப்தமாகச் சரிந்தான்.

செடிகளுக்கு மத்தியில் இழுபட்டான்.

************

அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனருக்கு எதிரில் நேர்க்கோடுகள் மாதிரி விறைப்பாக நின்றிருந்தார்கள் இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராவும், குர்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷிண்டேவும்.

பான் மெல்கிற வாயோடு மல்ஹோத்ராவை ஏறிட்டார் ஏ.ஸி.

"ஹரிஹரனை ட்ரேஸ் பண்ணிக் கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு ஏதாவது க்ளூ மாட்டியிருக்கா?"

"இல்லை சார்!"

"யாரையாவது சஸ்பெக்ட் பண்ணியிருக்கீங்களா?"

"இன்னும் பண்ணலே சார்!"

"ப்ராக்ரஸ்தான் என்ன…?"

"ஸாரி டு ஸே திஸ் சார்… ஏதோ ஒரு ஃபோகஸ் ப்ராடக்ட் விஷயத்தில் மலபார்ஹில்ஸில் உள்ள பிஸினஸ் மேக்னட் ஒருத்தரை எச்சரிக்கை பண்ணப் போயிருக்கார் ஹரிஹரன். போன இடத்துல இவருக்கு ஏதாவது ஆபத்து உண்டாயிருக்கலாம்.
மலபார்ஹில்ஸ் ஏரியாவில் விசாரணை நடத்திப் பார்த்த அளவில் சாதகமான க்ளூ எதுவும் கிடைக்கலை. அப்படியே க்ளூ கிடைத்தாலும் பணபலமும், அரசியல் பலமும் படைத்த அந்த பிஸினஸ் ஏரியா புள்ளிகளிடம் நம் காக்கி உடை அதிகாரம் எடுபடாது. ஹரிஹரன் உயிரோடு இருக்க அநேகமாக வாய்ப்பு இல்லை. கேஸை விசாரிக்கிற மாதிரி வாரம், பத்து நாள் போக்குக் காட்டிவிட்டு ஃபைலை க்ளோஸ் பண்ணிடறது பெட்டர்."

அஸிஸ்டெண்ட் கமிஷனர் கண்களை மூடிச் சில விநாடிகள் நிஷ்டையில் இருந்துவிட்டு இன்ஸ்பெக்டர் ஷிண்டே முகத்தில் விழித்தார்.

"உங்க விசாரணையோட நிலவரம் எப்படி…?"’

"சார்… இந்த விசாரணையை நாம அலட்சியம் பண்ண முடியாது. காணாமப் போயிருக்கிறது ஒரு பெண், ஒரு ஆண். அது
சாதாரணப் பெண்ணில்லை. பத்திரிக்கைத்துறையில் பிரபலமாக இருக்கிற பெண். நாம விசாரணையை முடுக்கி விடலைன்னா பத்திரிக்கையோட எதிர்ப்புக்கணைகளை நம்மால தாங்கிக்க முடியாது. அடுத்த ரெண்டு நாளைக்குள்ளே நாம ஏதாவது பண்ணியாகணும்…"

"நிஷா தங்கியிருந்த வீட்ல விசாரணை பண்ணிப் பார்த்தீங்களா…?"

"பார்த்தேன் சார்! நிஷாவும் காலேஜில் படிக்கிற மோனிகா என்கிற பெண்ணும் வாலஸ் ரோட்டில் இருக்கிற ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து ரெண்டு வருஷகாலமா தங்கியிருக்காங்க. அந்த மோனிகாகிட்ட விசாரணை செய்ததில் உபயோகமான பதில் கிடைக்கலை. நிஷா திடீர்னு வெளியே போவா… வருவா… போகும்போது இன்ன இடத்துக்குத்தான் போறேன்னு சொல்லிட்டுப் போகிற பழக்கமும் அவளிடம் இல்லையாம்."

"ஒரு பத்திரிகை ரிப்போர்ட்டருக்குத் தன்னோட என்கேஜ்மெண்ட்ஸை டைரியில் குறிச்சு வெச்சுக்கிற பழக்கம் இருக்கும். அப்படி ஏதாவது டைரி கிடைச்சதா…?"

"நிஷாவோட மேஜை இழுப்பறையில் ஒரு பாக்கெட் டைரி கிடைச்சது சார். அதுல எந்தவிதமான என்கேஜ்மெண்ட் குறிப்புகளும் இல்லை… சில கட்டுரைகளுக்கான முக்கிய குறிப்புகளை மட்டும் நோட் பண்ணி வெச்சிருந்தா."

"சரி… வாட் அபெளட் விட்டல்…?"

"நிஷாவோட வீட்டுக்கு நேர் எதிர் வீடுதான் விட்டலோட வீடு. விட்டலுக்கு அப்பா, அம்மா இல்லை. மாமா மட்டும்தான். விட்டல் எங்கே போயிருப்பான்னு அவரால சொல்ல முடியலை. விட்டலோட ஃப்ரண்ட்ஸ் சில பேர்கிட்ட இப்போ விசாரணை நடத்திக்கிட்டிருக்கேன். இதுல ஒரு ஃப்ரெண்ட் சொன்ன தகவல் மட்டும் கொஞ்சம் யூஸ்ஃபுல்லா இருக்கு சார்…"

"என்ன தகவல்…?"

"நிஷாவை விட்டல் காதலிச்சிருக்கான். பட்… இது ஒரு தலைக்காதல். நிஷா வீட்டை விட்டு எந்த நேரத்துல வெளியே கிளம்பினாலும் அவனும் அவளை ஃபாலோ பண்ணிப் போவானாம்."

ஏ.ஸி நிமிர்ந்தார்.

"இதுல இந்த விவகாரம் வேற இருக்கா…?"

"நேற்றைக்குச் சாயந்தரம் நிஷா வீட்டைவிட்டு வெளியே கிளம்பிப் போயிருக்கா. அதைப் பார்த்த விட்டலும் ஃபாலோ பண்ணிப் போயிருக்கணும்…"

"நிஷா யாரைப் பார்க்கப் போனாள்னு தெரிஞ்சா எல்லாக் குழப்பமும் தெளிச்சுடும்… இல்லையா…?"

"ஆமா சார்…"

"மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுத்துட்டிருக்கீங்க…?"

"விட்டலோட ஃப்ரண்ட்ஸ் சர்க்கிள் கொஞ்சம் பெரிசு சார். சப்இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஷ்யாமை விசாரணை செய்ய
அனுப்பியிருக்கேன்."

"ஹரிஹரன் காணாம போன விஷயத்தை அலட்சியம் பண்ற மாதிரி இந்த பிரஸ் ரிப்போர்ட்டர் பொண்ணு காணாமபோன விஷயத்தை இக்னோர் பண்ணமுடியாது மிஸ்டர் ஷிண்டே! மத்த கேஸ் விவகாரங்களை ஒதுக்கி வெச்சுட்டு இதுல முனைப்பு காட்டுங்க. விவகாரம் விஸ்வரூபம் எடுத்துட்டா, உயர் அதிகாரிகள் தர்ற பிரஷரைத் தாங்கிக்க முடியாது. எப்படியும் இதுக்கு ஒரு தீர்வு கிடைச்சாகணும்."

"யெஸ் சார்!"

ஷிண்டே விறைத்துத் தளர்ந்தார்.

நாற்காலியோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டிருந்த ஹரிஹரனுக்கு அந்த இடத்தைப் பார்க்க பார்க்க வயிற்றைப் பிசைந்தது. டன் கணக்கில் கலவரம் மண்டிய கண்களோடு டாக்டர் சதுர்வேதியை அவன் பார்க்க, அவர் ஒரு சவப் புன்னகையோடு குனிந்தார்.

"என்ன பார்க்கிறே? உன்னை இங்கே கொண்டு வந்தது ஓர் உன்னதமான ஆராய்ச்சிக்கு உன்னோட பிட்யூட்ரி சுரப்பியை உபயோகப்படுத்திக்கத்தான். இதுமாதிரி ஒரு ஆராய்ச்சிக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொள்கிற வாய்ப்பு உலகத்துல எத்தனை பேருக்குக் கிடைக்கும்?"

"நோ… ஓ… ஓ… ஓ…" வீறிட்டுக் கத்த முயன்ற ஹரிஹரன், மயக்க மருந்து கொடுத்த சோர்வின் காரணமாக ஈன ஸ்வரத்தில் முனகினான்.

சதுர்வேதி தொடர்ந்தார். "உன்னையும் இந்தப் பத்திரிகை ரிப்போர்ட்டர் நிஷாவையும் இங்கே அனுப்பி வச்சதுக்காக அந்தக் கடவுளுக்கு நான் நன்றி சொல்லணும். இது என் ஆராய்ச்சியோட இறுதிக் கட்டம். ஆரோக்கியமான நிலையில் இருக்கிற உங்க ரெண்டு பேரோட டி.என்.ஏ-க்கள் என்னோட ஜீன் ட்ரான்ஸ்ஃபர் ஆராய்ச்சிக்குச் சகலவிதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கும்னு நம்பறேன்…"

சதுர்வேதி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வீல் வைத்த ஸ்ட்ரெச்சரை உள்ளிருந்து ஆர்யா உருட்டிக் கொண்டு வந்தாள்.
ஸ்ட்ரெச்சரில், மல்லாத்திப் படுக்க வைக்கப்பட்டிருந்த நிஷா தெரிந்தாள். தலைக்கேசம் மழுங்கச் சிரைக்கப்பட்டிருக்க… மண்டை, தோல் சீவிய பப்பாளிப் பழமாய்த் தெரிந்தது. கண்ணிமைகள் அழுந்த மூடியிருக்க, வாய் பிளந்து மேல் வரிசைப் பற்களில் இரண்டைக் காட்டியது.

ஹரிஹரன் திகிலாய்ப் பார்த்தான். ரத்த ஓட்டம் வாலைச் சுருட்டிக்கொள்ள, இதயம் பெரிதாய் இரைந்தது.

ஆர்யா அவனைப் பார்த்துக் கண்சிமிட்டினாள். "மிஸ்டர் ஹரி! அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளே உங்களுக்கும் இதே கோலம்தான்! மொட்டை போட்டா இன்னும் கொஞ்சம் அழகாவே இருப்பீங்க."

சதுர்வேதி சிரித்துக் கொண்டிருக்கும்போதே வாசலில் காலிங்பெல் கூப்பிட்டது. "ர்ர்ர்ர்ர்"

ஆர்யா பரபரத்தாள்.

"டாக்டர்! வால்சந்த் வந்தாச்சு…"

"டோர் வ்யூ ஃபைண்டரில் பார்த்துக் கதவைத் திற!"

ஆர்யா அந்த அரையிருட்டில் வேகவேகமாக நடந்து வாசல் கதவை நோக்கிப் போனாள். கதவின் வ்யூ ஃபைண்டர் லென்ஸில் வலது கண்ணைப் பொருத்திப் பார்க்க, மசமசப்பான இருட்டில் வால்சந்த் தெரிந்தான்.

மாக்னடிக் லாக்கை விடுவித்தாள். கதவைக் கொஞ்சமாய்த் திறந்தாள். "வா வால்சந்த்! ஏன் இவ்வளவு நேரம்?"

அவனுடைய முதுகுக்குப் பின்னால் கையில் ரிவால்வரோடு முளைத்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்தாள். கத்த முயன்றவளை நோக்கி ரிவால்வர் திரும்ப, நிசப்தமானாள்.

"ம்… பேசாம நட…" திவாகர் அவளைத் தள்ளினான். "உன்னோட வால்சந்த் கடந்த அரைமணி நேரமா என்னோட கஸ்டடியில்தான் இருக்கான். உயிருக்கு ஆபத்துன்னு வரும்போது விசுவாசமெல்லாம் காணாமப் போயிடும்" திவாகரின் கையிலிருந்த ரிவால்வர் இரண்டு பேரின் முதுகிலும் மாறி மாறிப் பதிய, தட்டுத்தடுமாறி நடந்தார்கள்.

லாபரட்டரி வந்தது.

நிஷாவின் மொட்டைத்தலைக்கு ஹெல்மட் மாதிரி எதையோ மாட்டும் முயற்சியில் இருந்த சதுர்வேதி, வால்சந்தைப் பார்த்துப் புன்னகைப்பதற்காக நிமிர்ந்தவர் ஸ்லோமோஷனில் முகம் மாறினார்.

திவாகர் சிரித்தான்.

"வணக்கம் டாக்டர் சார்! இந்த ராத்திரி நேரத்துல வந்து உங்களுக்குத் தொந்தரவு தர்றதுக்காக மன்னிக்கணும்…"

"நீ… நீ… நீ…?"

"என் பேர் திவாகர். நீங்க ஏதோ ஆராய்ச்சி பண்றீங்களாமே… வால்சந்த் சொன்னான். அதைப் பத்திக் கொஞ்சம் தெரிஞ்சுட்டுப் போகலாம்னு வந்தேன்."

ஹரிஹரன் பரவசமாக திவாகரைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் மூன்றுபேரையும் ரிவால்வரால் பின்னுக்கு நகர்த்திச்
சுவரோரமாக மண்டி போடவைத்தான்.

ஹரிஹரன் உணர்ச்சி மேலிட்டுக் குரல் தழுதழுத்தான். "தி… தி… திவாகர்… நல்லநேரத்துக்கு வந்து… எ… என்னைக் காப்பாத்தினே…"

திவாகர் உதட்டில் உதித்த ஓர் அரைச்சிரிப்போடு ஹரிஹரனிடம் திரும்பினான்.

"ஸாரி ஹரி… நான் உன்னைக் காப்பாத்த வரலை. இந்த ரிவால்வரில் இருக்கிற ஆறு தோட்டாக்கள்ல ஏதாவது ஒரு தோட்டாவுக்கு உன்னோட இதயம் இடம் கொடுத்தாகணும். நீ மெட்ராஸ்ல இருக்கும்போதே ரெண்டு தடவை உன்னோட உயிருக்குக் குறி வெச்சேன். தப்பிச்சுட்டே. ஆனா… இங்கே தப்பமுடியாது."

"தி… தி… திவாகர்…"

ஹரிஹரனின் கண்கள் ஸ்தம்பித்தன.

திவாகர் தொடர்ந்தான்: "இவங்களோடு சேர்ந்து சாகப்போறது நீ மட்டும் இல்லை. உன்னோட தம்பி ரமணியும்தான்."

********

மாசிலாமணி அந்த நர்ஸை ஏறிட்டார் தவிப்பாய். குரல் நடுங்கக் கேட்டார்.

"நீ… என்னம்மா சொல்லப் போறே…?"

"ச… சார் நான் சொன்னதா நீங்க வெளியே யார்கிட்டயும் சொல்லக்கூடாது…"

"இல்லை… சொல்லு…"

"உங்க சம்பந்தியம்மா அவ்வளவு நல்லவங்க இல்லை சார். அவங்ககிட்ட என்னமோ தப்பு இருக்கு… பம்பாய்ல உங்களுக்குத் தெரியாம ஏதோ ஒரு சதி நடந்துட்டிருக்கு…"

"சதியா…!" மாசிலாமணி அதிர்ந்தார்.

(தொடரும்)

About The Author