ஜோஷியை ஏறிட்டார் டாக்டர் சதுர்வேதி.
"அந்த திவாகர் நிச்சயமா உங்களைச் சந்தேகப் பார்வை பார்த்தானா?"
"ம்… பார்த்தான்."
"அவனோட பார்வையே அப்படிப்பட்டதா இருந்தா…?"
"நோ டாக்டர்… அவனோட பார்வையை நான் படிச்சுட்டேன். நிச்சயமா என் மேல அவனுக்குச் சந்தேகம் தட்டியிருக்கு…"
"அவன் உங்களைச் சந்தேகப்படக் காரணம்…?"
"ஹரிஹரனைப் பத்தி இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா கேள்விகளைக் கேட்டபோது நான் இயல்பான முகபாவத்தோடுதான் பதில்களைச் சொன்னேன். ஆனா, என் மனசுக்குள்ளே இருந்த அதிர்ச்சி என்னையும் அறியாமல் என் கண்களில் வெளிப்பட்டிருக்கலாம். அந்த உணர்ச்சியை அவன் துல்லியமா உணர்ந்து இருக்கலாம்…"
"எதுக்கும் நல்லா யோசனை பண்ணிட்டு அவங்களைத் தீர்த்துக்கட்டற முயற்சியில் இறங்கறது உத்தமம் மிஸ்டர் ஜோஷி."
"நான் யோசனை பண்ணிப் பார்த்துட்டேன் டாக்டர். அந்த திவாகர் மனசுக்குள்ளே இருக்கிற சந்தேக இழைகளெல்லாம் ஒண்ணு சேர்ந்து ஒரு உறுதியான கயிறா மாறுவதற்கு முந்தி அந்த ரெண்டு பேரோட மூச்சையும் நிறுத்தணும்!"
"சரி. வால்சந்தை அந்த ஓட்டலுக்கு அனுப்பிக் காரியத்தை முடிங்க!"
"வால்சந்தால மட்டும் தனியா இந்தக் காரியத்தை முடிக்க முடியும்னு எனக்குத் தோணலை டாக்டர்."
"பின்னே…?"
"ஆர்யாவையும் கூட அனுப்பணும்!"
"எதுக்கு…?"
"ஓட்டல் சில்வர் ஸாண்ட் சாதாரண ஓட்டல் இல்லை. ஃபைவ் ஸ்டார் அந்தஸ்துள்ள ஓட்டல். ஓட்டலுக்குள்ளே நுழையறதுக்கே சில ஃபார்மாலிடீஸ் உண்டு. அதெல்லாம் வால்சந்துக்குத் தெரியாது. மத்தவங்களோட சந்தேகப் பார்வைக்கு வால்சந்த் இலக்காகாம இருக்கணும்னா ஆர்யா அவனுக்குப் பக்கத்துல இருக்கிறது நல்லது."
"அப்படின்னா… ஒரு காரியம் பண்ணுங்க ஜோஷி."
"என்ன…?"
"இப்போ வால்சந்த் எங்கே இருக்கான்?"
"என்னோட பங்களாவிலதான்…"
"நீங்க உடனே புறப்பட்டுப் போய் அவனை இங்கே அனுப்பி வையுங்க! ஆர்யாவை அவன்கூட சில்வர் ஸாண்ட் ஓட்டலுக்கு அனுப்பி வெச்சுக் காரியத்தை நான் முடிக்கிறேன்."
"இது உடனடியா முடிக்கப்பட வேண்டிய காரியம் டாக்டர். திவாகர், ரமணி ரெண்டு பேரும் எப்படி இருப்பாங்கங்கிற அடையாளங்களை வால்சந்த்கிட்ட நான் சொல்லி அனுப்பறேன். ஆர்யாவை அவனோடு அந்த ஓட்டலுக்கு அனுப்பி, போலீஸ் நம்மை ஸ்மெல் பண்ணாத வகையில் ரெண்டு பேரையும் தீர்த்துக்கட்ட வேண்டியது உங்க வேலை."
"போய் வால்சந்தை அனுப்பி வையுங்க… மத்த காரியங்களை நான் பார்த்துக்கிறேன்."
"அந்த ரெண்டு பேரையும் தீர்த்துக்கட்டறதுக்கு வசதியா வால்சந்த்கிட்ட என்னோட ரிவால்வரைக் கொடுத்து அனுப்பட்டுமா டாக்டர்?"
"வேண்டாம் ஜோஷி! கத்திக்கோ தோட்டாவுக்கோ அங்கே வேலையில்லை."
"பின்னே…?"
"திவாகர், ரமணி ரெண்டு பேருமே உடம்பு கிழிபடாம, ரத்தம் சிந்தாம உயிரைவிடப் போறாங்க."
"எப்படி டாக்டர்?"
சதுர்வேதி பக்கத்திலிருந்த அலமாரிக்கு மெதுவாக நடந்து போய், அதைத் திறந்து ஒரு பாட்டிலை எடுத்து வந்தார். பாட்டிலுக்குள்ளே வெண்ணிறத்தில் சின்னச் சின்ன உருண்டைகள்.
ஜோஷி வியப்பாகக் கேட்டார்:
"இது என்ன டாக்டர்?"
"சயனைட் நாப்தலின்" புன்னகைத்த சதுர்வேதி தொடர்ந்தார். "இது பூச்சிகளைக் கொல்லக்கூடிய நாப்தலின் இல்லை. மனிதர்களை மூச்சடைத்துச் சாக வைக்கிற சயனைட் நாப்தலின். இதுல ஒரு உருண்டையை எடுத்து ரூம்ல இருக்கிற கட்டிலுக்கு அடியில் போட்டுட்டா போதும். ஒரு மணி நேரத்துக்குள்ளே இந்த சயனைட் நாப்தலின் காற்றில் கலந்து, தூங்கிட்டிருக்கிற ஆட்களைச் சத்தமில்லாமே தீர்த்துடும். போஸ்ட்மார்ட்டம் பண்ணும்போது உடம்புல விஷம் பரவியிருக்கிற அறிகுறியே தெரியாது."
"குட் ஜாப்!" ஜோஷி கடைவாயில் கட்டியிருந்த தங்கப் பற்கள் தெரியச் சிரித்தார்.
********
மலபார்ஹில்ஸ் எல்லையிலேயே டாக்ஸியை நிறுத்தி இறங்கிக் கொண்டார்கள் ரமணியும் திவாகரும்.
சுற்றிலும் முன்னிரவு நிசப்தம். ரோட்டின் இரண்டு பக்கத்திலும் வளர்ந்திருந்த செடிகளுக்கு இடையில் சுவர்க் கோழிகள் சுருதி சேர்த்தன. வானத்தில் உடைந்த நிலா.
இருவரும் ஜோஷியின் பங்களா இருந்த செவன்த் க்ராஸ் ரோட்டை நோக்கி நடந்தார்கள்.
"திவாகர்!"
"ம்…"
"இப்படிப் போறது எனக்கு உசிதமா படலை…"
"மறுபடியும் ஆரம்பிச்சுட்டியா உன்னோட பல்லவியை?"
"நான் பயப்படறதா நீ நினைக்காதே! துணிச்சலுக்கும் அசட்டுத் துணிச்சலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு."
"இதை அசட்டுத் துணிச்சல்னு சொல்ல வர்றியா?"
"ஆமா! முன்னே பின்னே தெரியாத இந்த ஊர்ல, போலீஸ் உதவியில்லாமே ஒரு ஆபத்தான காரியத்தில் ஈடுபடறதுக்கு வேற என்ன
பேராம்?"
"ரமணி! ‘பயமே பாதி சத்ரு’னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. எந்த ஒரு காரியத்திலும் துணிஞ்சு இறங்கினாத்தான் வெற்றி தேவதையோட தரிசனம் கிடைக்கும். நீ பேசாமே என்கூட வா… இந்த ராத்திரி விடியறதுக்குள்ளே ஹரிஹரனை நான் கண்டுபிடிச்சுத் தர்றேன்."
"இது சாத்தியமா திவாகர்?"
"நீ மட்டும் புலம்பாம வா… நான் சாத்தியப்படுத்திக் காட்டறேன்."
மெதுவான ஐந்து நிமிஷ நடையில் செவன்த் க்ராஸ் ரோட்டின் நுனி வந்தது.
அசாத்திய அமைதி. பெரும்பாலான பங்களாக்கள் வெளிச்சங்களைத் தொலைத்துவிட்டு இருட்டில் உட்கார்ந்திருந்தன.
ரமணி கேட்டான்.
"ஜோஷியின் பங்களாவுக்குள்ளே எப்படிப் போகப் போறோம்?"
"பங்களாவுக்குள்ளே போறது நான் மட்டும்தான். நீ இல்லை."
"அப்படின்னா… நான்…?"
"நீ வெளியே ஒரு மறைவான இடத்திலிருந்து ஜோஷியோட பங்களாவை வாட்ச் பண்ணு! ‘யார் உள்ளே வர்றாங்க… யார் வெளியே போறாங்க’னு கவனிக்க வேண்டியது உன்னோட வேலை… ஜோஷியோட பங்களாவுக்குப் பின்பக்கமா போய் சுவரேறிக் குதிச்சு உள்ளே போய் நிலைமைகளை ஆராய வேண்டியது என்னோட வேலை…"
"எதுக்கும் ஒரு தடவை யோசனை பண்ணிக்க!" சொன்ன ரமணியைத் திவாகர் முறைத்துக் கொண்டிருக்கும்போதே, ரோட்டின் வளைவில் ஜோஷியின் பங்களா வந்தது. இருட்டுக்குள் இருந்தது. போர்டிகோ மேற்கூரையில் மட்டும் லேசாய் வெளிச்சச் சிதறல்.
உள்ளேயிருந்து எந்தச் சத்தமும் இல்லை. திவாகர் குரலைத் தாழ்த்தினான்.
"ரமணி…"
"ம்…"
"பங்காளாவுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் தெரியுதே… அதுக்குப் பின்னாடி போய் மறைவா நின்னுக்கிட்டு ஜோஷியோட பங்களாவை நீ வாட்ச் பண்ணலாம். கார் ஏதாவது உள்ளே போனாலோ வெளியே வந்தாலோ நம்பரை நோட் பண்ண வேண்டியது அவசியம்."
"அதை நான் பார்த்துக்கிறேன். வெளியே நிக்கப் போகிற எனக்கு எந்த ஆபத்தும் வரப் போறதில்லை. உள்ளே போகப் போகிற நீதான் ஜாக்கிரதையா இருக்கணும்…"
"என்னைப் பத்தின கவலையே உனக்கு வேண்டாம் ரமணி! உள்ளே சூழ்நிலை சரியில்லைன்னா உடனே வெளியே வந்துடுவேன்."
ரமணி ட்ரான்ஸ்ஃபார்மர் இருந்த திசையை நோக்கிப் போக, திவாகர் பங்களாவின் பின்பக்கம் போனான்.
அடர்த்தியான இருட்டில் சாக்கடை மணத்தது. ஜாக்கிரதையாகச் சாக்கடையைத் தாண்டி, ஐந்தடி உயரக் காம்பெளண்ட் சுவரில் தொற்றி ஏறினான். சுலபமாய்ச் சுவர் உச்சி வர, உள்ளே பார்த்தான்.
இருட்டில், சற்று நேரத்துக்கு எதுவும் பார்வைக்குத் தட்டுப்பட மறுத்து, பின் ஒவ்வொன்றாய்ப் புலனாக ஆரம்பித்தன.
ஆஸ்பெஸ்டாஸ் கூரைவேய்ந்த ஒரு ஷெல்ட்டர். பக்கத்திலேயே ஒரு தண்ணீர்த் தொட்டி. காரை பெயர்ந்து போயிருந்த தரையில் வேண்டாத சில தட்டுமுட்டுச் சாமான்கள்.
திவாகர் பார்வையை நிதானித்துக் கொண்டு மணல் பகுதியைத் தேர்ந்தெடுத்து, ஒரு பூனையின் லாவகத்தோடு சத்தமில்லாமல் குதித்தான். குதித்தவன் அப்படியே உட்கார்ந்து கண்களைப் பரபரவென்று சுழற்றி எல்லாத் திசைகளையும் அலசிவிட்டு மெள்ள எழுந்தான்.
நடந்தான்.
பின்பக்கக் கதவு வந்தது. தள்ளிப் பார்த்தான். இறுக்கமாய்ச் சாத்திக் கிடந்தது. பின்வாங்கி இடதுபக்கமாய் நகர்ந்து வந்து, மாடிக்குப் போகும் கழிவுநீர்க் குழாயைப் பற்றிக் கொண்டு மெதுவாக மேலேறி மொட்டைமாடிக்கு வந்து, அங்கியிருந்து பங்களாவுக்குள் சரிந்துபோன படிகளில் மெதுவாய் ‘ஸ்லோமோஷனில்’ இறங்கினான்.
ஹால் வந்தது. ஜீரோவாட்ஸ் வெளிச்சம் எங்கோ கசிந்து வந்ததில் ஹாலில் மண்டியிருந்த இருட்டு லேசாய்ச் சாயம் போயிருந்தது.
திவாகர் ஹால் ஓரத்திலேயே சற்று நேரம் நின்று, எந்த அறைக்குள்ளிருந்தாவது பேச்சுக் குரல் வெளிப்படுகிறதா என்று காதுகளுக்கு உன்னிப்பாய்க் கவனம் கொடுத்துப் பார்த்தான்.
நிசப்தம்.
திவாகர் அந்த முடிவுக்கு வந்தான்.
‘ஒவ்வொரு அறைக்குள்ளும் நுழைந்து பார்த்துட வேண்டியதுதான்!’
நகர்ந்தான். வலதுபக்க அறைக்கு வந்து அதை எச்சரிக்கை உணர்வோடு எட்டிப் பார்த்தபோது…
காலடிச் சத்தம் கேட்டது.
‘எந்தப் பக்கம்…?’
திவாகர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே காலடிச் சத்தம் அதிகப்பட்டது. கூடவே இந்திப் பாடலின் ஹம்மிங்.
‘இந்தப் பக்கமாய்த்தான் யாரோ வருகிறார்கள்!’
திவாகர் சட்டென்று அந்த அறைக்குள் நுழைந்து, பார்வைக்குக் கிடைத்த கட்டிலுக்குக் கீழே உருண்டு படுத்துக் கொண்டான்.
சுவாசத்தைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்து மூச்சை அடக்கி நிசப்தம் காக்க, வால்சந்த் அந்த அறைக்குள் நுழைந்தான்.
*******
"மிஸ்டர் மாசிலாமணி…"
ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று வெளியே கொட்டியிருந்த தார் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாசிலாமணி திரும்பினார்.
டாக்டர் மனோரஞ்சிதம்.
"என்ன டாக்டர்?" ஈனஸ்வரக் குரலில் கேட்டார்.
"நான் வீட்டுக்குக் கிளம்பறேன்… கீதாம்பரி இப்போ அசந்து தூங்கிட்டிருக்கா… நாளைக்குக் காலையில ஏழு மணி வரைக்கும் கவலையில்லை. அசிஸ்டெண்ட் டாக்டர் ஒருத்தர் ட்யூட்டியில் இருக்கார். அவர் எல்லாத்தையும் பார்த்துக்குவார்… அப்படி என்னோட உதவி ஏதாவது தேவைப்பட்டா எனக்கு போன் பண்ணுங்க… நான் வந்துடறேன்."
"சரி, டாக்டர்."
"பை த பை… நீங்களும்கூட வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு நாளைக்கு வரலாம். லேடீஸ் யாராவது ஒருத்தர் கீதாம்பரிக்குப் பக்கத்துல இருந்தாப் போதும்… கீதாம்பரியோட அம்மா வேணும்னா இங்கே இருக்கட்டும்…"
"இல்லே டாக்டர்… கீதாம்பரிக்கு எந்த ஆபத்தும் இல்லைன்னு ஊர்ஜிதமாகிற வரைக்கும் இந்த ஹாஸ்பிடலைவிட்டு நாங்க அசையப் போறதில்லை… விடியறவரைக்கும் நாங்க இங்கேயே இருந்துடறோம் டாக்டர்."
மனோரஞ்சிதம் சின்னதாகப் பெருமூச்சு விட்டாள்.
"இட்ஸ் ஓகே… நாளைக்குக் காலையில் பார்ப்போம்" டாக்டரம்மா நகர்ந்துவிட, மாசிலாமணியின் பார்வை மறுபடியும் ஜன்னலுக்கு வெளியே கொட்டியிருந்த இருட்டுக்குப் போயிற்று.
மனசுக்குள் திரும்பத் திரும்ப அந்தக் கேள்வி உழன்றது.
‘ரமணியால் ஹரிஹரன் மாதிரி பேசமுடியுமா?’
‘கீதாம்பரிக்கு உண்மை தெரிந்துவிடுகிற பட்சத்தில் அவளைச் சமாதானப்படுத்துவது சாத்தியமா?’
‘கடவுளே! நாளைக்குக் காலையில் கீதாம்பரியோடு ரமணி டெலிபோனில் பேசும்போது எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழ்ந்துவிடக் கூடாது!’
"சார்…"
மிக அருகில் குரல் கேட்டு நிமிர்ந்தார்.
அந்த நர்ஸ் நின்றிருந்தாள்.
"என்னம்மா?"
தன் கரிய பெரிய விழிகளால் அவள் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டுக் குரலைத் தாழ்த்தினாள்.
"சார்…! உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்திப் பேசணும்…" குரலில் உச்சபட்சக் கலவரம்.
(தொடரும்)
“