நீல நிற நிழல்கள் (24)

டாக்டர் மனோரஞ்சிதத்தை மாசிலாமணி நைந்துபோன குரலோடு ஏறிட்டார்.

"ரமணியை ஹரிஹரன் மாதிரி பேச வைக்கிறது இப்போது இருக்கிற சூழ்நிலையில் ரிஸ்க்கான விஷயம் டாக்டர். ரெண்டு பேரோட குரலும் ஒரே தொனியில் இருந்தாலும் பேசற அந்நியோன்யத்தில் நிச்சயமா வித்தியாசம் தெரியும். ஏற்கனவே ரமணி பம்பாயிலிருந்து ஹரிஹரன் மாதிரி பேசியிருக்கான். அது சரியானபடி வொர்க்அவுட் ஆகலை. கீதாம்பரிக்கு அந்தப் பேச்சில் சந்தோஷமில்லை. ‘பம்பாய் மண்ணை மிதிச்சதும் ஆளே மாறிட்டார்… பொண்டாட்டிக்கிட்ட ஏதோ மூணாம் மனுஷிகிட்ட பேசற மாதிரி பேசறாரே’ன்னு கீதாம்பரி குறைபட்டுக்கிட்டா… இந்தச் சூழ்நிலையில் ரமணியை ஹரிஹரன் மாதிரி பேச வைக்கிறது சரியா டாக்டர்?"

மனோரஞ்சிதம் ஒரு பத்து விநாடிகள் மெளனம் அனுஷ்டித்துவிட்டு உதட்டை அசைத்தாள்.

"இது ரிஸ்க்கான விஷயம்தான்! ஒப்புக்கிறேன். ஆனா, இந்த ரிஸ்க்கை நாம எடுத்துக்கத்தான் வேணும்… நீங்க கவலைப்படாதீங்க மிஸ்டர் மாசிலாமணி. அது ரமணியோட குரல்தான்னு கீதாம்பரியால கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நான் ஒரு காரியம் பண்ணப்போறேன்."

மாசிலாமணி குழப்பத்தைத் தன் நெற்றியில் ஒட்டவைத்துக் கொள்ள, மனோரஞ்சிதம் தொடர்ந்தாள்:

"கீதாம்பரி முழுசுயநினைவோடு இருந்தாத்தானே குரல் வித்தியாசத்தைக் கண்டுபிடிப்பா? ரமணி நாளைக்குக் காலையில போன் பண்ணும்போது, கீதாம்பரிக்கு ஒரு இஞ்செக்ஷன் போட்டு அவளை ஸெமி ஸெடடீவ் ஸ்டேஜ்ல இருக்கப் பண்ணறேன். பேசறது தன்னோட கணவன்தான் என்கிற எண்ணம் மட்டும் மூளைக்குள்ளே இருக்கும். குரல் வித்தியாசத்தையோ, பேசற அந்நியோன்யத்தையோ தெரிஞ்சுக்கிற ஆர்வம் இருக்காது. ரமணியை மட்டும் எந்தவிதமான தயக்கமும் இல்லாம, ஹரிஹரன் மாதிரி காஷுவலா பேசச் சொல்லுங்க… போதும்!"

"டாக்டர்… வந்து…"

"ரமணியோட பம்பாய் போன் நம்பரைக் குடுங்க! நான் அவர்கிட்ட பேசிக்கிறேன்."

மாசிலாமணி பம்பாய் சில்வர் ஸாண்ட் ஓட்டலின் போன் நம்பரையும், திவாகர் தங்கியிருந்த அறை எண்ணையும் சொல்ல, மனோரஞ்சிதம் தன்னுடைய பிரிஸ்க்ரிப்ஷன் பேடில் குறித்துக்கொண்டு மேஜையின் ஓரத்தில் இருந்த டெலிபோனைத் தொட்டு ரிஸீவரை எடுத்துக்கொண்டாள். டயலில் எண்களைத் தட்டிவிட, எஸ்.டீ.டி லைன் பம்பாயைப் பிடிக்க ‘பீப் பீப் பீப் பீப்’ என்று குரல் கொடுத்துக் கொண்டு போயிற்று.

**************

ட்டல் சில்வர் ஸாண்ட்.

ஆறாவது மாடி. அறை எண் 608. திறந்து வைத்திருந்த ஜன்னலுக்கு வெளியே பம்பாய் மெகாவாட் கணக்கில் மின்சாரத்தைச் சாப்பிட்டுக்கொண்டு நியான் வண்ணங்களில் மின்னியது. இரண்டு நாளைய மழைக்குப் பின் வானம் இப்போது நிர்மலம். நட்சத்திரங்கள் கோஷ்டி கோஷ்டியாகக் கண்ணடித்தன.

ரமணி, திவாகரிடம் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான். "திவாகர்! நீ என்ன சொல்றே? ஹரிஹரன் இருக்கிற இடத்தை நீ யூகம் பண்ணிட்டியா?"

"ஆமா…"

"எ… எந்த இடம்?"

"மலபார்ஹில்ஸ் செவன்த் க்ராஸ் ரோட்டுல இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா எத்தனை பேர்கிட்ட விசாரணை பண்ணினார்?"

"மொத்தம் ஆறு பேர்…"

"யார் யார்ன்னு ஞாபகமிருக்கா?"

ரமணி யோசித்து யோசித்துப் பெயர்களைச் சொன்னான். "சர்யாலால், தேஷ்முக், முரளிதர் பவார், ஜோஷி, நாராயண ப்ரகாஷ், ஷங்கர் டக்கலே…"

திவாகர் புன்னகைத்தான்.

"இந்த ஆறு பேர்ல ஒருத்தர்தான்."

"யாரு?…"

"மொதல் மொதலா யாரைப் பார்த்தோம்?"

"ஜோஷியை…"

"அவர்கிட்டதான் தப்பு இருக்கு."

"எப்படிச் சொல்றே?"

"ரமணி! எனக்கு ஒரு மனுஷனோட கண்களைப் படிக்கிற சக்தி கொஞ்சம் அதிகமாகவே இருக்கு! இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா, ஹரிஹரனைப் பத்தி ஜோஷிகிட்ட கேட்டதுமே ஜோஷியின் கண்கள்ல ஒரு மைக்ரோ செகண்ட் நேரத்துக்குப் பிரளயம் நடந்தது. அந்தப் பிரளயத்தை நீயும் சரி, மல்ஹோத்ராவும் சரி… கவனிச்சிருக்க வாய்ப்பில்லை. ஏன்னா உங்க ரெண்டு பேரோட பார்வையும் அவர் உதட்டு மேல இருந்தது. நான் அவரோட மைக்ரோ செகண்ட் பிரளயத்தைப் பார்த்தேன். மத்த அஞ்சு பேரை மல்ஹோத்ரா விசாரிக்கும்போது அவங்க கண்கள்ல அந்தப் பிரளயம் நடக்கலை…"

"திவாகர்… நீ சொல்றது உண்மையா?"

"உண்மையா இருக்கலாம்ங்கிறதுதான் என்னோட கணிப்பு…"

"ஜோஷி மேல நீ சந்தேகப்பட்டதை இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ராகிட்டே ஏன் சொல்லலை?"

"காரணமாத்தான்…"

"என்ன காரணம்…?"

"அந்த ஆறு பேர்கிட்டேயும் விசாரணையை முடிச்சுக்கிட்டு இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு வந்ததும் ஒரு வார்த்தை சொன்னார்…
கவனிச்சியா ரமணி?"

"எனக்கு இருந்த மனக்குழப்பத்துல நான் கவனிக்கலை. இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார்?"

"மலபார்ஹில்ஸ் ஏரியா பெரிய பெரிய பணக்காரங்க இருக்கிற இடம். விசாரணை, சோதனைன்னு சொல்லிட்டு ரெண்டாவது
தடவை அங்கே போக முடியாது. போனா மானநஷ்ட வழக்கு அது இதுன்னு போலீஸையே கோர்ட்டுக்கு இழுத்துடுவாங்க… ஸோ இந்த விஷயத்துல நிதானம் காட்டி, ஹரிஹரனைக் கண்டுபிடிக்க வேற மார்க்கத்தைத்தான் தேடியாகணும்னு சொல்லிட்டார். இந்த நிலைமையில நான் ஜோஷி மேல சந்தேகப்படறதாய் சொன்னாலும் மல்ஹோத்ரா அதைக் காதுல போட்டுக்க மாட்டார். அப்படியே அவர் அதைக் காதுல போட்டுக்கிட்டாலும் பயந்துதான் நடவடிக்கை எடுப்பார். அந்த அரைகுறை நடவடிக்கைகளாலே ஜோஷி உஷாராயிடுவார்…"

"ஜோஷிகிட்டதான் ஹரிஹரன் போயிருக்கணும்னு நீ நம்பறியா?"

"இது ஒரு யூகம்தான். ஜோஷி கண்களில் தென்பட்ட அந்த ஒரு மைக்ரோ செகண்ட் பிரளயம் என்னை நம்பச் சொல்லுது…"

"சரி… இப்ப என்ன பண்ணலாம்ங்கிறே?"

"போலீஸுக்குத் தெரியாம நாம உடனே ஒரு நடவடிக்கையில் இறங்கியாகணும்…"

"என்ன நடவடிக்கை?"

"இப்பவே நாம மலபார்ஹில்ஸ் புறப்பட்டுப் போறோம்…"

"போய்…?"

"ஜோஷி வீட்டுக்குப் பின்பக்கச் சுவரேறிக் குதிச்சுப் போறோம். அந்த வீட்டுக்குள்ளேயே நாம பதுங்கியிருந்தா… ஜோஷியோட நடவடிக்கைகள் என்னன்னு தெரிய வரும். ஹரிஹரனைப் பத்தி ஆதாரத்தோடு ஏதாவது தகவல் கிடைச்சா… ஜோஷியை மடக்கிப் போலீஸுக்குத் தகவல் கொடுத்துடலாம்."

ரமணி வெறுமையாகப் புன்னகைத்தான்.

"இது நடக்கக்கூடிய காரியமா திவாகர்?"

"ஏன் நடக்காது…?"

"பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கா முடிஞ்சுட்டா?"

"பிடிக்கிறதை ஒழுங்காப் பிடிச்சா அது பிள்ளையார்தான். ஜோஷிகிட்ட நிச்சயமா ஏதோ தப்பு இருக்கு!"

"எதுக்கும் மல்ஹோத்ராகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு…"

"வேண்டாம் ரமணி… காரியம் கெட்டுடும். போலீஸ் தன்னோட அதிகாரத்தை ஒரு எல்லை வரைக்கும்தான் பிரயோகிக்கும். பணம்
படைச்சவங்களோட எல்லை வந்துட்டா போலீஸ் கூர்மை மழுங்கிப் போகும். ஹரிஹரனைக் கண்டுபிடிக்கிற முயற்சியில் இனிமேல் மல்ஹோத்ரா அதிகத் தீவிரம் காட்டமாட்டார். நாமதான் துணிஞ்சு காரியத்துல இறங்கணும்…"

"எதுக்கும் ஒரு தடவை நல்லா யோசனை பண்ணி…"

"நான் தீர்க்கமா யோசனை பண்ணிப் பார்த்துட்டேன் ரமணி. இனி மல்ஹோத்ராவை நம்பிப் பிரயோஜனமில்லை. இன்னிக்கே,
இப்பவே நாம மலபார்ஹில்ஸ் போறோம். ஜோஷி வீட்டுக்குள்ளே நுழைஞ்சு உண்மைகளைக் கண்டுபிடிக்கப் போறோம்!"

"நான் என்ன சொல்ல வர்றேன்னா…" ரமணி மேற்கொண்டு பேசும் முன் டெலிபோன் முணுமுணுத்துக் கூப்பிட்டது.
ரமணி ரிஸீவரை எடுத்தான்.

"யெஸ்…"

ரிசப்ஷனிலிருந்து பேசினார்கள். "மிஸ்டர் ரமணி! கால் ஃப்ரம் மெட்ராஸ். டாக்டர் மனோரஞ்சிதம் ஈஸ் ஆன் த லைன்."

"ப்ளீஸ்… கிவ் த லைன்!"

சில விநாடிகளுக்குப் பின் மனோரஞ்சிதத்தின் குரல் கேட்டது.

"மிஸ்டர் ரமணி!…"

"சொல்லுங்க டாக்டர்! நான் ரமணிதான். இப்ப அண்ணிக்கு எப்படியிருக்கு டாக்டர்?"

"மரணத்தோட பிடியிலிருந்து கீதாம்பரியை மீட்கக்கூடிய மருந்து இப்போ உங்ககிட்டதான் இருக்கு…"

"டா… டாக்டர்! நீங்க என்ன சொல்றீங்க…?"

"நாளைக்குக் காலையில ஏழே முக்கால் மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளே பம்பாயிலிருந்து நீங்க உங்க அண்ணிக்கு
போன்பண்ணி ஹரிஹரன் மாதிரி பேசணும்…"

"டா… டாக்டர்… அது… வந்து…"

"நோ சென்டிமெண்ட்ஸ் ப்ளீஸ்! அண்ணிக்கிட்ட அவ புருஷன் மாதிரி பேசறதுனால எந்தப் பவித்ரமும் கெட்டுப்போயிடாது. சினிமாவில கட்டற தாலி மாதிரிதான் இதுவும்."

"அண்ணியை இந்தத் தடவை ஏமாத்த முடியாது டாக்டர்…"

"அதை நான் பார்த்துக்கிறேன். கீதாம்பரிகிட்ட உங்க அண்ணன் ஹரிஹரன் எப்படிக் காஷுவலா பேசுவாரோ அதே மாதிரி நீங்க பேசணும். ஆண் குழந்தை பிறந்திருக்கிற சந்தோஷத்தை வார்த்தைகள்ல கொட்டணும். உங்க சந்தோஷத்தைப் பார்த்து கீதாம்பரி சந்தோஷப்படணும்…"

"டா… டாக்டர்…"

"கீதாம்பரியோட உயிர் இப்ப உங்க கையிலதான் இருக்கு. ‘சந்தோஷம்’ என்கிற இன்செக்ஷன் மருந்து அவளோட ரத்தத்துல கலந்தாகணும்…"

"……"

"என்ன பேச்சையே காணோம்?"

"சரி டாக்டர். போன் பண்றேன்…"

"தட்ஸ் குட்! நாளைக்குக் காலையில ஏழே முக்கால் மணியிலிருந்து எட்டு மணிக்குள்ளே போன் பண்ணுங்க! நீங்க போன் பண்ற நேரம், கீதாம்பரி அரை மயக்கத்துல இருப்பா… அந்த மயக்கத்தை பயன்படுத்திக்கிட்டு தயக்கமில்லாம பேசுங்க…"

"யெஸ்… டாக்டர்!…"

"மறந்துட வேண்டாம்! போன் பண்ண வேண்டிய நேரம்… நாளைக்குக் காலையில ஏழே முக்கால் மணியிலிருந்து எட்டு
மணிக்குள்ளே…" டாக்டர் ரிஸீவரை வைத்து விட, ரமணியும் ரிஸீவரை வைத்துவிட்டு திவாகரை ஏறிட்டு விஷயத்தைச் சொல்ல… அவன் ‘உச்’ கொட்டினான்.

"ஜோஷி வீட்டைக் கண்காணிச்சு… கொஞ்சம் ஜாக்கிரதையோடு செயல்பட்டா ஹரிஹரனையே நாம கண்டுபிடிச்சுடலாம்."

"முடியும்ன்னு நினைக்கிறியா?"

"ஓட்டல்ல உட்கார்ந்து பேசிட்டிருந்தா எதுவுமே முடியாது. கிளம்பு… மலபார்ஹில்ஸுக்குப் போவோம்!…"
ரமணி எழுந்தான்.

இதயம் பயத்தில் நொண்டியடித்தது.

‘போலீஸுக்குத் தெரியாமல் இப்படியொரு காரியத்தில் இறங்குவது சரியா?’

திவாகர் அறைக்கதவைப் பூட்டினான்.

"ம்… கிளம்பு!"

அந்த முன்னிரவு நேரத்தில் ஓட்டலை விட்டு இருவரும் வெளியே வந்தார்கள். ரோட்டில் காலியாகப் போன டாக்ஸியைக் கைதட்டி நிறுத்தினான் திவாகர்.

டாக்ஸி நின்றது.

இருவரும் ஏறிக்கொண்டார்கள்.

சர்தார்ஜி டிரைவர் கேட்டான்.

"கிதர் ஜானே கா ஸாப்?"

"மலபார்ஹில்ஸ்."

டாக்ஸி பறந்தது.

***************

தே விநாடிகளில், டாக்டர் சதுர்வேதியின் பங்களாவில் அவருக்கு எதிரே உட்கார்ந்திருந்தார் ஜோஷி!

"டாக்டர்…! உங்களுக்கு இப்போ நெஞ்சுவலி எப்படியிருக்கு?"

"இன்னிக்குப் பகல் பூராவும் ரெஸ்ட் எடுத்ததுல நார்மலுக்கு வந்துட்டேன். நேத்து ராத்திரி ஆர்யாவுக்குத் துணையா வால் சந்தை
நீங்க அனுப்பி வெச்சது ஒரு உபயோகமான காரியம்."

"ரெண்டு நாளாவே டாக்டர்… உங்களுக்கும் சரி, எனக்கும் சரி… நடக்கிற காரியங்கள் எல்லாமே பாதகமாயிருக்கு…"
சதுர்வேதி புன்னகைத்தார்.

"உங்க பக்கம் எந்தவொரு பாதகமான விஷயமும் நடக்கலையே? பின்னேயும் ஹரிஹரன்ங்கிற எலியை உயிரோடு லேப் ரிசர்ச்சுக்கு ப்ரஸன்ட் பண்ணியிருக்கீங்க…?"

"அந்த எலிதான் இப்போ பாதகமான விஷயம்…"

"என்ன சொல்றீங்க ஜோஷி…?"

"ஒரு மணி நேரத்துக்கு முந்தி, ஹரிஹரனைப்பத்தி விசாரிக்கிறதுக்காக போலீஸார் என் வீட்டுப்படியேறி வந்துட்டாங்க…"
சதுர்வேதியின் புருவங்கள் முடிச்சிட்டுக் கொண்டன. "ஹரிஹரன் உங்களைத்தான் பார்க்க வந்தான்னு போலீஸுக்கு எப்படித் தெரிஞ்சுது?"

"போலீஸுக்கு அந்த விஷயம் தெரியலை. ஹரிஹரன் அந்த செவன்த் க்ராஸ் ஸ்ட்ரீட்ல இறங்கி யார் வீட்டுக்கோ போனதா டாக்ஸி டிரைவர் போலீஸ்ல சொல்லியிருக்கான்… போலீஸார் அது எந்த வீடுன்னு தெரிஞ்சுக்கிறதுக்காக அந்தத் தெருவில் இருந்த சில முக்கியமான பிஸினஸ் புள்ளிகளை விசாரிக்க வந்தாங்க. அப்படி விசாரிக்கப்பட்டவங்கள்ல நானும் ஒருத்தன்."
சதுர்வேதி சிரித்தார்.

"அவ்வளவுதானே…! உங்க மேல சந்தேகப்பட்டு போலீஸ் வரலையே?"

"அது ஒரு சம்பிரதாயமான விசாரணைதான் டாக்டர். ஹரிஹரனைப் பத்தி இன்ஸ்பெக்டர் மல்ஹோத்ரா கேட்ட
கேள்விக்கெல்லாம் நான் கொஞ்சம்கூட அதிர்ச்சியை வெளியே காட்டிக்காம, சொல்ல வேண்டிய பதில்களை இயல்பான குரல்ல சொன்னேன். என் பதில்களை கேட்ட இன்ஸ்பெக்டருக்கும் என் மேல எந்த சந்தேகமும் வரலை… ஆனா…?"

"ஆனா..?"

"இன்ஸ்பெக்டரோடு ரமணி திவாகர்ன்னு ரெண்டு பேர் வந்தாங்க. ஹரிஹரனோட ப்ரதர் ரமணி, திவாகர் ப்ரதர் இன் லா. அந்த ரெண்டு பேர்ல திவாகர் பார்த்த பார்வை சரியில்லை. அவன் மேற்கொண்டு என்னை ஸ்மெல் பண்றதுக்குள்ளே அந்த ரெண்டு பேரோட மூச்சையும் நிறுத்தியாகணும்."

சதுர்வேதி இறுகிய முகத்தோடு நிமிர்ந்தார். மெல்லிய குரலில் கேட்டார்.

"அவங்க எங்கே தங்கியிருக்காங்க?"

"ஓட்டல் சில்வர் ஸாண்ட்… ரூம் நம்பர் சிக்ஸ் நாட் எய்ட்!"

(தொடரும்)

About The Author