மாலைச் சூரியன் மறையும் அழகை மாடியில் நின்றவண்ணம் ரசித்துக் கொண்டிருந்தாள் காவேரி. பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கதிரவன் மெல்ல மறையத் துவங்கியது. அவசர அவசரமாக, அத்தனைப் பொன்னாபரணங்களையும் அவிழ்த்துப் பெட்டியில் போட்டு மூடிவிட்டதுபோல், வானம் பொன்னிறத்தை இழந்து, மெதுவாக தன் இயல்பான நீலவண்ணத்துக்கு மாறியது.
சாரதா, காவேரியின் பின்னால் வந்து நின்றாள். அவள் மனதில் பெரும் போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது. காவேரியிடம் அந்தப் புடைவையைப் பற்றிக் கேட்கலாமா? கூடாதா? கேட்டதும் கோபித்துக் கொண்டு புகுந்த வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டால் என்னாவது? வீட்டின் செல்லப் பெண்ணான காவேரியின் மனதை நோகடித்துவிட்டாள் என்று எல்லோரும் நம்மைத்தான் குறை கூறுவர். இத்தனைக் காலம் அன்புடன் வளர்த்த தனக்கு இந்தப் பழி தேவையா என்று ஒரு கணம் யோசித்தாள்.
காவேரி தாயில்லாப் பெண். அந்தக் குறை தெரியாமல் அவளை வளர்த்தவள் சாரதாதான். பெயருக்குத்தான் அவள் அண்ணியே தவிர உண்மையில் ஒரு தாயாகவே அவளைக் கவனித்துக் கொண்டாள். நல்ல இடத்தில் திருமணமும் செய்து கொடுத்தாள். இப்போது காவேரி, தன் கணவனோடு பெங்களூரூவில் வசிக்கிறாள்.
சென்ற வருடம், தசரா பார்க்க வருமாறு, காவேரியும், அவள் கணவன் ரகுவும் வருந்தி வருந்தி அழைத்ததன் பேரில் சாரதா, அவள் கணவன், குழந்தைகள் எல்லோரும் படையாய்க் கிளம்பிச் சென்று ஒரு வாரம் தங்கியிருந்து ஊரைச் சுற்றிப் பார்த்து, தசராக் கொண்டாட்டங்களையும் பார்த்து ரசித்தபின் சென்னைக்குத் திரும்பினர். ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் சாரதாதன் மனங்கவர்ந்த புடைவை ஒன்றை மறந்துபோய் அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டாள்.
அது ஒரு நீலவண்ண பனாரஸ் பட்டுப் புடைவை. கல்லூரியின் இறுதியாண்டில் தோழிகள் நால்வரும் ஒரே மாதிரிப் புடைவை உடுத்தி, புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளவும், வாழ்நாள் முழுவதும் தோழியர் நினைவாக வைத்துப் பாதுகாக்கவும் விரும்பி, நால்வரி ரசனையும் ஒத்துப் போகக் கூடிய வகையில் புடைவை தேடி கடை கடையாய் ஏறி இறங்கியதுதான் மிச்சம்! ஒன்றும் சரிவர அமையாமல் தோழிகள் அனைவரும் சோர்ந்திருந்த சமயம், சாரதாவின் அண்ணன், தன் வட இந்திய நண்பர் ஒருவர் மூலம், ஏகமாய்ச் செலவு செய்து ஒரே நிறம், ஒரே வடிவமைப்பு கொண்ட நான்கு பனாரஸ் பட்டுப் புடைவைகளை வரவழைத்ததுமின்றி, தன்னுடைய பரிசாக அவற்றை அவர்களுக்கு அளித்து, எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தந்தார். அப்புடைவையைப் பார்க்கும்போதெல்லாம் தோழிகளை விடவும், அண்ணனின் அன்பே நினைவுக்கு வந்து அவளை நெகிழச் செய்தது. மேலும், எப்பொழுது அந்தப் புடைவையை உடுத்தினாலும், அவள் கணவன் அவளை ஒரு தேவதையாய் வர்ணிப்பான். அதனால் அப்புடைவையின் மேல் மோகம் கூடிற்று. அந்தப் புடைவையைப் பற்றிய எண்ணங்களே அவள் மனத்தில் சுழன்றடித்துக் கொண்டிருந்தன.
சாரதா மெதுவாக காவேரியின் அருகில் சென்று அவள் தோள் தொட்டு நின்றாள். காவேரி அவளைப் பார்த்துப் புன்னகைத்து, ”மாலை நேரத்தில் வானம் எத்தனை வண்ணஜாலம் காட்டுகிறது! பாருங்கள், அண்ணி!” என்றாள்.
அதை ஆமோதித்துத் தலையசைத்த சாரதா, பேச்சுவாக்கில் கேட்பதுபோல் காவேரியிடம், ”அதோ! அந்த நீலவான நிறத்தில் என்னிடம் ஒரு பனாரஸ் பட்டுப் புடைவை இருந்ததே, உனக்கு நினைவிருக்கிறதா, காவேரி?” என்று கேட்டுவிட்டு, அவள் முகத்தை ஆராய்ந்தாள்.
காவேரி சற்றே யோசித்து, ”ஆமாம், அண்ணி! எனக்கும் அந்தப் புடைவை மிகவும் பிடித்தது. ஏன், அண்ணி, அந்தப் புடைவைக்கு என்ன? ” என்றாள். சாரதாவின் மனத்துக்குள் எள்ளும், கொள்ளும் வெடித்தன. எத்தனை இயல்பாக என்னிடமே கேட்கிறாள்!
சாரதா, எந்த உணர்ச்சியும் காட்டாமல், ”ம்? கொஞ்சநாட்களாக அப்புடைவையைக் காணவில்லை!” என்றாள்.
காவேரி சற்றே பதறியவளாக, ”என்ன, அண்ணி, இப்படி சாதாரணமாக சொல்கிறீர்கள்? உங்கள் கல்லூரித் தோழியர் அனைவரும் ஒரே மாதிரி உடுத்திய புகைப்படம் ஒன்று கூட காண்பித்தீர்களே! நல்ல விலையுயர்ந்த புடைவை அல்லவா அது? எங்கே போனது?” என்றாள்.
சாரதாவுக்கு எரிச்சலாக இருந்தது. தன்னிடம்தான் இருக்கிறது என்று சொன்னால் என்ன, குடியா முழுகிவிடும்? அப்படியே அது தனக்கு வேண்டுமென்று கேட்டால், ‘சரியம்மா, வைத்துக்கொள்!’ என்று சொல்லப் போகிறேன். ஒரு விநாடி மனம் திடுக்கிட்டது. ‘ச்சே! அதை எப்படித் தரமுடியும்? அது என் மனங்கவர்ந்தப் புடைவையல்லவா! வேண்டுமானால் அதைப் போன்று மற்றொன்று வாங்கித் தருகிறேன். அதை விடுத்து, இப்படியா நாடகம் போடுவது! காவேரி எப்போது இப்படி மாறிப் போனாள்?’ என்றெண்ணியவளாய் பெருமூச்சொன்றை வெளியிட்டாள்.
‘அண்ணி, அண்ணி’ என்று இப்பொழுதும் மூச்சுக்கு மூன்று முறை பாசத்தோடு அழைக்கிறாளே! பெங்களூரூவிற்குச் சென்றிருந்தபோது கூட, எப்படிக் கவனித்துக் கொண்டாள்! ‘நான் சென்னை வரும்போது, என்னை உட்கார வைத்து, எல்லா வேலைகளையும் நீங்களே செய்கிறீர்கள்! இப்போது என் முறை! நீங்கள் ஒரு வேலையும் செய்யக்கூடாது என்று கூறி சாரதாவை ஒரு ராணி போல் அல்லவா தாங்கினாள்! அவள் மட்டுமின்றி, அவளுடைய மாமியாரும் என்னமாய் அவளைச் சீராட்டினார்! தாய்வீடு போய் வந்ததைப் போல் அல்லவா உணர்ந்தாள்! அதற்கு ஈடாக என்ன வேண்டுமானாலும் தரலாம்தான். ஆனால் அந்தப் புடைவை விஷயம் மட்டும் உறுத்திக்கொண்டேயிருந்தது.
தன் புடைவை காவேரியின் வீட்டிலிருப்பது அவளுக்குத் தெரியாமலா இருக்கும்? இந்த ஒரு வருடத்தில் இரண்டு முறை சென்னை வந்துபோய் விட்டாள். ஒருமுறையும் புடைவையைப் பற்றிய பேச்சே இல்லை. தானாய்க் கேட்பது உசிதம் இல்லை என்று சாரதாவும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
சில நாட்களுக்கு முன் சாரதாவின் தோழி மாலா வந்திருந்தபோது, அவளிடம் புடைவையைப் பற்றிப் புலம்பியிருந்தாள், சாரதா. அவள் அதற்கொரு உபாயம் சொல்லிச் சென்றாள். தன்னிடமிருந்து யாரும் எதையும் இரவல் வாங்கி, நேரடியாய்க் கேட்டும், திருப்பித் தரத் தவறினால், அது ஒரு ராசியற்றப் பொருள் என்று அவதூறு பரப்பி, தன்னிடம் இருப்பதை விட, மற்றவரிடம் இருப்பதே உத்தமம்; சனியன் ஒழிந்தது என்ற ரீதியில் பேசினால், கூடிய விரைவிலேயே அப்பொருள் தன் கைக்கு வந்துவிடும் என்று கூறியிருந்தாள். மாலாவின் சாமர்த்தியத்தைக் கண்டு சாரதாவுக்கு வியப்பாக இருந்தது. இருப்பினும், இந்த யுத்தியை, தன் அன்பு நாத்தனாரிடமே காட்டுவதா என்று யோசித்தாள். இவ்வளவு தூரம் மறைமுகமாகப் பேசிய பின்னும், காவேரி சற்றும் பிடி கொடுக்காமல், அவளையே கேள்விகளால் துளைத்தெடுக்கவும், மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, மாலாவின் யுத்தியைக் கையாளத் துவங்கினாள், சாரதா.
”விலையுயர்ந்த புடைவைதான்; அழகான புடைவைதான்; ஆனால் துளியும் ராசியில்லாதப் புடைவை!” என்றாள்.
”என்ன அண்ணி, புடைவைக்குக்கூட ராசி பார்க்கிறீர்கள்?” புன்னகை மாறாமல் கேட்டாள், காவேரி.
”ஆமாம், காவேரி! அதையுடுத்தும்போதெல்லாம் எனக்கும், உன் அண்ணனுக்கும் ஏதாவது பிரச்சனை உண்டாகி, வாய் வார்த்தை தடித்து சண்டையாகிவிடுகிறது. ஒருமுறை பள்ளி விழாவுக்குச் சென்றபோது, தடுக்கி விழுந்து, மற்றவர்களின் கேலிக்கும், பரிதாபத்திற்கும் ஆளானேன். மற்றொரு முறை ரயிலைத் தவறவிட்டேன். இப்படி ஒவ்வொரு முறையும் ஏதாவதொரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. அதனால் அந்தப் புடைவை என்னிடம் இல்லாதிருப்பதே நல்லதென்று யோசிக்கிறேன். தற்சமயம் யாரிடம் இருக்கிறதோ, அவர்களுக்கும் இதுபோல் கெடுதல் நிகழ்ந்துவிடுமோ என்றுதான் பயப்படுகிறேன்”
ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்டவைதான் என்றாலும், குரலில் நடுக்கம் உண்டாவதை சாரதாவால் தவிர்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் பொய் பேசி, உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதைகளை அவிழ்த்துதானா அந்தப் புடைவையை மறுபடி அடையவேண்டுமென்று உள்மனம் எக்காளமிட்டது. வேறு வழியில்லை! சொல்லி முடித்தாகிவிட்டது. இனி என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும்.
காவேரியின் முகத்தில் எந்த மாறுதலுமில்லை. எப்பொழுதும்போல் மலர்ந்த முகத்துடன், ”அண்ணி! நீங்கள் எதையெதையோ முடிச்சு போட்டு மனத்தைக் குழப்பிக் கொண்டிருக்கிறீர்கள்! அவை யாவும் தற்செயலாய் நிகழ்ந்தவையாக இருக்கக்கூடும்! எனவே கவலைப் படாதீர்கள்! உங்கள் நல்ல மனத்திற்கு எல்லாமே நன்றாகவே நடக்கும்!” என்று கூறிவிட்டு படிகளில் இறங்கத் துவங்கினாள்.
சாரதாவுக்கு மலைப்பாக இருந்தது. இப்படி எதற்குமே மசியாமல் இருக்கிறாளே என்று காவேரியின் மேல் கோபமும் வந்தது. அதே சமயம், சில நாட்கள் கழித்து, மறந்தவள் போல் அப்புடைவையைக் கொண்டுவந்து அவள் தன்னிடம் தரக்கூடும் என்ற நம்பிக்கையும் எழுந்தது. காவேரியைப் பின் தொடர்ந்து சாரதாவும் படியிறங்கினாள்.
அதன்பிறகு சாரதாபுடைவை பற்றிய பேச்சையே விட்டுவிட்டாள். நான்கைந்து நாட்களுக்குப் பின் காவேரி தன் ஊருக்குக் கிளம்பிச் சென்றாள்.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, சாரதாவின் பெயருக்கு, காவேரியிடமிருந்து பதிவுத் தபாலில் ஒரு சிறிய அட்டைப் பெட்டி வந்துசேர்ந்தது. அதைப் பார்த்ததுமே தன் புடைவை தனக்குத் திரும்பக் கிடைத்துவிட்டதென்பதை சாரதாஊகித்துவிட்டாள். மாலாவின் யோசனை வேலை செய்ததை எண்ணி அகமகிழ்ந்தவளாக, அட்டைப்பெட்டியை அவசரமாகப் பிரித்தாள். உள்ளே ஒரு காகித உறைப் பொட்டலமும், ஒரு கடிதமும் இருந்தன. ஆவல் மேலிட, கடிதத்தை மிகுந்த உற்சாகத்துடன் படிக்கலானாள்.
அன்புள்ள அண்ணி,
நான் ஊருக்கு வந்து சேர்ந்த பிறகுதான், என் மாமியார் சொல்லி, உங்கள் புடைவை இங்கிருப்பது எனக்குத் தெரியவந்தது. நீங்கள் சென்ற முறை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது மறந்துவிட்டுச் சென்றுவிட்டீர்கள் என்றும், அதை என் மாமியார் எடுத்து, என் பெட்டியில் மற்ற புடைவைகளோடு அடுக்கி வைத்துவிட்டதாகவும், நான் தங்களைப் பார்க்க சென்னைக்கு வரும்போது நினைவுபடுத்தலாம் என்றிருந்தவர், அதன்பிறகு அதைப் பற்றி முற்றிலுமாக மறந்துவிட்டதாகவும் கூறினார். என் புடைவைகளோடு உங்கள் புடைவையும் கலந்திருந்ததை என்னால் கண்டுணர முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள், அண்ணி!
(என்னமாய்க் கதை சொல்கிறாள்!)
‘எல்லாம் நன்மைக்கே!’ என்றுதான் நினைக்கிறேன், அண்ணி! அது ஒரு ராசியில்லாத புடைவை என்று குறிப்பிட்டு, அதனால் எப்போதும் ஏதாவது பிரச்சனை உண்டாவதாகச் சொன்னீர்கள். நிகழ்ந்தவை யாவும் தற்செயலானவையாக இருந்தாலும் கூட, அப்புடைவையை உடுத்தும் ஒவ்வொரு முறையும் அல்லது அதைக் காண நேரிடும் ஒவ்வொரு முறையும், கடந்து போன நிகழ்வுகளால் தங்கள் மனம் சங்கடப் படக்கூடும் என்று நான் கருதுவதால் உங்கள் புடைவை சில காலம் என்னிடமே இருக்கட்டும்.
(அய்யோ! முதலுக்கே மோசமா?)
அப்புடைவையினால் உண்டான பாதிப்பு நீங்கிய பின், நீங்கள் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் என்னிடமிருந்து அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். எவ்வளவு கெடுதலான விஷயங்கள் நிகழ்ந்திருந்தாலும், அது ஒரு மகிழ்வான நினைவுகளைத் தரக்கூடியப் புடைவை என்பதை நானறிவேன். ஒரு சமயம் இல்லாவிடினும் மறுசமயம், உங்கள் கல்லூரிக் காலங்களையும், தோழிகளையும் நினைவுபடுத்தி உங்களுக்கு நல்ல மனநிலையைத் தரக்கூடும்.
(அம்மா, காவேரி! எத்தனை உயரிய சிந்தனை உனக்கு! உன்னைத் தவறாக நினைத்த என்னை மன்னித்துவிடம்மா!)
அப்புடைவைக்கு மாற்றாக, நான் சமீபத்தில் வாங்கிய இரண்டு மைசூர்ப் பட்டுப் புடைவைகளை என் அன்புப் பரிசாக அனுப்பி வைக்கிறேன். மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும்.
(நான் செய்த தவற்றை உணர்ந்துவிட்டேன், காவேரி! மேலும் மேலும் உன் அன்பால் என்னைத் தண்டிக்காதே அம்மா!)
என்றும் அன்புடன்,
காவேரி.
கடைசி வரிகளைப் படித்தபோது, கண்ணீர் திரையிட்டு எழுத்துகளை மறைத்தது. எளிதாக முடித்திருக்க வேண்டிய ஒரு செயலை, தன் அகந்தையால் சிக்கலாக்கியதை எண்ணித் தன்னைத்தானே நொந்துகொண்டாள். தன் அற்ப குணத்தை எண்ணி சிறுமைப்பட்டு நின்றவளுக்கு முன், காவேரியின் அன்பு பிரமாண்டமாகத் தெரிந்தது.
கடிதத்தை முழுவதுமாகப் படித்து முடித்தவள், அவசரமாக காகித உறையைப் பிரித்துப் பார்த்தபோது, அவளுக்குப் பிடித்த நீலவண்ணத்தில் ஒன்றும், காவேரிக்குப் பிடித்த இளஞ்சிவப்பு வண்ணத்தில் ஒன்றுமாக இரு மைசூர்ப் பட்டுப் புடைவைகள் அவளைப் பார்த்துச் சிரித்தன. இனி, இவற்றைப் பார்க்கும் தருணங்களில் எல்லாம் காவேரியின் அன்பும், அவளைச் சந்தேகித்த தன் அவசர புத்தியும் நினைவுக்கு வந்து, வாட்டி, வாழ்நாள் தண்டனை தரப்போகின்றன என்று உணர்ந்தவளாக அப்புடைவைகளை எடுத்துத் தன் மற்ற புடைவைகளோடு அலமாரியில் அடுக்கினாள்.
அருமையான கதை! மனித மனங்களின் போராட்டத்தை, நம்பிக்கையை, நம்பிக்கையின்மையை அழகாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.. அந்த இரண்டு மைசூர் பட்டுப் புடவைகளும் அவருக்கு வந்த பரிசல்ல.. தண்டனை!
அவசரப் பட்டு ஒருவரைச் சந்தேகப்படுதல் எவ்வளவு தவறு என்பதைச் சுவையாய் விவரிக்கிறது இக்கதை.. நன்று.
Very nice story!
சலனமின்றிப்பாயும் நன்னீரோட்டம் போன்ற தெள்ளிய நடையில், மனிதரின் மனதிலே சந்தேகப்பேய் புகும்போது ஏற்படும் எண்ண உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்
கதாசிரியர். மிகவும் நல்ல சிறுகதை.
ரொம்ப நன்றாக உள்ளது. அருமையான கதை.