கிருஷ்ணா கபேயில் இனி சாப்பிடுவதில்லை என்று நானும், சுந்தரமூர்த்தி, ராமமூர்த்தி ஆகிய மூவரும் முடிவு செய்தோம்.
மூவருக்குமே அந்த முடிவு. உறுத்தத்தான் செய்தது. கிருஷ்ண லாட்ஜில் இருந்துகொண்டு அதோடு இணைந்த கிருஷ்ணா கபேயில் சாப்பிடாமல் இருப்பது சாத்தியமா?
சாத்தியமாகத்தான் வேண்டும். வேறு வழியில்லை. வேறு சிலரும் அப்படிச் செய்யத்தான் முன்வந்தார்கள் என்பதுதான். எங்களது முடிவுக்குக் கிடைத்த பலம்.
வழக்கம் போல் லாட்ஜை விட்டு வெளியேறும் வேளையில் – வழியில் நிற்கும் அய்யருக்குக் ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டு நழுவிக்கொண்டிருந்தார்கள்.
"யாரை நம்பி பொறந்தேன். போங்காடா போங்க" என்கிற பாணியில் அய்யர் பாட்டுக்கு அலட்சியமாய் நின்றார்.
"உங்களை நம்பி இந்த ஹோட்டலை நடத்தலடா நான்." அவன் பார்வை சொல்லிற்று இப்படி!
அது என்னவோ உண்மைதான். தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து போகும் மாவட்ட நீதிமன்ற வளாக அலுவலகங்கள் எதிரே அவரது கிருஷ்ணா கபே அமைந்து இருந்தது. அந்த ஜன சமூகம் போதாதா அய்யரைத் தூக்கி நிறுத்த? வெந்ததைத் தின்று நீதி வந்தால் போதும் என்று எந்து போகிறவர்கள்தானே? அவரே நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் அது. போட்டு முடியவில்லை. அவரால், அவ்வளவுதான்.
டேபிளுக்கு டேபிள் ஒரு ஆள் எழும் முன்பே வந்து நிற்பார்கள். டிபனை முடித்து, காபியையும் விழுங்கிவிட்டு ஒரேயடியாய்த்தான் எழு வேண்டும். கை கழுவிவிட்டு வந்து ஆற அமரச் சாப்பிடுவோம் என்றால் கதையாகாது. இடம் போய் விடும். இருக்கும் நெருக்கடியில் நின்று குடித்து விட்டுத்தான் போகவேண்டும். அது அய்யர் ராசி. இல்லையென்றால் அப்படி அள்ளிக் கொட்டுமா?
அய்யர் நாற்பதாண்டுகளுக்கு மேல் அங்கு வியாபாரம் பார்த்துக் காலூன்றியவர். நேற்று வந்த நாங்களெல்லாம் வெறும் பிஸ்கோத்து அவருக்கு.
அந்தப் பாரம்பரியம் ஹோட்டல் கட்டிடத்தையும், அந்த லாட்ஜின் பழமையான தோற்றத்தையும் பார்த்தாலே தெரிந்து போகும்.
"ம" வடிவத்தில் கீழேயும் மேலேயும் உள்ள அறைகள், நடுவே உள்ள பட்டாசாலையில்தான் காய்கறிகளும், இலைக்கட்டுகளும், அரிசி மூட்டைகளும் வந்து குவியும், அங்கேயேதான் எல்லாக் குப்பைகளும் வாசனைகளும்.
கொல்லைப்புறத்து அடுப்படி இன்னமும் கூரைதான். எண்ணெய்ப்புகையும். அடுப்புப்புகையும் ஏறி ஏறிக் கறுத்துக் கிடக்கும் மேற்பகுதி. ஜவ்வு ஜவ்வாகப் பிசினாய்த் தொங்கும் கசடுகள். இவற்றுக்கு நடுவேதான் சமையல் வகையறாக்கள், டிபன், காரம், இனிப்பு, எல்லாமும்! யாரையும் அங்கே நுழைய விடமாட்டார் அய்யர். என்ன காரணமோ அறியோம்!
அடுப்படிக்குள் நுழையும் வாயிலை மறைத்து ஒரு அழுக்குதிரை. பணியாட்கள் கையும், முகமும், சாம்பாரும், சட்னியும் துடைத்துத் துடைத்து நிரந்தரமாகத் தொங்கும்.
அதற்கு மாற்று என்பதே இல்லை. பாரம்பரியத்தின் அடையாளம் அது. அந்த வாயிலில் மறைத்து இரண்டடிக்கு முன்னால்தான் இருக்கிறது. கண்ணாடி ஸ்வீட் ஸ்டால.
கிருஷ்ணா லாட்ஜில் குடியிருக்க வருபவர்கள் எல்லாம் கிருஷ்ணா கபேயில்தான் சாப்பிடுவார்கள். அங்கேதான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்.
எல்லாமும் அது பாட்டுக்குத்தான் நடந்து கொண்டிருந்தது. அது என்ன கெட்ட வேளையா? அன்று அது நடந்துபோனது.
அன்று அலுவலக விடுமுறை நாள். கோர்ட் ஜனமும் வராது. நாங்களும் சாவகாசமாக எழுந்து குளித்து, பதினோரு மணியைப் போல சாப்பிடக் கிளம்பினோம். எல்லோரும் உட்கார்ந்தாயிற்று.
ஓரத்துக் காம்புகள் சுருண்டு நிற்க பளபளப்போடு கூடிய தலைவாழை இலைகள், விட்டு நறுக்கப்பட்டு டேபிளின் நீள அகலத்திற்கு சமமாய் விரிக்கப்பட்டுத் தண்ணீர் தெளிக்கப்பட்டிருந்தது.
"மீல்ஸ் என்னடா ஆச்சு?" என கல்லாவிலிருந்து மானேஜர் சந்தானம் குரல் கொடுத்தார்.
"இதோ ஆயிடுத்துண்ணா!" என்றவாறே பரிமாறத் துவங்கிய கொஞ்ச நேரத்தில் மணக்க மணக்க சாம்பார் வாளியை ஆவி பறக்கத் தூக்கி வந்தான் கிச்சா… கத்திரிக்காய் சாம்பார்! சூடான கத்திரிக்காய் சாம்பார் – என்று ஏதோ கல்யாணப்பந்தியில் பரிமாறுபவனைப் போல் குரல் கொடுத்துக்கொண்டே நகன்றார்.
இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிக்குப் அவன் போயாயிற்று… "உவ்வே?" என்று ஒரு சப்தம். அதைத் தொடர்ந்து ஓஓஓ வென்று ஒங்கரிக்கும் ஓசை. உடனேயே அடக்க முடியாமல் டேபிளிலேயே வாந்தி, கையிலெடுத்த சாதம் வாய்க்குள் போகாமல் எல்லோரும் திரும்பிப் பார்க்க… இடக்கையை ‘ஆட்டி ஆட்டி வேண்டாம்’ என்று தடுத்தாட் கொண்டான் அவன். அது சங்கரன். எங்கள் லாட்ஜிலேயே ரொம்பவும் ஆச்சாரமாக, அனுஷ்டானங்களைக் கடைப் பிடிக்கும் உம்மணா மூஞ்சி சங்கரன். யாருடனும் பேசாது அது. தினசரி முகம் பார்க்கும் நடப்பிற்காகவேனும் ஒரு மலர்ச்சி இருக்காது. அதற்கு அந்த தயாள குணம் அன்று!
மூக்கைப் பிடித்துக்கொண்டே எழுந்து ஓடியது அது. என்னவோ புரிந்தாற்போல் எல்லோருக்கும் ஒரே அருவருப்பு. அய்யர்தான் மீதான விஸ்வாசத்தில் யாரும் அதை வெளியில் மூச்சுக் காட்டவில்லை.
உள்ளே முதலை கிடந்தது என்று மிகைப்படுத்திச் சொன்னால் என்ன? என்று எங்களுக்குள் ஒருவிதக் குறுகுறுப்பு. அந்த சைஸøக்குப் பல்லி விழுந்தால்?
அய்யோடா சாமி… ஆளை விடுங்க… என்று சொல்லாமல் கொள்ளாமல் கழன்றுகொண்டார்கள் பலரும்.
என்னைப் பற்றிக் கவலையில்லை. நான் ஆரம்பம் முதலே அய்யர்கடையைச் சாஸ்வதமாய்க் கொண்டவனில்லை. தேடிச் சோறு நிதம் தின்று… பல திண்ணைக் கதைகள் பேசி… என்று கழிக்கிறவன்.
ஊரில் எங்கெங்கே நல்ல சாப்பாடு… எங்கெங்கு சூப்பர் டிபன்… என்று அலைபவன் நான். தினமும் ஒரு இடம். எனக்கு ருசிதான். முக்கியம்… அளவல்ல!
எல்லாமும் சாப்பிட்டு அலுத்துத்தான் போய்விட்டது. வாயில் வைக்க எதுவும் விளங்கவில்லை. சமீப காலமாய் அப்படி ஒரு வெறுப்பு. அறையில் கூடை நிறையப் பழங்கள். டிபன் வேளைகள் கனிகளாய்த்தான் கழிந்தன எனக்கு.
நான் இரண்டாம் எண் அறை. ராமமூர்த்தியும் சுந்தரமூர்த்தியும் அடுத்தாற்போல் இருந்தார்கள்.
"சாரதா மெஸ்ஸிக்குப் போவோமோ?" என்றேன் நான் அங்கு விலை அதிகமாயிற்றே? என்றார்கள் இருவரும். அளவுச்சாப்பாடு, ரேட்டும் ஜாஸ்தி… என்றார் சுந்தரமூர்த்தி. அதை ஆமோதிப்பவர் போல் அமைதி காத்தவர் ராமமூர்த்தி. இருவருமே ஒரே ஆபீஸ். நீதிமன்றத்தில் ஒரே நீதிதான் அவர்களுக்கு!
தெப்பக்குளம் பின்புறம் பிட்சாண்டார் தெருவில் ஒரு மனைப் பலகை மெஸ் இருந்தது. அங்கே போகலாம் என்றார் ராமமூர்த்தி. அது சற்றுத்தூரம் தான். ஆனாலும் போய்விடுவது என்று கிளம்பினோம். காலை எட்டரை மணிக்கெல்லாம் “மீல்ஸ்” ரெடி என்ற போர்டு வெளியில் தொங்கும்.
நான் சரியாகத்தான் நிறைவேற்றிக்கொண்டிருந்தேன் எனது தீர்மானத்தை! இடையிடையில் அவர்கள்தான் நழுவினார்கள். காணாமல் போனார்கள். எங்கோ போய்ச் சாப்பிட்டு வருவார்கள்… சொல்லமாட்டார்கள்.
யாரோ உறவுக்காரார்கள் இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் நான். பிட்சாணடார் மெஸ்ஸின் காலை இழுப்பு அவர்களுக்குப் போதவில்லை என்று புரிந்துகொண்டேன். இருவருமே மதியம் டிபன் சாப்பிடமாட்டார்கள். வெறும் காபிதான். அதுவும் ஏதாவது வழக்காடி தலையில் விழும் கைக்காசு பெயராது.
ரெண்டு பேருமே சேமிப்பைக் குறிக்கோளாக வைத்து இயங்குபவர்கள். பிட்சாண்டார் மெஸ் எனக்கும் கூட ஒரு கட்டத்தில் அலுத்துப்போனது. எவ்வளவு நாளைக்குத்தான் பஸ்ஸில் ஏறி சோற்றுக்காக ஓடுவது? களைத்துப்போனேன் நான்.
"இன்னிக்கு எங்க போனீங்க? பீமா மெஸ்ஸா? கட்டி அடிப்பானே அங்கே?"
இன்னிக்கு எங்கே பலராமா? அடிக்கடி அக்கறையோடு விசாரித்தார்கள் இருவரும்.
என்ன உறுத்தியதோ? எது நினைத்தார்களோ? நாங்க போறோமே ஒரு பாட்டி வீட்டுக்கு… நீங்களும் வர்றீங்களா? உங்களுக்கு அது பிடிக்காது. வேணா வந்து பாருங்… வயிறு நிறையும் உறுதி! என்றார்கள்.
கடைசியாக நான் போனது அந்தப் பாட்டி வீட்டுக்குத்தான் அவர்கள் ஏன் அங்கு போகிறார்கள் என்பது பிறகுதான் புரிந்தது. பாட்டி மாதிரி ஒரு தட்டத்தில் சாதத்தைச் சுமந்துகொண்டு வந்து அன்ன வெட்டியினால் சரிக்க முடியாது யாராலும்… அவ்வளவு தாராளம். அன்னமிட்ட கை என்றால் அதுதான் நிஜம் குழம்பு, மோர் என்று (ரசம் கிடையாது) தட்டு நிறைய சாதம் ஒவ்வொருவருக்கும் வஞ்சகமில்லாமல் போட்டாலும் வஞ்சனையில்லாமல்! என்னால்தான் சாப்பிட முடியவில்லை. பிரமித்துப் போனேன் நான்.
வயிறு நிறைய வேண்டும் ராமமூர்த்திக்கும், சுந்தரமூர்த்திக்கும் தவறு முட்ட வேண்டும். பாட்டி சோற்றால் அடித்ததால் சாத்தியமாயிற்று அவர்களுக்கு!
பாட்டி வைக்கும் குழம்பு அது (சாம்பார் அல்ல) ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது.
நிச்சயம் வயிற்றுப் பசிக்கு ஏற்ற இடம் தான் அது. ஆனால் வாய் ருசிக்க அண்ட முடியாது. அதுதான் உண்மை.
ஆனாலும் நான் போனேன். அங்கே ரெகுலராய் போகத்தான் செய்தேன். இன்னமும் கூடச் சந்தேகந்தான். இவனா இப்படி? எல்லாவற்றுக்குமே மனசுதானே காரணம்?
எண்பது வயது தாண்டிய அந்தப் பாட்டியின் காலட்சேபம் என்னைக் கலங்கடித்தது. கண்பார்வை சரியாகத் தெரியாமல், தட்டுத் தடுமாறிக்கொண்டு ஏழெட்டுப் பேருக்கு சமைத்துப் போட்டு தனது ஜீவனைக் கழித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பாட்டி. சொந்த பந்தம் ஏதுவுமின்றி என்ன தலையெழுத்து இது?
இது எல்லாவற்றையும் விடக் கொடுமை ஒன்று இருந்தது. மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் இல்லாத பெண்ணொன்றை வைத்து வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள் பாட்டி என்னவொரு வாழ்க்கைப் போராட்டம்? இங்கே சோற்றுக்காக நான் அலையாய் அலையப் போக – அதே சோற்றை ஆதாரமாகக் கொண்டு வயிற்றுப் பாட்டுக்காக எப்படியெல்லாம் பரிதவிக்கிறது ஒரு ஜீவன்? ஒன்று நிச்சயமானது.
வாழ்வதற்காகத்தான் சாப்பிடுகிறோம். சாப்பாட்டுக்காக வாழவில்லை. இந்த உண்மை வாய்க்கு ருசி தேடி தெருத்தெருவாய் அலைந்து பரிதவித்த எனக்கு அங்கே புலப்பட்டது. மனதுக்கு வெட்கமாக இருந்தது.
சொந்த ஊருக்கு மாறுதலில் செல்லும்வரை இனி அங்கேதான் சாஸ்வதாய் சாப்பிட்டுக் கழிப்பது என்று திடமாய் உறுதி செய்து கொண்டேன் நான். எனக்கு எங்க பாட்டி ஒருத்தங்க இருக்காங்க சார்… அங்கே போறேன்… என்று அய்யரிடம் சொன்ன கையோடு அறையையும் காலி செய்தேன்.
(நினைவுத் தடங்கள் – மின்னூலில் இருந்து)
To buy the EBook, Please click here
“
nice story