நீதானே என் பொன்வசந்தம்… தலைப்பு திரையில் தோன்றும்போதே ரசிக்க வைக்கிறது. தோன்றும் விதமும் அதன் வண்ணங்களும் பார்வைக்கு விருந்து!
வருண் – நித்யா இடையேயான காதலும் ஊடலும்தான் கதைக் களம். வருண் கல்லூரியில் சேருவதில் படம் ஆரம்பமாகிறது. 1990 ஹீரோ அறிமுகப் பாடல் போல் ஒன்று சந்தானத்துக்காக! பின்பு, கல்லூரி, கலை விழா என ரசிக்கும்படிக் கதை நகர்கிறது. அங்கு நித்யாவைப் பார்க்கும் வருண், பாடல் போட்டியின் வாயிலாகத் தன் காதலை வெளிப்படுத்த விரும்பி "நினைவெல்லாம் நித்யா" படத்தில் இருந்து "நீதானே என் பொன்வசந்தம்" பாடலைப் பாடுகிறான். இதற்கு ஒலிக்கும் கிதாரின் இசை, ஆஹா… அதை மட்டுமே கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
பின்பு விழா முடிந்ததும், இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். அங்கே சிறு வயதுக் காட்சிகள் விரிகின்றன. பின்னணிக்கு "வானம் மெல்லக் கீழிறங்கி" பாடல் ஒலிக்கிறது. பின்பு, பள்ளிப் பருவக் காட்சிகள். அதில் வருண் நித்யாவைக் காபி குடிக்க அழைத்து, அப்போது நடக்கும் உரையாடலில் ரசனை நிரம்பி வழிகிறது. வருண் பள்ளி மாறுகிறான் தன்னவளுக்காக. நெருக்கம் அதிகரிக்கிறது. அப்போது பிரச்சினை வரவேண்டுமே…? ம்… அதுவும் வருகிறது. புரிதல் இல்லாமல் இருவரும் பிரிகிறார்கள்.
மூன்று ஆண்டுகள் கழித்து, இவர்களது சந்திப்பு நிகழ்கிறது…
தங்கள் தவற்றை உணர்ந்து , பழையதை மறந்து மீண்டும் காதலிக்கிறார்கள். மீண்டும் பிரிகிறார்கள்.
சில வருடங்களுக்குப் பின் வருணுக்குத் திருமணம் நிச்சயம் ஆகிறது. திருமணத்துக்கு மூன்று மணி நேரம் முன்பு தன் முன்னாள் காதலியுடன் காரில் ஊர் சுற்றுகிறான். அப்போதும் இருவரும் தங்கள் காதலைப் பரிமாறிக்கொள்வதில்லை. கடைசியில், இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பது படத்தின் முடிவு.
ஒவ்வொரு காட்சியிலும் கெளதம் வாசுதேவ் மேனனின் ரசனையான உருவாக்கம் தெரிகிறது. படத்தின் பிரச்சினை, முன்பாதியில் காட்சிகள் மெதுவாக நகர்வதுதான். பல இடங்களில் பின்னணி இசையே இல்லை. நித்யாவாக சமந்தா மிக அருமையாக நடித்துள்ளார். சோகமானாலும் சரி, சந்தோஷமானாலும் சரி தன்னுடைய முகபாவனைகளில் ரசிக்க வைக்கிறார்.
ஜீவாவும், வருணாக நடுத்தர வர்க்கத்து இளைஞனைக் கண்முன்னே நிறுத்துகிறார். வசனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல இடத்தில் ரசிக்கவும், கைதட்டவும் வைக்கின்றன. சந்தானமும் தன் பணியைச் சரியாகச் செய்திருக்கிறார். கல்லூரிக் கலைவிழாவில் அவர் பேசும் ஒரு வசனம், "இந்த ஃபங்ஷனெல்லாம் வருஷத்துல ஒரு தடவதான் நடத்துறாங்க, அந்த செமெஸ்டர மட்டும் ஏண்டா மூணு மாசம் நடத்துறீங்க?".
கெளதம் மேனன் என்னதான் அழகியலோடு இயக்கி இருந்தாலும், இசை அதற்குச் சற்றும் உதவாமல் ஒலிக்கிறது. தன் வசனங்களை விட இளையராஜாவை அதிகம் நம்பி விட்டார் இயக்குநர். இரண்டாம் பாதியில் பல இடங்களில், உரையாடல் நடந்து கொண்டிருக்கும்போதே பாடல் ஒலிக்கிறது. இதைத் தவிர்த்திருக்கலாம். இசைஞானியின் பாடல்கள் என்னதான் ரசிக்கப்பட்டாலும், பின்னணி இசையில் அவர் கெளதமுக்கு ஈடுகொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அழுத்தமான கதையேதுமில்லாமல் காட்சிகளின் கலவையாய்ப் படத்தை நகர்த்தும் கௌதமின் பாணி இதிலும் தொடர்கிறது.
நீதானே என் பொன்வசந்தம் – உங்களது காதல் தருணங்களாகவும் இருக்கலாம்.