‘மின்னலே’, ‘காக்க காக்க’ ஆகிய திரைப்படங்களில் ஹாரிஸ் ஜெயராஜுடனும், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தில் ரஹ்மானுடனும் கூட்டணி அமைத்த வெற்றி இயக்குநர் கௌதம் மேனன், தற்பொழுது தனது புதுப்படத்திற்கு இசைஞானியுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார் என நான் சொன்னால், இந்தியக் கிரிக்கெட் அணி உலகக்கோப்பையைக் கைப்பற்றிவிட்டது என இத்தனை நாட்களுக்குப் பிறகு அறிவிப்பது போல என்னை முறைப்பீர்கள். இக்கூட்டணியினாலேயே இந்தத் திரைப்படத்திற்கும் இதன் பாடல்களுக்கும் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. தனது ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை இந்தியில் எடுத்துப் படுதோல்வி அடைந்திருக்கும் இயக்குநருக்கும், தொடர்ந்து வெற்றிகளை அடுக்கிக் கொண்டிருக்கும் நாயகன் ஜீவாவுக்கும் ஒரு முக்கியப்படமாக அமையும் இத்திரைப்படம். நாயகி சமந்தாவிற்கு நடிக்கத் தெரியுமா, தெரியாதா என்கிற ஒரு முக்கியக் கேள்விக்கும் பதில் கிடைக்கலாம்!!
சரி, படத்தின் பாடல்களுக்கு வருவோம். எந்த ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலாவது, இசையமைப்பாளரும் பாடகர்களும் சேர்ந்து படத்தின் மொத்தப் பாடல்களையும் மேடையிலேயே அரங்கேற்றியதாகக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்னால், இந்திப்படம் ஒன்றுக்காக நம் ரஹ்மான், அப்படத்தின் இயக்குநர் இம்தியாஸ் அலியுடன் சேர்ந்து அப்படிச் செய்து ஒரு கலக்குக் கலக்கினார்! சமீபத்தில், செப்டம்பர் ஒன்றாம் தேதி, நம் இசைஞானியும் இயக்குநர் கௌதம்மேனனும், அப்படி ஒரு நிகழ்ச்சியில்தான் ‘நீதானே என் பொன்வசந்தம்’ திரைப்படப்பாடல்களை வெளியிட்டனர். தம் நண்பர்களாகிவிட்ட ஹங்கேரிபுடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ராவுடன் சேர்ந்து மீண்டும் அசத்தியிருக்கிறார் இளையராஜா! எல்லாப் பாடல்களையும் எழுதியிருக்கிறார் கவிஞர் நா.முத்துகுமார் அவர்கள். பாடல்களைப் பார்ப்போமா?
காற்றைக் கொஞ்சம்
"நானநான" எனும் ஆண்கோரஸோடு வயலின், கார்ட்ஸ் எல்லாம் அற்புத ஹார்மனியில் சேர, கார்த்திக்கின் குரலில் அழகாய் ஆரம்பிக்கிறது பாடல். "தகிட– தகிட – தகதிமி – தகதிமி" என, வழக்கமான ஆதிதாளத்திலிருந்து (தகதிமி-தகதிமி) விலகி ராஜா அசத்தியிருக்கிறார்! இசையிலும் தாளத்திலும் அவருக்கு இருக்கும் ஆளுமையைப் பற்றிச் சொல்லவேண்டுமா என்ன? ஆங்காங்கே வரும் கார்ட்ஸ் மாற்றங்கள், குறிப்பாகச் சரணத்தில் "சாத்தி வைத்த வீட்டில் தீபம்", "என்னை இங்க மீட்கத்தான்" எனும் வரிகளில், அற்புதம்! நாயகியின் நினைப்பில் நாயகன் பாடும் வழக்கமான பாடல்தான் என்றாலும், கவிஞரின் வரிகள் ரசிக்கும்படி உள்ளன. பாடலின் மெலடியைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை; ராஜாராஜாதான்!
புடிக்கலமாமூ
காலேஜ் இளைஞர்கள் சேர்ந்து பாடும் கலாட்டா பாடல். எலெக்ட்ரிக் கிடாரையும் டிரம்ஸையும் கொண்டு விளையாடியிருக்கிறார் இசைஞானி. இந்திப் பாடல்களில் பிரபலமாகி வரும் சூரஜ்ஜகனின் தமிழ் உச்சரிப்பு மோசமாயில்லை. தாளம் போடவைக்கும் மெட்டு. பாட்டிற்கு நடுவில் நடையிலும் மாற்றம். கிட்டத்தட்ட குத்துப்பாடல் அளவிற்கு மெட்டை மாற்றிவிட்டாலும், பாடல் ரசிக்கும்படியே இருக்கிறது. பாடலின் இந்த இரண்டாம் பகுதியைப் பாடியிருக்கிறார் கார்த்திக்.
என்னோடு வாவா!
டிரம்பெட் ‘பீம்’ என ஊத, இன்னும் ஒரு மெலடிக்குத் தயாராகிறோம்! மீண்டும் ஒரு காதல் பாடல், கார்த்திக் குரலில். ராஜாவின் வழக்கமான, சொக்கவைக்கும் வயலின்கள் நிறைந்த பாடல். ஹங்கேரி ஆர்க்கெஸ்ட்ரா வேறு! கேட்கவேண்டுமா!! முதல்முறை கேட்கும்போது, ஏற்கனவே எங்கேயோ கேட்டதுபோல இருந்தாலும், போகப்போகப் பிடித்துவிடுகிறது. இருந்தாலும், ஒரு குறை உள்ளது. ராஜாவின் பழையசில இன்டெர்லூடுகள் போல இப்போது ஏதும் அமையவில்லை என்பது உண்மையே! எடுத்துக்காட்டுக்கு, இப்படத்திற்குத் தலைப்பு கொடுத்திருக்கும் ‘நினைவெல்லாம் நித்யா’ படப்பாடலை எடுத்துக்கொள்வோம்! அதில் சரணங்களுக்கு முன்புவருமே, இரு இன்டெர்லூடுகள்? அப்பப்பா!!
சாய்ந்து சாய்ந்து
ஓரிரு மாதங்களாகவே இணையத்தில், இப்பாடல் மட்டும் பிரபலாகிவிட்டது. ராஜாவின் பிறந்தநாளன்று யூ-டியூபில் வெளியிட்டார்கள். மிகவும் எளிமையான காதல் டூயட். பாடல் என்னவோ மெலடிதான், மெட்டும் கூடப்பரவாயில்லை; ஆனாலும், பாடும் யுவனின் குரல் கொஞ்சம் நன்றாக இல்லைதான். பாவம் என்கிற பெயரில், அவர் குரலில் வலிதான் தெரிகிறது. சுருதியாவது சேருகின்றதா என்றால் இல்லை! அவரை விட, ரம்யா பரவாயில்லை. இவ்வளவு சொல்லிய பிறகும், இப்பாடலில் கேட்பதற்கு ஒரு விஷயம் உண்டு! இரண்டு சரணங்களுக்கு நடுவில் வரும் இன்டெர்லூட்தான் அது. டிபிகல் ராஜா!
பெண்கள் என்றால்
யுவனின் அபஸ்வரக் குரலில், எலெக்ட்ரிக் கிடார் போன்ற மேற்கத்திய வாத்தியங்கள் முழங்க, பெண்களைத் திட்டிக் கொண்டு ஆரம்பிக்கிறது இப்பாடல். "நீ இப்படி இருந்தும் உன்னிடமே நிற்கிறேன்" எனச் சொல்லும் வரிகள், அற்புதமான மேற்கத்திய பாணி! ரசிக்கவைக்கும் மெட்டு. "மதிக்க என்னிடம் மனம்" என மெலடிக்குத் தாவுதல் ராஜாவின் திறமை. இப்படி ஓரிரு இடங்களைத் தவிர்த்துவிட்டு, இது யுவன் இசையமைத்த பாடல் எனச் சொன்னால் நம்பிவிடலாம்!
முதல்முறை
மீண்டும் மேற்கத்திய ஆதிக்கத்தில் ஒரு பாடல். பாடல் ஆரம்பித்துச் சில நிமிடங்களிலேயே, ராஜாவால் இப்படியெல்லாம் மெட்டுப் போடமுடியுமா என அசந்துவிடுகிறோம்! புடாபெஸ்ட்சிம்ஃபனி ஆர்க்கெஸ்ட்ரா வயலின், வயலா, செல்லோ எனச் சக்கைப்போடு போடுகிறது. இப்பாடலின் சில வரிகளையும் எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறது. பரவாயில்லை, சகித்துக்கொள்வோம். நாயகி, நாயகனின் நினைப்பில் உருகும் பாடல். வரிகள் பரவாயில்லை, குறிப்பாகப் படத்தின் தலைப்பையும் பாடலில் மிகவும் அழகாய்ச் சேர்த்திருக்கிறார்கள்! பாடகி சுனிதி சௌஹானின் உச்சரிப்பில் அவ்வளவு பிழைகள் இல்லாவிட்டாலும், இன்னும் கொஞ்சம் தன் தமிழை அவர் மெருகேற்றவேண்டும்.
சற்று முன்பு
ரம்யாவின் குரலில் ஆரம்பிக்கும் பாடல். இம்முறை, முழுப்பாடலையும் அவரே பாடியிருக்கிறார். முதல் வரி முடிந்தவுடனேயே, புடாபெஸ்ட் ஆர்க்கெஸ்ட்ராவின் முழு ஆதிக்கமும் தெரிகிறது. நாயகனின் நினைப்பில் ஏங்கி ஏங்கிப் பாடுகிறார் நாயகி. இப்பாடலிலும், இரு சரணங்களுக்கு நடுவில் வரும் இன்டெர்லூட் அற்புதம்! அழகிய புல்லாங்குழலுடன் இணையும் சிம்ஃபனி! "தாங்கிப் பிடிக்க உன் தோள்கள் இல்லையே" என்கிற இடத்தில், எத்தனை அற்புதமாய் இளகி இசையமைத்திருக்கிறார்! ஒரு நல்ல மெலடியுடன், அற்புதமான ஆர்க்கெஸ்ட்ராவின் இணைப்பு! ராஜா இசையமைத்த திருவாசகத்தில் வருவதுபோல் "ஆ…" என அவ்வப்போது வரும் ஆண்-பெண் கோரஸும் நிறைய உண்டு.
வானம் மெல்ல
இப்பாட்டை ஆரம்பிப்பதே நம் ஊர்ப்பெண்களின் கோரஸ்தான். ஆனால், அதிலும் கொஞ்சம் ஐரோப்பிய வாசனை! இத்தனை பாடல்களில், ராஜாவின் குரலைக் கேட்கவே இல்லையே என ஏங்கும் இதயங்களுக்கு நிவர்த்தி. பெலாஷிண்டேவுடன் இணைந்து, மீண்டும் ஓர் அழகிய மெலடி! அவர்களின் குரலுக்குப் பின்னணியாக பின்னிப்பிணையும் வயலின்கள்! சில இடங்களில், இல்லை – நிறைய இடங்களில், ராஜா பாடும்பொழுது சிரமப்படுவது போலத்தெரிகிறது. ‘உயிரிலே இணையும் தருணம் தருணம்’ எனப் பல்லவியை முடிக்கும் பொழுதில் கனக்கச்சிதமாய் மெட்டுடன் பொருந்தவேண்டாமா?! குரலில் வயதான அறிகுறிகள் தெரிந்தாலும் பாடலின் மெலடி ரசிக்கும்படியே உள்ளது.
கௌதம்மேனன், தன் படங்களில் பாடல்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பார் என்பது தெரிந்ததே. புகழ்பெற்ற பாடல்களின் வரிகளால் (‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’) தன் படங்களுக்கு அழகாய்த் தலைப்பு வைக்கிறார். இம்முறை, ‘நீதானே என் பொன்வசந்தம்’ எனும் தலைப்போடு நிற்காமல், அப்பாடலுக்கு இசையமைத்தவரையே தம் படத்திற்கும் இசையமைக்க வைத்திருக்கிறார்! பாடல்களும் மிகவும் நன்றாகவே அமைந்துள்ளன. அத்தனை பாடல்களிலும் இளமையின் துடிப்பு பின்னிப்பிணைந்திருக்க, மெலடிகளுக்கும் பஞ்சமில்லை, புடாபெஸ்ட்சிம்ஃபனி ஆர்க்கெஸ்ட்ராவின் மேற்கத்தியபாணியும் சூப்பர்! தமிழ்த்திரையிசை உலகின் முடிசூடா மன்னன் தான்தான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் இளையராஜா! என்றும் இளமை தான் ஐயா உமக்கு! எழுபது வயதாகப் போகின்றது என்று யார் சொன்னது!!
“