நிலை திரும்பும் தேர் (2)

"நானென்ன தொழிலைத் தூர வச்சிட்டா போறேன்? அதையும் சுளுவா முடிச்சிட்டுத்தானே போயிட்டு வாரேன்… எப்பப் பார்த்தாலும் வியாபாரம், துட்டுன்னே கதியாய்க் கிடக்க முடியுமா? மனுஷனுக்கு ஒரு பொழுதுபோக்கு வேண்டாமா?"

"சர்தான், ஏதோ கூத்தாட்டம் பார்க்கிறதுல ஒரு நப்பாசை…." என்று விட்டு விடுவார் நயினா.

காரணம் உள்ளூரில் கீத்துக்கொட்டகைகளுக்குப் படம் பார்க்கப் போனபோது கூட தன் வியாபாரத்தைப் பார்த்தவர் நாயுடு, அது வெளியூர் கொட்டகைகளிலும் ஏன் அரங்கேறக் கூடாது? தன் பையனின் திறமையை என்னவென்று சொல்வது?

இப்படியே இருந்தவர்தான் ஒருனாள் திடீரென்று காணாமல் போனார். வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அரற்றினாள் அவர் மனைவி பஞ்சவர்ணம். ஆனாலும் எல்லோரும் நினைத்ததுபோல், வாய்க்கு வந்தபடி குசுகுசுத்ததுபோல் அப்படியென்றும் கழற்றிக்கொண்டு போய்விடவில்லை நாயுடு. போய் பத்துப் பதினைந்து நாளில் அவரிடமிருந்து ஒரு கடுதாசியும் வரத்தான் செய்தது. தொடர்ந்து வீட்டுச் செலவுக்கும் பணம் அனுப்பியிருந்தார் நாயுடு.

ஆனா ஒரே ஒரு வரியை மட்டும் கண்டு, "இதென்ன கிறுக்குத்தன…?" என்று ரொம்பவும் பிதற்றினாள் பஞ்சவர்ணம்.

"நா சினிமாவுலே ஆக்ட் குடுக்கிற ஆசைலதான் இங்க பட்டணம் வந்திருக்கேன்… மெற்றாசுலதான் நா இருக்கேன்… பயப்படாத… எப்படியும் இந்தத் தொழில்ல நொழஞ்சுடுவேன்…. அதுவரைக்கும் பொறுத்துக்கோ… அப்பப்போ பணம் உனக்குக் கண்டிப்பா வரும்… வருத்தப்படாத…"

அந்த கடைசி வரிதான் ஆறுதல்படுத்தியது பஞ்சவர்ணத்தை. சொன்னதுபோல்வே செய்யவும் செய்தார். எப்படியெல்லாம் அலைந்தாரோ, யார் யார் காலையெல்லாம் பிடித்தாரோ… என்ன செய்தாரோ தெரியாது…

முதன் முதலாக ஒரு படத்தில் தலை காட்டினார் நாயுடு!

கூண்டில் ஏறி பொய்சாட்சி சொல்லும் ஒரே ஒரு காட்சிக்கான வேடம். கிடைத்த சான்சை விடக்கூடாது.

நாபிக் கமலத்திலிருந்து வரும் கணீரென்ற குரலும், வளையல் வியாபாரத்தில் கற்றுக்கொண்ட பல்வேறு நுணுக்க, சைவ, அசைவ முக பாவங்களும் அவருக்கு மிகவும் கைகொடுத்தன.

"எசமான்… அந்தல் லொலையை இந்த ரெண்டு கண்ணால் பார்த்தேனுங்க… பார்த்தோட மட்டுமில்லீங்க… இவரா அந்தக் கொலையைச் செய்தாருன்னு நெனைச்சபோது, மனசே உடைஞ்சு போச்சுங்க…" – என்றவாறே குலுங்கிக் குலுங்கி அழுதார் நாயுடு. டைரக்டர் "கட்…." என்று சொன்ன பிறகும்கூட அழுதுகொண்டே இருந்தார்.

"யோவ், அடுத்த படத்துக்கு மிச்சம் வச்சிக்கய்யா…" என்றவாறே வந்து தோளில் தட்டினார் டைரக்டர்.

அதுதான் தன் நடிப்புக்குக் கிடைத்த "ஷொட்டு" என்று நினைத்தார் நாயுடு.

ஊருக்கு வந்தபோதில் இதயெல்லாம் சொல்லிச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

அந்த முதல் படத்துக்கு அவருக்குக் கிடைத்ததென்னவோ வெறும் நூறு ரூபாய்தான். என்றாலும் இதயத்தில் பசுமரத்தாணியாய் ஊறிப் போயிருந்த லட்சிய வேட்கைக்குக் கிடைத்த கூலியாய் நினைத்துப் பெருமிதப்பட்டுக் கொண்டார். அதற்குப் பின் என்னவோ அவர் ராசிக்குத் தொடர்ந்து படங்கள் கிடைக்கத்தான் செய்தன. சின்னச் சின்ன வேஷங்கள்தான். ஆனாலும் விட்டுவிட முடியுமா?

"பொது ஜனத் தொடர்பு" நபரின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டத்தோடு கூட்டமாக வந்துபோகும் வேஷம் கிடைத்தாலும் விடுவதில்லை அவர்.

வெளிவரும் படங்களெல்லாம் தலை காட்டி காட்டி விடுவதும், ஸ்டூடியோ வட்டாரத்திலேயே அலைந்து கொண்டிருப்பது அவருக்குப் பெருத்த ஆறுதலைத் தந்தது. ஆத்ம திருப்திபளிப்பதாகவும் கழிந்தது.

ஒரு பிரபல நடிகருக்கு மாறு வேஷத்தில் சென்று கதானாயகியை வில்லன் வீட்டிலிருந்து கடத்தி வரும் காட்சிக்கு வளையல்காரர் கெட்அப்புக்கு இவர்தான் பெரிதும் உதவினார். ஒருமுறை தன்னை அப்படி அலங்கரித்துக்கொண்டு, கைகளில் சரம்சரமாக வளையல்களைத் தொங்கவிட்டுக் கொண்டு நடந்து பாடி ஆடிக் காட்டியபோது அந்தப் பெரிய நடிகரிடம், தனக்கு இத்தனை நல் பெயரும், நெருக்கமும் கிடைக்குமென்று நாயுடு கனவுகூடக் காணவில்லை. அச்சு அசலாகத் தன்னைப் போலவே அந்த நடிகர் தனக்கும் மேக்கப் போடுவதற்கு, இவரை மணிக்கணக்காக அதே வளையல்காரர் வேஷத்தில் உட்கார வைத்துவிட்டனர் அன்று. தன் பாக்கெட்டிலிருந்து உருவி ஆயிரம் ரூபாயைப் படக்கென்று அவர் நீட்டியபோது வேண்டாம் என்று சொல்ல மனம் வரவில்லை நாயுடுவுக்கு. ரெண்டு மாசமாய்ப் பணம் அனுப்பாத நிலையில் சடக்கென்று பஞ்சவர்ணத்தின் மூஞ்சிதான் அவர் நினைவுக்கு வந்தது. கைகூப்பி ரொம்பவும் நன்றியோடு வாங்கிக் கொண்டார்.

அந்தப் படத்தில் அந்த நடிகர் போட்ட வளையல்காரர் வேஷம் மிகவும் பிரபலமாகிவிட்டது. இவருக்குப் பெருமை பிடிபடவில்லை. அவரது அடுத்தடுத்த படங்களில் ஏதேனும் ஒரு வேஷம் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தது நாயுடுவுக்கு. இந்தப் பாத்திரத்திற்குத்தான் நாயுடு பொருந்துவார் என்பதாக ஏதும் இல்லை.

வாழ்க்கையின் லட்சியம் ஏதோவொரு விதத்தில் தொடர்ந்து நிறைவேறிக் கொண்டிருப்பதாக ஆறுதல் அடைந்தார். தன்னை ஒரு சினிமா நடிகன் என்று பலரும் கூறுவதில் பெருமை இருந்தது. அதிலும் தன் ஊரார் அப்படி அழைப்பதைப் பெரிதும் வரவேற்றார். அதில் தன் தலை நிமிர்வதாகவும், புகழ் கிடைப்பதாகவும் உணர்ந்து மயங்கினார்.

ஒரு முறை சம்ஸ்தான ராஜாக்கள் சம்பந்தப்பட்ட ஒரு படத்தில் நடித்துவிட்டு ஊர் வந்திருந்தார் நாயுடு. அந்தப் படம் அவர் ஊர் வருவதற்கு முன்பாகவே ரிலீஸாகி, நாயுடுவின் மனைவி பஞ்சவர்ணமும் ஓடிப்போய்ப் பார்த்துவிட்டிருந்தாள்.

எந்தப் பெயரிலான படத்திலெல்லாம் நடிக்கிறேன், அது எவ்வெப்போது ரிலீஸாகிறது என்பது முதற்கொண்டு பஞ்சவர்ணத்திற்குச் சொல்வதில் தவறுவதேயில்லை நாயுடு. அவர் அவளுக்குக் கடுதாசி எழுதுவது அந்த வகையிலேனும் தொடர்கிறதே என்பதில் படு ஆறுதல் அவளுக்கு. ஆகையால் தேதி தப்பினாலும் தன் புருஷன் நடித்த படத்தினைப் பார்ப்பதில் தப்பியதேயில்லை பஞ்சவர்ணம்.

அப்படித்தான் அந்தப் படத்தையும் பார்த்து வந்திருந்தாள் அவள். மறூனாள் ஊரில் வந்து நாயுடு இறங்கினாரோ இல்லையோ, குய்யோ முறையோ என்று அவரைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.

(தொடரும்)

(‘திரை விலகல்’ மின்னூலிலிருந்து)
To buy the EBook, Please click here

About The Author