கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு
உற்ற கலைமடந்தை இன்னும் ஓதுகிறாள்
அவ்வை சொன்ன வார்த்தை இது; ஆழமான பொருளுண்டு!
இத்தரையில் எதையேனும் சொல்லும் எத்தனையோ இதழ்கள் உண்டு;
மற்றவை மானிடர்க்குச் சில போது பயனைத் தரும்;
சந்தா வாங்கிப் பயனையும் பெறும்.
சேவை முகமூடி அணிந்து தேவையெல்லாம் பெற்று விடும்;
உலகத்தியல்பு! உள்ளது தான்; விட்டு விடலாம்!;
சில இதழ்கள் சிந்தை குழப்பும் கொள்கை தரும்;
விந்தை செய்தி போல திரைப்படம் பற்றி பற்ற வைக்கும் செய்தி பரப்பும்;
பார்க்க மட்டும் படங்கள் கொண்ட பாபுலர் இதழ்கள் இவை
படிக்க இல்லை என்பது தான் பார் அறிந்த ரகசியமே!
படிப்பதற்கு ஒரு இதழ் வேண்டும்; பல்வகையில்
உயர் எண்ணம் ஊட்டும் உன்னதக் கட்டுரைகள்,
உலகப் பாங்கைக் காண்பித்து உயர வைக்கும் கதைகள்,
தமிழ் மணக்கும் கவிதைகள், வானம் அளந்ததனைத்தும்
அளந்திடு வன்மை மொழியினை வாழ வைக்கும் சிந்தனைகள்
என இன்ன பிற எங்கேனும் எப்போதும் இலவசமாகக் கிடைக்குமா
என்று ஏங்கித் தவிக்கும் தமிழர் நெஞ்சம்
இனிக்க வந்த தொரு இதழ்;
பாலை வனத்து யாத்ரீகனுக்குச் சிலிர்க்க வைக்கும் ஜிலீர் நீர் போல;
தவத்திலிருந்த பக்தனுக்கு விசுவரூப தரிசனம் போல;
அமுதம் வேண்டி ஏங்கி இருந்தோர்க்குத் தமிழ்த் தாரை தடையின்றிக் கிடைத்தாற் போல;
நல்ல வார்த்தை ஒன்று காண விழைந்த நல்லோர்க்குக்
கம்பனும் வள்ளுவனும் பாரதியும் ஒரு முகமாய் வந்து
கவிதை மழை கனமாகக் கொட்டினாற் போல
வந்தது; இணைய தளத்தில் மலர்ந்தது!
நிலாச்சாரல் தெறித்தது; நெஞ்சம் இனித்தது!
நேரிய சிந்தனை; கூரிய சொற்கள்;
ஆரியம் திராவிடம் என்றெலாம் பேசாத அற்புதம்;
அந்த நாடு இந்த நாடு என்றில்லாமல்
எந்த நாடென்றாலும் கிடைக்கும் தொழில்நுட்ப மாயாஜாலம்!
ஆசிரியர் நிலா ஓர் நாட்டில்
அழகு தமிழ் கட்டுரைகள் எழுதும் அறிஞர்களோ பல நாட்டில்!
தொகுப்பவரோ ஒரு நாட்டில்; அதை இணையத்தில்
வகுப்பவரோ இன்னும் இருப்பர் பிற நாட்டில்.
எத்தனை விந்தையடா! அதை ஏது சொல்லிப் புகழ்வேனடா!
கூட்டு முயற்சியில் தமிழ் சிறக்கிறது;
தமிழ் எண்ணம் சிறக்கிறது;
தங்கு புகழ் பாரத சிந்தனை சிறக்கிறது;
வீங்கி வளரும் வைய விரி வலை
அனைவரையும் வளைத்துச் சிறக்கிறது.
இந்தப் புகழ் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?
வேண்டும் எனில் வானமும் எல்லை இல்லை;
வாருங்கள் நிலாச்சாரல் சிறக்கச் சேர்ந்திடுவோம்
ஐநூறு இதழ் என்பது ஒரு கல் அல்ல;
ஐயாயிரமும் ஒரு பொருட்டல்ல எனச் சொல்லி
நிலாக் குழுவை வாழ்த்திடுவோம்;
நிலா குடும்பம் ஓங்கிப் பெருக
அந்தமில் பெருமை ஆதி பகவனை வேண்டி வணங்கிடுவோம்!
“
நிலா மற்றும் நிலா குடும்பத்தின் இந்த சாதனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நாகராஜன் சார் சொன்னது போலவே ஐநூறு இதழ் போதாது, ஐயாயிரமும் ஒரு பொருட்டல்ல அதற்கு மேலும் சாதித்து சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். – என்.கணேசன்
மிகவும் அருமையான கவிதை.யதார்த்தம் பேசும் கவிதை.
500 வது இதழ் காணும் நிலாச்சாரலுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
500 வது இதழுக்கு வாழ்த்துக்கள்!
நிலாச்சாரலின் குளுமையும் பொலிவும் மீண்டும் பரவிப் பெருக என் வாழ்த்துகள். கவிஞருக்குப் பாராட்டுகள்.
500 வது இதழ் காணும் நிலாச்சாரலுக்கு என் வாழ்த்துக்கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள். நிலாச்சாரல் பற்றி எழுத இந்த இடம் போதாது.
இந்த பகுதியில் வந்த செய்திகல் அனைத்தும் மிகவும் பயனுல்லதாக இருந்தது.மிக்க சந்தோசம்.
வாழ்த்த வாயும் வணங்க தலையும்-நமக்கு
வைத்தது இயற்கை படைப்பின் கலையாம்
வீழ்த்த இயலா வளமிகு தமிழில்-நாகர்
விளம்பிய வாழ்த்தும் விலையில் அமிழ்தே
நிலாவை மட்டுமே பார்த்த எனக்கு இப்போது நிலாச்சாரலை கான்பித்தற்கு திரு ச நாகராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. மன்னை பாசந்தி