மறைந்த எழுத்தாளர் சுஜாதா கதை வசனம் எழுதி, கே. பாலசந்தர் இயக்கி கமல்-ரஜினி இருவரும் இணைந்து நடித்து 1980ல் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் படத்தின் பாடல்களை மறக்க முடியுமா! மெல்லிசை மன்னரின் இசையை விமர்சிக்கத்தான் முடியுமா! அந்த நினைவுகளை சற்றே தள்ளி வைத்துவிட்டு, விரைவில் அதே பெயரில் வரவிருக்கும் திரைப்படத்தைப் பற்றி பேசுவோம்.
மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த "க்ளாஸ்மேட்ஸ்" என்ற மலையாள திரைப்படத்தின் மறுபிம்பம்தான் இது. பிருத்விராஜ், ப்ரியாமணி மற்றும் பலர் நடிக்கும் இத்திரைப்படத்தை குமாரவேல் இயக்குகிறார். விஜய் ஆண்டனி படத்தின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். கல்லூரி நண்பர்கள் வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்று சில வருடங்களுக்குப் பின் சந்திப்பதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது படத்தின் கதை. படம் வெளிவருவதற்கு முன் பாடல்களைப் பற்றித் தெரிந்து கொள்வோமே!
அழகாய் பூக்குதே..
அற்புதமான பாடல். பியானோவில் ஆரம்பித்து, அதனுடன் புல்லாங்குழல் சேர்த்து, பின் ஜானகி ஐயரின் குரலில் தொடர்கிறது. அந்த சமயத்திலேயே சொக்க வைக்கிறார் விஜய். அத்தனை அழகிய மெலடி. காதல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கலைகுமார். ஜானகி ஐயரின் குரலும் சரி, உடன் பாடியிருக்கும் பிரசன்னாவின் குரலும் சரி, ரொம்பவும் இனிமை! கிடாரையும் பேஸையும் பாடல் முழுவதும் நன்றாகவே பிரயோகப்படுத்தியிருக்கிறார் விஜய்.
பியா பியா..
முதல் பாடலுக்கு நேரெதிர் இது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் எல்லா மொழிகளையும் கலந்து கவிஞர் அண்ணாமலை வரிகளை எழுதி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியே பாடி உள்ள பாடல். எதைப் பற்றிய பாடல் இது? ரொம்பவும் முக்கியம்! தெரிந்து கொள்ள விரும்புவருக்கு வெறும் கீஸும் ட்ரம்ஸும் மட்டுமே கேட்கின்றன. அக்மார்க் விஜய் ஆண்டனி பாடல். அது என்ன "பியா" என்று யோசிக்கின்றீர்களா? "என் அன்பே" என்று சொல்வது போல. லதா மங்கேஷ்கரின் "பியா பினா" பாடலைக் கேளுங்கள், அவ்வார்த்தையின் பொருள் துல்லியமாகப் புரியும்.
நண்பனைப் பார்த்த தேதி..
கல்லூரி வாழ்க்கையையும், இள வயது நண்பர்களையும் நினைவூட்டும் பாடல். வரிகள் கவிஞர் அண்ணாமலை. நல்ல கிடார் இசையுடன், ட்ரம்ஸையும் சேர்த்து தந்திருக்கின்றார் விஜய். ஆங்காங்கே எலெக்ட்ரிக் கிடாரும் வயலினும் சக்கை போடு போடுகின்றன. பாடலைப் பாடியிருப்பவர் பென்னி தயாள். நல்ல குரல், உச்சரிப்பின் மீது கொஞ்சம் கவனம் செலுத்தினால், நல்ல எதிர்காலமுண்டு
செக்ஸி லேடி..
இசைத்தட்டில் மெலடியையும் ‘குத்துப்’ பாடலையும் மாற்றி மாற்றி கேட்க வைக்கிறார்கள். இந்தப் பாட்டிலும் ஆங்காங்கே ஹிந்தியும் ஆங்கிலமும் கேட்கின்றன. (உண்மையைச் சொல்லப் போனால், ஆங்காங்கே தமிழ் வார்த்தைகள் கேட்கின்றன என்று சொல்ல வேண்டும்! பரவாயில்லை, நல்ல அம்சங்கள் மீது கவனம் செலுத்துவோம்!) சரியான "க்ளப் டான்ஸ் பாடல்" என்ற உணர்வு ஏற்படுகிறது. உருமி மேளத்தைச் சேர்த்து இந்த "ஜான்ருக்கு" ஒரு புது உருவம் தந்திருக்கிறார் விஜய். பிரியன் வரிகளை எழுத, பாலாஜி, ஷீபா, ரம்யா, மாயா என்றொரு பெரிய பட்டாளமே இப்பாடலை பாடியிருக்கிறது.
இது மாணவர் உலகம்..
சரியாக சொல்லிவிட்டீர்கள், மீண்டும் ஒரு மெலடி இப்போது! ஷீபா வரிகளை எழுதி, அவரே பாடியுள்ளார். உச்சரிப்புதான் -வெரி ஸாரி – சகிக்க முடியவில்லை. வெறும் கீஸ், கிடார், பெண் குரல் – இவை மட்டும் வைத்தே இசையமைத்து விட்டார் விஜய். சின்ன பாடல்தான், ‘பிட் ஸாங்’ என்று சொல்வது போல.
என் பேரு முல்லா..
மீண்டும் ஒரு டப்பாங்குத்து ரகத்தைச் சேர்ந்த பாடல். ரஹ்மான் அடிக்கடி சொல்லும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற வரியோடு பாடல் ஆரம்பிக்கிறது. கவிஞர் அண்ணாமலை வரிகளை எழுத, விஜய் ஆண்டனியே பாடியிருக்கிறார். கல்லூரி வாழ்க்கையைத் தந்ததற்காக இறைவனைப் போற்றிப் பாடுகிறார்கள். இன்னும் ஒரு அக்மார்க் விஜய் ஆண்டனி பாடல். வேறேதும் சொல்வதற்கில்லை. அடுத்த பாடல்…
நாட்கள் நகர்ந்து..
இன்னும் ஒரு அற்புதமான மெலடி. மனதை வருடும் மெட்டு, நெஞ்சைப் பிழியும் வரிகள். ரொம்பவும் வாத்தியங்கள் பிரயோகிக்காமல், மெட்டை மட்டுமே நம்பினால் போதும் என்று நினைத்து ஒரு நல்ல பாடலைத் தந்திருக்கிறார் விஜய். பிரபா வரிகளை எழுத, கௌஷிக் பாடியிருக்கிறார். இதுவும் "பிட் ஸாங்"தான் – "கல்லூரித் தாயை நினைத்தாலே இனிக்கும்" என்று சொல்லும் அழகிய குறும்பாடல்.
எல்லா விதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நினைப்புடன் விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார் போலும். நல்ல மெலடிகள், டப்பாங்குத்து பாடல்என்று எல்லாம் கலந்த கமர்ஷியல் கலவையைத் தந்திருக்கிறார். இன்னும் சில வருடங்களுக்குப் பிறகு நினைத்துப் பார்த்தால், இப்படத்தின் பாடல்கள் இனிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
“
சுபெர் சொங் சுபெர் ல்ய்ரிcச் பர்டிcஉலர் கல்லுரிதை சொங் வெர்ய் நிcஎ இ தன்க் டொ விஜய் அன்டொன்ய் திச் சொங் ரெமெம்பெர் டொ ம்ய் மின்ட்