நேற்றிரவு முழுவதும் வாக்குவாதம். அப்பாவிடம் என்ன சொல்லியும் சமாதானம் ஆகவில்லை.
"இல்லம்மா. இப்ப உனக்குப் புரியாது. பின்னால நீ மட்டும் தனியா இருக்கிறப்ப ரொம்ப வருத்தப்படுவே" என்றார் திரும்பத் திரும்ப.
மிருணாளினி நிறையவே யோசித்தாள். திருமணம் ஆகாவிட்டால்தான் என்ன? இப்போது போல் எப்போதும் இருந்து விட்டுப் போகிறேன்.
"நீ உன்னோட இளமைத் துடிப்புல ஒரு பிரச்சனையை அணுகிப் பார்க்கிற. நான் என்னோட முதுமை தந்த அனுபவத்துல அலசி ஆராயறேம்மா. என் தீராணம் சரின்னு பின்னால உனக்குப் புரியும்" என்றார் துளிக்கூட கோபமே இல்லாத குரலில்.
இன்று காலை பத்து மணிக்குள் பதில் சொல்வதாகச் சொல்லியிருக்கிறாள்.
இரண்டு முறை இந்த வீட்டிற்கு வந்திருக்கிறான். நகைச்சுவை உணர்வு உள்ளவன். ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களை வைத்து ஒரு ஆடவனை மதிப்பிட்டுவிட முடியாது. ஆணுக்குப் பழகுகிற பெண்ணிடம் வேறு முகம். அவளே மனைவியாகி விட்டால் இன்னொரு முகம்.
இரவு வெகு நேரங்கழித்துப் படுத்தாலோ என்னவோ அப்பா இன்னும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
மணி ஏழரை. எழுப்ப வேண்டாம். அவராகவே எழுந்திருக்கட்டும். வாசலில் வந்து அமர்ந்தாள்.
பூச்செடிகளின் வரிசை. தினசரி இவள் வருகைக்காகக் காத்திருக்கிற மாதிரி பிரமை தட்டும். வந்ததும் தலையசைத்து வரவேற்கும் சில நேரங்களில் பேசும். எப்போதும் சிரிக்கும்.
பூக்கள். பறித்தாலும், விட்டாலும் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே ஜீவனுள்ளவை. நேரந் தப்பியதும் வாடி வதங்கி தரையில் மதிபடும். மலர்நத நேரம் அதன் அழகுக்கு ஈடு சொல்ல முடியாது.
"வாசம் வீசற கொஞ்ச நேரத்துக்காகவே பூத்த மாதிரி… ப்ச்… அதுலேயே உங்களுக்குத் திருப்தியா…" என்றாள் பார்வையால்.
பூக்கள் காற்றில் ஆடுன.
"சொல்லேன்… வாடிப் போகவா செடியில் பூத்தீங்க" என்றாள் உரக்க. அவளையும் மீறி குரல் வெளிப்பட்டது.
கூடவே பதிலும். "இருக்கிற நேரத்தை அர்த்தமுள்ளதாக்கி வாழ்ந்தாலே… போதாதா…"
திடுக்கிட்டு நிமிர்ந்தாள். பூவா பேசியது?
எதிரே சங்கர். புத்துணர்ச்சியாய் நின்றான்.
"நீ… நீங்களா"
"ம். உங்கள் பதில் எதுவென்று தெரிய என்னுள் பதட்டம். பத்து மணி வரை காத்திருப்பானேன் என்று வந்து விட்டேன்…" இயல்பாகப் பேசினான்.
மிருணாளினி எழுந்து நின்றாள். "வாங்க…"
உள்ளே வந்தார்கள். அப்பா விழித்திருந்தார். இவர்கள் சேர்ந்து வருவதைப் பார்த்து முகம் மலர்ந்தார்.
"வாப்பா…" என்றார் உற்சாகமாய்.
ஆறு மாசமாய் அப்பாவுக்குப் படுக்கையில்தான் எல்லாமும். நோவு என்று முகஞ்சுளித்துப் பார்த்ததில்லை. அதையும் இயல்பாக ஏற்றுக் கொண்ட மாதிரி படுத்திருந்தார். முதுகு நரம்பு பாதிக்கப்பட்டதில் "நகரக்கூடாது" என்று உத்தரவு.
"ரிலாக்ஸ்…" என்றான் புன்சிரிப்பாய்.
நான்தான் வந்து விட்டேன்… நான் பார்த்துக் கொள்கிறேனே… என்பது போல புன்னகை.
தானாகவே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டு அமர்ந்தான். "உங்களோட காலை நேரத் தனிமையை பாழடிச்சுட்டேனா…" என்றான் மிருணாளினியிடம்.
என்ன சொல்ல. ஒரு விதத்தில் "ஆமாம்" தான். பேசாமலிருந்தாள். இவன் வருகை ஒரு நிகழ்வின் இயல்பைத் துரிதப்படுத்திய மாதிரி நெருடல்.
"சம்பந்தப்பட்ட நாம ரெண்டு பேருமே சேர்ந்து அணுகினா… யெஸ் ஆர் நோன்னு ஒரு முடிவு எடுத்துரலாம்னு தோணிச்சு…"
"நானும் இருக்கலாமா… ஒரு பார்வையாளனா…" என்றார் அப்பா.
அப்பாவிற்கு இந்த விளையாட்டு பிடித்துப் போயிருக்க வேண்டும், அல்லது படுக்கையிலேயே கிடந்த கழிவிரக்கமாய்க்கூட இருக்கலாம். தாமும் கலந்து கொள்ள எதேனும் ஒரு நிகழ்ச்சி அவருக்கும் வேண்டியிருந்திருக்கிறது.
"பிளீஸ்… உட்காருங்களேன்" என்றான்.
அமர்ந்தாள். அவளுக்கு இதில் பூரணமாய் உடன்பாடு இல்லைதான். எது அவன் முகத்துக்கு எதிரே அதைச் சொல்லிவிடாமல் தடுத்து என்று புரியவில்லை.
"அப்பாவிடம் இந்த யோசனையை நான்தான் சொன்னேன். அதாவது… எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்று… வாய்ப்புக் கிடைத்தால் நல்ல கணவனாய் இருக்க முயற்சி செய்வேன்…"
கடைசி வரிக்கு ஒவ்வொரு வார்த்தையும் பூப்போல மலர்ந்து வெளிப்பட்டன. சிரிப்புடன் பேசினான்.
"அவசரப்படுத்த வேணாம்தான். ஆனால் மிருணாளினி…" நிறுத்தினான்.
அப்பாவைப் பார்த்தான். ஆர்வமாய் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சட்டென்று திரும்ப முடியவில்லை.
"உங்களுடைய பாஸிடிவ் பதில்… உங்களுக்கு மட்டுமின்றி… எனக்குக்கூட ஒரு சந்தோஷத்தைத் தரும். ம்… மீண்டும் புது நலம் பெற்று… அப்பா நடக்கக்கூட ஆரம்பித்து விடுவார்… படுக்கைக்கு இன்னொரு காரணம் மனத்தளர்ச்சி கூடத்தான்…"
மிருணாளினி அப்பாவைப் பார்த்தாள்.
"ஸார்… ஃ போர்ஸ் பண்ணலே… இந்த வரியை அவருக்குத் தெரியாமக்கூட உங்ககிட்டே பேசலாம், அதுல எனக்கு விருப்பம் இல்லே…"
"டீ போடும்மா…" என்றார் அப்பா திடீரென. எழுந்தாள். சமையறைக்குள் போனாள்.
(மீதி அடுத்த இதழில்)