நாளை என் மகனும்…..

பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிகள்,
பார்த்திராத வடிவங்களில் பந்துகள்,
உச்சியிலொரு ஒழுங்கற்ற சூரியன்,
நீரின்றித் துள்ளும் நீலநிறமீன்,
பக்கத்தில் பராக்குபார்த்தபடி
ஒற்றைக்கால் கொக்கு,
பாலு, பானுவென்று ஆங்கிலத்தில்
அரைகுறையாய் எழுதப்பட்ட பெயர்கள்,
எல்லாமும் உணர்த்தின,
இதற்குமுன் அங்கேயொரு குழந்தை….
ஆணோ பெண்ணோ தெரியவில்லை….
வசித்திருக்கிறது என்பதை!

ஒழுங்கற்ற வட்டமுணர்த்தியது
ஒன்றரை வயதிருக்கலாமென்பதை!
ஓரடிமேலிருந்த ஆங்கில எழுத்துகள் சொல்லியது
அது பள்ளிக்குழந்தையுடையதென்பதை!
எட்டுப்போட்டு வரையப்பட்ட பூனைக்கு
இருபக்கமும் வரையப்பட்ட வால்கள் மூலம் புரிந்தது
சண்டையிட்ட இரண்டுவாண்டுகளின்
கைவண்ணமென்பது!

சுவரின் ஒரு மூலையிலிருந்து மறுமூலை வரை
சீராய் இழுக்கப்பட்ட சிவப்பு கிரேயான் பார்த்தபோது
சின்னவயதில் அப்பாவிடம்
இதற்காக வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.
வீடு பிடித்தால் சொல்லுங்கள்,
வெள்ளையடித்துத் தயாராக்கிவிடுகிறேனென்ற
உரிமையாளரிடம்….

இப்படியே தரமுடியுமா என்றேன்.
விநோதமாய்ப் பார்த்தவரிடம்
விளக்க நா எழவில்லை….
மனவளர்ச்சியற்ற மகனிடம்
மாற்றம் உண்டாக்கும் என்றே
எங்கள் சோர்ந்த மனதோரம்
சுடர்விடும் நம்பிக்கையை!

About The Author

10 Comments

  1. கலையரசி

    மனவளர்ச்சி குன்றிய மகனைப் பெற்றெடுத்த ஒரு தாயின் பரிதவிப்பை மனதைத் தொடும் வகையில் எடுத்தியம்புகிறது இக்கவிதை. அப்படியே தர முடியுமா என்று கேட்ட அத்தாய்க்கு மனக்கோளாறோ என்று அந்த வீட்டு உரிமையாளர் நினைத்திருப்பார். நாளை தன் மகனும் இதைப் போல் சுவரில் கிறுக்கும் நார்மல் குழந்தையாகி விட மாட்டானா என்ற நப்பாசை அந்தத் தாய்க்கு. அற்புதம் கீதம்! பாராட்டுக்கள்.

  2. கீதா

    விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி கலையரசி அவர்களே.

  3. rishaban

    இப்படியே தரமுடியுமா என்றேன்.
    விநோதமாய்ப் பார்த்தவரிடம்
    விளக்க நா எழவில்லை….
    அற்புதம்.. ஜீவனுள்ள கவிதை.. வாசித்ததும் அப்படியே அந்தச் சூழல் மனசுள்.

  4. mini

    Miga arumaiyana kavithai Geetha. romba nalla namma Geetha than Geetha Madhivanana appdinu romba nalla ketkanumnu. thappa kettu viduvomonu ketkala. so happy to know that. romba alaga eluthringa Geetha. mansai appadiyae etho panuthu in tha kavithai.naan eppothum ninaipen. namma kulanthaigal classla first varanum niraya activitesla first varanumnu ninaikormoe..nammku satharanama thonukira visayangalae challengea irukm kids moms eppadi feel panuvanganu. romba varuthama irukum.

  5. கீதா

    நன்றி மதுமிதா.

    நன்றி ரிஷபன். உங்களிடமிருந்து பாராட்டு பெற்றதில் மிகவும் உற்சாகமாக உணர்கிறேன்.

  6. கீதா

    நன்றி மினி. கீதாவும் நானே, கீதா மதிவாணனும் நானே! 🙂

    இந்தக் கவிதை ஒரு கற்பனைதான். உண்மையிலேயே அந்த நிலையில் இருக்கும் தாய் எப்படி உணர்வாங்கன்னு எனக்குத் தெரியல. இருந்தாலும் என் மனசில் தோணியதைக் கவிதையாக்கினேன்.

  7. velmathi

    Actually i got tears when i read this poem. I use to have worries about my sons not getting 1st in class or so. but after reading this, comparing with those MOMs mine is nothing.. no more complains.. gonna enjoy whatever they do…

Comments are closed.