அவளைப் பார்த்ததும் அசடு வழிவதைத் தவிர்க்கப் பிரயத்தனப் பட்டேன். நடிப்பு வரவில்லை.
“யார்ங்க அது” என்றாள்.
“அது, நம்ம செல்வராஜ்.”
“நம்ம செல்வராஜா, அது யார்ங்க நம்ம செல்வராஜ்?”
“நம்ம எக்ஸ் ஸ்டாஃப், நம்ம கடையில வேல பாத்த பையன். அதுக்குள்ள மறந்துட்டியா நீ?”
“என்னமோ கவர் குடுத்துட்டுப் போன மாதிரியிருந்ததே? இன்விடேஷனா? அவனுக்குக் கல்யாணமாமா?”
“ஆமா” என்கிற ஒரே வார்த்தையில் நான் தப்பித்திருக்கலாம். முடியவில்லை.
நடிக்கத்தான் வரவில்லை, இழவு பொய் சொல்லவாவது வருகிறதா!
“என்னன்னு காட்டுங்களேன்” என்று என்னுடைய கையிலிருந்து கவரை வாங்கிப் பிரித்துப் பார்த்தவள், அதிலிருந்த கரன்ஸியைப் பார்த்ததும் முகம் இறுகினாள்.
“அவன்ட்ட கைமாத்து வாங்கினீங்களா?”
எனக்கெதிரே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு என் முகத்தை ஊடுருவினாள். அவளுடைய பார்வையை எதிர்கொள்ளத் தயக்கமாயிருந்தாலும், வார்த்தைகளை எதிர் கொண்டேன்.
“கைமாத்துன்னு சொல்லாத. அது அநாகரிகமான வார்த்த. இது கடன்.”
“ஏங்க, நம்மகிட்ட வேல பாத்த ஒர்த்தன்ட்ட கை நீட்டிக் கடன் வாங்கறதுக்கு ஒங்களுக்கு கேவலமாயில்லியா” என்றவள். சட்டென நான் தலை நிமிர்ந்து அவளைப் பார்த்ததும், சின்ன ஒரு பதற்றத்துடன், “ஸாரி, ஸாரி” என்றாள்.
“நா சொன்னதுல, கேவலமாயில்லியாங்கற கடைசி வார்த்தைய டிலிட் பண்ணிட்டு, சங்கடமாயில்லியாங்கற வார்த்தையப் போட்டுக்கோங்க, ப்ளீஸ்” என்றாள், என் கைகளைப் பற்றியபடி.
நான் சிரித்தேன். அவளுந்தான். தற்காலிக இறுக்கந் தளர்ந்து ரெண்டு பேரும் சிரித்து முடித்தபின், இப்போது உரையாடலைத் தொடர வேண்டியது நீதான் என்று உணர்த்துகிற மாதிரி இவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சங்கடமாத்தான் இருக்கும்மா” என்று ஒப்புக்கொண்டேன்.
“என்ன செய்றதும்மா, ரெண்டாந்தேதியோ மூணாந்தேதியோதான் அக்காட்டயிருந்து டிடி வரும். இன்னிக்கி முப்பத்தொண்ணு.”
“ஒரு மூணு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாதா? அவன் நம்மளப் பத்தி என்ன நெனப்பான்!”
“ஒண்ணும் நெனக்ய மாட்டான். அவன் ஒரு விஸ்வாசமான ஊழியனாயிருந்தவன். இப்ப வேற ஒரு வேலையில நல்லா சம்பாதிக்கிறான். மூணு நாள்ல நா திருப்பிக் குடுத்துருவேன்னு அவனுக்குத் தெரியும். இது ஒரு எமர்ஜென்ஸின்னும் அவனுக்குத் தெரியும்.”
“அப்படி என்னங்க எமர்ஜன்ஸி?”
“நேத்தே சொன்னேன்ல, இன்னிக்கி சாயங்காலம் க்ளப் மீட்டிங் இருக்கு. இன்னிக்கி மீட்டிங்ல மெம்பர்ஸ் எல்லாம் ஆளுக்கு ஆயிரம் ரூவா குடுக்கணும்னு சொன்னாங்க. ஆர்ஃபனேஜ் ப்ராஜக்ட்க்காக….”
“அது சரி, ஒங்க க்ளப் மெம்பர்ஸெல்லாம் வசதியானவங்க. நமக்கு இது இப்பப் பெரிய தொகையில்லியா! இந்த க்ளப்பே நமக்கு இப்ப லக்ஷரிதானேங்க! நாம நொடிச்சுப் போனவங்கன்னு ஒங்க க்ளப் மெம்பர்ஸ்க்குத் தெரியுந்தானேங்க?”
“தெரியுந்தான். ஆனாலும் என்ன ஓரங்கட்டிராம மரியாத குடுத்து வச்சிருக்காங்க. நொடிச்சிப் போனவன்னு நெத்தியில லேபில் ஒட்டிக்கிட்டு அலஞ்சேன்னா, அப்பறம் க்ளப்ல ஒரு பய நம்மள மதிக்க மாட்டான். அதுவும் போக, மை டார்லிங், இந்தக் கஷ்ட காலம் இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோ தான். சினிமா ப்ரடியூஸர்ஸ் மூணுபேர்ட்ட கத சொல்லியிருக்கேன். அதுல ஒண்ணு க்ளிக் ஆனாக்கூட போதும், ஐயா எங்கேயோ போயிருவார். ஆகையினால, நீ என்ன செய்ற, எதப்பத்தியும் கவலப்படாம ரிலாக்ஸ் பண்ற. ஈவ்னிங் ரெடியாகி நாம ரெண்டு பேரும் க்ளப் மீட்டிங்க்குப் போறோம். ஓக்கே மேடம்?”
“ஓக்கே பாஸ்” என்று எழுந்து கொண்டவள் செல்லமாய் என் தலைமுடியைச் சிலுப்பி விட்டு விட்டுக் கிச்சனுக்குள் புகுந்து கொண்டாள்.
நொடித்துப் போனவன்! பத்துமாசம் முன்பு வரை, மூவாயிரம் சதுர அடியில், மாசம் எழுபதாயிரம் வாடகையில், அண்ணாநகரில் ஓர் ஏஸி டிப்பார்ட்மென்ட் ஸ்டோரின் உரிமையாளன்.
இன்றைக்கு, நொடித்துப் போனவன்!
வீடு, கார் எல்லாவற்றையும் விற்று, மார்வாடிக் கடன்களை அடைத்துவிட்டு, வருமானமில்லாமல், ஒரு ஸிங்கிள் பெட்ரூம் வாடகை ஃப்ளாட்டில் இப்போது வாசம்.
பம்பாயிலிருக்கிற அக்கா, தன்னுடைய டாக்டர் சம்பாத்தியத்தில், அத்தானுக்குத் தெரியாமல் மாசமாசம் அனுப்புகிற தொகையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சாபத்திலிருந்து மீண்டு, தம்பி எப்படியும் மேலே வந்து விடுவான் என்பதில் அக்காவுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
அன்புள்ள அக்கா. கல்யாணமாகிப் பன்னிரண்டு வருஷங்களாகியும் குழந்தையில்லையென்பது பெரிய மனக்குறையாயிருந்தது. இப்போது அதுவே ஒரு நல்ல விஷயமாய்த் தெரிகிறது.
இவளுக்கு நான் குழந்தை, எனக்கு இவள் குழந்தை. பத்திரிகைகளுக்குக் கதையெழுதுவதில் மாசம் ஐநூறு அருநூறு கிடைக்கும். மூணுமாசமாய் அந்த வருமானமும் இல்லை. ஆறுமாசமாய் சினிமாக் கம்பெனிகளுக்கு அலைச்சல்.மூணு தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தந்திருக்கிறார்கள்.
சாயங்காலம் ஆட்டோவில் போகிறபோது, நம்ம ஆள் ரொம்ப ஆனந்தமாயிருந்தாள். “இன்னும் ரெண்டு மாசமோ மூணு மாசமோதான், ஐயா எங்கேயோ போயிருவார்” என்று காலையில் நான் சொன்னதில் பூரண விஸ்வாசத்தோடிருக்கிறாள். ஆண்டவனே, இவளுடையவும் என்னுடையவும் நம்பிக்கைகளை நிறைவேற்றி வை.
(மீதி அடுத்த இதழில்)