நாய் தாத்தா

நாய் தாத்தா., அதுதான் அவர் பெயர் இந்தப் பகுதியில். பெரும்பாலானவர்கள் அவரை அறிந்திருந்தனர். அவர்களுக்கு அவர்மேல் ஒரு வெறுப்பு இருந்ததை, வார்த்தைகளில் கசிந்தோடும் கசப்பிலிருந்து உணர முடிந்தது. ஏதோ ஒரு நாளில், அவர் வளர்க்கும் நாய்களில் ஒன்று துரத்தியதால், ஏற்பட்ட மூச்சு அடங்காதவர்களாகவே அவர்கள் பேசினர். அவர் வீட்டிற்குப் பக்கத்து வீட்டை நாங்கள் வாங்கிக் குடியேறியிருப்பதற்காகச் சிலர் வருந்தினர். சிலர் எச்சரித்தனர். எனக்கு நாய்கள் என்றால் பிரியமில்லை என்றாலும், அவரைப் பார்த்த நிமிடத்தில் அவரைப் பற்றிய ஊராரின் பயமுறுத்தல்கள் அர்த்தமற்றவை என்று தோன்றிவிட்டனது. வீட்டிற்குக் குடியேறுவதற்காக வந்த முதல்நாளிலேயே அவரைப் பார்த்தேன். அவர் என்னைவிட ஒரிரு வயது பெரியவராக இருக்கலாம். ஆனால், அப்படியும் சொல்லிவிட முடியாதபடிக்கு அவர் தோற்றம் இருந்தது. பத்து பதினைந்து நாய்கள் ஒரு வட்டம்போல அவரைச் சுற்றிக் கொண்டு வர, நடுவில் ஒரு சிப்பாயின் கம்பீரத்தோடு அவர் நடந்து வந்தார். சட்டையில்லாத உடலில் தசைகளின் குலையாத தன்மையினைக் கண்டதும் அவர் நல்ல உழைப்பாளி என்று தெரிந்துபோனது. சாமான்களை இறக்கிக் கொண்டிருந்த வேலையாட்களைப் பார்த்து அவரது நாய்கள் சத்தமிட்டன. அவர் மெல்லியக் குரலில் அவற்றை அதட்டினார். அவை கீழ்ப்படிந்தன. அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடிக் கடந்து போனார்.

புறநகர்ப் பகுதியில் உள்ள இந்த வீடு மிகவும் குறைந்த விலைக்கு வருவதாகக் கூறித், தரகர் வந்து சொன்ன அன்றே என் மகன் வந்து பார்த்து, வீடும் அவனுக்குப் பிடித்துப் போனது. விலை அரைக் கோடியைத் தாண்டுகிறது. இத்தனை செலவில் அதுவும் கடன்பட்டு இப்போது இவ்வளவு பெரிய வீடு தேவைதானா? என்று நான் கேட்ட கேள்வி கடைசி வரை யார் காதிலும் விழவேயில்லை. விலைபேசி முடித்த மறுநாளே, மகனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்துவிட, அமெரிக்கா போகுமுன்பே வீடு மாற்றிவிடும் ஆசையில் வேகவேகமாகப் பத்திரப்பதிவை முடித்து, மறுநாளே குடியேறவும் வந்துவிட்டோம். மகனும் மருமகளும் ஊர்வழிச் சென்றபிறகு இத்தனை பெரிய வீடு எனக்கெதற்கு?

எல்லாப் பொருட்களையும் இறக்கி ஒழுங்குபடுத்தி முடிப்பதற்குள் இரவு ஆகிவிட்டிருந்தது. நேரமாகிவிட்டதால் கிளம்பத் துடித்துக் கொண்டிருந்த பணியாட்களை வற்புறுத்தி ஒரு படுக்கையறையில் ஏசியையும் ஃபேனையும் மகன் பொருத்தச் செய்துவிட்டான். அந்த அறையில்தான் அவனது இரட்டைப் படுக்கைக் கட்டிலை அவன் போட்டுக் கொண்டிருந்தான். அதன் பிறகும் வேலை பார்க்க இயலாது என்றும், மறுநாள் வருவதாகவும் சொல்லி வேலையாட்கள் கிளம்பிப் போயினர். உணவு, வெளியிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தது. மகன் ஒரு நாகரிரீகத்திற்கு இன்று ஒருநாள் அவர்கள் அறையிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிங்களேன் என்றானான். மருமகள் ஏற்கனவே இரவு உடை மாற்றிக் கொண்டு படுக்கையறைக்குள் சென்றிருந்தாள். நானும் நாகரிரீகமாக மறுத்து விட்டு, புழுக்கம் நிறைந்த அறைகளை விட்டு வெளியேறி மொட்டை மாடியை அடைந்தேன். கதவுகள் இல்லாலத பெருவெளியில் காற்று தடைகளற்று விளையாடிக் கொண்டிருந்தது. உடலின் ஒவ்வொரு அணுவிக்களிலும் குடியேறியிருந்த களைப்பு, உறக்கத்தை அணைத்துக் கொள்ள நீண்ட நேரம் எடுக்கவில்லை.

நாய்களின் குரைப்பு ஒலி கேட்டுக் கண்விழித்துக் கொண்டபோது, நிலா பாதி வெட்டப்பட்ட ஒரு வெள்ளை நாணயத்தைப் போல நடுவானில் மிதந்து கொண்டு இருந்தது. எழுந்து தடுப்புச் சுவர் அருகே நின்று பார்த்தபோது, தெருவெங்கும் நாய்கள் கலைக்கப்பட்ட போராட்டக்காரர்களைப் போலப் பரவிக் குரைத்துக் கொண்டிருந்தன. மின்னுகிற அவற்றின் கண்களில் மிரட்சி ஏறியிருப்பதைப் போலப் பட்டது. நாய்த் தாத்தா அவற்றிற்கு நடுவில்தான் நின்று கொண்டிருந்தார். பெருங்குரல் எடுக்கும் நாயைத் தொட்டு, அதன் அலறலை அடக்க முயன்று கொண்டிருந்தார். நகர்கிற திசையெங்கும் ஒரு நாய் ஒரு நிழலைப்போல அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அது குரைக்கவில்லை. அதன் சிவப்பு நிறம் அந்த குறைந்த ஒளியிலும் பளபளத்தது. (பின்னாளில் அதன் பெயர் செவலை என்று தெரிந்துகொண்டேன்.) அது வான்வெளியையும் தாத்தாவையும் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர் நாய்களைக் கட்டுப்படுத்துவதை நிறுத்திவிட்டார். அவற்றிவைகளின் குரைப்பு நிச்சயம் எல்லோரையும் எழுப்பிவிடக் கூடியதுதான். ஆனால், ஒருவரும் எழுந்துகொண்டதாகத் தெரியவில்லை. பூட்டிய அறைகளுக்குள்ளான அவர்களது உறக்கம் இனி அவரவர்கள் முடுக்கிவைத்திருக்கும் கடிகார அலாரங்களுக்குப் பின்புதான் கலையும். இருளின் உருவங்கள் திரண்டு நிற்கும் காட்சியைப் பார்த்துக் குரலெடுக்கும் நாய்களை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, வீசிய முன்பனிக் காற்றால் உடல் மெல்ல நடுங்கி அடங்கியது.

**************************

அவர் மனிதர்களோடு பேச விரும்புகிறவராக இருந்தார். ஆனால், அவருடனான உரையாடலினால் பயன் ஏதும் இல்லை என்று எல்லோரும் விலகிச் செல்கின்றனர். நானோ பயனற்ற நாட்களைச் சுமந்து திரிகிற வயோதிகத்தின் வீட்டில் குடியேறியிருப்பதால் அவரோடு நெருங்கி உரையாட முடிந்தது.

"பொஞ்சாதி வியாதி வந்து இளம் வயசிலயே செத்துப்போச்சு. புள்ளங்கன்னு யாரும் இல்ல. ஊரில இருக்கப் பிடிக்காம அங்க இங்கன்னு சுத்திட்டு கடைசியா இங்க வந்து சேந்தேன். இந்தப் பகுதிக்கு நா குடிவந்து முப்பது வருசமாச்சு. இப்போ இருக்கிற வீடுகள்ள கால்வாசி கூட அப்பயில்ல. யாரும் இங்க இடம் வாங்க மாட்டாங்க. வாங்கினாலும் யாரும் வீடு கட்டிக் குடிவர்றதில்ல. கட, கண்ணியில்லங்கிறது ஒரு காரணம்னாலும், திருட்டு பயமும் இருந்தது. பகல்லயே திருடனுங்க நுழைஞ்சி ஆளுகள அடிச்சிப்போட்டு களவாண்டு போறதும் உண்டு. அப்பத்தான் நா தெரு நாய்க நாலு எடுத்து வளத்தேன். ராவெல்லாம் நானும் அதுகளும் சுத்தி சுத்தி வருவோம். நாலு நாய்ங்கிறது ஒரு வருசத்துல எட்டாச்சு. என் நாய்ங்க இந்த ஊர் பூராஞ் சுத்தும், புது ஆள்களக் கண்டா விடாது, ஊர்காரங்கள ஒண்ணுஞ் செய்யாது. ஒரு நா ராத்திரி ஒரு வீட்டு சுவத்தில ஏறிக் குதிச்சு ரெண்டு திருடனுங்க திருட வந்துருக்காங்க. அதப் பாத்த நாய்கள் பயங்கரமா குலைக்குது. அதுல ரெண்டு நாய்க சுவரேறிக் குதிச்சு அவனுகளத் துரத்தியிருக்கு. அவனுங்க கையிலயிருந்த கத்தியால ஒரு நாயி கழுத்த அறுத்திட்டான். அதப் பாத்த இன்னொரு நாயி அவன் கை கால் முகமுன்னு கடிச்சி வச்சிருச்சி. இந்த சத்தத்துல வீட்டாள்களும் முழுச்சி திருடங்களப் புடுச்சி, அடிச்சி போலீஸ்ல கொடுத்துட்டாங்க. வெட்டுப்பட்ட நாய் செத்துப்போச்சு. ஆனா ஊரு செனம் எல்லாம் நாய்களக் கொண்டாட ஆரம்பிச்சிருச்சி. எல்லா வீட்டிலயும் அதுகளுக்குச் சோறு வப்பாங்க. அதுங்களும் தின்னுட்டு இந்த ஊரக் காத்துக்கிட்டுக் கிடந்ததுங்க. இதெல்லாம் ஒரு அஞ்சு வருசம் முன்னாடி வரைக்கும்தான். எப்பக் கட்டடம் கட்டிடமாக் கட்ட ஆரம்பிச்சாங்களோ அப்பவே கட்டடத்துக்குக் கட்டடம் காவலுக்கு ஆள் வைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுக்கப்புறம் இந்த நாய்க எல்லாம் வேண்டாத விருந்தாளிகளாப் போச்சு. யாரும் வீட்டுல சேக்கிரதில்ல. எல்லாம் என் வீட்டுக்கே திரும்ப வந்திருச்சி. நானும் முடிஞ்ச மட்டும் காப்பாத்துறேன். பிள்ளையா குட்டியா எனக்கும்? இதுங்க தான் எல்லாம்".

நாய்களின் வரலாறு சொல்லி முடிக்கும் வரைக்கும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தவர் மீண்டும் நாய்களைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். ஒருஎப்பொழுதும், அமர்ந்து கொண்டு கதை பேசுகிற வழக்கம் அவரிடம் இல்லை. ஏதாவது வேலை செய்து கொண்டுதான் பேசுவார். கட்டைகளைப் பிளந்து கொண்டு, தோட்டத்தைச் சுத்தம் செய்துகொண்டு, தென்னை மரப்பாத்திகளைச் சீர் செய்துகொண்டு… அவருக்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றனது. வீட்டைச் சுற்றித் தென்னைகள் வைத்திருக்கிறார். இந்தப் பகுதியில் இன்னும் சிலர் வீட்டில்கூடத் தென்னை மரங்கள் உண்டு. ஆனால், யார் வீட்டுமரத்திலும்கூட இவர் வீட்டுமரத்தில் காய்த்துக் குலுங்குவதைப் போலக் காய்ப்பதில்லை. அவர் வளர்க்கும் நாய்களில் சிலவற்றைக் கொன்று, தென்னைகளுக்கு உரமாக்கி இருப்பதனால்தான் அப்படிக் காய்க்கிறது என்று குறும்புகள் கூடப் பிடிக்காத மலட்டு மரங்களின் வீட்டுக் காரர்களுக்குள் ஒரு இரகசியப் பேச்சு இருந்தது. அவர் காதுகளுக்கு இக்கதைகள் வந்து சேர்கிறதா என்று தெரியாது. தெரிந்தாலும் சட்டை செய்கிற மனிதரில்லை இவர் என்று பட்டது.

அவர் நாய்களை அறிந்திருந்தார். அவருக்கு அவற்றின் உள்ளுணர்வுகள் எல்லாம் தெரிந்திருந்தனது. அவர் அவற்றிடம் அவற்றைவைகளைக் நாய்களிடமே கற்றிருப்பதாகப் பட்டது. சில நேரங்களில் அவர் கண்கள் கூட இரவில் மின்னுவதைப்போல நான் கண்டதுண்டு. மௌனப் பார்வையில் அவற்றோடு எப்போதும் அவர் பேசிக் கொண்டிருப்பதாகவே நான் எண்ணுவதுண்டு. இரவுகளில் அவர் ஒரு நாயாகவே மாறிவிடுகிறாரோ என்ற ஐயம் கூடத் தோன்றியது. நாய்களுக்கும் இரவுகளுக்குமான நெருக்கம் அதிகம் என்பார். உண்மையில் இரவுகளில்தான் நாய்களின் வாழ்க்கை அர்த்தமுடையதாகிறது. இரவுகளில் நாய்களின் கண்களுக்கு அருவங்கள் எல்லாம் தெரியும். இப்பகுதியில் அவற்றின் நடமாட்டம் அதிகமாயிருப்பதால் அவற்றைப் பார்த்துத்தான் நாய்கள் இரவெல்லாம் சத்தமிட்டு அவற்றைத் துரத்துகின்றன. இந்தப் பகுதி கொஞ்சகாலத்திற்கு முன்பு வரை சுடுகாடாக இருந்ததுதான். இப்பொழுதுபவும் கிணறு வெட்டத் தோண்டினால் எலும்புகள் நிறையக் கிடைக்கும். நாய்களைப் பற்றிய அவரது புரிதல்கள் வியப்பூட்டுபவையாவதாக இருந்தனது. இவையெகளெல்லாம் அவர் சொல்லிக் கேட்டதற்குப் பின்னான என் இருளான இரவுகளில் அருகிலேயே கரிய பேய் ஒன்று நின்று கொண்டு இருப்பதாகத் தோன்றும்.

பொதுவாக, இரவுகளில் குரல்வளை கிழியக் கத்தும் நாய்கள் பகல் பொழுதில் அடங்கிவிடும். ஆனால், கடந்த இரு தினங்களாக அவற்றின் சத்தம் அதிகமாகிப் பகலிலும் தொடர்ந்து குரைத்தபடியிருந்தன. நாய்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து தெருவின் இருமுனைகள் வரை சத்தமிட்டபடி ஓடும். தெருமுனையில் நின்று ஒன்றாகக் குரைலைக்கும். பின்பு, ஓடி அவர் வீட்டு வாசலில் வந்து நின்று கத்தும். இவற்றின் செயல்கள் அப்பகுதி மக்களைக் கலவரப்படுத்தியிருந்தனது. போவோர் வருவோரை ஒன்றும் செய்யவில்லை என்றாலும், வெறிகொண்ட அவற்றின் பயங்கர அலறல் யாரையும் ஒரு கணம் திகிலடையச் செய்யும்தான். அதுவும் தொடர்ந்து இரண்டு நாட்கள் என்றால்? அந்தப் பகுதி தன் இயல்பை இழந்திருந்தது. யாரும் சிரித்துப் பேசிக் கொள்வதில்லை. எல்லோர் மனதிலும் குரைப்பின் ஒலி ஏற்படுத்துகிற அமானுஷ்ய உணர்வு பற்றிக் கொண்டிருந்தது. ஒரு சிலர் பூகம்பம் ஏற்படப்போவது நாய்களுக்குத் தெரியும் என்றும், அதனால்தான் அவைகள் குரைலைக்கின்றன என்றும் கூறித் திரிந்தனர். அதைப் பலர் நம்பவும் செய்தனர். அன்று இரவு யாவரும் வீட்டின் கதவுகளைப் பெயருக்குப் பூட்டி வைத்தனர். ஏதாவது என்றால் வெளியே ஓடி வர வசதியாக இருக்க வேண்டுமே! ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. ஆனால், நாய்களின் குரைப்பு மட்டும் ஓயவேயில்லை. பொறுமையிழந்த மக்கள் கைகளில் கட்டையோடு தாத்தாவின் வீட்டு முன்பு கூடினர். நாய்கள் கட்டைகளுக்குப் பயந்து வீட்டிற்குள் ஓடி ஒளிந்து கொண்டன. எல்லோரும் வாயில் வந்தபடி நாய்களையும் அவரையும் வசை பாடினர். தாத்தா மௌனமாயிருந்தார். நாய்களை உடனடியாகத் துரத்திவிடும்படி அவரை மிரட்டினர். அவர் வாய் திறக்கவேயில்லை. ஆனால், ஒருவருக்கும் அவர் வீட்டிற்குள் நுழைந்து ஒரு நாயைத் தொடக்கூடத் துணிவில்லை. வந்தவர்கள் அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனர். கடைசியாக, நாய்கள் தொந்தரவு குறித்து ஊர்ப் பஞ்சாயத்து போர்டில் கம்பிளைண்ட் செய்வதாகத் தீர்மானித்து, அங்கேயே ஒரு விண்ணப்பம் தயார் செய்து, அதில் அனைவரும் கையெழுத்திட்டனர். என்னையும் வற்புறுத்திக் கையெழுத்து வாங்கிக் கொண்டு கலைந்து போயினர். அடுத்த இரண்டு மணி நேரத்தில் நாய் பிடிக்கும் வண்டி வந்து சேர்ந்தது. உடன் ஒரு போலீஸ்காரரும் வந்தார். வீடு அடையாளங்காட்டப்பட்டது. வீடுகளுக்குள் கம்பிச் சுருக்குகளோடு நுழைந்த நால்வர், பெரும் சத்தங்களுக்கிடையே அனைத்து நாய்களையும் பிடித்து வண்டியில் அடைத்தனர். தாத்தாவோடு எப்போதும் நெருங்கியிருக்கும் செவலை மட்டும் ரொம்ப நேரம் போக்குக் காட்டிப் பிடிபட்டான். தாத்தா, போலீஸ்காரரால் மிரட்டப்பட்டு ஒரு பிடிபட்ட கள்வனைப் போல அமர்ந்திருந்தார். அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. வந்தவர்கள் புறப்படப் போனார்கள். தாத்தா, "ஒரு நிமிஷம்" என்று சொல்லி உள்ளே போனார். வரும்போது கை நிறையப் பணமிருந்தது., அதை அந்தக் குழுவின் தலைவன் போல நடந்து கொண்டவன் கையில் தந்தார்.

"கொன்னுப்புடாதீங்க!. எங்கயாவது ரெண்டு மூணு ஊரு தள்ளிப் போயி விட்டுருங்க" என்று கெஞ்சினார். சரி, சரி என்று பணத்தைப் பறித்துக் கொண்டு வேனிலேறி விரைந்து சென்றனர். தாத்தா வீட்டிற்குள் செல்லாது வாசலிலேயே அமர்ந்துவிட்டார்.
மாலையில் நான் தாத்தா வீட்டிற்குச் சென்றபோது அங்கு நிசப்தம் குடியேறியிருந்தது. நாய்களின் வாசனை வீட்டின் அறைகளில் நிரம்பியிருந்தது. காற்றும் வெளிச்சமும் அற்ற இருண்ட அறையில் தாத்தா அமர்ந்திருந்தார். அவர் கைகளில் சிறு நடுக்கம் இருந்தது. நான் போய் அமர்ந்ததும் நிமிர்ந்து பார்த்தவர் மீண்டும் தலைகவிழ்ந்து கொண்டார். எனக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. அவர் நாய்களை உறவுகளாக வளர்க்கவில்லை. உறுப்புகளாகப் பாவித்து வளர்த்துவிட்டார். அதனால்ுதான், உறுப்புகள் வெட்டப்பட்ட ஓர் ஒரு உடல் போலத் துடிக்கிறார். தேற்றுவதற்கு எதுவுமில்லை. அவரே தன்னைத்தானே சரி செய்து கொண்டால்தான் உண்டு என்று தோன்றிற்று. சொல்லிக் கொள்ளாமல் கிளம்பலாம் என எழுந்தபோது கைகளைப் பற்றிக் கொண்டார். அவரிடமிருந்து ஒரு பெரும் அழுகை வெடித்தது. நான் சற்றும் எதிர்பாராத நிகழ்வு அது. உடல் நடுங்கிப்போய் அவரை அணைத்துக் கொண்டு தெரிந்த வார்த்தைகளால் தேற்ற முயன்றேன். வார்த்தைகளைவிட என் தொடுதல் அவருக்கு ஆறுதலாயிருந்திருக்க வேண்டும். மெல்ல அழுகை வடிந்தது.

மெலிதான குரலில் பேச ஆரம்பித்தார்.

"நாய்ங்க ஏன் மூணு நாளாக் குலைக்குதுங்க தெரியுமா?" என்று சொல்லி நிறுத்தினார். தெரியாது என்றேன்.

"எனக்கு நாள் நெருங்கிடுச்சி. எமன் என் வீட்டு வாசலுக்கே வந்துட்டான். என்னுசுர எடுக்கப் பார்த்தான். அப்பத்தான் மொத்த நாயும் சேந்து குலைச்சு அவன விரட்டிச்சு. இந்தத் தெருவுக்குள்ளே அவனால நுழைய முடியாமப் பண்ணுச்சுங்கோ. ஆனா, அவன் வேலைய ஊர்க்காரங்க சுலுவாக்கிட்டாங்க. இப்போ நாய்ங்க இல்ல. அவன் எப்ப வேண்ணா இங்க வந்திருவான். சாவப் பயப்படல சார் நா. எனக்குன்னு இருந்தது அந்த நாய்ங்கதான். நா சாகும்போது அந்த நாய்ங்ககூட எம் பக்கத்துல இல்ல. அழ ஒரு உசுருகூட இல்லாமச் சாவுறர சாவெல்லாம் ஒரு சாவா?"
 
நடுக்கடலில் மிதக்க இருந்த ஒரே தெப்பத்தையும் பறி கொடுத்துவிட்டவனின் கழிவிரக்கமாக அவர் குரல் வெடித்துப் பெருகியது.
"சார்! இந்தாங்க" என்று ஒரு சீட்டைத் தந்தார். "இதுல என் தூரத்து சொந்தக்காரன், மணின்னு பேரு. அவம் பேருலதான் இந்த வீட்ட எழுதியிருக்கேன். கொஞ்சப் பணம் அந்த அலமாரில இருக்கு. அவன எடுத்துக்கிடச் சொல்லுங்க. என் கடைசி செலவுகளுக்கு ஆகும்."

நான் அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். முடியவில்லை. வீடு வந்து சேர்ந்த பின்பும் தாத்தாவின் கண்ணீர் படிந்த என் கரங்களில் துக்கம் உலரவேயில்லை.

***************************

போன் செய்து மணியை வரவழைத்தேன். அவன் மனைவியும் பிள்ளைகளும் வரவில்லை. ஏன் என்றேன். அவன் பதில் சொல்ல விரும்பாதவனாக இருந்தான். சடங்குகள் என்று ஏதும் செய்வதாக இல்லை என்றான். ஆம்புலன்ஸ் வரச் சொல்லியிருப்பதாகவும், சுடுகாட்டிற்குத் தகவல் சொல்லிவிட்டதாகவும் யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு துளிக்கூட சோகம் இல்லாதிருந்தது. நீண்ட நேரம் தேடி, வீட்டின் பத்திரத்தைக் கண்டு எடுத்துக்கொண்ட செய்தியை மனைவிக்குப் போன் செய்து மகிழ்ச்சியாகச் சொன்னான். அடுத்தக் கட்ட வேலைகளை விறுவிறுவென்று பார்க்க ஆரம்பித்தான். பக்கத்து வீடுகளிலிருந்து ஓரிருவர் வந்திருந்தனர். ஆம்புலன்சும் வந்தது. தாத்தா உடலை ஆம்புலன்ஸில் ஏற்றியாயிற்று. சிறு கேவல்கூட இல்லை. எவ்வளவு நாய்கள் இருக்கும்!? அவைகள் இருந்தால் இப்படிச் சத்தமில்லாமல் அவரை அள்ளிக் கொண்டு போக விட்டுவிடுமா என்ன? நான் கொஞ்ச தூரம் வண்டியின் பின்னாடியே சென்றேன். யாரோ மூச்சிரைறைப்புடன் வருவது போலிருந்தது. திரும்பிப் பார்த்தேன். செவலை போல இருந்தது. செவலைதானா தெரியவில்லை. வெயில் கண்ணை மறைத்தது. செவலைதான் போல. எங்கிருந்தோ வாசனை பிடித்து வந்திருக்க வேண்டும். செவலை, மனிதர்கள் ஊடாக நடந்து வேனை நெருங்கி நடக்க ஆரம்பித்தது. வேன் வேகமெடுக்க, செவலை வேனின் வேகத்திற்கு அதன் பின்னாலேயே ஓடியது. என்னால் அந்த வேகத்திற்கு நடக்க முடியவில்லை. நின்றுவிட்டேன். ஆனால், செவலை மெலிதான குரைப்புடன் ஆம்புலன்ஸ் பின்னாக ஓடிக் கொண்டிருந்த்து. ஒரு சிவப்புப் புள்ளியைப் போல மாறி, செவலை என் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பினேன்.

குளித்து முடித்துத் திரும்பவும், மகனும் மருமகளும் கிளம்பியிருக்கவும் சரியாக இருந்தது. இருவரும் இன்று அமெரிக்கா செல்கிறார்கள். காலில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டார்கள். செய்ய வேண்டிய, செய்யக் கூடாதவற்றைவைகளைப் பற்றிய நிரல்நிறைகளைச் சொன்னான் பையன். தேவைக்கு வங்கியிலிருந்து பணம் எடுத்துக் கொள்ளும்படிச் சொன்னான். டிராவல் வேன் வரவும் இருவரும் கையசைத்துக் கிளம்பிப் போயினர். திரும்ப எப்பொழுது வருவார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்களும் சொல்லவில்லை. தனிமை ஒரு பூதம்போல வாய் பிளந்து நின்றது. பெரிய வீட்டைப் பூட்டிவிட்டு எங்காவது போய்விடலாமா என்று தோன்றியது. ஆம்புலன்சுஸிக்குப் பின்னாக ஓடிய செவலை நாய் மனக்கண்ணில் வந்து நின்றுகொண்டது. அதன் பின்பு நான் எவ்வளவு விரட்டியும் அது போகவேயில்லை.

About The Author

1 Comment

  1. bala

    கதையல்ல கவிதை. ஒவ்வொரு மனிதனின் சந்தியாகாலத்தை நினைவு படுத்தும்.

Comments are closed.