நாய்க்கடி

அன்று காலை நண்பனைப் பார்க்கச் சென்றவிடத்தில், நாயிடம் கடிபடுவோம் என்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை! அழைப்பு மணியை அழுத்தச் சென்ற இடத்திற்குக் கீழே நாய் படுத்திருந்ததை நான் கவனிக்கவில்லை. அழைப்பு மணி எங்கிருக்கிறது என்று மேலே தேடுவதிலேயே கவனமாயிருந்தவன், அதனை மிதித்து விட்டேன் போலும்!

அடுத்த நிமிடம். ஆ! என்ற அலறலுடன் காலைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். கதவைத் திறந்து கொண்டு வந்த நண்பனும் பதறிப்போய் விட்டான். பின்னங்கால் சதையில் ஒரு கொத்து சதை நாயின் வாயில் இருந்தது!

வலி தாங்க முடியவில்லை. இரத்தத்தைக் கட்டுப்படுத்த முதலுதவி செய்த நண்பன், தன் ஸ்கூட்டரில் என்னை அழைத்துக் கொண்டு பக்கத்திலிருந்த மருத்துவமனைக்குப் பறந்தான்.

டி.டி. ஊசி போட்ட டாக்டர், "கடிச்சது வீட்டு நாயா அல்லது தெரு நாயான்னு தெரியுமா?" என்று நண்பனிடம் விசாரித்தார்.

"வீட்டு நாய்தான் டாக்டர். என் வீட்டுலேர்ந்து நாலைஞ்சு வீடு தள்ளியிருக்கிற ஒரு வீட்டுலதான் அதை வளர்க்கிறாங்க. ஒரே ஒரு நாள் மீந்திருந்த சாதத்தை அதுக்குப் போட்டது தப்பாப் போச்சு. அதிலேர்ந்து அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து படுத்துக்கும். துரத்தினாலும் போகாது. ஆனா இது வரைக்கும் யாரையும் கடிச்சதில்லே. இவன்தான் நாயைக் கவனிக்காம மிதிச்சுட்டான் போலேயிருக்கு!"

"தெரு நாயாயிருந்திருந்தா தினமும் கவனிக்கிறது கஷ்டம். ஊசி போட்டே ஆகணும். வீட்டு நாயாயிருக்கிறதினாலே பத்து நாள் தினமும் கவனிங்க. சோறு நல்லாத் திங்குதா, தண்ணி குடிக்குதான்னு பாருங்க. பத்து நாளுக்குள்ள நாய்க்கு ஒன்னும் ஆகலேன்னா, ஊசி போட வேணாம். அப்படியில்லாம பத்து நாளுக்குள்ள நாய் செத்துப் போச்சுன்னா, கண்டிப்பா ஊசி போட்டே ஆகணும்!"

தொப்புளைச் சுற்றிப் போடப்படும் ஊசி நினைவில் வந்து என்னைப் பயமுறுத்தியது. காலரா ஊசிக்கே பயந்து கொண்டு காத தூரம் ஓடுபவன் நான். நல்லவேளை! வீட்டு நாயாகப் போயிற்று. ‘கடிபட்டாலும் வீட்டு நாயால் கடிபட வேண்டும்’ என்ற பொன்மொழி என் மூளையில் அப்போது பளிச்சிட்டது.

"என்னடா யோசனை? ஒன்னும் கவலைப்படாதே! அநேகமா ஊசி போட வேண்டிய தேவையிருக்காது. மச்சான் கல்யாணத்திற்கு நானும் மனைவியும் ஊருக்குப் போக வேண்டியிருக்கு. ஊர்ல இருந்தா நானே கவனிச்சுப்பேன். நான் வர்ற வரைக்கும் நீ தினமும் அந்த வீட்டுக்குப் போயி நாயைப் பாரு. ஏதாச்சும் அறிகுறி தெரிஞ்சா அலட்சியமாயிருக்காம, உடனே ஊசி போட்டுடு"

வீட்டுக்கு வந்தவுடன் காலைப் பார்த்துப் பதறிப் போய் விட்டாள் மனைவி கவிதா.
"யார் மூஞ்சில இன்னிக்கு முழிச்சீங்கன்னு தெரியலியே! காலங்கார்த்தால இப்படி நாய்க்கிட்ட கடி வாங்கிட்டு வந்து நிக்கிறீங்களே!" என்று கவலைப்பட்டாள்.

யோசித்துப் பார்த்தேன். "ம். நல்லா ஞாபகமிருக்குது, கவிதா. இன்னிக்கு காலைல ஒன் மூஞ்சிலதான் முழிச்சே……..ன்" அவள் முறைப்பைப் பார்க்கப் பயந்து கடைசி வார்த்தையை மென்று விழுங்கினேன்.

"தினமும் என் மூஞ்சிலதான் முழிக்கிறீங்க! இன்னிக்கு மட்டும் புதுசாவா முழிக்கிறீங்க? உங்களுக்குக் கீழ பார்த்தே நடக்கத் தெரியாது. கண்ணைப் பிடறியில வச்சுக்கிட்டு நடந்தா, நாய் புடுங்காம என்ன செய்யும்?"

‘வள், வள்’ ளென்று விழுந்து பிடுங்கினாள்.

"உடனே ஊசி போட்டாகணுமே? டாக்டர்கிட்டப் போயிட்டு வந்தீங்களா இல்லியா?"

"ம், டாக்டர் பத்து நாளைக்கு நாயைக் கவனிக்கச் சொல்லியிருக்கிறாரு. நாய்க்கு ஒன்னும் ஆகலேன்னா ஊசி வேணாமாம்"

"நாளையிலேர்ந்து தூக்கத்தப் பார்க்காம, காலையிலே எழுந்திரிச்சி நாயைப் போயி பார்த்துட்டு வாங்க" உத்தரவு போட்டாள்.

அடுத்த நாள் காலையில் அந்த வீட்டுக்குப் போன போது ஓர் அம்மாள் வாசலில் இருந்தார். "யாரு நீங்க? யாரைப் பார்க்கணும்?"

"வந்து..வந்து…. உங்க வீட்டுல ஒரு நாய் இருக்குமே, அதப் பார்க்கணும்"

"என்னது? நாயைப் பார்க்கணுமா? விநோதமாக என்னைப் பார்த்தார்.

நாய்க்கடி பற்றியும், டாக்டர் சொன்னதையும் சொன்னேன்.

"நாய் வெளியே போயிருக்குது. அப்படி ஒரு ஓரமா உட்காருங்க. அரை மணி நேரங் கழிச்சுதான் வரும். வந்ததும் பார்த்துட்டுப் போங்க"

"நேத்து ராத்திரி நல்லாச் சோறு தின்னுச்சா? தண்ணி குடிச்சுதா?" அக்கறையுடன் விசாரித்தேன்.

‘ம்.ம். தின்னுச்சு, தின்னுச்சு’ என்று கடுப்புடன் சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்று மறைந்தார்.

என் விதியை நொந்தபடி, நாயை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்.

அந்தம்மா உள்ளே சென்று என்ன சொன்னாரோ தெரியவில்லை. உள்ளேயிருந்து ஒவ்வொருவராக வந்து என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

இந்தக் கொடுமைக்குப் பேசாமல் ஊசியே போட்டிருக்கலாம் என்று தோன்றியது.
ஒரு வழியாக நாய் வந்தது. என்னைப் பார்த்ததும் குரைத்தது. நேற்று மிதித்தது ஞாபகம் வந்திருக்குமோ?

‘சரி, நாய் நல்லா சுறுசுறுப்பாத்தான் இருக்குது’ என்பதை உறுதி செய்து கொண்டு வீடு திரும்பினேன்.

முதல் நாள் அனுபவத்தை கவிதாவிடம் சொன்னேன். ”நடப்பது நடக்கட்டும், இனிமே அந்த வீட்டுக்குப் போக மாட்டேன்” என்று அடம் பிடித்தேன்.

"போய்த்தான் ஆகணும்" கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள் அவள்.

வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அந்த வீட்டை நோக்கித் தினமும் படையெடுப்பது என் வேலையாகிவிட்டது.

நான்கு நாட்களுக்குள் அந்த வீட்டுக்கு அக்கம்பக்கத்து சிறுவர், சிறுமியர்க்கு நான் நாயைத் தேடி வரும் செய்தி பரவிவிட்டது. "தோ வந்துட்டார்டா” என்று கிண்டல் செய்யத் துவங்கிவிட்டனர். இன்னும் சில குழந்தைகளோ, ‘நாயைத் தேடி வரும் மாமா’ என்பதைச் சுருக்கி, ‘நாய் மாமா’ என விளித்தனர். எனக்கு அவமானமாக இருந்தது. ஏதோ ஒரு வைராக்கியத்தில் ‘இனிமே இங்கு வரவே கூடாது’ என்று முடிவு செய்தேன்.

கவிதாவிடம் சொன்னபோது "அதெல்லாம் முடியாது. டாக்டர் சொன்னபடி செஞ்சுதான் ஆகணும், இல்லேன்னா தொப்புளைச் சுத்தி ஊசி போட்டுக்கங்க" என்று பயமுறுத்தினாள்.

"இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். ஊசி போட்டாலும் போட்டுக்குவேனே ஒழிய, அந்தத் தெருப்பக்கம் இனிமே அடியெடுத்து வைக்க மாட்டேன்" என்றேன் தைரியமாக.

என் தைரியத்தைப் பார்த்து அவளுக்குச் சந்தேகம். தண்ணீரை என் முகத்துக்கு நேரே கொண்டு வந்து மிரள்கிறேனா என்று சோதனை செய்தாள். என்ன சொல்லியும் கேட்காமல், என் கூட டாக்டர் வீட்டுக்கு வந்தாள்.

"டாக்டர், அந்த நாய் எங்கோ ஓடிப் போயிடுச்சு. நான் தொப்புளைச் சுத்தி ஊசியே போட்டுக்கிறேன்" கடைசி வாக்கியத்தைச் சொல்லும் போதே என் தொப்புள் வலிப்பது போலத் தோன்றியது.

அரசு ஆஸ்பத்திரிக்குப் போனீங்கன்னா, தொப்புளைச் சுத்திப் போடுவாங்க. அங்க இலவசமாகப் போட்டுக்கலாம். வெளியில வாங்கிப் போடறதாயிருந்தா, இப்பக் கையிலேயே போட்டுக்கிற ஊசியெல்லாம் வந்துடுச்சி. ஒரு ஊசியோட விலை இருநூத்தி ஐம்பது ரூபாயிலேர்ந்து முன்னூறுக்குள்ள இருக்கும். மொத்தம் அஞ்சு ஊசி போட வேண்டியிருக்கும்!"

‘ஆஸ்பத்திரியிலேயே போட்டுக்கிறோம்’ என்று சொல்ல எத்தனித்த மனைவியை இடைமறித்து,
"நீங்க எழுதிக் கொடுங்க டாக்டர். நான் வெளியிலேயே வாங்கிப் போட்டுக்கிறேன்" என்றேன் அவசர அவசரமாக.

‘மைசூர் சில்க் புடைவை கேட்டதுக்குப் பணமே இல்லைன்னு சத்தியம் செஞ்சுட்டு, இப்ப இவ்ளோ பணத்துக்கு நாய்க்கடி மருந்தா வாங்கறீங்க? இருங்க இருங்க, உங்களைப் பிறகு கவனிச்சுக்கிறேன்’ என்ற மிரட்டல் அவள் முகத்தில் தெரிந்தது.

மிரட்டலைச் சிறிதும் லட்சியம் செய்யாமல், அலட்சியமாக அவளைப் பார்த்து "வா, போகலாம்" என்றேன்.

நாய்க்கடிக்குப் பிறகு, உண்மையிலேயே எனக்குத் தைரியம்தான் வந்துவிட்டது!

About The Author

8 Comments

  1. gnanasambandam

    உயர்தரமான நகைச்சுவைக் கதை.மிக்க பாராட்டு.சம்பந்தம் 1௬-6-09

  2. Rishi

    ரொம்ம்ம்….ப நல்லா இருக்கு, கலா. வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள்.

  3. geetha

    கதையைப் படித்து முடிக்கும்வரை என் உதட்டில் ஒரு மென்புன்னகை தவழ்ந்துகொண்டே இருந்தது. நல்ல நகைச்சுவை!

  4. Raams

    கடைசி வரை விறுவிறுப்பு
    ரொம்ம்ப நல்லாஇருந்தது

  5. V..Subramanian

    மிகவும் நல்லதொருநகைச்சுவை விருந்து.
    நாயைப் பற்றி பலவிதமன பழமொழிகள் உண்டு.
    குக்கலைப் பிடித்து நாவி மிக்கதோர் மஞ்சள்பூசி மிகு மணம் செய்வோராயின் குக்கலே குக்கல் அன்றி வேறதாமோ?
    நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாற்போல .
    பைரவரின் வாகனம். பைரவர் அம்மணமாக நிற்கும் ஒரு கால தேவதை.
    நாய் குரைப்பதற்குப் பதிலாக சில சமயங்களில் ஊளையிடும். அதனைக் கண்டு சிலர் வேதனைப் படுவர். யமகிங்கரர்கள் வருவது நாய்க்குத் தெரியும். என்பர். அது உண்மையா? ஏதோ சில ஒளித் தோற்றம் நாய்க்கு தெரிகின்றது. அதனால் அது ஊளையிடுகிறது.மிருகங்களுக்கு மனிதனை விட சில அபூர்வ சக்திகள் உள்ளன. குதிரை மிகவும் வேகமாக ஓட முடியும். நாய்க்கு மோப்ப சக்தி மிகவும் அதிகம். அதனால் காவல் துறைப் பணிகளுக்கு மிகவும் பயன்படுகின்றது. நம் கண்ணுக்குப் புலப்படாத சில விஷயங்கள் மிருகங்களுக்குத் தெரிகின்றன. தவளை புற வூதா வண்ணத்தை அறியும் தன்மையுடையது. ஊர்ந்து செல்லும் பாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்வர்.நன்றிக்கு இலக்கணமாக நாய் உவமை பெறுகின்றது.ஆற்றுப் பெருக்கற்று அடி சுடும் அந்நாளில் ஊற்றுப்பெருக்கல் உலகூட்டும்.
    பயணம் செய்து கொண்டிருக்கும் வழிப்போக்கர் உனவருந்ததிவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக ஆற்றின் படுகையில் மணலைத் தோண்டி அதில் ஊறும் நீரை சாபிடும் போதே இரண்டு கைகளில் வாரிக் குடிப்பது வழக்கம். அவர் கையிலிருந்த சில சோற்றுப் பருக்கைகள் நீரின் அடியில் ஊற்றில் சேர்ந்துவிடும். அதை தூரத்தில் படுத்திருக்கும் நாய் பார்த்துக் கொண்டிருக்கும். வழிப்போக்கன் சென்ற பிறகு அந்தப் பருக்கைகளை உண்பதற்காக ஊற்றில் ஊறி நிற்கும் தண்ணீரை அது தன் நாவினால் நக்கிக் குடிக்கும். எவ்வளவு குடித்தாலும் மேலும் மேலும் ஊறிவரும் தண்ணீரை அது நிறுத்த முடியாததால் வயிற்றில் நீர் நிரம்பியும் அடியில் உள்ள பருக்கைகளை நெருங்கமுடியாமல் களைத்துப் படுத்துவிடும்.
    நாயின் தோல் பக்குவப்படுத்தப்பட்டு டீசல் வடிகட்டவும் ஊர்திகளைத் துடைக்கவும் பயன்படுத்துகிறார்கள்.

    ”என்னண்ணே கண்ட கண்ட இடமெல்லாம் எப்படி நாய் கடித்தது? ”என்றார் நண்பர்.
    அவர் சொன்னார்,” நாய்வண்டி என்று தெரியாமல் லிப்ஃட் கேட்டேன். இப்படி ஆகிவிட்டது.”
    அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

  6. P.Balakrishnan

    நாற்பது வயதில் நாய்க்குணம் என்றும் ஒரு பழமொழி உண்டு.

  7. shopgal

    இந்த கதை திரு.சுஜாதா அவர்களின் குதிரை” சிறுகதை யை நினைவு படுத்துகின்றது.
    I love Sujatha!

Comments are closed.