இயக்குநர் வெற்றிமாறனின் உதவியாளர் இயக்கும் முதல் படம். உதவியாளருக்காக வெற்றிமாறனே எழுதியிருக்கும் கதை. காதலும் அதிரடியும் கலந்த கதைக்களத்தைக் கொண்ட படத்துக்கு இசையமைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இசை எப்படி?… பார்ப்போம் வாருங்கள்!
யார் இவனோ
ஜி.வி, சைந்தவியுடன் இணைந்து பாடியிருக்கும் ஒரு காதல் டூயட்! உண்மைக் காதலர்களே பாடியிருப்பது பாடலின் சிறப்பு! இருவரும் மாறி மாறிக் காதலின் தாக்கம் சொல்கிறார்கள். இருவரின் குரலும் பாடலுக்குக் கச்சிதப் பொருத்தம். ஆனால், இசை அவ்வப்போது இலேசாகச் சலிப்படைய வைக்கிறது. வரிகள்தான் பாடலைக் காப்பாற்றியிருக்கின்றன. பாடலின் இடைச்செருகல்கள்தான் (interludes) பிரச்சினையே.
"உன்னைக் காணும்போதுதான் உயிரின் தேவை காண்கிறேன்
உன்னை நீங்கும் போதுதான் நினைவைத் தேவை என்கிறேன்" – ஒரு பதம்.
காலேஜ் பாடம்
வழக்கமான, கல்லூரி மாணவர்களின் வாய்மொழியாக ஒலிக்கும் பாடல். பாடலை எழுதியிருக்கிறார் அண்ணாமலை. ராகுல் நம்பியார், மேகா, சந்தோஷ் மூவரும் இந்தக் கல்லூரி கானத்துக்குக் குரல் கொடுத்திருக்கிறார்கள். தற்காலக் கல்லூரி வாழ்வைக் கண்முன்கொண்டு வரும் பாடல்.
"ஜாபுக்காகப் போனாலும் பி.ஜி-க்காகப் போனாலும்
ஃபேஸ்புக் குரூப்பில் காலேஜ் அறை வாசம் வீசாதா!" – ரசிக்க வைக்கும் வரிகள்.
ராஜா ராஜா
வடக்கத்திய இசையின் சாயலுடன் தொடங்கும் இந்தப் பாடல் ஷமாலி கோல்கடேவின் (Shamali Kholgade) குரலில் நாயகப் புராணமாக ஒலிக்கிறது. தன்னவனை, தன்னை ஆளும் மன்னனாகப் பாவிக்கும் ஒரு பெண்ணின் காதல் நிலைதான் பாடல். நல்ல காதல் மணம் கமழும் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி அவர்கள். அவ்வப்போது ஒலிக்கும் தபேலாவின் இசை நல்ல ரசனை.
"இவனில்லாமல் இனி என்னாவாய் என்று இதயம் என்னைக் கேட்கிறதே!
நீ இல்லாமல் நான் என்னாவேன் பதிலைச் சொன்னேன் முறைக்கிறதே!" – முத்திரை வரிகள்.
கலாய்ப்போம்
கல்லூரி மாணவர்கள் என்றாலே இப்படித்தான் என ஒரு தவறான பிம்பத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வரும் தமிழ்த் திரையுலகின் வழக்கமான பாடல். கிட்டத்தட்ட ஒரு குடிகாரப் பாடல்தான் இது. சிம்பு, மாயா, சதீஷ் பாடியிருக்கிறார்கள். சிம்பு ஏதோ கடமைக்குப் பாடியிருக்கிறார்.
இன்னும், மல்கோவா எனும் குத்துப் பாடல் ஒன்றும் ஆல்பத்தில் உள்ளது. ஜி.வி-யிடமிருந்து இப்படி ஒரு பாடலை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்படி ஒரு பாடல் ஆல்பத்தில் தேவைதானா?
ஜி.வி.பிரகாஷின் இசையில் காணப்படும் வழக்கமான மேஜிக் இதில் இல்லை. எனினும், இருக்கும் இரண்டு மெல்லிசைப் பாடல்கள் மொத்த இசைக்கோப்பைக் கரை சேர்க்க உதவும் என நம்பலாம்.
நான் ராஜாவாகப் போகிறேன் – மெல்லிசையின் உதவியால்.