நான் ஜடமில்லை

இன்றோடு பத்து நாட்களாகி விட்டன. மூன்று தடவை நேரிலும், இரண்டு முறை தொலைபேசியிலும் பேசியாகி விட்டது. தெருவிளக்கு மட்டும் எரிந்தபாடில்லை.

"ரொம்பக் கஷ்டமா இருக்கு. ஒன்பது மணிக்கு, எதிர் வீட்டு உஷா வரும்போது, எவனோ பின்னாலேயே வந்திருக்கான். இவ பதறிப் போய் வேகமா வந்ததுல, எதுலயோ இடிச்சுக்கிட்டு, கருரத்தம் கட்டிப் போச்சு!"

புனிதா தினம் ஒரு தகவல் வைத்திருந்தாள். நேற்று, பக்கத்து வீட்டு ஐம்பது வயது சிவகாமியை, நாய் பிடுங்கியிருக்கும். இருட்டில் தெரியாமல் மிதித்து விட்டிருப்பார். யாரோ, இருட்டாய் இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு, விலாசம் கேட்கிற மாதிரி, கழுத்துச் சங்கிலியைப் பறிக்க முயன்றானாம். நல்லவேளை! இரைச்சலிட்டதில், பக்கத்து வீடுகளில் விளக்கெரிய, ஓடி விட்டானாம்.

"எனக்கே பயமா இருக்குங்க. சமயத்துல நீங்களே லேட்டா வரீங்க. கதவைத் தட்டினா, அது நீங்களா வேற யாராவதான்னு புரியறதுக்குள்ள படபடப்பாயிருது" கேட்டுக் கொண்டேன்.

"என்னை என்ன பண்ணச் சொல்ற? இந்த சந்துல இருக்கற இருபது வீட்டுலயும், கையெழுத்து வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தாச்சு. ஆனா லைட்டு மட்டும் எரிஞ்ச பாடில்ல."

"டென்ஷனாயிருதுங்க!"

வெளியே வந்தேன். வேறு என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கலாமே. சிவராமன் வீட்டில் இருந்தார்.

"இங்கே பாருங்க! என்னால அலைய முடியாது. பணம் ஏதாவது தரணும்னா என் பங்கை சொல்லிருங்க! அவ்வளவுதான் என்னால முடிஞ்சது" என்றார் அழுத்தமாய்.

புவனேஸ்வரன் முனகினார்.

"போன தடவை, லீவு போட்டுட்டு உங்களோட வந்தேன். ஒவ்வொரு தடவையும் அலைய முடியாதுங்க! வேற எவனுமே கவலைப்படல. நீங்க ஏன் சிரமப்படறீங்க?"

இப்படி, ஒவ்வொரு விதமாய் பதில்கள். பாதி, சுவாரசியம் இன்றி.. பாதி அலட்சியமாய். எல்லோருக்குமே, பாதிப்புகள் பற்றிக் கவலை இருந்தாலும், ‘நம்மால என்ன செய்ய முடியும்?’ என்கிற தோரணை.

"என்ன? சொல்லுங்க!"

சோர்வான என் முகத்தைப் பார்த்தே புனிதா, பதிலைப் புரிந்து கொண்டு விட்டாள். அவளுக்கும் கோபம் வந்து விட்டது.

"சர்த்தான் விடுங்க! நமக்கு மட்டும் என்ன கவலை? எல்லாருக்கும் சேர்த்து ஒரு நன்மை யோசிச்சாக் கூட மரியாதை இல்ல."

"இல்ல புனிதா! அவங்களுக்கு மட்டும் அக்கறை இல்லியா? எதுவும் செய்ய முடியலேன்னு, விரக்தில தளர்ந்துட்டாங்க."

"அது என்னங்க பேச்சு? முடியாததை, எப்படிச் செய்யலாம்னு யோசிக்கிறவன்தான் மனுஷன். என்னால ஆவாதுன்னு விலகிப் போறவன் ஜடம்! அவனால, அவனுக்கும் பயன் இல்ல. மத்தவங்களுக்கும் பாரம்!"

புனிதாவுக்குக் கோபம் வந்து விட்டால் வார்த்தைகள் சீறும்.

"என்ன சொன்ன?!" என்றேன் வியப்புடன்.

என் சீண்டல் புரிய, லேசாய் முகம் சிவந்தவள், முனகினாள்.

"போங்க! நாம் ஏன் அவதிப்படணும்? என்ன ஆவுதோ ஆவட்டும்."

விலகி உள்ளே போனாள். என்னுள் யோசனைப் பொறிகள் பற்றிக் கொண்டன. ‘என்னால ஆவாதுன்னு விலகினா ஜடம்!’
இல்லை; நான் ஜடமில்லை! மனிதன்! என்ன செய்யப் போகிறேன்?

புனிதா என் பரபரப்பைப் பார்த்துத் திகைத்தாள்!

"என்ன ஆச்சு?"

"இங்கே வா! உன் கையால ஸ்விட்சைப் போடு!" என்றேன்.

வாசல்புறமே வெளிச்சமானது! மாடியில், புதிதாய்ப் பொருத்திய நூறு வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது. ஓரளவுக்குத், தெரு நிறைந்த வெளிச்சம்.

"என்னங்க இது!"

"போகட்டும்! நமக்கு இனி கரண்ட் பில் கூடும். ஆனா, இந்த சந்துல இனி, இருட்டுனால கஷ்டம் வராதில்ல. அது போதும்" என்றேன் நிறைவாக.

About The Author

1 Comment

  1. A. Ravi

    ரிஷபன், எல்லோருமே இப்பிடி இருந்து விட்டால் நாடே வெளிச்சமாகி விடும். தன்னால் முடிந்ததை நாம் செய்வோம் என்ற எண்ண்ம் எல்லோருக்குமே வர வேண்டும். நல்ல கருத்துள்ள கதை.
    ரவி

Comments are closed.